மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 46
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 45 தொடர்ச்சி)
குறிஞ்சி மலர் 17 தொடர்ச்சி
“அதெல்லாம் கெடுதலாக ஒன்றும் இருக்காது. சீக்கிரம் அக்கா திரும்பி வந்துவிடுவாள்” என்று ஓதுவார்க்கிழவர் அவர்களைத் தைரியம் சொல்லிச் சமாதானப் படுத்தினார். அச்சகத்திலிருந்து திருநாவுக்கரசு டாக்டர் வீட்டுக்கு ஓடி வந்திருந்தான்.
அந்தச் சில மணி நேரத்தில் தன் மேல் அன்பு கொண்டிருந்த எல்லாரையும் கதிகலங்கிப் பரபரப்படையச் செய்துவிட்டாள் பூரணி. டாக்டர், அரவிந்தனிடம் வந்து கூறினார்.
“பயப்படுகிறார்போல் இப்போது ஒன்றுமில்லை. ஆனால் இப்படியே தொடர்ந்து நாள் தவறாமல் இரண்டு மூன்று பிரசங்கங்கள் வீதம் தொண்டையைக் கெடுத்துக் கொண்டால் பயப்பட வேண்டிய நோயாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ‘வருமுன் காக்க வேண்டும்’. நான் சொல்கிற யோசனைப்படி செய்யுங்கள். குறைந்த பட்சம் ஆறுமாத காலமாவது இந்தப் பெண்ணுக்கு முழு அளவில் ஓய்வு தேவை. எங்காவது நல்ல இடத்துக்கு அழைத்துச் சென்று ஒய்வு பெற செய்யுங்கள். ஊட்டமான உணவும், உற்சாகம் நிறைந்த சூழ்நிலையும் கிடைக்க வேண்டும். தாமதமின்றி இதைச் செய்து விடுவது நல்லது.”
டாக்டர் கூறியதன் அவசியத்தை அரவிந்தனும் உணர்ந்தான். அந்த ஓராண்டு காலமாக ஓய்வில்லாமல் மதுரையிலும் பக்கத்துச் சிற்றூர்களிலும் அலைந்து பல பொற்பொழிவு செய்திருக்கிறாள் அவள். வேளைக்கு உணவில்லை. தூக்கமில்லை. சொற்பொழிவைத் தவிர சமூகப் பொதுப்பணிகளுக்காக வேறு அலைந்திருக்கிறாள். கார் வசதி, இரயில் வசதி இல்லாத கிராமம் ஒன்றில் மலேரியா பரவி தினம் நான்கு பேர்கள் வீதம் இறந்து கொண்டிருந்தார்கள். மதுரை மாவட்டத்தின் ஒதுக்குப்புறமான பிரதேசத்தில் இருந்தது அந்தக் கிராமம். பத்திரிகையில் செய்தி பார்த்தவுடன் அரவிந்தன் அந்தக் கிராமத்துக்குப் புறப்பட இருந்தான். பூரணி அவனை முந்திக் கொண்டுவிட்டாள்.
“எல்லாப் பொதுக்காரியங்களையும் நீங்களே எடுத்துக் கொண்டால் அப்பாவின் புத்தக வேலைகள் என்ன ஆவது? இந்தக் கிராமத்துக்கு நான் போய்வருகிறேன்” என்று மலேரியா ஒழிப்பு மருந்தோடு அவளே புறப்பட்டுப் போய் அந்தக் கிராமத்தில் இருந்து பணிபுரிந்துவிட்டு வந்தது, இப்போது அரவிந்தன் நினைவில் படர்ந்தது. ‘அவளுக்கு ஓய்வு அவசியம்தான்! இல்லாவிட்டால் அவள் நிரந்தரமான நோயாளியாகி விடுவாள்!’ என்று நினைத்து அஞ்சினான் அரவிந்தன். காற்று மாறுவதற்காக அவளை எந்த ஊருக்கு அழைத்துக் கொண்டு போகலாமென்று அரவிந்தனும் மங்களேசுவரி அம்மாளும் கலந்து ஆலோசனை செய்தனர்.
