மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 43
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 42 தொடர்ச்சி)
குறிஞ்சி மலர் 16 தொடர்ச்சி
அவள் அண்மையிலுள்ள வெளியூர்களுக்குச் சொற்பொழுவுகளுக்குப் போக நேரும் போதெல்லாம் மீனாட்சிசுந்தரமும் மங்களேசுவரி அம்மாளும் கார் கொடுத்து உதவினார்கள். முருகானந்தம் – வேறு ஓர் உதவியைச் செய்தான். உழைக்கும் மக்கள் நிறைந்த தனது பகுதியில் அடிக்கடி அவளுடைய தமிழ்ச் சொற்பொழிவுகள் நடைபெற ஏற்பாடு செய்து ஆயிரக்கணக்கான ஏழை மக்களைத் தமிழ்ச் செல்வியாகிய அவள் மேல் ஈடில்லா அன்பு கொள்ள வைத்தான்.
வாழ்க்கையில் மிக உயர்ந்ததொரு திருப்பத்தை நோக்கித் தான் விரைவாக வளர்ந்து கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். ஒழுக்கமும், அறமும், பண்பாடும் நிறைந்த ஒரு புதிய சமுதாய இயக்கத்தைத் தன் கைகளின் உழைப்பால் தோற்றுவிக்க வேண்டுமென்ற தாகம் நாளுக்கு நாள் அவளுக்குள் முறுகி வளர்ந்தது. அந்தப் பெரிய மதுரை நகரத்தில் அவளுடைய செல்வாக்கை அவளே உணர்ந்து கொள்ளத் தக்க ஒரு சந்தர்ப்பத்தை அரவிந்தனும் முருகானந்தமும் ஏற்படுத்திக் கொடுத்தனர்.
அந்த ஆண்டில் கார்த்திகை மாதம் மதுரையில் பயங்கரமான மழை. பேருந்து நிலையத்துக்குத் தென்புறமுள்ள பள்ளத்தில் இருந்த அரிசனங்களின் குடிசைகள் எல்லாம் இந்த மழையில் விழுந்துவிட்டன. ஒதுங்க இடமின்றி நடைபாதைகளில் தவித்தார்கள், திக்கற்ற ஏழை மக்கள். அரவிந்தனும் முருகானந்தமும் பொதுநலப்பணியில் ஆர்வமுள்ள வேறு சில இளைஞர்களும் சேர்ந்து அந்த ஏழை மக்களுக்கு ஏதாவது நிதி உதவி செய்ய வேண்டுமென்று ஆர்வத்தோடு முன்வந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் ஒரு முடிவு செய்து கொண்டு பூரணியைச் சந்திக்கச் சென்றனர். அவர்கள் கூறியவற்றைக் கேட்டு மலர்ந்த முகத்துடன் கட்டாயம் செய்ய வேண்டிய உதவிதான் இது! என்னாலானதை எப்போதும் செய்யக் காத்திருக்கிறேன். இதோ…” என்று உள்ளே சென்று பீரோவைத் திறந்தாள் பூரணி. பழைய வறுமை நிலைகளின்போது விற்றவை போக மீதமிருந்த ஒன்றிரண்டு தங்க நகைகளை எடுத்துக் கொண்டு வந்தாள். “இந்தாருங்கள்! இப்போதெல்லாம் இவற்றை நான் அணிந்து கொள்வதே இல்லை. உங்களுடைய நல்ல காரியத்துக்கு இவை பயன்படட்டும்” என்று சிரித்துக் கொண்டே அரவிந்தன் கைகளில் அவற்றைக் கொடுத்தாள்.
அரவிந்தன் புன்முறுவல் பூத்தான். அவள் கொடுத்த நகைகளை அவன் அப்படியே அவளிடம் திருப்பிக் கொடுத்தான்.
“ஏன், இவற்றை நீங்கள் வாங்கிக் கொள்ள மாட்டீர்களா?”
“உன்னிடமிருந்து நாங்கள் இதைவிடப் பெரிய உதவியை எதிர்பார்க்கிறோம். முருகானந்தத்தைக் கேள், சொல்வான்.”
பூரணி விவரம் என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் முருகானந்தத்தின் முகத்தைப் பார்த்தாள்.
“அக்கா! எங்களுடைய திட்டத்துக்கு நீங்கள் இணங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு தான் இங்கே வந்திருக்கிறோம். வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியிலிருந்து ஒரு மணி வரை ஒரு திரையரங்கம்(தியேட்டர்) வாடகைக்குப் பேசியிருக்கிறோம். பத்து, ஐந்து, மூன்று, இரண்டு, ஒன்று ரூபாய் விகிதத்தில் கட்டணம் போட்டுச் சீட்டு(டிக்கெட்டு) விற்க ஏற்பாடாகியிருக்கிறது. ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் விரிவானதொரு பொருள் பற்றி நீங்கள் சொற்பொழிவு செய்ய வேண்டும் அக்கா.”
