Skip to main content

மாமூலனார் பாடல்கள் – 21 : சி.இலக்குவனார்

மாமூலனார் பாடல்கள் – 21 : சி.இலக்குவனார்


உக. சில நாள் பொறுத்திருப்பாய்

சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
 cheran01
  தலைவனும் தலைவியும் பகற்குறியினும் இரவுக் குறியினும் கண்டு மகிழ்ந்து கலந்து உரையாடிக் காதலைப் பெருக்கிவிட்டனர். தலைவியின் தாய் தலைவியின் ஒழுக்கத்தை உற்று நோக்கிக் கண்ணும் கருத்துமாய்க் காவல்புரிந்தாள். சிறைகாப்பு எவன் செயும். தலைவி சிறைப்பட்டவள் போல் ஆனாள். தலைவன் இந்நிலையை உணர்ந்து தலைவியைத் தன் ஊர்க்கு அழைத்துச் சென்று மணப்பதாகக் கூறினான். அவ்விதம் கூறியவன் இன்னும் தன் உரைப்படி நடக்கவில்லையே என்று தலைவி வருந்துகின்றாள்.
தலைவி: தோழி! நம் காதலர் இப்பொழுது இங்கு வரவில்லையே!
தோழி: எவ்விதம் வருதல் கூடும்? நம் அன்னைதான் அவர் வருகையை எவ்விதமோ அறிந்துவிட்டாள் போலிருக்கிறதே.
தலைவி: அப்படித்தான் தோன்றுகின்றது. தலைவர்க்கும் இதைக் குறிப்பால் உணர்த்தினேன்.
தோழி: அவர் என்ன கூறினார்?
தலைவி: அவர் கூறுவது என்ன? “இங்கிருந்து இனி வருந்த வேண்டாம். நான் அழைத்துக் கொண்டு போய்விடுகின்றேன்என்றார்.
தோழி: அப்படியானால் புறப்பட்டுவிட வேண்டியது தானே.
தலைவி: நாணம் – உயிரினும் சிறந்த நாணம் – தடை செய்கின்றது.
தோழி: நாணினும் குற்றமற்ற கற்புச் சிறந்தது என்பதை அறியமாட்டாயா?
தலைவி: அறிவேன். நானும் அதற்கு உடன்பட்டுள்ளேன்.
தோழி: பின்னர் அவர் ஏன் காலம் தாழ்த்துகின்றார்.
தலைவி: போகும் வழியெல்லாம் வெப்பமாக இருக்குமாம். போவார் வருவார் யாருமே அங்குக் காண முடியாதாம். அதியன் இறந்த பின்னர் அவன் நாட்டில் கிணைகொட்டப்படாமல் கிடந்தது போல. ஆரவாரம் இல்லாதிருக்கும் வழியாம்.
தோழி: யாருமற்ற தனி வழிதானே காதலர்களுக்கு ஏற்றது,
தலைவி: வெப்பம் தணியுமாறு மழை பெய்யட்டும் என்கின்றார்?
தோழி: பொய்க் காரணம் கூறிக்காலம் தாழ்த்துகின்றாரா அல்லது உண்மையான காதலால் கட்டுண்டு அழைத்துச் செல்லும் வாய்ப்புப் பெறாது வருந்துகின்றாரா?
தலைவி: பாலொடு தேன் கலந்த பான்மை போல் சுவை தரும் உன் வாய் அமிழ்தத்தை என்று பருகுவேன்என்று ஏங்குகின்றாரே? “மழை பெய்யட்டும். சில நாள் பொறுத்திருப்பாயாகஎன்று தேறுதல் கூறியுள்ளார்.
தோழி: அப்படியானால் வருந்தாதே. வருவர். சில நாள் பொறுத்திரு.
தலைவி: நீ கூறுவாய். நாம் காதல் நோயால் வருந்துவதனால் அதுவெளிப்பட்டு அவருக்கல்லவா பழி உண்டாகின்றது. இன்னும் என்ன பழி உண்டாகுமோ?
தோழி: வருந்தாதே. அவர் கூறிய உரைகளை நினைத்துக் கொள்.
தலைவி: என்ன உரைகள்? “சின்னாள் பொறுத்திருஎன்பது தானே சின்னாள்?
உக. பாடல்

