Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 42

 அகரமுதல




(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  41 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்  16

அல்லற்பட்டு ஆற்றா(து) அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.

      — திருக்குறள்


முருகானந்தம் தன் இடுப்பிலிருந்த இடுப்புவாரை( ‘தோல் பெல்ட்’டை)க் கழற்றிக் கொண்டு அந்த ஆளை வாங்கு வாங்கென்று வாங்கி விட்டான். தையற்கடை வாயிலில் கூட்டம் கூடிவிட்டது. முருகானந்தத்தைத் தேடிக்கொண்டு தற்செயலாக ஏதோ காரியமாய் அரவிந்தன் அப்போது அங்கே வந்தான். அவன் குறுக்கே பாய்ந்து தடுத்திருக்காவிட்டால் முருகானந்தத்தின் சினம் எந்த அளவுக்குப் போயிருக்குமென்று சொல்ல முடியாது.

போலீசு இருக்கிறது, சட்டம் இருக்கிறது, கை வலிக்க நீ ஏன் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்? அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள், விடு . . .” என்று தன்னைக் கைப்பற்றி விலக்க முயன்ற அரவிந்தனையும் மீறிக்கொண்டு பாய்ந்தான் முருகானந்தம்.

“விடு அரவிந்தன். இந்த மாதிரி ஏமாற்றுக்காரப் பயல்களைச் சும்மா விடக்கூடாது. எங்கள் தையல் கடையிலே சில முரட்டுத் துணிகளைத் தைப்பதற்கு முன்னால் தண்ணீரில் நனைத்துக் கசக்கி உலர்த்திப் பண்படுத்தினால்தான் தையல் நன்றாக வரும். அதுமாதிரி அடித்து உதைத்து அவமானப்படுத்தினால்தான் இப்படிப்பட்ட பயல்களுக்குப் புத்தி வரும்” என்று கூறிவிட்டு அந்த ஆளை நோக்கி, “ஏண்டா, திரைப்படத்தில் நடிக்கும் ஆசை காட்டி இப்படி எத்தனை பேரை ஏமாற்றிப் பணம் பறித்திருக்கிறாய்? கைவண்டி இழுத்தாலும் ஒருவரை ஏமாற்றாமல் மானமாக உழைத்துப் பிழைக்கலாமேடா! எப்படியடா உனக்கு இந்தப் புத்தி வந்தது?” என்று கையை ஓங்கிக் கொண்டு போனான்.

அரவிந்தனோடு வாயிலில் கூடியிருந்த கூட்டத்திலிருந்து சிலரும் வந்து சமாதானம் செய்து முருகானந்தத்தின் ஆத்திரத்தை அடக்கினர். ஆளை இழுத்துக் கொண்டு போய் போலீசில் ஒப்படைத்துக் காப்பு மாட்டச் செய்த பின்புதான் முருகானந்தத்தின் கோபம் தணிந்தது. கடந்த நாலைந்து ஆண்டுகளில் பல ஊர்களில் பல பெயர்களை மாற்றி வைத்துக் கொண்டு அந்த ஆள் இதே வகையைச் சேர்ந்த மோசடிகளைச் செய்து வந்திருப்பதாகவும், போலீசார் தேடிக் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்ததாகவும் பல உண்மைகள் அப்போது வெளியாயின.

இந்த அசம்பாவிதமான நிகழ்ச்சிக்குப் பின் பூரணி சமயம் வாய்த்த போதெல்லாம் மங்களேசுவரி அம்மாளிடம் வசந்தாவைப் பற்றி எச்சரித்துக் கொண்டிருந்தாள். “உங்கள் மூத்த பெண் பலவீனங்கள் நிறைந்தவளாயிருக்கிறாள். அவளுடைய மனத்திண்மையில் எனக்கு நம்பிக்கை இல்லை. பெண்ணுக்கு உடல் பூஞ்சையாகவோ, வலிமையற்றதாகவோ இருப்பது இயற்கை. ஆனால் மனம் நிறைவுடையதாக இருக்க வேண்டும். இதை உணர்த்துகிறாற் போலவே நம்முடைய முன்னோர்கள் பெண்ணின் மனத் தூய்மைக்கு ‘நிறை’ என்று அழகாகப் பெயரிட்டிருக்கிறார்கள். குடும்ப வாழ்வைப் பழக்கிவிட்டால் உங்கள் பெண் மாறி விடலாம் என்று நினைக்கிறேன். தயங்காமல் விரைவில் திருமணம் செய்துவிடுங்கள். அவளை ஒழுங்காக்குவதற்கு அதுவே சரியான வழி. அடுத்தாற்போல் உங்கள் இளைய பெண் செல்லத்தைப் பற்றி இப்படிப் பயப்படவேண்டாம். அந்தப் பெண் வழி தவற மாட்டாள் என்பதை இன்றைக்கே இந்த வயதிலேயே அவளைப் பார்த்துப் புரிந்து கொண்டு உறுதியாகச் சொல்ல முடிகிறது என்னால்” என்றாள் பூரணி.

