Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 49

 அகரமுதல



(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  48 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்

18

“இப்போதைக்கு என்னை விட்டுவிடு அரவிந்தன். இராத்திரி ஒன்பது மணிக்கு மேல் அச்சகத்துக்கு வந்து அடி முதல் நுனி வரையில் எல்லா விவரமும் நானே சொல்லிவிடுகிறேன். திலகர் திடலில் ஆறரை மணிக்குப் பொதுக்கூட்டம். நான் அதில் பேசுகிறேன்” என்று பரபரப்பைக் காட்டிக் கொண்டு அரவிந்தனிடமிருந்து நழுவினான் முருகானந்தம்.

“இந்தப் பொதுக்கூட்டம், தொழிற்சங்கம், சமூகத்தொண்டு, ஏழைகளின் உதவி நிதிகள் – இவையெல்லாம் இனி என்ன கதியடையப் போகின்றனவோ? நீ காதல் வலையில் நன்றாகச் சிக்கிக் கொண்டு விட்டாயோ?” என்று அவனைக் கேலி செய்து அனுப்பிவிட்டு மனம் தாங்க முடியாத வியப்புடன் அச்சகத்திற்குச் சென்றான் அரவிந்தன். உண்மையிலேயே இது மிகவும் வியப்புத் தரும் செய்தியாகத்தான் இருந்தது அவனுக்கு. முருகானந்தத்திடம் கிண்டலும் வேடிக்கையுமாகப் பேசி அனுப்பிவிட்டாலும் பொறுப்புணர்ச்சியோடு நினைத்துப் பார்த்தபோது பயமாகவும் மலைப்பாகவும் இருந்தது அரவிந்தனுக்கு.

‘இந்தத் தொடர்பைப் பற்றி மங்களேசுவரியம்மாள் என்ன நினைப்பார்? பூரணி என்ன நினைப்பாள்? முருகானந்தத்தின் பெற்றோர்கள் தான் என்ன நினைப்பார்கள்? சிறுபிள்ளைத்தனமாக அல்லவா இருக்கிறது? நாலு தடவை சந்தித்து சிரித்துப் பேசியும் பழகி விட்டால் மனத்தில் இந்த அசட்டுத்தனமான கனவுகள் உண்டாகிவிடுகின்றன. இராத்திரி அச்சகத்துக்கு வந்தால் முருகானந்தத்தைக் கண்டிக்க வேண்டும்?’ என்று தீரச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான், அரவிந்தன்.

‘செல்வத்திமிரும் இறுமாப்பும் நிறைந்தவள். ஆடம்பா அசட்டுத்தனங்களும், வெளிப்பகட்டும் உள்ளவள்’ என்றுதான் வசந்தாவைப் பற்றிப் பூரணி சொல்லி இருந்தாள். அத்தகைய இறுமாப்பு நிறைந்த பெண் உள்ளம் அதற்கு நேர்மாறான கொள்கைகளும் சாதாரண வாழ்க்கை வசதிகளும் உள்ள முருகானந்தத்தை நோக்கி எப்படி மலர்ந்தது? எவ்வாறு நெகிழ்ந்தது? சிந்திக்க சிந்திக்க அந்த இருவரின் இணைப்பு விளங்காப் புதிராகவே தோன்றியது அவனுக்கு. ‘கணத்துக்குக் கணம் ஆசைகளும் விருப்பங்களும் மாறுபடும் சபலம் என்ற உணர்வே! உனக்குத்தான் பெண் என்று மறுபெயர் சூட்டியிருக்கிறார்கள்‘ என்னும் கருத்துப்பட ‘ஆம்லெட்’டு நாடகத்தில் சேக்சுபியர் எழுதியிருப்பது நினைவு வந்தது அவனுக்கு. உலகத்து அறிஞர்களின் பொன்மொழிகளைக் குறித்து வைக்கும் தனது ஏட்டுப் புத்தகத்தில் இக்கருத்தைக் குறித்திருந்தான் அவன். எல்லாப் பெண்களையும் இந்தச் சட்டத்தில் அடக்க விருப்பப்படவில்லை அவன் மனம். ‘பூரணியைப் போல் அறிவு வளர்ச்சியிலும் தொண்டு, தியாகங்களிலும் கரைந்து போய் சொந்தச் சபலங்களை மறந்து விடுகிறவர்களும் இருக்கிறார்களே!’ அரவிந்தனின் சிந்தனை எதிரே வந்து கை நீட்டிய ஓர் இளைஞனால் கலைந்தது.

