பூங்கோதை 4 : வித்துவான் மு. இராமகிருட்டினன்

பூங்கோதை 4 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,

puungothai01
  காளையப்பனுக்குத் தன் தாயினிடத்திலோ, தங்கைமாரித்திலோ மிகுதியான பற்று இருந்ததென்று கூறமுடியாது; ஆனால் பூங்கோதையினிடத்து அவனுக்கு அருவருப்பு மிகுதி என்பது மட்டும் உறுதி. தொடர்ந்து அவளுக்குத் துன்பங் கொடுத்துக் கொண்டே இருப்பான். அவனுடைய குரலைக் கேட்ட அளவிலேயே பூங்கோதையின் நாடி நரம்புகளெல்லாம் ஒடுங்கிவிடும். அவனுடைய கொடுமைகளை யாரிடத்திலே சென்று முறையிடுவது? அவன் பூங்கோதையை அடித்தாலும் மிதித்தாலும், உதைத்தாலும் அவனுடைய தாயாருக்குக் கண் தெரியாது; அவன் அவளை எவ்வளவு இழிவாகத் திட்டினாலும் அவளுக்குக் காது கேளாது இல்லத் துப்பணியாளர் யாரும் இளவலுக்கு எதிராக நீதி கூற முடியுமா?
  வழக்கம் போல் மிகவும் கீழ்ப்படிதலோடு பூங்கோதை காளையப்பன் முன் சென்று நடுங்கிக் கொண்டே affected_girl03நின்றாள். அவன் தன் நாக்கைத் துருத்திக் கொண்டு தன் கண்களை உருட்டி மருட்டி விழித்தான். அடுத்து என்ன நடக்கும் என்பது பூங்கோதைக்குத் தெரியும். அதற்கிடையில் அவனுடைய தோற்றம் எத்துணைக் கொடியதாகவும், அருவருக்கத்தக்கதாகவும் உள்ளது என்று சற்று எண்ணிப் பார்த்தாள். அதனைக் குறிப்பாக உணர்ந்து கொண்டவன் போல் காளையப்பன் ஒன்றும் பேசாமல் ஓங்கி முதுகிலே ஒரு அறை அறைந்தான். பூங்கோதை ‘அம்மா’ என்று அலறியிருப்பாள்; ஆனால் அவளுடைய அச்சம் அதனையும் தடுத்துவிட்டது. தள்ளாடிக் கொண்டே இரண்டு எட்டு பின்னே நகர்ந்து நின்றாள்.
‘அம்மாவை எதிர்த்துப் பேசினதற்கு இதுதான் பரிசு. முளைக்கிற முளையிலேயே உனக்கு எவ்வளவு கள்ளத்தனம். அம்மாவை வைதுவிட்டு ஒருவரும் அறியாமல் வந்து ஒளிந்து கொண்டாயே; கண்ணைப் பார். தோகைமலைக் குறத்திகூடத் தோற்றுவிடுவாள்’ என நீதி பேசினான் காளையப்பன்.
 அவனுடைய கொடுங்கோன்மையில் பயிற்சி பெற்றிருந்த பூங்கோதைக்குத் தான் விடை பகர்வதால் பயனில்லை என்பது தெரியும். ஆகவே ஏச்சு மொழியை அடுத்து வரும் அடியினின்றும் எப்படித் தப்புவது என்பதையே ஆய்ந்து கொண்டிருந்தாள்.
  திரைக்குப் பின்னால் என்ன செய்து கொண்டிருந்தாய்?
‘நான் படித்துக் கொண்டு இருந்தேன்.’
‘அந்தச் சுவடியைக் காட்டு’.
பூங்கோதை அறைக்குள் சென்று அந்த சுவடியைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.
‘நீ எப்படி எங்களுடைய சுவடிகளை எடுக்கலாம்?’
‘என்னுடைய அப்பா எழுதியது தானே?’
  ‘உன் அப்பன் எழுதினான்; வெறும் பயல். அதை அச்சுப்போட என்னுடைய அப்பா தான் பணங்கொடுத்திருப்பார். உன் அப்பன் என்ன பெருஞ் செல்வனா? உனக்கு என்ன தேடி வைத்துவிட்டுப் போனான்? நீ தெருவிலே போய்ப் பொறுக்கித் தின்ன வேண்டியவள் அம்மாள் ஏதோ இரக்கமுள்ளவர்கள்; அதனால்தான் தம் செலவில் தம்முடைய செல்வக் குழந்தைகளுக்குக் கொடுப்பது போலவே சோறும் துணியும் கொடுத்து வருகிறார்கள். இந்த அழகில் நீ அம்மாவைப் பழிக்கிறாய். சரி, ‘நீ என் சுவடிப் பேழையில் கை வைத்ததற்குச் சரியான பாடம் கற்பிக்கிறேன். போ அப்படி வாயிற்படியில் நில்’ என்று சீறினான்.
