Skip to main content

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 74

 

அகரமுதல




(அகல் விளக்கு – மு.வரதராசனார். 73. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 27 தொடர்ச்சி

சிறிது பொறுத்து மறுபடியும் அதே போக்கில் பேசலானான். “நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பள பள என்று மின்னினேன். என் அழகையும் அறிவையும் அப்போது எல்லோரும் விரும்பினார்கள்; பாராட்டினார்கள். என்ன பயன்? வர வர, எண்ணெயும் கெட்டது, திரியும் கெட்டது. சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது. மங்கிவிட்டேன். நீதான் நேராகச் சுடர்விட்டு அமைதியாக எரியும் ஒளி விளக்கு” என்றான்.

அன்று மாலை மறுபடியும் உணர்ச்சி வேகத்தால் கதறுவான், அலறுவான், அதனால் காய்ச்சல் மிகும் என்று எண்ணி அவனெதிரே போய் உட்கார்ந்து பேசாமலே தப்பித்துக் கொண்டிருந்தேன். மாலை, சிற்றுண்டியும் காப்பியும் கொடுத்துவிட்டு, அங்கே நிற்காமல் உடனே வந்து விட்டேன். சந்திரன் தானாகவே அழைத்தான். “இன்றைக்குக் காய்ச்சல் முன்னமே வந்துவிட்டது. கண்ணெல்லாம் எரிகிறது. உடம்பெல்லாம் எரிகிறது. கணுவெல்லாம் வலி பொறுக்க முடியவில்லை. மருந்து ஏதாவது வாங்கி வந்தால் தான், தாங்க முடியும்போல் இருக்கிறது” என்றான்.

“உடனே எனக்குத் தெரிந்த மருத்துவரிடம் போய், தொழுநோய் என்பது தவிர மற்றச் செய்தி எல்லாம் சொல்லி மருந்து வாங்கிவந்தேன். மருந்தை உட்கொண்டதும், ஏதோ பேசத் தொடங்குவான் போல் தெரிந்தது. அதற்கு இடம் கொடுக்காமல் வந்து விடவேண்டும் என்று எண்ணி உடனே நகர்ந்து வந்துவிட்டேன். ஊருக்குக் கடிதம் எழுதலாம் என்று எண்ணி மேசையருகே உட்கார்ந்து ஏழெட்டு வரிகள் எழுதினேன். சந்திரன் கூப்பிட்ட குரல் கேட்டது. போய் நின்றேன்.

“இன்றைக்கு என் பக்கத்தில் நிற்க மாட்டேன் என்று போய் விடுகிறாயே. என்மேல் வருத்தமா? நான் ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டேனா?” என்றான்.

“அப்படி ஒன்றும் இல்லையே, கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன்” என்றேன்.

“யாருக்கு”

“வீட்டுக்கு”

“உங்கள் வீட்டுக்கா? எங்கள் வீட்டுக்கா?”

“எங்கள் வீட்டுக்குத்தான், உங்கள் வீட்டுக்கு உன்னைக் கேட்காமல் எழுதுவேனா?”

“ஆமாம், வேலு! நான் முன்னமே கேட்டுக் கொண்டிருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு என்னைப் பற்றி எதுவும் எழுதி விடாதே. ஒருவேளை அவர்கள் யாராவது வந்தாலும் சொல்லி விடாதே. யாராவது வருவதாகக் கடிதம் வந்தால் எனக்கு முன்னதாகவே சொல்லிவிடு. நான் இங்கிருந்து எங்காவது போய்விடுவேன். என்னிடம் ஒன்றும் மறைக்காதே.”

“இப்படி நான் உன்னை மறைத்து வைத்திருப்பது தெரிந்தால் என்மேல் அவர்கள் வருத்தப்படுவார்களே!”

“வருத்தப்பட்டாலும் சரி. எனக்காகத் தாங்கிக்கொள். என் மனது கேட்காது. நீ மீறிச் செய்யமாட்டாய் என்று நம்பித்தான் இங்கே வந்தேன். இல்லையானால் வந்திருக்க மாட்டேன். என்னுடைய கெட்ட அழுகிய வாழ்வைப் பற்றி அவர்கள் யாரும் தெரிந்து கொள்ளாமலே இருக்கட்டும். இந்தச் சீர்கெட்ட முகத்தில் அவர்கள் யாரும் விழிக்கக் கூடாது. தங்கை கற்பகத்தை மட்டுமாவது பார்க்க வேண்டும் என்று நேற்று ஆசை வந்தது. அதுவும் வேண்டா என்று மனத்தைக் கல்லாக்கி கொண்டேன். இன்று உறுதியாய்ச் சொல்லியிருக்கிறேன். நான் செத்தாலும் அவர்களுக்கு தெரிவிக்காதே. நீயே எடுத்துப் போட்டுவிடு. ஒழியட்டும். என் வாழ்வு என்னோடு ஒழியட்டும். நீயே எடுத்துப் போட்டு விடு. யாரும் கொள்ளியும் வைக்க வேண்டாம். மண்ணில் சும்மா போட்டு மண்ணைத் தள்ளி விடு. போதும். இது என் வேண்டுகோள். உன் நண்பனுடைய கடைசி வேண்டுகோள். மறக்காதே” என்றான்.