“ஐயா, சாப்பிட்டு ஏழு நாளாச்சு ஐயா! ஊருக்குத் திரும்பிப் போகலாமென்றால் கையில் காசு இல்லை ஐயா. ஏதாவது உதவி செய்யுங்க ஐயா. வயிற்றுப் பசி தாங்கமுடியலை ஐயா. இன்னும் சிறிது நேரம் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தால் இப்படியே நடுவீதியில் செத்துப் போய் விழுந்து விடுவேன் போலிருக்கிறது ஐயா” என்றான் அந்த இளைஞன் கண்ணீரும் கம்பலையுமாக.

வேகமாக நடந்து கொண்டிருந்த அரவிந்தன் நின்றான். துவண்டு ஒடிந்து விழுந்து விடுகிறாற்போல நின்ற அந்த இளைஞனை நன்றாகப் பார்த்தான். நாலைந்து தடவைகள் (இ)ரப்பரால் அழித்து எழுதின காகிதம் மாதிரி வாலிபம் வீறுகுன்றிச் செழிப்பற்ற முகம். தொடர்ந்து பல நாட்களாகக் குளிக்காத தோற்றம். வேர்வையேறி அழுக்கடைந்த சட்டை வேட்டி. குழிந்து இமையடியில் பள்ளம் வாங்கிப் பஞ்சடைந்த கண்கள். இந்த நாட்டு ஏழ்மை ஏக்கங்களுக்கும், பசி, பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டங்களுக்கும் பிரதிநிதியாக வந்தவன் போல் நின்றான் அந்தப் பஞ்சை வாலிபன். தன்னை காண்பவரிடத்தில் இரக்கத்தை உண்டாக்கும் குழைவைத் தன் முகத்திலும் தோற்றத்திலும் கைகளிலும் காட்டினான் அவன். அரவிந்தன் கேட்டான். “உனக்கு என்ன ஊர் அப்பா?”

இராமநாதபுரம் சீமையில் வறட்சியும் பஞ்சமும், நித்திய ஆட்சிபுரியும் பகுதியைச் சேர்ந்த ஒர் ஊரைச் சொன்னான் அந்த வாலிபன்.

“எதுவரை படித்திருக்கிறாய்?”

“எசு.எசு.எல்.சி. வரை படித்திருக்கிறேன் ஐயா! தட்டச்சு தெரியும். தேர்வாணையம் பரீட்சை எழுதினேன். தேறவில்லை வேலை தேடி மதுரைக்கு வந்தேன், ஐயா!”

அரவிந்தனுக்குப் பரிதாபமாக இருந்தது. ‘படித்துப் பரீட்சை எழுதிவிட்டு மனத்தில் வாழ்க்கையைப் பற்றிய கனவுகளோடு பள்ளிக்கூடத்துப் படிகளிலிருந்து இறங்கும் இளைஞர்களில் பெரும்பாலோர் இப்படித்தான் இன்று இந்த நாட்டில் பெரிய நகரத்தின் ஆரவாரமிக்க தெருக்களில் வயிற்றுக்குப் பிச்சை கேட்டுக்கொண்டு திரிகிறார்கள். இவர்களுடைய மானத்தைக் காப்பாற்றாத வரையில் பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது இந்த நாட்டில்’ என்று கொதித்தது அவன் உள்ளம்.