  பூங்கோதைக்குக் காளையப்பன் தன்னை அடித்ததைப் பற்றியோ, பழித்ததைப் பற்றியோ இருந்த வருத்தம், தன் தந்தையையும் அவன் பழித்ததைக் கேட்டவுடன் எழுந்த உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. காளையப்பன் தன்னை என்ன செய்யத் துணிந்தான் என்பதை அறியாமல் விம்மிக் கொண்டே கதவருகில் சென்றாள். அதற்கிடையில் அவன் தன் கையிலிருந்த கனத்த அட்டைச் சுவடியை சுழற்றி அவள் மீது எறிவதைக் கண்டாள். பூங்கோதை அஞ்சி அலறி ஒதுங்கினாள். அதற்குள் அச்சுவடி கன்னத்தைச் சேர்த்து அறைவது போல் விழுந்தது. அடி தாங்க முடியாமல் அவள் கதவில் போய் விழுந்தாள். கதவுமுனை அவளுடைய நெற்றியைப் பிளந்து விட்டது. குருதி கொப்பளித்துக் கொட்டியது. அவளால் வலியைத் தாங்க முடியவில்லை. குருதி கசிந்து அவளுடைய கண்களிலும் வாயிலும் படிந்தது. குருதியைக் கண்டவுடன் பூங்கோதை அச்சம் சினந் தீயாக எழுந்தது. அவள் பாண்டியன் முன் தோன்றிய கண்ணகியெனக் குமுறினாள்.
  ‘‘நீ ஒரு கொடுங்கோலன், கொலையாளி, நெஞ்சிலே ஈரமில்லாதவன்’’.
 ‘‘என்ன! நீ என்னையா இப்படி ஏசுகிறாய்? கேட்டீர்களா பூஞ்சோலை, வண்ணக்கிளி? அம்மாவிடம் சொல்லிக் கொள்ளுகிறேன் இல்லை, இல்லை. அதற்குமுன் உன்னை நானே . . . -
அவன் வெறிபிடித்தவன் போல் அச்சிறுமியின்மேல் பாய்ந்து அவள் முடியையும், தோள்பட்டையையும் பிடித்துக் குலுக்கினான். நெற்றியிலிருந்து மேலும் குருதிக் கொப்பளித்து பூங்கோதையின் கழுத்திலும் மார்பிலும் வடிந்தது. அவன் தன்னைக் கொலை செய்யப் போவதாகவே பூங்கோதை நினைத்தாள். உடனே அவளுடைய நிலை நாயையும் எதிர்க்கின்ற வெருகின் நிலையாக மாறியது. தன்னை விடுவித்துக் கொள்ளும் பொருட்டு அவள் என்ன செய்தாளென்றே அவளுக்குத் தெரியாது. ‘‘அம்மா அம்மா!! என் முகம். கண்ணெல்லாம் தொலைந்தன. காட்டுப் பூனை போல பிறாண்டுகிறாள்’’ என்று கூறிக்கொண்டே காளையப்பன் பூங்கோதையை உதறித்தள்ளினான். அவள் நிலை தடுமாறி நின்றாள். இதற்குள் இருவரும் உள்ளே ஓடிச் சென்று பூங்கோதை தம் அருமை அண்ணனைத் தாக்குவதாக அம்மையாரிடம் ஓலமிட்டனர். அம்மையார் அலறியடித்துக் கொண்டு தாழ்வாரத்திற்கு வந்து,
‘‘என்ன கொழுப்பு இந்த யாருமற்ற கழுதைக்கு!’’ என்றாள்.
இருந்தாலும் இக்குட்டிக்கு இவ்வளவு வெறி ஆகாது’ எனப் பின்பாட்டு பாடினாள் காளியம்மை.
‘அவளை இழுத்துச் சென்று மேல் மாடியில் உள்ள சிவப்பு அறையின் உள்ளே தள்ளி கதவை இழுத்துப் பூட்டி விடுங்கள்’ என்று செங்கமலம் ஆணையிட்டாள்.
உடனே இரண்டுபேர் தன் கால்களையும், கைகளையும் பிடித்துப் மாடிப்படியில் தூக்கிக் கொண்டு போவதை உணர்ந்தாள்.
இயல் - 3                                       
  பூங்கோதை திமிறிக் கொண்டே போனாள். அத்தகைய வெறிச் செயல்களெல்லாம் தன்னிடத்தில் புதுமையாகவே தோன்றியுள்ளன என்பதை அவள் உணர்ந்தாள். அவளைத் தூக்கிச் சென்ற கண்ணம்மா ஆகியவர் உள்ளத்தில் இதுவரை ஒரு சிறிது ஒதுங்கிக் கிடந்த நல்ல எண்ணமும் போய்விடும் போல் இருந்தது. இதற்குக் காரணம் அன்று பூங்கோதை தன்னியல்பாக நடந்து கொள்ளவில்லை என்பது தான்.
பல ஆண்டுகளாக அடங்கிக் கிடந்த அடிமை ஒரு வினாடி நேரம் பொறுமை இழந்ததால் ஏற்படக்கூடிய இன்னல்களை அவள் அடைய வேண்டியதாயிற்று. அந்நிலையில் அவள் எதனையும் பொருட்படுத்துவதாக இல்லை. ‘துணிந்தவனுக்குத் துயரமில்லை’ என்ற நிலைக்கு வந்துவிட்டாள்.
(தொடரும்)
குறள்நெறி மாசி 18, 1995 / 01.03.64
affected_girl01


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்