திருக்குறளும் பொது நோக்கமும் 3

‘‘ஆற்றல் அழியுமென் றந்த ணர்கனான் மறையைப்
போற்றியுரைத் தேட்டின் புறத் தெழுதா – ரேட்டெழுதி
வல்லுநரும் எல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினு மாற்றல் சோர்வின்று’’
- கோதமனார்

‘‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்க
ளுள்ளுவரோ மநுவாதி யொரு குலத்துக் கொருநீதி’’.
என்று இந்நூலின் சமரசப் பான்மையை இனிது
விளக்கினார். உரையாசிரியராம் பரிமேலழகரும், ‘‘எல்லா நூல்களிலும் நல்லன
எடுத்து எல்லோர்க்கும் பொதுப்படக் கூறுதல் இவருக்கு இயல்பு’’ என்கிறார்.
இனி இதன் சமயப்பொதுத் தன்மைக்கு
ஒன்றிரண்டு புறச்சான்றுகள் தருதும். அக்காலத்து, தமிழ்நாட்டுப் பல
சமயங்களும் திருவள்ளுவரைத் தம் சமயத்தவர் என உரிமை கொண்டாடின. திருக்குறள்
எல்லாச் சமயங்களுக்கும் இடங் கொடுத்தது. அனைவருக்கும் இது உரியது என்பதைக்
காட்டுகின்றதன்றோ!
கல்லாமுடையார்,
‘‘சமயக் கணக்கர் தம் மதிவழி கூறாது
உலகியல் கூறிப் பொருளிது வென்ற
வள்ளுவன் தனக்கு வளர்கலிப் புலவர் முன்’’
என்றும் திருவள்ளுவமாலையில்,
‘ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின்.
அன்றென்ப வாறு சமயத்தார் – நன்றென
எப்பாலவரு மியைபவே வள்ளுவனார்
மூப்பால் மொழிந்த மொழி’’.
என்றும் இதன் சமரசத்தை எடுத்துக் காட்டுகின்றனர்.புலவர் புராணமும்
‘நால்வர் சொல் சைவர் வேதம் நளிர்குரு கூரன் சொல்லைப்
போல்வலார் சிலர் காம் சொல்லும் பொருளில் பாகவதர் வேதம்
வால்வ ளையுலகம் வீதி மயிலை வள்ளுவன் சொல்யார்க்கும்
கீழ்மையை யகற்றி மேன்மை யருகுநல் வேதமாமே’’.
என்று முழங்குகிறது.
கிறித்தவரும் வரவர இதன் பெருமையை அறிய
ஆரம்பித்தனர். தமிழ்க் கடலின் எல்லை கண்டவரும், திருக்குறளை ஆங்கில
யாப்பில் மொழி பெயர்த்த வருமாகியஅறிஞர்போப் பாதிரியார் ‘‘எங்கள் ஏசுநாதர்
மலை மேற்செய்த அறிவுரையின் எதிர் ஒலியாகும் இத் திருக்குறள்’’ என்பர்.
எது முதல் ஒலி? எது எதிர் ஒலி? என்ற
ஆராய்ச்சிக்குட் புக வேண்டா. புகாமலேயே. திருக்குறளின் பொது நோக்கம்
நமக்குப் புலப்படா நிற்கும் இவ்வாறு பலவகைச் சமயத்தினரும் திருக்குறளை, தம்
நூல் என்று போற்றிப் புகழ்கின்ற தன்மையால், அவ்விழுமிய நூல் உலகிலுள்ள
உயரிய சமயக் கொள்கைகளையெல்லாம் தன்னகத்தே அடக்கித் தனக்கு அங்கங்களாய்
அமைத்துக் கொண்டு, அவையனைத்திற்கும் தலைமையாய் நிற்கும் தகுதிவாய்ந்த ஒரு
தனி நூல் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குகிறது’’.
திருவள்ளுவர் காலத்துக்கு முன்னும்,
அக்காலத்தும் சமரசம் தமிழ்நாட்டில் மலிந்து, மக்களை உயர்நிலையில்
வைத்திருந்தது. திருவள்ளுவருக்குப் பிறகும் நாளது வரையில் நம் நாட்டில் பல
சமயங்களுக்கிடையே சமய குரவர்களும் பிறரும் தத்தம் சமய நெறியில் நின்று
கொண்டே, சமரசத்தைப் புகட்டியுள்ளார்கள். இவர்களுக்கெல்லாம் திருவள்ளுவர்
வழிகாட்டியாய் இருந்தார் என்று கூறுவதாற் படும் இழுக்கென்ன? திருவள்ளுவர்
கருத்துகளையும் தொண்டர் மொழிகளையும் முன்னோர் மொழிபொருளே யன்றியவர்
சொல்லும் பொன்னே போற் போற்றுவோம்’’ என்பதற்கிணங்க பொன்னே போற் போற்றித் தம்
நூல்களில் தழுவிக் கொள்ளாத புலவர்களும் உண்டோ நம் நாட்டில்? சைவ, வைணவ
சமயக் குரவர்களும், சித்தாந்த ஆசிரியர்களும் பிறரும் குறள்கள் பலவற்றைத்
தம் நூல்களில் அமைத்திருப்பதற்குக் கணக்கற்ற சான்றுகளை நாம் காட்டலாம்.
அவருடைய விழுமிய சமரசக் கொள்கைகள்
பின்வந்தோரால்
தழுவிக் கொள்ளப்பட்டு, மக்களுக்குப் போதிக்கப் பட்டன என்றும், பின்
வந்தோர் கூறும் கொள்கைகளை எல்லாம் வருமுன் காணும் வல்லமையால் திருவள்ளுவர்
கண்டு வைத்தார் என்றும் நாம் ஐயமறக் கொள்ளலாம். இதற்கு எடுத்துக்காட்டாக
ஆழ்வார்கள் சைவச் சமயாசாரியார்களுடைய பாடல்களையும் தற்காலப் பிரதிநிதிகளாய், தாயுமான இராமலிங்க அடிகளின் பாடல்களையும் நாம் காட்டலாம்.


