அகல் விளக்கு – மு.வரதராசனார்: 71
(அகல் விளக்கு – மு.வரதராசனார். 70. தொடர்ச்சி)
அகல் விளக்கு
அத்தியாயம் 27 தொடர்ச்சி
“நீ ஒன்றும் சொல்லாமலாவது இரு; சொல்லிவிட்டு இப்படித் துன்பப்படாதே” என்றேன்.
“எப்படி இருப்பேன் வேலு! எப்படி இருப்பேன்? நான் பேசாமல் இருந்தாலும் என் மனம் சும்மா இல்லையே. அது உள்ளே இருந்து வாட்டி வதைக்குதே. உன்னிடம் சொன்ன பிறகுதான் அது அடங்குது. நான் எப்படிச் சொல்லாமல் இருப்பேன்? அதோ நினைவு வருகிறதே! ஓர் ஏழைப் பெண், என்னால் சீரழிந்த பெண், என்னைப் போல் நோயாளி ஆய்விட்டாளே! அவளுக்கும் தொழுநோய் வந்துவிட்டதே. என்னால் எத்தனை குடும்பங்களில் இது பரவப் போகிறதோ! நான் மட்டுமா அழிந்தேன்? ஊரையும் கொஞ்சம் அழித்து விட்டுத்தானே வந்தேன்” இவ்வாறு சொல்லிச் சிறிது அமைதியானான்.
சரி, போகலாம் என்று அசைந்தேன். மறுபடியும் பேசத் தொடங்கினான்: “ஒன்று நல்லதாச்சு. என் பொண்டாட்டி போய்விட்டாள். நல்லதே செய்தாள். இருந்து நோயால் அழியாமல், தானே செத்து மறைந்தாள்” என்று அமைதியான குரலில் சொன்னான். அப்போது மட்டும் அமைதி இருந்த காரணம் என்ன, ஒருவேளை அந்தத் தற்கொலையைப் பற்றிய பயம் காரணமோ என்று எண்ணினேன். “அடடா! என்ன பாடு படுத்தினேன் அவளை! நல்ல கேள்வி கேட்டாள் என்னை! நீ படித்தவனா என்று சரியான கேள்வி கேட்டாள். எனக்குத் தகும் தகும். நான் படித்தவனா? படிப்பு எங்கோ போச்சு. எப்போதோ போச்சு! படித்தவனா நான்? நான் படித்தவனே அல்ல. நான் ஒரு முட்டாள். இப்போது உணர்கிறேன். அவள் சொன்னபோது உணரவில்லை. இப்படிக் கேட்டாளே என்று அடித்தேன். தடி எடுத்து அடித்தேன். ஆத்திரம் தீர அடித்தேன். அவளும் தன் ஆத்திரத்தை அந்தக் கிணற்றின் அடியில் போய்த் தீர்த்துக்கொண்டாள். வேலு! உனக்குத் தெரியுமா இது?” என்றான்.
நான் பேசாமல் நின்றேன். “தெரியுமா வேலு!” என்று என் முகத்தை பார்த்தான்.
“தெரியும்” என்றேன்.
“உனக்கு மட்டுமா? அம்மாவுக்கும் தெரியுமா?”
நான் பேசவில்லை.
“சொல்லு வேலு! இப்போது சொன்னால் என்ன, சொல்லு வேலு! அம்மா அப்பா எல்லார்க்கும் தெரியுமா?” என்று விடாமல் கேட்டான்.
“தெரியும்” என்றேன்.
“தெரியுமா!” என்று முதலில் மெல்லத் தலையை ஆட்டினான். பிறகு எங்கிருந்தோ உணர்ச்சி மேலிட்டு வந்து அவனை ஆட்டி வைத்தது. “அய்யோ! அம்மாவுக்கும் தெரிந்து போச்சா! நான் பொண்டாட்டியைக் கொன்றுவிட்டேன் என்று அம்மாவுக்கும் தெரிந்து போச்சா! என்னைப் பற்றி என்ன எண்ணினார்களோ, என்ன எண்ணினார்களோ? அய்யோ! அய்யோ!” என்று உடம்பெல்லாம் நடுங்கிக் கதறினான்.
