Skip to main content

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 69

 அகரமுதல




(அகல் விளக்கு – மு.வரதராசனார். 68. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 27 தொடர்ச்சி

மூர்ச்சையாய் விழுந்து கிடப்பதை உணர்ந்தேன். முகமெல்லாம் வீக்கமும் தடிப்புமாக இருந்தன. “அய்யோ! சந்திரா!” என்று அழைத்து வருந்தினேன். வேலையாள் என் முகத்தைப் பார்த்துத் திகைத்து நின்றான். காப்பி வாங்கி வருமாறு சொல்லியனுப்பினேன். வழியில் சென்ற ஒரு டாக்சியைக் கூப்பிட்டு நிறுத்தினேன். மக்கள் மேலும் சிலர் கூடுவதைக் கண்டு, விரைந்து வீட்டுக்குப் போவதே நல்லது என்று உணர்ந்தேன்.

காப்பி வந்ததும், சந்திரனைத் திருப்பி அவன் வாயில் சிறிது விடச் செய்தேன். மூர்ச்சை தெளிந்ததும் கண் விழித்துப் பார்த்தான். கண்கள் சிவந்திருந்தன. என்னைப் பார்த்து, “வேலு! வேலு!” என்றான். “என்ன சந்திரா?” என்றேன். “வேலு! வேலு! வேலு!” என்று தலைகுனிந்து விம்மினான். “வீட்டுக்குப் போகலாம், வா. அப்புறம் பேசலாம்” என்று பிடித்து டாக்சியில் உட்கார வைத்தேன்” என் பை எங்கே?” என்றான். வேலையாள் தரையிலிருந்த பையை எடுத்துக் கொடுத்தான்.

டாக்சியில் வந்தபோது, அவனுடைய அழகிய முகம் பார்க்க அருவருப்பாக மாறியிருந்ததைக் கண்டு வருந்தினேன். தொழுநோய் அவனுடைய, காதுகளையும் மூக்கையும் அழகிய உதடுகளையும் கெடுத்துப் பாழ்படுத்தி அச்சமான தோற்றத்தை உண்டாக்கியிருந்தது. அவனுடைய இனிய குரல் – பெண் வேடம் போட்டு நடித்துப் பாடிப் புகழ்பெற்ற அந்தக் குரல் – கம்மலாய்க் கரகரப்பாய்க் கெட்டுப் போனதை எண்ணி வருந்தினேன்.

“அய்யோ! வேலு! உன்னைப் பார்க்கப் போகிறேனா என்று ஏங்கினேன். பார்த்துவிட்டேன் அப்பா, இனி நான் செத்துப் போனாலும் கவலைப் படமாட்டேன். சாகத்தயார்” சாவு வரட்டும், வரட்டும்” என்றான்.

“அப்படி எல்லாம் பேசாதே. கவலைப்படாதே. எங்கே இருந்து வருகிறாய்?” என்று கேட்டேன்.

“திருமணியில் இருந்தேன், அங்கிருந்துதான் வருகிறேன்.”

ஆசுபத்திரியிலா?”

“ஆமாம். மருந்து மருந்து ஊசி ஊசி என்று எல்லாம் பார்த்து விட்டேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக இருக்கிறது. மனம் தாங்கவில்லை. உடம்பும் தேறவில்லை. மனத்தையாவது தேற்றிக்கொள்ளலாம் என்று வந்து விட்டேன் அப்பா” என்றான்.

டாக்சியிலிருந்து இறங்கியதும், நான் சாவி எடுத்து வீட்டைத் திறந்ததைப் பார்த்து, “வீட்டில் யாரும் இல்லையா?” என்றான்.

“ஊருக்கு அனுப்பியிருக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றேன்.

“நல்லதாச்சு. நான் செய்த புண்ணியம், வீட்டில் யாரும் இல்லை. இந்த நோய் அப்படிப்பட்டது அப்பா. எங்கே போனாலும் இருக்கிறவர்களுக்குத் துன்பம் கொடுக்கிற நோய் இது. இரண்டே நாள் இருந்துவிட்டுப் போய்விடுவேன்” என்றான்.

“இரண்டு நாள் அல்ல. இரண்டு மாதம் இரு. எனக்கு ஒரு துன்பமும் இல்லை” என்றேன்.