அகநானூறு 325  பாலை



அம்ம! வாழி! தோழி! காதலர்
வெண் மணல் நிவந்த பொலம்கடை நெடுநகர்
நளி இரும் கங்குல் புணர் குறி வாய்த்த
களவும் கைம்மிக வளர்ந்தன்று; அன்னையும்
உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின் பெரிது
இவண் உறை எவனோ? அளியள் என்று அருளி
ஆடுநடைப் பொலிந்த புக ற்சியின் நாடுகோள்
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை
வள்உயிர் மாக்கிணை கண் அவிந்தாங்கு
மலை கவின் அழிந்த கனை கடற்று அரும் சுரம்
வெய்ய மன்ற! நின் மைஎயிறு உணீஇய
தண் மழை ஒருநாள் தலைஇய ஒண்நுதல்
ஒல்கு இயல் அரிவை நின்னொடு செல்கம்
சில நாள் ஆன்றனை யாகுஎனப் பல் நாள்
உலைவில் உள்ளமொடு வினைவலி உறீஇ
எல்லாம் பெரும் பிறிதாக வடாஅது
நல்வேல் பாணன் நல்நாட்டு உள்ளதை
வாள்கண் வானத்து என்றூழ் நீள் இடை
ஆள்கொல் யானை அதர் பார்த்து அல்கும்
சோலை அத்தம் மாலைப்போகி
ஒழியச் சென்றோர் மன்ற
பழி எவன் ஆம்கொல் நோய்தரு பாலே
teeth01
சொற்பொருள்
அம்ம வாழி – வாழ்வாயாக, தோழி – தோழியே! காதலர்:- நம் அன்பர், வெண்மணல்  - வெண்மை நிறமுள்ள மணல், நிவந்த – மேடாக உயர்ந்துள்ள, பொலம் கடை – அழகிய வாயிலையுடைய, நெடுநகர் – பெரிய வீட்டின்கண், நளி – இருள்மிகுந்த, இரும்கங்குல் – நீண்ட இரவின்கண், புணர்குறி -கூடும் குறி, வாய்த்த-பொருத்திய, களவும் – களவொழுக்கமும், கைம்மிக – அளவுகடந்து, வளர்ந்தன்று-பெருகிவிட்டது. அன்னையும் – தாயும் உள்கொண்டு – இக்களவொழுக்கத்தை அறிந்து நினைத்துக் கொண்டு ஓவாள் – நீங்காதவளாகி, காக்கும் -காவல் செய்துகொண்டு இருக்கின்றாள், பின் – பின்னர். பெரிது – மிகவும், இவண்-இவ்விடத்தில், உறைவு- தங்கி இருத்தல்எவனோ-எதன்பொருட்டோ அளியள்-மிகவும் இரங்கத்தக்காள், என்று அருளி-என்று நினைத்து இரக்கம்கொண்டு,
ஆடு நடை-வெற்றிச் செயலால், பொலிந்த – புகழ் அடைந்து விளங்கிய புகற்சியின் – விருப்பத்தால், நாடுகோள் – தன்நாட்டைக் கொள்ளவந்த, அள்ளனை – அள்ளன் என்பவனை, பணித்த- பணியச்செய்த, அதியன் பின்றை – அதியன் என்பவன் மறைந்த பிறகு, வள் உயிர் – சிறந்த ஒலியைத்தரும், மாக்கிணை – பெரிய மருதநிலப் பறையின், கண் அவிந்தாங்கு – அடிபடும் பக்கம் அடிக்கப்படாது ஒழிந்ததைப்போல, மலைகவின் – மலையின் அழகு, அழிந்த-கெட்ட, கனை – மிகுதியும், கடறு-செல்லுதற்கு அரிய வழிகளையுடைய, அரும் சுரம் – அரிய பாலைவனம், வெப்பமன்ற – மிக்கவும் வெப்பமுடையது, நின் – உன்னுடைய, வைஎயிறு- கூரிய பற்கள் விளங்கும் வாயில் உண்டாகும், நீர் ஆகிய அமுதம், உணீஇய-கூடுங்கால் உண்ணும் பொருட்டு, தண்மழை – குளிர்ந்த மழை. ஒரு நாள் தலை இய – ஒரு நாள் பெய்யட்டும் ஒள்நுதல் – ஒளிபொருந்திய நெற்றியை உடைய, ஒல்கு இயல் – மயிலைப் போல் தளர்ந்த நடக்கின்ற, அரிவை – பெண்ணே! நின்னொடு உன்னோடு, செல்கம் – போவோம். சில நாள் சில நாட்கள் ஆன்றனை – பொறுத்திருப்பாயாக, என-என்று, பல்நாள் – ஒரு நாள் அல்ல பல நாட்கள், உலையில் – தளர்ச்சி இல்லாத, உள்ளமொடு – மன எழுச்சியுடன், வினை -என்னை அழைத்துக்கொண்டு செல்லுதலாகிய  செயலை, வலி உறீஇ – வற்புறுத்திக் கூறி, எல்லாம் – அவ்விதம் கூறிய உரை எல்லாம், பெரும் பிறிது ஆக-அழிந்து பொய்யாக.