சந்திரன் இப்படி உணர்ச்சி வசப்பட்டுக் கலங்கியதையும் கதறியதையும் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. “பழைய கதையை எல்லாம் நினைத்து ஏன் மனத்தைப் புண்ணாக்கிக் கொள்கிறாய்? வேண்டா. சும்மா இரு” என்று அப்பால் நகர்ந்தேன்.
“பழைய கதையா? நான் நினைக்கிறேனா? அது போக’லையே! மனத்தை விட்டுப் போக’லையே! நான் என்ன செய்வது?” என்று இருமத் தொடங்கினான்.
இரவு எட்டு மணிக்கு வேலைக்காரன் உணவு கொண்டு வந்ததும்; ஒரு பகுதி உணவைத் தனியே எடுத்து வைத்து விட்டு, மற்றொரு பகுதியை அந்த உணவுத் தூக்கிலேயே வைத்திருக்கச் சொன்னேன். வேலைக்காரனை விட்டுச் சந்திரனுக்கு உணவு இடச் சொல்லலாம் என்றால் அவனுடைய நொந்த மனம் என்ன நினைத்து வருந்துமோ என்று எண்ணினேன். நான் முன்னே சாப்பிட்டுவிட்டுப் பிறகு அவனுக்குப் போடலாம் என்றால், அதற்கும் மனம் வரவில்லை. வேலைக்காரனை அனுப்பிவிட்டேன். நானே உணவை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்குச் சென்றேன். சந்திரன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தான், “ஏன் அழுகிறாய்?” என்று கேட்டேன்.
“வேலு! அம்மாவை நினைத்துக் கொண்டேன்’பா. எவ்வளவு அன்பான மனம் அப்பா! மறுபடியும் எப்போடா பார்க்கப் போகிறேன்? நீலகிரியிலிருந்து நான் வந்த பிறகாவது அம்மா செத்திருக்கக் கூடாதா? அம்மா இருந்திருந்தால் இவ்வளவு கெட்டுப் போயிருக்க மாட்டேன் அப்பா! ஒவ்வொன்றும் நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை அப்பா வேலு!” என்று மறுபடியும் கண்ணீர் விட்டு அழுதான். நான் ஆறுதல் சொன்னேன்.
“உன்னால் ஆறுதல் பெறலாம் என்றுதான் வந்தேன்’பா. ஆனால் இங்கே வந்த பிறகுதான் என் மனத்தில் மறைந்து போயிருந்த பழைய நினைவுகள் எல்லாம் புறப்பட்டு வருகின்றன. நான் என்ன செய்வேன் வேலு? என்னால் தாங்க முடியலையே! உடம்பின் எரிச்சல் தினவு பாதை எல்லாம் அடங்கிப் போயிருக்கிறாற் போல் தெரிகிறது. என் மனத்தில்தான் இப்போது எல்லாத் துன்பமும் சேர்ந்துவிட்டது. தாங்க முடியவில்லையே” என்று பொருமினான்.
சாப்பிடச் சொன்னேன். ஒரு சொல்லும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்தான். நான் இலை எடுத்துப்போட முயன்றபோது, “வேலு! உனக்கு இந்த வேலையும் வைக்கணுமா! இந்த ஒன்று மட்டும் நான் செய்கிறேன்’பா” என்று தானே இலையைச் சுருட்டி ஒரு மூலையில் எறிந்தான்.
கைகழுவ நீர் விட்டேன். கையைத் துடைத்துக் கொண்டு உட்கார்ந்ததும், “அப்பா, வேலு! அம்மாவுக்குப் பிறகு என் மனைவி அன்பாகத்தான் சோறு போட்டாள். நான் சாப்பிட்டு முடிகிற வரைக்கும் என் எதிரில் நின்றது நின்றபடி இருப்பாள். ஒரு நாளாவது உட்காரு என்று நான் சொன்னதே இல்லை. அன்பாகத்தான் சோறு போட்டாள். ஆனால் நான் அன்பு காட்டவில்லை. அடக்குமுறைதான். பயந்து நடுங்கினாள். நான் கொஞ்சம் அன்பு காட்டியிருந்தேனோ, அம்மாவுக்கு மேல் இருந்திருப்பாள், கொடுமை செய்துவிட்டேன். கொஞ்சம் அன்பு காட்டியிருந்தால், இப்போது எவ்வளவோ உதவியாக இருந்திருப்பாள், எனக்காக உயிரையும் கொடுத்திருப்பாள். ஆமாம் எனக்காகத்தான் உயிரையும் கொடுத்தாள்” என்று மெல்லச் சொல்லி அடங்கினான்.