அவன் கட்டியிருந்த ஆடையில் இரத்தக் கறையைக் கண்டேன். என் மனம் அருவருப்பும் கொண்டது; வருத்தமும் கொண்டது. இருந்தாலும், நட்பாய்ப் பழகிய பழைய மனம் வந்து இரக்கம் கொண்டது. நாற்காலியைக் காட்டி “உட்காரு” என்றேன்.

தலையை அசைத்து மறுத்தான். “எனக்கு இங்கே இடம் தகாது; யாராவது வருவார்கள்; பார்ப்பார்கள். உனக்கு என்னால் ஒரு குறைவும் வரக்கூடாது வேலு, தோட்டத்துக்குப் போய் அங்கே ஒரு மூலையில் இருப்பேன். அங்கே வா. இடம் காட்டு” என்று முன்னே நடந்தான். அவனுடைய கால்களைப் பார்த்தேன். நான் பார்த்த வீக்கமும் வெடிப்பும் புண்ணும் என் நெஞ்சைப் புண்ணாக்கின. பார்த்த என் நெஞ்சு வெடிப்புகள் உடையதாய் இரத்தம் கசிவது போல் உணர்ந்தேன். கைவிரல்கள் என் கண்ணுக்கும் படாதவாறு மடக்கி வைத்திருந்தான். தோட்டத்தில் தாழ்வாரத்தில் இடம் காட்டினேன்.

“அய்யோ! இந்த இடம் சுத்தமாக இருக்கிறதே. இங்கே நான் இருக்க வேண்டுமா? வேறு ஏதாவது இடம் மாட்டுத் தொழுவம் போல் ஒன்றும் இல்லையா? ஒரு மூலையாக யார் கண்ணுக்கும் படாத இடமாக இருந்தால் போதும்” என்றான்.

“இங்கே யாரும் வரமாட்டார்கள். கட்டில் பிடித்துப் போட்டுவிட்டால் இங்கேயே இருக்கலாம்” என்றேன்.

“கட்டிலா? எனக்கா?” என்று என்னை நிமிர்ந்து பார்த்த போது என் கண்கள் அவனைப் பார்க்கக் கூசின. “ஒரு பழைய பாய் கொடு. அது போதும். நான் போன பிறகு அதைக் குப்பைத் தொட்டியில் எடுத்துப் போட்டுவிடவேண்டும்” என்றான்.

உள்ளே சென்று, ஒரு நல்ல பாயும் மெல்லிய மெத்தையும் ஒரு தலையணையும் கொண்டு வந்தேன்.

“வேலு சொன்னால் கேள். விருந்தாளிக்குக் கொண்டு வருவதுபோல் நல்ல பாயும் மெத்தையும் கொண்டு வருகிறாயே. வேண்டாம்’பா. ஏதாவது கந்தல் கொடுபோதும்” என்றான்.

“என் மனம் கேட்காது. பேசாமல் இரு. மறுக்காதே. என் கடமை இது” என்று வற்புறுத்திப் பாய்மேல் மெத்தை பரப்பி உட்காரச் சொன்னேன். அவன் மெத்தையை நீக்கி விட்டுப் பாய்மேல் உட்கார்ந்தான். “குடிக்கத் தண்ணீர் வேண்டும்” என்றான்.

தண்ணீர் எடுக்கச் சென்றபோது அவன் இரண்டு கைகளாலும் உடம்பெல்லாம் சொரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அப்போது அவனுடைய கைவிரல்களைப் பார்த்து விட்டேன். என்னைக் கண்டதும் அவன் சொரிவதை நிறுத்தி விட்டுக் கைகளை மடக்கிக் கொண்டான். தண்ணீரை நீட்டினேன். “வை கீழே. நான் எடுத்துக் குடிப்பேன். உனக்கு ஏதாவது வேலை இருந்தால் முன்னே போய்ப்பார். அப்புறம் பேசலாம்” என்றான்.

“எனக்கு இப்போது ஒரு வேலையும் இல்லை. உனக்கு வேண்டியதைச் சொல்.”

“சாப்பாடு யார் சமைப்பது?”

“வேலைக்காரன் வருவான். ஓட்டலிலிருந்து எடுத்து வந்து கொடுப்பான்.”

“சரி போதும்.”

நான் உட்கார முயன்றேன்.

