Skip to main content

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 65

 அகரமுதல




(அகல் விளக்கு – மு.வரதராசனார். 64. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 26

 

மேலும் ஒரு மாதத்திற்குள் என்னை ஈரோட்டிலிருந்து சென்னைக்கு மாற்றி உத்தரவு வந்தது. அருமையான நண்பரையும் காவிரியாற்றுத் தண்ணீரையும் விட்டுப் பிரிந்து போவது வருத்தமாக இருந்தது. “நான் அடிக்கடி சென்னைக்கு வருபவன். ஆகையால் நம் பழக்கம் எப்போதும் இருக்கும். அந்தக் கவலையே வேண்டாம். காவிரியாற்றுத் தண்ணீர்தான் அங்கே உங்களுக்குக் கிடைக்காது. வேண்டுமானால் நான் சென்னைக்கு வரும்போதெல்லாம், பெரிய காளத்தி கூசா நிறையத் தண்ணீர் பிடித்துக் கொண்டு வருவேன்” என்று நகர்மன்றத் தலைவர் நகைத்தார். என் குடும்பத்திற்குப் பெரிய விருந்து வைத்தார். குழந்தை மாதவிக்கு ஒரு தங்கச் சங்கிலி செய்து அன்போடு அணிவித்தார்.

குடும்பத்தை அங்கேயே விட்டு விட்டுச் சென்னைக்குச் சென்று வேலையில் சேர்ந்தேன். அந்தத் தொழிலில் எனக்கு முன்னே இருந்தவர் தாம் குடியிருந்த வீட்டையே எனக்கு ஏற்பாடு செய்தார். நுங்கம்பாக்கத்தில் இருந்தது அந்த வீடு. எனக்கு அந்த வீடு பிடித்தமாகவே இருந்தது. அதை ஏற்றுக் கொண்டேன். அடுத்த சனிக்கிழமையே ஈரோட்டுக்குச் சென்று குடும்பத்தைச் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டேன்.

ஈரோட்டாரிடம் வாங்கிய எண்ணூறு ரூபாய்க்கடனில் ஐம்பது மட்டுமே திருப்பிக் கொடுத்தேன். அவருக்கு உறுதி கூறியபடி மாதம் நூறு ரூபாய் தர முடியாததை நினைந்து வருந்தினேன். அதற்கு ஒரு கடிதமும் எழுதி மன்னிப்புக் கேட்டிருந்தேன். சென்னைக்கு வந்த பிறகு, அந்த மாறுதலின் காரணமாகவும், புது இடத்தில் வாழத் தொடங்கியதன் காரணமாகவும், எதிர்பாராத செலவுகள் நேர்ந்தன. எல்லாவற்றையும் அவர்க்கு எழுதியிருந்தேன். அவர் அதுபற்றிக் கவலை வேண்டா என்று ஆறுதல் அளித்திருந்தார்.

சென்னை வாழ்க்கை எனக்குப் புதியது அல்ல. மனைவிக்கு முற்றிலும் புதியது. ஈரோடு மிகப்பிடித்திருந்தது என்றும் சென்னை அவ்வளவாக பிடிக்கவில்லை என்றும் அவள் சொன்னாள். நாள் ஆக ஆக இந்தப் பரபரப்பு மிகுந்த நகரம் அவளுக்குப் பழகிவிட்டது. பல குடும்பத்துப் பெண்கள் அவளுக்கு பழக்கமாகிவிட்டார்கள். கடற்கரையும் உயிர்காட்சிச் சாலையும் அவளுக்கு விருப்பமான இடங்கள் ஆகிவிட்டன. ஒரு சின்ன கார் இருந்தால் அடிக்கடி மாதவியை வெளியே அழைத்துக் கொண்டு போய் வேடிக்கை காட்டுவதற்கு உதவியாக இருக்குமே என்ற அந்த ஒரு குறைதான் அவளுக்கு இருந்தது.

எனக்கும் அந்தக் குறை இல்லாமற் போகவில்லை. ஈரோட்டாரிடம் வாங்கிய கடனைத் தீர்த்துவிட்டு, தங்கைக்கு ஒரு தையல் பொறியும் வாங்கிக் கொடுத்த பிறகு பாதி பணமாவது சேர்த்துக் கையில் வைத்துக் கொண்டுதான் ஒரு பழைய கார் வாங்க முயற்சி செய்யவேண்டும் என்று உறுதி கொண்டேன். நான் ஈரோட்டிலேயே இருந்திருந்தால் மாதம் நூறு ரூபாய் மீதியாக்கி விரைவில் கடனை அடைத்திருக்க முடியும். சென்னைக்கு வந்த பிறகு மாதம் ஐம்பது மீதியாக்குவதே பெரு முயற்சி ஆயிற்று.