இன்னும் இருந்தால் ஏதாவது பேசிக்கொண்டு வருந்துவான் என்று, “சாப்பிடப் போகிறேன்” என்று சொல்லி நகர்ந்தேன். அவன் நான் சொன்னதைக் கவனிக்கவில்லை. ஏதோ சிந்தையில் இருந்துவிட்டான்.
நான் உண்டு முடித்தபிறகு, தண்ணீர் வேண்டுமா என்று கேட்டுவரச் சந்திரனிடம் சென்றேன். “தண்ணீர் வேண்டுமா?” என்றேன். அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். சிறிதுநேரம் கழித்து, அவனுடைய குரல் கேட்டது. சென்று பார்த்தேன். உறங்கிக் கொண்டே இருந்தான். தாழ்வாரத்தில் மெல்ல நடந்தபடி இருந்தேன். என்னென்னவோ சொல்லி உறக்கத்தில் வாய் பிதற்றிக் கொண்டிருந்தான். திருப்பி வந்துவிட்டேன்.
நான் படுக்கச் செல்லுமுன், அம்மா அப்பா என்று சந்திரன் பெருமூச்சு விடும் குரல் கேட்டது. சென்று, “என்ன வேண்டும்?” என்று கேட்டேன். “தண்ணீர் கொடு! உடம்பு கனகன என்று இருக்கிறது. இங்கும் அங்கும் அலைந்தது உடம்புக்கு ஆகவில்லை. காய்ச்சல் வந்துவிட்டது” என்றான்.
“கொஞ்சம் இரு. வெந்நீர் வைத்துக் கொண்டுவருவேன்” என்று அங்கிருந்து வந்து மின்சார அடுப்பில் தண்ணீரைக் காய்ச்சிக் கொண்டுபோனேன். குடித்து “அப்பா!” என்று சோர்ந்து படுத்தான். அவனுடைய மனம் அப்பாவை நினைக்கிறதோ இல்லையோ, வாய் அடிக்கடி சொல்கிறது; அவர் மகனைப் பற்றி மனத்தில் அடிக்கடி நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டு கிராமத்தில் இருக்கிறார்.
தெரிந்தால் வந்துவிடுவார் என்று எண்ணிக் கொண்டே படுக்கச் சென்றேன். சந்திரனுடைய காய்ச்சலை எண்ணி வருந்தினேன். உடம்பின் அலைச்சல் காரணம் என்று சொன்னான். உள்ளத்து உணர்ச்சி வேகமே காரணம் என்று எனக்குத் தோன்றியது. நாளை முதல் இப்படிப்பட்ட வேகமான பேச்சுக்கு இடம் தரக்கூடாது; நான் அங்கே நின்று கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது என்று எண்ணியபடியே உறங்கிவிட்டேன். நள்ளிரவில் ஒருமுறை விழித்து எழுந்துபோய்ப் பார்த்தேன். உடம்பில் இன்னும் காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டுப் பார்க்க அணுகினேன்.
தொடாமலே பின் வாங்கி வந்துவிட்டேன். காலையில் அவனுடைய குரல் கேட்டு விழித்தேன். “விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்து கிடந்தழுது” என்ற அருட்பாவை அவன் உருக்கமாகப் பாடிக் கொண்டிருந்தான். பாட்டைக் கேட்டு என் மனமும் உருகியது. அவன் விருப்பம்போல் பாடிக்கெண்டு ஆறுதல் பெறட்டும் என்று ஒருவகை ஒலியும் செய்யாமல் அங்கே போகவும் போகாமல் இருந்தேன். அரைமணி நேரம் கழித்து பாடுவது நின்றது. அப்போது அணுகி காய்ச்சல் இல்லையே?” என்றேன் “நின்றுவிட்டது” என்றான். என் மனம் மகிழ்ந்தது.
Comments
Post a Comment