“நீங்கள் எல்லோரும் விளையாடுகிறீர்களா என்ன? இதென்ன நாடகமா? படமா(சினிமாவா)? அல்லது பாட்டுக் கச்சேரியா? சொற்பொழிவுக்கு எங்காவது வசூல் கிடைக்குமா? திரையரங்க(தியேட்டர்) வாடகைக்குக் கூட வசூலாகாமல் கைப்பிடிக்கப் போகிறது. இந்த வீண் யோசனையை விட்டுவிட்டு வேறு காரியம் பாருங்கள்” என்று அவர்களைக் கடிந்து கொண்டாள் பூரணி.
“உங்கள் பலம் உங்களுக்குத் தெரியாது, அக்கா. வசூல் கவலையெல்லாம் உங்களுக்கு எதற்கு? ‘சம்மதம்’ என்று மட்டும் நீங்கள் சொல்லிவிடுங்கள் போதும். மற்றதெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.”
பூரணி தயங்கினாள். ‘என்ன சொல்லட்டும்’ என்ற கேள்வி தொக்கி நிற்கும் முகக் குறிப்போடு அரவிந்தனை ஒரு தடவை பார்த்தாள்.
“என்ன பார்க்கிறாய்? முருகானந்தம் சொல்வதுபோல் சம்மதமென்று சொல்லிவிடுவதுதான் நல்லது. இதைத்தவிர வேறு ஏற்பாடு எங்களிடம் இல்லை. இதன் மூலம் அந்த ஏழைகளுக்கு ஒரு கணிசமான தொகை உதவி நிதியாகத் தேறும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றான் அரவிந்தன்.
அவள் சம்மதித்தாள். சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. தனக்காக அத்தனைக் கூட்டம் கூடி அவ்வளவு வசூல் ஆகுமா என்பது மட்டும் அவளுக்குச் சந்தேகமாகவே இருந்தது.
அரவிந்தன், முருகானந்தம் ஆகியோரும் நண்பர்களும் கட்டணச்சீட்டு(டிக்கெட்) விற்பனையில் முனைந்து ஈடுபட்டனர். ‘வீடிழந்த ஏழை மக்களின் குடியிருப்பு நிதிக்காகப் பூரணியின் சொற்பொழிவு என்று பெரிய பெரிய சுவரொட்டி விளம்பரங்கள் அச்சிடப்பெற்று வீதிக்கு வீதி, சுவருக்குச் சுவர் ஒட்டியிருந்தார்கள். ‘தனக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா? தான் அவ்வளவு விளம்பரப் பெருமைகளுக்கு உரியவளா?’ என்று நினைக்கும்போது அவளுக்கே வெட்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது.
வியாழக்கிழமை மாலைக்குள்ளேயே பெரும்பகுதி சீட்டு(டிக்கெட்டு)கள் விற்றுவிட்டதாக முருகானந்தம் வந்து மகிழ்ச்சியோடு தெரிவித்தான். மதுரை நகரத்தில் பெரிய பஞ்சாலைகளில் கூலி வேலை செய்யும் பெண்களிலிருந்து மங்கையர் கழகத்துக்குக் காரில் வந்து அழுக்குப்படாமல் இறங்கித் தமிழ்ப் படிக்கும் செல்வக் குடும்பத்துப் பெண்கள் வரை அத்தனை பேரும் வற்புறுத்தல் இல்லாமல் தாங்களே விரும்பிப் பணம் கொடுத்து சீட்டு(டிக்கெட்டு) வாங்கியிருப்பதாகவும் அவனே தெரிவித்தான்.
“இன்னொரு ஆச்சரியமான சம்பவமும் நடந்தது அக்கா. உங்கள் மங்களேசுவரி அம்மாளிடம் மூன்று பத்து உரூபாய் சீட்டு(டிக்கெட்டு)கள் கிழித்துக் கொடுத்தேன். அவர்கள் அதை வாங்கிக் கொண்டு பேசாமல் உள்ளே போனார்கள். சிறிது நேரத்துக்குள் ஏதோ ஒரு ‘செக்’ எழுதிக் கொண்டு வந்தார்கள். அந்த ‘செக்’கை வாங்கிப் பார்த்தவுடன் நான் மலைத்துப் போனேன். ‘முப்பது உரூபாய்க்குத்தான் டிக்கெட் தந்திருக்கிறேன்’ என்று சொல்லி நான் தயங்கினேன். ‘பரவாயில்லை! நான் என் நிலைக்கு இவ்வளவாவது உதவி செய்ய வேண்டும். வாங்கிக் கொள்ளுங்கள். இதை யாரிடமும் சொல்லிப் பெருமைப் பட வேண்டாம். உங்கள் பெயர்ப் பட்டியலில் ஓர் அன்பர் ஆயிரம் ரூபாய் என்று மட்டும் எழுதிக் கொள்ளுங்கள் போதும். பெயர் போட வேண்டா’ என்று பெருந்தன்மையோடு சொல்லிவிட்டார்கள்.”