“நீ சொல்வது நியாயமென்றுதான் எனக்கும் தோன்றுகிறது. ஆனால் திருமணம் என்பது நினைத்தவுடன் முடிகிற காரியமா? நல்ல இடமாகப் பார்த்து ஒப்படைக்க வேண்டுமே” என்று ஏக்கத்தோடு கூறினாள் மங்களேசுவரி அம்மாள். அந்த அம்மாளின் தோற்றத்தில் இப்போது பழைய ஒளி இல்லை. மனக் கவலைகளாலும், அவமானத்தாலும் குன்றிப்போயிருந்தாள். வீடு, வாசல், கார், செல்வம், செல்வாக்கு என என்ன இருந்தாலும் மன நிம்மதியில்லாமல் கலகலப்பாக இருக்க முடியாதென்பது அந்த அம்மாளுடைய நிலையிலிருந்து பூரணிக்குப் புரிந்தது. அந்தப் பெண் வசந்தாவும் பழைய திமிர், கலகலப்பு எல்லாம் மாறி புதுப்பிறவி போல் மாடியறையில் அடைந்து கிடந்தாள். கல்லூரிக்குப் போவது நின்று போய்விட்டது. செழிப்பும் மங்களமுமாக இருந்த அந்த வீடு, அந்தக் குடும்பம், நல்ல இருட்டில் விளக்கும் அணைந்த மாதிரி மங்கியிருந்தது. தினசரி மாலையில் மங்கையர் கழகத்துக்குப் போகுமுன் ஒரு நடை அந்த அம்மாள் வீட்டுக்குப் போய் ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு வந்தாள் பூரணி.

மனிதர்களுடைய நாவுக்குள் கடவுள் கொடுத்த சுவை ஆறுதான். உப்பு, புளிப்பு போன்ற அறுசுவைகளை விடத் தனக்கு அதிகம் விருப்பமான ஏழாவது சுவை ஒன்றை மனிதனாகவே கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறான். அதுதான் பிறர் பற்றி நாவு கொழுக்க வம்பு பேசுகிற சுவை. மங்கையர் கழகத்தில் சிலரிடம் இந்தச் சுவைக்கு வரவேற்பு அதிகம். பூரணியிடம் ஒருநாள் வகுப்புகள் முடிந்தவுடன் சில பெண்கள் மங்களேசுவரி அம்மாளின் மூத்த பெண்ணைப் பற்றி ஒரு தினுசாகச் சிரித்து கொண்டே கேட்டார்கள். மூடி மறைத்து இரகசியமாக்கிவிட முயன்றிருந்தும், ‘அந்தப் பெண் எங்கோ  ஓடிப்போய்விட்டு வந்தாள்’ என்று ஒருவிதமாகக் கை, கால் முளைத்துப் பரவிவிட்டிருந்தது செய்தி. விசாரித்தவர்கள் பூரணியிடம் படிக்கிறவர்களானாலும் அவளுக்குச் சமவயதுடையவர்களும், அதிக வயதுடையவர்கள் சிலருமாகக் கண்டிப்புக்கு அடங்காதவர்களாக இருந்தார்கள். ஆனாலும் அவள் அவர்களுக்குக் கடுமையாகவே மறுமொழி கூறினாள்.

“இங்கே எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுப்பதற்குத்தான் சம்பளம் தருகிறார்கள். வம்பு சொல்லிக் கொடுப்பதற்கு அல்ல; தயவு செய்து பாட சம்பந்தமான சந்தேகங்களை மட்டும் என்னிடம் கேளுங்கள்.”