  வடா அது – வடக்கில், நல்வேல் பாணன் – நற்குணமிக்க வேற்படையில் சிறந்த பாணன் என்பானின், நன்நாட்டு உள்ளதை- நல் நாட்டின்கண் உள்ளதாகிய, வான் கண்-ஒளி மிக்க வானின் கண் என்று சொல்லப்படும் ஞாயிற்றின் (சூரியனின்) வெப்பம் மிக்க; வானத்து – வானம் விளங்கும், என்றுழ் கோடைமிக்க, நீ இடை – நீண்ட  வழிகளின், ஆள்கொல்யானை வழியில் செல்கின்ற மனிதர்களைக் கொல்லும் தன்மைமிக்க யானைகள், அதர்பார்த்து – வழிகளைப் பார்த்துக்கொண்டு, அல்கும்-தங்கி இருக்கும், சோலை – சோலைகள் மிகுந்த, அத்தம் – காட்டுவழியில், மாலை – மாலைக் காலத்தில், போகி-போய், ஒழிய – இங்கே நாம் தங்கி இருக்க, சென்றோர் – போனார் (மன்ற – நிச்சயத்தை உணர்த்தும் அசைச் சொல்) அவர் அவ்விதம் கூறியசொல்லை, மறந்து சென்றமையின், நோய் தருபால் – துன்பம் தரும் பகுதியால், பழி எவன் ஆம் – என்ன பழி உண்டாகுமோ? (கொல் – ஐயத்தை அறிவிக்கும் அசைச் சொல்)
ஆராய்ச்சிக் குறிப்பு: இப்பாடல்  ஆறு ஓடுவது போல்  அழகுறச் செல்கின்றது ஆதலின் அடிகளை மாற்றி கொண்டு கூட்டல் வேண்டாம்.
  காதலன் காதலியைக் கண்டு மகிழ எவ்வாற்றாலும் முயல்வது இயல்பே, பகலில் ஓர் இடத்தைக் குறிப்பிட்டு கூடுவதைப் பகற்குறி என்றும் இரவில் ஓர் இடத்தைக் குறிப்பிட்டுக் கூடுவது இரவுக்குறி என்றும் கூறுவர். இரவுக்குறி எப்பொழுதும் வீட்டுக்கருகிலேயே இருக்கும். தலைவியின் வேறுபட்ட ஒழுக்கத்தைத் தாய் குறிப்பால் உணர்ந்து கொள்ள  விரும்பித் தன் மகளின் நடைமுறைகளில் கருத்துச் செலுத்துவாள். இவ்வமயங்களில் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் காணப்பெறாது வருந்துவர். தோழி இடையே  நின்று துணைபுரிவாள். பெண்ணைப் பெற்றோர், தம் பெண்ணின் கருத்துக்கிசையாது இருப்பதையறியின் தலைவன், தலைவியைப் பெற்றோர் அறியாமல் கொண்டு சென்று மணக்க முற்படுவன். இதைக் கொண்டுதலைக்கழிதல் என்றும் உடன்போக்கு என்றும் கூறுவர். இற்றை நாளில் மக்கள் ஒழுங்கு முறைக்கு இச்செயல் ஒத்தது அல்ல என்று கருதினாலும், இவ்விதம் நிகழ்வதை இயற்கையோடு மாறுபட்டது அன்று என்று எவரும் கூறார்.
ஆகவே அற்றைப் புலவர்கள் இவ்வித கருத்து அமைத்துப் பாடியது உலகியல் நெறிக்கு அப்பாற்பட்டது அன்ற. தாயும் தந்தையும் தம் மகளின் செயல்முறைகளை ஆராய்ந்து அவள் விரும்பிய காதலனை மணப்பதற்கே துணைபுரிவர் பெரும்பாலார். மணந்த பின்னர் காதல் கொள்ளாது காதல் கொண்ட பின்னரே  மணந்தனர் அக்காலத்தில்.
அள்ளன்: இவன் ஒருசிற்றரசன் ஆதல்வேண்டும். இவனைப் பற்றிய வரலாறு யாண்டும் காணப்படவில்லை.
அதியன்: ஔவையாரால் பாடப்பெற்ற அதியமான் நெடுமான் அஞ்சியா அல்லது அவனின் வேறுபட்டவனா என்று கூறமுடியவில்லை. இவன் சேரநாட்டைச் சேர்ந்த சிற்றரசன் என்பதைத் தவிர வேறு ஒன்றும் கூறமுடியவில்லை.
வைஎயிறு உண்ணுதல்:பாலொடு தேன் கலந்தற்றே பனிமொழி வால் எயிறு ஊறிய நீர்என்ற திருக்குறளின் கருத்தைத் தெளிந்து அறிக.
நல்வேல் பாணர்: திருவேங்கட மலைக்கு அப்பால் ஆண்ட தெலுங்கநாட்டு அரசனோ அன்றித் தமிழ்நாட்டு அரசனோ அறியோம்.
ilakkuvanar01


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்