இதை முருகானந்தம் சொல்லியபோது பூரணிக்குப் பெருமிதமாக இருந்தது. “செல்வம் நிறைந்தவர்கள் துன்பங்களால் வேதனைப்படும்போது பிறருக்குத் தருமம் செய்து ஆறுதல் தேட வேண்டும். பழைய காலத்தில் செல்வர்களுக்குச் சாந்தியளித்து மனநிம்மதி தந்த கருவி வள்ளன்மை என்ற கருவிதான். இன்றோ கேளிக்கைகளால் நிம்மதி தேட முயல்கிறார்கள். மங்களேசுவரி அம்மாள் போல பழைய முறையில் தருமம் செய்து நிம்மதி தேடுபவர்கள் மிகச் சிலர்தான் இன்று இருக்கிறார்கள்” என்று முருகானந்தத்திடம் பூரிப்புடன் கூறினாள் பூரணி.
“செய்தித் தாள்களில் நீங்கள் என்ன பொருள் பற்றிப் பேசப் போகிறீர்கள் என்று அறிவிப்புக் கொடுக்க வேண்டும் அக்கா” என்று கேட்டான் முருகானந்தம்.
பூரணி சிறிது நேரம் சிந்தித்தாள். பின்பு ஒரு சிறிய காகிதத்தை எடுத்து ‘கவிகள் காணாத பெண்மை’ என்று எழுதி அவன் கையில் கொடுத்து அனுப்பினாள்.
ஓதுவார்க் கிழவர் வீட்டு காமுவைப் பிறந்த வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். வெள்ளிக்கிழமை பூச்சூட்டலும், வளைகாப்பும் நடைபெற இருந்தன. “எங்கேயாவது கூட்டம் சொற்பொழிவு என்று கிளம்பிவிடாதே; என்ன வேலை இருந்தாலும் ஒரு நடை வந்துவிட்டுப் போ” என்று அந்தப் பாட்டி தள்ளாத காலத்தில் சிரமத்தைப் பாராமல் தானே நேரில் வந்து பூரணியை அழைத்துவிட்டுப் போயிருந்தாள். எனவே வெள்ளியன்று மாலை மங்கையர் கழகத்துக்குப் புறப்படுமுன் பூரணி, அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தாள்.
முழங்கை நிறையக் கண்ணாடி வளையல்கள் குலுங்கிடத் தலை தாங்காமல் பூச்சூடிக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள் காமு. சுற்றிலும் பெண்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. தாயாகிக் கொண்டிருந்த அந்தக் கோலத்தில் அதிக அழகில்லாத காமுவின் முகத்தில் கூட ஒரு புதிய ஒளி படர்ந்திருப்பதைப் பூரணி பார்த்தாள். புதிதாக ஒரு நல்ல கவிதையை எழுதி வெளியிடத் துடிக்கும் கவியின் முகம்போல் உலகத்துக்குப் புதிய உயிர் ஒன்றைக் கொண்டுவரத் தவமிருக்கும் தாய்மையின் ஒளி காமுவின் தோற்றத்தில் இருந்தது. கூடை நிறைய வைத்திருந்த பூவில் இரண்டு முழம் தன் கையாலேயே கிள்ளிப் பூரணியின் கூந்தலில் வைத்துவிட்டாள் ஓதுவார்ப் பாட்டி. அந்த வயது முதிர்ந்த சுமங்கலி தன் கூந்தலைத் தீண்டிப் பூ வைத்தபோது பூரணிக்கு உடல் சிலிர்த்தது. ‘அம்மா உயிரோடு இருந்திருந்தால் இப்படித் தினம் என் தலையைத் தொட்டுப் பின்னிப் பூ வைப்பாளே’ என்று உள்ளத்தில் அம்மாவும், அம்மாவைப் பற்றிய நினைவும் பரவிட மெல்லக் கண் கலங்கி நின்றாள் அவள்.
“பாட்டி! என்னை மறந்திட்டீங்களே? உங்களுக்கு எத்தினி ஓரவஞ்சனை. அக்கா தலைக்கு மட்டும் உங்க கையால பூ வைச்சீங்க. என்னைக் கவனிக்காமப் போறீங்களே” என்று மங்கையர்க்கரசி விளையாட்டாகச் சொல்லிச் சிரிக்கவே, கூடம் முழுவதும் பெண்களின் நளின நகையொலி அலை அலையாக எழுந்து ‘கிண்கிணி’ நாதம் பரப்பியது.
(தொடரும்)
தீபம் நா.பார்த்தசாரதி
குறிஞ்சி மலர்
Comments
Post a Comment