1. அமரவோ ரங்கமாறும் வேதமோர் நான்கு மோதித்
தமர்களிற் றலைவராய் சாதியந் தணர்களேனும்
நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோ ரளவிலாங்கே
அவர்கள் தாம் புலையர்போலும் அரங்கமா நகருளானே.
2. பழுதிலா ஒழுகலாற்றுப் பலசதுப் பேதிமாக்கள்
இழிகுலத்தவர்களேனுமெம்மடி யார்களாகிற்
றொழுமிளீர் கொடுமின்கொள் மினென்று நின் னோடுமொக்க
வழிபட வருளினாய் போன்மதிள் திருவரங்கத்தானே
3. குலத்தாங்கு சாதிகள் நாவிலுங் கீழிழிந்து எத்தனை
நலந்தா னிலாத சண்டாளர் சண்டாளர்க ளாகினும்
வலத்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் கானென்றுள்
கலந்தார் அடியார் தம்மடியா ரெம்மடிகளே.
4. ‘‘ஒளி மணி வண்ணனென்கோ ஒருவனென்றேத்த நின்ற
நளிர் மதிச் சடையனென்கோ நான்முகக் கடவுளென்கோ”
என்பன போன்ற ஆழ்வார்கள் பாடல்களை நோக்குவோம்.
1. ‘‘சாத்திரம்பல பேசும் சழக்கர்காள்
கோத்திர முங்குல முங்கொண்டு என் செய்வீர்’’
என்று குலம் பேசுவோரை நோக்கிக் கேட்கும் ஆளுடைய அடிகள்
2. ‘‘வாது செய்து மயங்கு மனத்தராய்
எது சொல்லுவீராகிலும் ஏழைகாள்
யாதோர் தேவரெனப்படுவார்க்கெலாம்
மாதே வனலால் தேவர்மற்றில்லையே’’ என்றும்
3. விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயஞ் செய்தே
எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற் கேற்றதாகும்’’.
4. ‘‘ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தாற்
கன்பராயின் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே’’
என்றும் இன்னும் கணக்கற்ற இடங்களிலும் தம் சமய சமசரச ஞானத்தைப் பலருக்கும் புகட்டுவர்.
(தொடரும்)
குறள்நெறி :ஆடி 31, 1995 / 15.08.1964
Comments
Post a Comment