பைந்தமிழில் படிப்பது முறை ! – பாவலரேறு பெருஞ்சித்திரனார்


பைந்தமிழில் படிப்பது முறை ! – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

thamizh10
பழந்தமிழ் நாட்டில்
பைந்தமிழ் மொழியில்
படிப்பதுதானே முறை?
இழந்தநம் உரிமை
எய்திடத் தடுக்கும்
இழிஞரின் செவிபட, அறை!
கனித்தமிழ் நிலத்தில்
கண்ணெனுந் தமிழில்
கற்பது தானே சரி!
தனித்தமிழ் மொழியைத்
தாழ்த்திய பகையைத்
தணலிட் டே, உடன் எரி!
தமிழ்வழங் கிடத்தில்
தாய்மொழி வழியாய்த்
தமிழர் படிப்பதா பிழை?
அமிழ்ந்தவர் எழுந்தால்
அயலவர்க் கென்ன?
அயர்வதா? நீ, முனைந் துழை!
பிறந்தநம் மண்ணில்
பீடுறும் தமிழில்
பேசுதற் கோ, ஒரு தடை?
மறந்த,பண் பாட்டை
மறவர்கள் மீட்க
மறிப்பவர் எவர்? கொடி றுடை!
முத்தமிழ்த் தரையில்
முதுதமிழ் மொழியில்
முறைப்படப் பயில்வதா தீது?
எத்துறை அறிவையும்
ஏற்குநந் தமிழே!
இனியுங்கள் பருப்பு, வே காது!
அத்தனை, பாட்டனை
அடிமைசெய் ததுபோல்
ஆரையிங் கரற்றுவாய் இன்னும்?
எத்தனை ஆண்டுகள்
இழப்பதெம் உரிமை?
எழுந்திடின் கழுகுமைத் தின்னும்!

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்