“வசந்தாவும் செல்லமும் என் வயிற்றில் பிறந்த பெண்கள். பூரணி எனக்கு வயிற்றில் பிறவாத பெண். அவள் எனக்கு அறிமுகமான நாளிலிருந்து நான் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவளுக்கு இல்லாத உபகாரமா! கொடைக்கானல் மலையில் எனக்கு ஒரு பங்களா இருக்கிறது. என் கணவர் இருக்கிறபோது வாங்கினார். அப்புறம் எப்போதாவது கோடையில் நானும் குழந்தைகளும் போனால் தங்குவது உண்டு. இப்போது அது காலியாகத்தான் இருக்கிறது. பூரணிக்கு அங்கே வசதி செய்து கொடுத்துவிட்டால் ஆறு மாதமோ ஒரு வருடமோ விருப்பம்போல் இருக்கலாம். இடமும் ஆரோக்கியமான இடம். அவளுக்கும் உற்சாகமாக இருக்கும்” என்றாள் அந்த அம்மாள்.
“பூரணியை உயர்ந்த இடத்தில் போய் இருக்கச் செய்ய வேண்டுமென்கிறீர்கள் அப்படித்தானே?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் அரவிந்தன்.
“அவள் என்றும் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டியவள் தானே?” என்று இரட்டைப் பொருள்படவே அந்த அம்மாளிடமிருந்து பதில் வந்தது அவனுக்கு. பூரணியின் தம்பி, தங்கை இருவரையும் யார் பார்த்துக் கொள்வதென்று பிரச்சினை எழுந்தது. அந்தப் பொறுப்பையும் மங்களேசுவரி அம்மாளே எடுத்துக் கொண்ட போது எப்படி நன்றி கூற்வதென்று தெரியாமல் திணறினான் அரவிந்தன். இந்த ஏற்பாட்டைப் பூரணியிடம் கூறியபோது, “நான் உங்களுக்கெல்லாம் சிரமம் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். என்னால் உங்களுக்கு அதிக உதவிகளில்லை. உங்கள் உதவிகளை நான் அதிகமாக அடைந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய வாழ்வே ஒரு நோய்போல் ஆகிவிட்டது” என்று அவர்களிடம் ஏங்கிச் சொன்னாள் அவள். குரல் தளர்ந்திருந்தது. தொண்டை கட்டியிருந்ததனால் உடைந்த குரலில் பேசினாள். இரண்டு மூன்று நாட்களில் தோற்றமும், பேச்சும் தளர்ந்து நலிந்திருந்தாள் அவள். கவின் நிறைந்த அவளுடைய கண்களில் கீழிமைகளுக்கு அடியில் கருவளையம் போட்டிருந்தது. ஏதாவது சொல்வதற்கு வாய் திறந்தால் வார்த்தைகளை முந்திக்கொண்டு இருமல் பொங்கிப் பொங்கி வந்தது.
வரையறை இல்லாமல் சொற்பொழிவுகளுக்காகவும் பொதுப் பணிகளுக்காகவும், அவள் ஊர் ஊராக அலையத் தொடங்கியபோதே, அவளை ஓரளவு கட்டுப்படுத்தாமல் போனோமே என்று கழிவிரக்கம் கொண்டான் அரவிந்தன்.
“நீயாகத்தான் இவ்வளவையும் இழுத்துவிட்டுக் கொண்டாய்! உடம்பையும் ஓரளவு கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் நீ. உன்னுடைய உடல் நலமாக இருந்தால்தானே நீ இன்னும் நெடுநாட்கள் பொதுக் காரியங்களில் ஈடுபடலாம்?” என்று அவளைக் கடிந்து கொண்டான் அரவிந்தன்.
புதன்கிழமை அவளை அழைத்துக் கொண்டு கொடைக்கானல் புறப்படுவது என்று ஏற்பாடு ஆகியிருந்தது. காற்று மாறுவதற்காக அவள் கொடைக்கானலில் தங்கியிருக்கும் காலத்தில் அவளுடைய உதவிகளுக்காக யாரை உடனிருக்கச் செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது.
“வெளியில் வருவதற்குக் கூசிக்கொண்டு கிடக்கிறாள் என் மூத்த பெண். ஏதாவது கேட்டால் என்னோடு பேசுவதும் இல்லை. தனக்குத்தானே அழுகிறாள். நடந்ததை மறந்து கலகலப்பாக பேசமாட்டேன் என்கிறாள். உன்னோடு சிறிது காலம் இருந்தால் மாறலாமே என்று என் மனத்தில் நம்பிக்கை உண்டாகிறது. அவளை உன்னோடு அனுப்பட்டுமா கொடைக்கானலுக்கு. இந்த சித்திரையில் அவளுக்கு எப்படியும் திருமண ஏற்பாடு செய்து விடலாம் என்று இருக்கிறேன். அதுவரையில் வேண்டுமானால் உன்னோடு கொடைக்கானலில் இருக்கட்டுமே. இப்போது அவளே உன் அருமையைப் புரிந்து கொண்டிருக்கிறாள். உன்னோடு அவள் வர ஒப்புக்கொள்வாள்” என்று மங்களேசுவரி அம்மாள் கூறினாள்.