எப்படியோ எதிர்பாராத வகையில் வேண்டாத செலவுகள் பெருகிக் கொண்டிருந்தன. ஊர்ப்பக்கத்திலிருந்து சென்னைக்கு வந்தவர்கள் நேரே வீட்டைத் தேடி வந்து தங்கியிருக்கத் தொடங்கினார்கள். உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த காலத்தில் உடனிருந்து படித்தோம் என்பது தவிர நெருங்கிப் பழகாதவர்கள் பலர் இருந்தார்கள் அல்லவா? அவர்கள் எல்லாரும் இப்போது நான் பெரிய வேலையில் இருப்பதை அறிந்த பிறகு, நெருங்கிப் பழகியவர்கள்போல் நட்புரிமை கொண்டாடி அடிக்கடி வரத் தொடங்கினார்கள். உண்மையாகவே நெருங்கிப் பழகிய பழைய நண்பர்கள் இரண்டே பேர்தான்.

அவர்களுள், சந்திரன் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டான். மாலன் இருந்தும் பயன் இல்லாதவனாக மாறிவிட்டான். ஆனால், என் உள்ளத்தில் இடம்பெறாத நண்பர்களும் உறவினர்களும் இப்போது என் வீட்டில் இடம் பெறத் தொடங்கி விட்டார்கள். அவர்களே, நெருங்கி வந்தபோது, “நீங்கள் எனக்கு நெருங்கிய தொடர்பு இல்லாதவர்கள்” என்று நான் சொல்ல முடியுமா? விலக்க முடியுமா? ஆகவே, ஆகும் செலவு ஆகட்டும் என்று எல்லாரையும் ஓரளவு வரவேற்றேன்.

சென்னை சின்ன நகரம் அல்ல; பெரிய நகரம்; அதிலும் பல தாலுக்காக்களையும் கொண்ட ஒரு மாவட்டம் போன்றது. இதைப் பலர் மறந்து விடுகின்றார்கள். ஒரு மாவட்டத்தின் வடகோடியில் ஓர் ஊரில் இருப்பவர்கள், அதே மாவட்டத்தின் தென் கோடியில் மற்றோர் ஊரில் இருப்பவர்களைக் கட்டாயப்படுத்தித் திருமணத்துக்கோ விருந்துக்கோ அழைப்பதில்லை.

சென்னை ஒரு பெரிய மாவட்டத்துக்கு நிகரானதாக இருந்தாலும், ஒவ்வொரு திருமணத்துக்கும் அலுவலுக்கும் வருமாறு வற்புறுத்துகிறார்கள், விருந்துக்கு வருமாறு கட்டாயப்படுத்துகிறார்கள். ஒரே நாளில் இந்த நகரத்தில் எத்தனை வீடுகளில் திருமணங்கள், அலுவல்கள், விருந்துகள்! இத்தனைக்கும் போய்வருவது என்றால் யாரால் முடியும்? தொலைவான உறவினர்கள் எல்லாரும் நெருங்கிய உறவினர்கள் போல் தொடர்பு கொண்டாடும்போது என்ன செய்வது?

அங்கங்கே போய் வருவதை எவ்வளவோ குறைத்துக் கொண்டேன். ஆனாலும், ஓரளவு செலவு ஏற்பட்டு வந்தது. எனக்கு அவற்றில் வெறுப்பு ஏற்பட்ட போதிலும், என் மனைவிக்கு அவற்றில் சலிப்பு ஏற்படவில்லை. அவள் குழந்தை மாதவியை அழைத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓயாமல் போய் வந்தாள். எனக்கு வெளியே போய்வருதல் தொழிலிலேயே அமைந்தது. அவளுக்கு தொழிலோ வீட்டளவில் உள்ளது. வெளிப் போக்குவரத்தில் அவளுக்கு சலிப்பும் வெறுப்பும் ஏற்படாத காரணம் அதுதான் என்று உணர்ந்தேன்.