அந்தச் சொற்கள் என்னைக் கலக்கின. என் நெஞ்சம் உடைந்து, கண்ணீர் வழிந்து நின்றேன். சந்திரன் தலை நிமிர்ந்து நான் கண்ணீர் விடுவதைப் பார்த்துவிட்டான். “அழுகிறாயா? வேலு! எனக்காக அழுகிறாயா? அழு, அழு. ஆசுபத்திரியில் இருந்த போது, நான் செத்தால் அழுகிறவர் இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று எண்ணினேன். நீ ஒருத்தன் இருக்கிறாய். அழு, வேலு. எனக்காக அழுகிறாய். என் அழுகிய உடலை எடுத்து மண்ணில் போட்டுவிட்டு அழுவதற்கு நீ ஒருவன் இருக்கிறாயே, அது போதும்” என்றான்.

உடனே என்ன நினைத்துக் கொண்டானோ, தெரியவில்லை. ஒரு பெருமூச்சு விட்டுத் தன் வலக்கையால் மார்பைப் பற்றிக் கொண்டு விம்மினான். குப்புறப் படுத்துத் தலையணை மேல் தலை வைத்துக்கொண்டு, மடை திறந்தாற்போல் உணர்ச்சி பொங்கி வர அழுதான். சிறிது நேரம் அப்படியே அழுது கொண்டிருந்த பிறகு மெல்ல உணர்ச்சி தணிந்து வரத் தொடங்கியது. கவிழ்ந்தபடியே இருந்தான். இன்னும் அங்கே இருந்தால், ஏதாவது ஒரு பேச்சைத் தொடங்கி மறுபடியும் உணர்ச்சி வசப்படுவான் என்று எண்ணி, அவன் திரும்பிப் பார்ப்பதற்கு முன் வந்துவிட்டேன்.

அன்று இரவு உணவுக்காகச் சென்றபோது, அவன் அமைதியாகப் படுத்து உறங்கி கொண்டிருந்தான், “சந்திரா சந்திரா” என்று இரண்டு குரல் கொடுத்தும் எழவில்லை. மூன்றாவது குரலுக்கு “ஆ” என்று விழித்து “ஏன் வேலு!” என்றான். “உணவுக்கு நேரம் ஆயிற்று” என்றேன். “பசி இல்லை. மிளகு நீரில் கொஞ்சம் சோறு இட்டுக் கரைத்துக் கொடு. குடித்து விட்டுப் படுத்துக் கொள்வேன். வேறு ஒன்றும் வேண்டா” என்றான். அப்படியே மிளகுநீரும் சோறும் கரைத்துக் கொடுத்தேன். குடித்து விட்டுப் படுத்தான்.

“உடம்பு எப்படி இருக்கிறது?” என்றேன். “உடம்பு காய்ச்சலால் கொதிக்கிறது. உடம்பு எப்படியாவது போகட்டும். சாவுக்காக இப்போது பயமே இல்லை. அழுகின உடம்பு அழியப்போகிறது. அவ்வளவுதானே? நான் தேடி வந்தது கிடைத்து விட்டது. மன அமைதியே இல்லாமல் எவ்வளவோ துன்பப்பட்டேன். அது கிடைத்துவிட்டது. போதும். ஊரை விட்டு வந்த பிறகு, என் மனம் என்றைக்கும் இவ்வளவு அமைதியாக இருந்ததில்லை. இனிமேல் செத்தால் கவலை இல்லை. இதுபோதும்” என்றான்.

இவ்வாறு அவன் தான் பெற்ற மன அமைதியைக் குறித்துப் பேசியது எனக்கு மகிழ்ச்சி தந்தது. என் வீட்டுக்கு வந்த பிறகு நான் அருமை நண்பனுக்குச் செய்த உதவியால் அந்தப் பயனாவது ஏற்பட்டதே என்று மகிழ்ந்தேன்.

நண்பனுடைய மனம் அமைதியுற்ற அன்று இரவு பத்துமணிக்கு வானத்தில் பெரும்புயல் கிளம்பியது. இடியும் மின்னலும் நான் நீ என்று முந்திக்கொண்டு பெருங்கூத்து நடத்தத் தொடங்கின. காற்று சுழற்றிச் சுழற்றி அடித்தது. மழையும் பெய்யத் தொடங்கியது. உடனே எழுந்து சென்று சந்திரனைப் பார்த்தேன். அவன் முன்போலவே அமைதியாய்ப் படுத்திருக்கக் கண்டேன்.

சன்னல் கதவுகளை எல்லாம் சாத்திக் கொக்கி இட்டுத் திரும்பி வந்தேன். காற்றும் மழையும் நடத்தும் போரைப்பற்றி எண்ணியவாறே படுக்கையில் படுத்தேன். காற்றின் பேரொலி சிறிது அடங்குவதுபோல் இருந்தபோது மழைத்துளிகளின் ஓசை மிகுவதும், மழை ஓசை அடங்கும்போது காற்றின் ஒலி மிகுவதும், போரின் வெற்றி தோல்விகளைக் காட்டுவன போல் இருந்தன. பேரிடியாக இருந்த ஒலி மாறி அமைதியான முழக்கம் மீண்டும் வானத்தில் இடையிடையே கேட்டது. சன்னல் கண்ணாடி வழியாக வானத்தின் மின்னல் ஒளி விட்டுவிட்டு என் அறைக்குள் புகுதல் கண்டேன். இவற்றிற்கு இடையே நண்பன் சந்திரன் பெற்ற மன அமைதியைப் பற்றி எண்ணியவாறே உறங்கிவிட்டேன்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்