“நீ ஏன் இங்கே உட்காரணும். என் அழகைப் பார்க்கணுமா? வேண்டா, வேண்டா, போ” என்று தடுத்தான்.

“அப்படி எல்லாம் சொல்லாதே. உன் அழகையும் பார்த்தேன். உன் துன்பத்தையும் பார்க்கிறேன். என்ன செய்வது?” என்று உட்கார்ந்தேன்.

“வேலு!” என்று தரையைப் பார்த்துப் பெருமூச்சு விட்டான்.

“தண்ணீர் குடிக்கவில்லையே” என்றேன்.

“உன் எதிரில் இந்தக் கைகளை நீட்டித் தண்ணீர் எடுப்பதற்கு மனம் வரவில்லை, அப்பா. நான் செய்த வினை அப்பா, வினை!”

“புதிய இடத்தில் அச்சப்பட்டுத் தயங்குவதைப்போல் இங்கே இருக்காதே. நோய் வந்துவிட்டது. உன் அழகைப் பாழாக்கிவிட்டது. என்ன செய்வது? நான் பார்க்கிறேன் என்று இப்படித் தயங்கினால் இங்கே நீ வந்து பயன் என்ன? உன் உடம்புக்குத் தகுந்தபடி நடந்துகொள். கைகாலை நீட்டி வசதியாக இரு” என்றேன்.

“வசதியா? எனக்கு இன்னும் வசதி வேண்டுமா?” என்று இருமினான்.

அவன் இருமுவதைக் கேட்கத் துன்பமாக இருந்தது.

“மருந்து வாங்கி வருகிறேன். என்ன மருந்து, எதற்கு என்று சொன்னால்.”

“மருந்தா? இனிமேல் ஒரே மருந்துதான் தேவை; சாவுக்கு மருந்து.”

என் மனம் வாடியது. “நீ இங்கே இருக்கும் வரையில் சாவு இது அது என்று ஒரு பேச்சும் பேசக்கூடாது. இப்படிப் பேசினால் எனக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கிறது தெரியுமா?” என்றேன்.

“சந்திரன் இப்படி ஆவான். உடம்பெல்லாம் புண்ணாய்ச் சீழும் இரத்தமுமாய் உன் வீட்டுக்கு வருவான் என்று எதிர்பார்த்தாயா?” என்று சொல்லிக்கொண்டே தண்ணீரை எடுத்துக் குடித்தான். பிறகு, “எனக்கு யார் இருக்கிறார்கள்? நான் வேறே யார் வீட்டுக்குப் போவேன்?” என்று கலங்கினான்.

அவனுடைய வீட்டாரைப் பற்றிப் பேசலாம் என்று எண்ணினேன். அந்தப் பேச்சால் அவனுடைய மனம் மேலும் என்ன துன்பப்படுமோ என்று தடுத்துக் கொண்டேன். அவனாகவே அவர்களைப் பற்றிப் பேசும் வரையில் காத்திருப்போம் என்று இருந்தேன்.

தரையைப் பார்த்தபடியே எதையோ சிந்தித்து ஒரு முறை தலை அசைத்தான். வந்தவன் சிறிது களைப்பாறட்டும். புதிய இடத்தில் மனமும் அமைதியுறட்டும் என்று அவனைத் தனியே விடும் நோக்கத்தோடு எழுந்தேன்.

“ஆமாம். ஏதாவது வேலை இருக்கும், போய்ப்பார். நானும் கொஞ்சம் படுத்துக்கொள்வேன். களைப்பாக இருக்கிறது” என்றான்.

“இரண்டு பழம் கொண்டு வருவேன். தின்றுவிட்டுப் படுத்துக்கொள்” என்று மலைவாழைப்பழமும் உலர்ந்த திராட்டையும் கொண்டு போனேன்.

மலைவாழைப்பழம் தின்று, மறுபடியும் தண்ணீர் கேட்டுக் குடித்து விட்டுப் படுத்தான்.

சிறிது நேரத்தில் வேளையாள் வந்தான். இரண்டு பேருக்குக் காப்பி வாங்கி வருமாறு சொன்னேன். காப்பி வந்ததும் நானே ஒரு குவளையில் கொண்டு போனேன். சந்திரன் குறட்டை விட்டுத் தூங்குவதைக் கண்டு எழுப்பாமல் திரும்பினேன்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்