“ஐயா, பசி பொறுக்க முடியவில்லை!” தனது இடது கையால் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வலது கையை நீட்டினான் அவன். சிப்பா பையில் கையை விட்டு முழு ஒரு உரூபாய்த் தாளை எடுத்து அவன் கையில் வைத்து, “ஏதாவது வாங்கிச் சாப்பிடு, அப்பா!” என்று கூறிவிட்டுத் திரும்பிப் பாராமல் வேகமாக நடந்தான் அரவிந்தன். தன்னையே அந்த இளைஞனின் நிலையில் வைத்து எண்ணிப் பார்த்து வருந்தினான் அவன். ‘மீனாட்சி அச்சகமும், கருணையும் பெருந்தன்மையும் உள்ள அதன் உரிமையாளரும் தடுத்தாட் கொண்டிருக்காவிட்டால் தான் இப்படி ஏதாவது ஒரு பெரிய நகரத்தின் புழுதி படிந்த தெருக்களில் வயிற்றுக்காக அலைந்து கொண்டிருக்க வேண்டியவன் தானே’ என்பதைச் சிந்தித்த போது மேலும் நெகிழ்ந்து குழைந்தது அவன் உள்ளம்.

கையில் தமிழ்ச் சங்கத்துப் புத்தகங்கள் கனத்தை விட மனத்தில் அதிகமாகக் கனத்த சிந்தனையோடு அச்சகத்துக்குள் நுழைந்தான் அரவிந்தன். அச்சகத்து வேலை நேரம் முடிந்து வேலைக்காரர்கள் ஒவ்வொருவராகக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

“நீங்க தமிழ்ச் சங்கத்துக்குப் புறப்பட்டுப் போனப்புறம் ‘ஐயா’ வந்தாருங்க. இப்போ கீழாவணி மூலவீதிப் பேப்பர்க் கடைக்குப் போயிருக்காரு. நீங்க வந்தால் உங்களை எங்கேயும் வெளியே போய்விடாமல் இங்கேயே இருக்கச் சொன்னாரு. உங்ககிட்ட ஏதோ முக்கியமான சங்கதி கலந்து பேசணுமாம்” என்று அச்சகத்து ஊழியன் (ப்யூன்) அரவிந்தனிடம் வந்து சொன்னான். அப்போது அரவிந்தனுடைய மனத்தை ஆட்சி புரிந்து கொண்டிருந்த எண்ணங்களெல்லாம் தெருவில் சந்தித்த இளைஞனைப் பற்றியதாக இருந்தது. அதிலிருந்து தற்காலிகமாகத் தன்னை மீட்டுக் கொண்டு, “நான் இங்கேதானப்பா இருக்கப் போகிறேன். இன்றைக்கு வெளியில் எங்கும் போகப் போவதில்லை. நீ உள்பக்கம் போய் அங்கே நம் திருநாவுக்கரசு இருந்தால் நான் கூப்பிட்டேனென்று வரச்சொல்” என்று ஊழியனிடம் சொல்லி அனுப்பினான் அவன். சிறிது நேரத்தில் பூரணியின் தம்பி திருநாவுக்கரசு வந்து நின்றான்.

“ஐயா, என்னைக் கூப்பிட்டீர்களாமே?”

“ஆமாம்! இந்தா இந்தப் புத்தகங்களை நன்றாகக் கட்டி பார்சல் செய்வதற்கேற்ற முறையில் வைத்துவிடு. நாளைக் காலையில் உன் அக்காவுக்கு அவற்றை அனுப்ப வேண்டும்”.

கையோடு புத்தகங்களை எடுத்துக் கொண்டு திருநாவுக்கரசு உள்ளே சென்றான். வயிற்றைப் பிடித்துக் கொண்டு ‘பசி பசி’ என்று பரிதாபமாகக் கதறி நின்ற அந்த வாலிபன், மறுபடியும் நினைவின் வட்டத்தில் வந்து அரவிந்தனை வாட்டினான். நெஞ்சு நெகிழ்ந்து உருகியவாறே தனது குறிப்புப் புத்தகத்தை எடுத்து எழுதத் தொடங்கினான் அரவிந்தன்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்