அவளுக்குப் புதிய நண்பர்கள் ஏற்பட்டது போலவே எனக்கும் புதிய நண்பர்கள் ஏற்பட்டார்கள். ஆனாலும், அவர்கள் பலர் பொழுதுபோக்குக்காக அல்லது ஏதேனும் உதவியின் காரணமாக என்னோடு பழகியவர்களாகவே இருந்தார்கள். அந்தக் காரணம் தீர்ந்ததும் அவர்களின் நட்பும் தீர்ந்தது போலவே இருந்தது. எங்கேனும் பார்க்கும்போது புன்முறுவல் காட்டுவதும், “எப்படி? நலம்தானே?” என்று பொருளின்றிக் கேட்பதும் அந்த நட்பின் நிழல்போல் நிற்கும். அவர்களின் புன்முறுவலைக் காணும்போதெல்லாம் எனக்குக் காகித மலர்களே நினைவுக்கு வரும். ஆயினும் அவர்களுள்ளும் ஒருசிலர் உள்ளன்பு உடைய நண்பர்களாக – நறுமண மலர்களாக – இருந்தார்கள்.

சந்திரனும் மாலனும் என் வாழ்வை விட்டு நெடுந்தொலைவு நீங்கிவிட்ட போதிலும் என் உள்ளத்தை விட்டு அவ்வாறு நீங்கவில்லை. அவர்களை வெறுத்த போதும், உளமார வெறுத்தேன். அந்த வெறுப்பு என் உள்ளத்தில் ஆழத்திலிருந்து எழுந்தது. நெருங்கிய பழக்கம் – உண்மையான நட்புதான் – அதற்குக் காரணம். ஆனால், உள்ளத்திற்கு ஓய்வு இல்லாத வாழ்க்கையில் அந்த ஆழ்ந்த நட்பும் எப்படி விளங்க முடியும்?

பலவகையான கடமைகளும் பலரோடு பழகவேண்டிய காரணங்களும், பரபரப்பான போக்குவரவும் மிகுந்த சென்னை வாழ்க்கை இருந்தபடியால், உள்ளத்திற்கு ஓய்வே இல்லை. சந்திரனையும் மாலனையும் நினைத்து வெறுப்பதற்கும் நேரம் இல்லை. சில நாட்கள் அவர்களின் நினைப்பே இல்லாமலும் இருந்திருக்கிறேன்.

இப்படிச் சில நாட்கள் அவர்களை நினைக்காமலே இருந்து விட்டுத் திடீரென அவர்களின் நினைப்பு வரும்போது நெஞ்சம் உருகும். சந்திரனுடைய மனைவி இறந்தபின் சில நாட்கள் வரையில் அவன்மேல் அளவு கடந்த வெறுப்பு இருந்தது. அவன் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்ற அளவிற்கும் வெறுப்புக் கொண்டேன். நாள் ஆக ஆகத் துயரம் குறைவது போலவே வெறுப்பும் குறைந்தது. இளமை நண்பனை மறுபடியும் காண முடியாதா என்று ஏங்கினேன். என்னை அறியாமல் என் உள்ளத்தில் அந்த ஏக்கம் இருந்து வந்தது.

மாலனை அடிக்கடி நினைப்பதற்குக் காரணமாக இருந்தவள் என் மனைவியே. கற்பகத்தின் மேல் அவளுக்கு இரக்கம் ஏற்பட்டுவிட்டது. மாதவியை பெற்றெடுத்து வாலாசாவுக்கு வந்தபோது கற்பகம் அங்கே இருந்தாள் அல்லவா? அப்போது அவள் கற்பகத்தோடு நெருங்கிப் பழகிவிட்டாள். அவளுடைய பெருங்காஞ்சி முகவரியை எழுதிக் கொடுக்கச் சொன்னாள். எழுதிக்கொடுத்தேன்.

அந்த முகவரிக்குக் கடிதம் எழுதும் பழக்கம் வைத்துக் கொண்டாள். அங்கிருந்து ஒவ்வொரு கடிதம் வந்தபோதும் என்னிடம் செய்திகள் சொல்வாள். “கற்பகம் நல்ல பெண். அவளுடைய கணவர் உங்கள் நண்பர் அல்லவா? நீங்கள் அவளுடைய வாழ்க்கைக்கு ஏதாவது உதவி செய்யக் கூடாதா? அவருக்கு ஒருமுறை எழுதினால் போதுமா? மறுபடியும் எழுதக் கூடாதா” என்பாள். “நண்பர் நண்பர் என்று சொல்கிறீர்கள். ஆண்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் கவலைப்படுவதாகவே காணோம். நாங்கள் பெண்கள் அப்படி இருக்கவே மாட்டோம். ஆண்களுக்கே கல்மனம்தான்” என்பாள். கற்பகத்திடமிருந்து கடிதம் வந்தபோதெல்லாம் இப்படி ஏதாவது இரக்கத்தோடு சொல்லிக் கொண்டே இருந்தாள்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்