“ஒரு நோயாளியோடு இன்னொரு நோயாளியையும் கூட்டி அனுப்பப் பார்க்கிறீர்களே அம்மா இது நியாயமா?” என்று முருகானந்தம் வேடிக்கையாக அந்த அம்மாளிடம் கேட்டான்.
“என்னப்பா செய்வது? அவளை மெல்ல மாற்றி வழிக்குக் கொண்டு வர முடியுமானால் அது பூரணியால் தான் முடியும் போலிருக்கிறது. பூரணியாலேயே முடியாவிட்டால் வேறு யாராலும் முடியாது. நான் அவளை எப்படியோ வளர்த்துச் செல்லம் கொடுத்துப் பாழாக்கிவிட்டேன்” என்று அவனுக்கு அந்த அம்மாள் மறுமொழி கூறினாள்.
வசந்தாவைத் தவிர ஒரு சமையல்கார அம்மாளையும் பூரணியோடு உடன் அனுப்ப ஏற்பாடு செய்திருந்தாள் மங்களேசுவரி அம்மாள். மங்கையர் கழகத்துக் காரியதரிசிக்கு விடுமுறை கேட்டு விண்ணப்பம் அனுப்பியிருந்தாள் பூரணி.
“உனக்கில்லாத விடுமுறையா பூரணி. நீ போய் உடம்பைத் தேற்றிக் கொண்டு வா அம்மா. இப்படி வரவழைத்து விட்டுக் கொண்டு எல்லோரையும் கவலையில் ஆழ்த்திவிட்டாயே, நீ சுகமடைந்து வந்தாலே போதும் எங்களுக்கு” என்று நேரிலேயே வந்து அவளைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போனாள் காரியதரிசி.
“அக்கா எங்களையெல்லாம் விட்டு நீ மட்டும் போறியே!” என்று புறப்படும்போது பூரணியின் காலைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கிவிட்டாள் தங்கை மங்கையர்க்கரசி. தம்பி சம்பந்தம் கண்களில் நீர் மல்க நின்றான்.
“புறப்படும்போது இப்படியெல்லாம் அழக்கூடாது அம்மா! நீ ஒரு குறைவுமில்லாமல் எங்கள் வீட்டில் இருக்கலாம்” என்று மங்கையர்க்கரசியைத் தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டாள் மங்களேசுவரி அம்மாள். அரவிந்தன், பூரணி கார் ஏறுமுன் அவளிடம் கூறலானான். “புது இடமாயிற்றே என்று தயங்கிக் கொண்டே போகாதே. போய் நிம்மதியாக ஓய்வு கொண்டு இரு. முடிந்தால் அடுத்த மாத நடுவில் நானும் முருகானந்தமும் அங்கே வந்து பார்க்கிறோம். போய்ச் சேர்ந்ததற்குக் கடிதம் போடு. உடல் நலத்தைப் பற்றியும் அடிக்கடி எங்களுக்கு எழுது. பணம் வேண்டுமானாலும் ஒரு வரி கடிதம் எழுதினால் உடனே அனுப்புகிறோம். எழுதிக் கேட்பதா என்று கூச்சப்பட்டுக் கொண்டு பேசாமல் இருந்துவிடாதே.”
“அக்கா! உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிக் கை கூப்பினான் முருகானந்தம்.
“அந்தக் குடிசை உதவி வேலையை உடனே தொடங்கிவிடுங்கள் அரவிந்தன். வசூல் ஆன தொகையைக் கண்ட ஆட்களிடம் கொடுத்து ஏழைகளை ஏமாற விட்டுவிடாதீர்கள். நீங்களும் முருகானந்தமும் கூட இருந்து செய்யுங்கள். இந்தச் சமயத்தில் இங்கே உங்களோடு கூட இருந்து அந்தப் பொதுத் தொண்டில் நானும் ஈடுபட முடியாமல் இப்படி எங்கோ புறப்பட்டுப் போகிறேனே என்பதை நினைக்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்று நினைவு படுத்தினாள் பூரணி.
(தொடரும்)
தீபம் நா.பார்த்தசாரதி
குறிஞ்சி மலர்
Comments
Post a Comment