கேட்டவர்கள் வாய்கள் அடைந்தன. அவளை விட மூத்தவர்கள், அவளை விடச் செல்வத்தால் உயர்ந்தவர்கள், அவளிலும் சிறந்த அழகிய தோற்றத்தையுடையவர்கள் எல்லாரும் அங்கே இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் மனம் வைத்தால் அவளுடைய வேலைக்குச் சீட்டுக் கிழித்து வெளியே கூட அனுப்பலாம். ஆனால் அத்தகைய இழிவான நினைவு அவர்கள் மனத்தில் கூடத் தோன்ற முடியாதபடி பூரணியின் தோற்றத்தில் ஏதோ ஒரு புனிதமான கம்பீரம் இருந்தது. அந்த முகம், அந்தக் கண்கள், அந்த அற்புதமான சொற்பொழிவு இவற்றால் அவள் தன்னை அவர்கள் மனத்தில் பதித்துக் கொண்டிருந்தாள். ஆரம்ப நாட்களில் ஒரு மாதிரி இருந்த மங்கையர் கழக நிருவாகிகள் கூட இப்போது அவள் ஞானம் கனிந்த நாவன்மைக்கும், தூய தோற்றத்துக்கும் முன் தவறாக நினைப்பதற்கே கூசினர். ஆனால் அவளுக்கு இத்தனை பெருமையும் கிடைப்பதற்குப் பாடுபட்ட மங்களேசுவரி அம்மாளின் வீட்டு நிலை நேர்மாறாக மாறியிருந்தது. வெளியே தலைகாட்டுவதற்கே கூசி வெட்கப்பட்டாள் அந்த அம்மாள். குடிப்பெருமை என்பது நல்ல பால் வெண்கலத்தில் வார்த்த மணியைப் போன்றது. அதில் எங்கேயாவது ஒரு மூலையில் கீறல் விழுந்தாலும் ஒலி கெட்டுவிடுகிறதே – என்று தனக்குள் எண்ணி வருந்தினாள் பூரணி.

சிறிது காலமாக அவள் தன்னுடைய ஒவ்வொரு நாளையும் பயனுள்ளதாகவும் ஒழுங்குள்ளதாகவும் கட்டுப்பாட்டோடு செயலாற்றிக் கொள்ளப் பயன்படுத்தினாள். மங்களேசுவரி அம்மாளின் பெண்ணைக் கூட்டிக் கொண்டு வருவதற்காகத் திருச்சிக்குப் புறப்பட்ட அன்று அரவிந்தன் சொன்ன  வார்த்தைகள் அவள் உள்ளத்தில் உறைத்துத் தைத்திருந்தன. “நீ நாள் தவறாமல் தமிழ்ப் பெண்மையின் சிறப்பைப் பற்றி உங்கள் கழகத்தில் பேசுகிறாய்! அதனால் என்ன பயன்! கெட்டுப் போகிறவர்கள் கெட்டுப் போய்க்கொண்டுதானே இருக்கிறார்கள்” என்று அவன் வேடிக்கையாகக் குத்திக் காட்டிப் பேசியதை மெய்யாகவே தன்னை நோக்கி விடுக்கப்பட்ட அறைகூவலாக எடுத்துக் கொண்டிருந்தாள் அவள். அறிவுத் துடிப்பு நிறைந்த அவள் நெஞ்சத்தில் ‘உன்னைச் சுற்றியிருக்கும் உலகத்துக்கு நீ ஏதாவது புதிதாகச் செய். பெரிதாகச் செய். உன்னையும் உன் சொற்பொழிவுகளையுமே நீ ஏன் ஓர் இயக்கமாகச் செய்து கொள்ளக்கூடாது?’ என்று ஓர் உள்ளுணர்வு கிளர்ந்தது. வளம் நிறைந்த நல்ல மண்ணில் முளைத்த துளசிச்செடி போல் பசுமை தழைத்து மணம் பரப்பி நாளுக்கு நாள் புனிதமாக வளர்ந்தது இந்த உள்ளுணர்வு. மனத்தில் ஞானம் மலர மலர அவளுடைய முகப்பொலிவு அற்புதமாக வளர்ந்தது. அவள் மங்கையர் கழகத்து வகுப்புகளை ஏற்றுக் கொண்டு நடத்தத் தொடங்கிய காலத்தில் அங்கும் இங்குமாக சிலருக்குத்தான் மதுரையில் அவளைத் தெரிந்திருந்தது. இப்பொழுது அவளை நகரம் முழுவதும் அறிந்திருந்தது. சுற்றுப்புறத்து ஊர்களிலும் அவள் பெயர் பரவியிருந்தது. அவளுடைய இந்த இணையற்ற வளர்ச்சிக்குப் பாடுபட்ட பெருமையில் மூவருக்குப் பங்கு உண்டு. அரவிந்தன் – அவள் வளர்ச்சிக்கு உற்சாகம் தந்தான். மீனாட்சிசுந்தரம் – அவளுடைய தந்தையின் நூல்களையெல்லாம் வெளியிட்டு நன்றாகவும், நிறையவும் விற்று உதவினார். அதனால் அவளுடைய வாழ்க்கைக் கவலைகள் குறைந்து அமைதி கிடைத்தது. எப்படியோ கெட்டுச் சீரழிய இருந்த தம்பி திருநாவுக்கரசையும் அச்சகத்தில் படிப்படியாகத் தொழில் பழக்கி உழைப்பாளியாக மாற்றி வளர்த்திருந்தார்கள், அரவிந்தனும் அவரும்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue