இலக்கியத்தின் எதிரிகள் 2/2: ம.பொ. சிவஞானம்
அகரமுதல
(இலக்கியத்தின் எதிரிகள் 1/2 தொடர்ச்சி)
இலக்கியத்தின் எதிரிகள் 2/2
இராமாயணத்தில் தயரதனுடன் கூடி வாழ்ந்த மனைவியர் மூவர்தான். அறுபதினாயிரம் மனைவியர் என்பது பலதார மணத்தின் கொடுமையை மிகைப் படுத்திக்காட்ட கவிஞன் செய்த கற்பனை. ஆம். ‘பலதார மணம்’ என்ற தவற்றின் சிகரத்தில் தயரதனை ஏற்றி விடுகின்றான் கவிஞன். காப்பிய அமைப்பின் இலக்கணங்களை அறிந்தவர்கள் இந்தக் கற்பனையை அனுபவிப்பார்களே யன்றி ஆத்திரப்படமாட்டார்கள். ஆனால், ஈ.வெ.ராவோ, கற்பனையை உண்மையாக்கிக்கொண்டு ஆத்திரப்படுகின்றார்.
அவருடைய இரசிகத்தன்மையை என்னென்பது!
இராமன் அவனுடைய ஒழுக்கத்திற்காகவும் உயர் குணங்களுக்காகவும் தெய்வமாக்கப்பட்டிருப்பினும், வடநாட்டானாதலால் தமிழ் நாட்டார் அவனை வழிபடக் கூடாதென்கிறார் ஈ.வெ.ரா. எவ்வளவுதான் உயர் குணத்தவனாயினும் மனிதனை தெய்வமாகக் கருதுவது கூடாது என்றால், அந்த வாதத்திற்கு மதிப்பு தரலாம். தெய்வ வழிபாடே கூடாதென்றாலும், அதை நாத்திகத் தத்துவமாக வேனும் கணக்கில் வைக்கலாம். ஆனால், இராமன் வடநாட்டான்; ஆகவே தமிழ் நாட்டார் அவனை வழிபடக்கூடாது என்று வம்பு பேசுவது நிறவெறிப் பேயாட்டமேயன்றி அறிவுவழிப் போராட்டமன்று.
மொழிவழி இனத்தின் உரிமைகளுக்கு எல்லை இருப்பது போல அதன் பண்புகளுக்கும் எல்லையுண்டு. ஆனால்; சமய வழிப் பண்புகளுக்கு எல்லை கிடையாது. சருவ உலகத்திலும் அது வியாபித்திருக்கிறது. சமயம் தெய்வீகச் சக்தியின் நிழலாகத்தானே கருதப்படுகின்றது. தங்கள் அரசியலுக்கும் மொழிக்கும் எல்லை கண்ட பண்டைத் தமிழ் மூவேந்தர் கூடத் தெய்வ வழிபாட்டுக்கும் சமய நெறி வளர்ச்சிக்கும் எல்லை கண்டார்கள் இல்லை. சங்கக்காலத் தமிழகத்திலேயே வேங்கடத்திற்கு வடக்கே நிலவி வந்த சகல சமயங்களும், சமயக் கடவுளர்களும் தெற்கே நம் தமிழகத்திலும் பரவியிருந்ததுண்டு. காரணம் சமயம் தனிப்பட்ட மனிதனின் புனிதமான உரிமையாகக் கருதப்பட்டது தான். அதனாற்றான், மன்னர் குலத்தின் மாணிக்க மான இராமனையும் தமிழ் நாட்டவர் தங்கள் தெய்வமாகக் கருதினர். தெய்வவழிபாட்டில் தவறில்லை என்றால் இதிலும் தவறிருக்க முடியாது. ஆனால் பெரியார் ஈ.வெ.ரா. தெய்வ வழிபாட்டிலேயே நம்பிக்கை யற்றவர். ஆகவே; அவர் இராமனைத் தெய்வமாக ஏற்க மறுப்பதைக் கண்டு வியப்பதற்கில்லை. இராமன் வடநாட்டுத் தெய்வம் என்று அவர் கூறுவது தமிழ் நாட்டவரின் இன உணர்ச்சியை நாத்திகப் பிரசாரத்திற்குப் பயன் படுத்தும் தந்திரமாகும்.
ஈ.வெ.ரா. தற்போதைக்கு இராமாயணத்தை மட்டுமே எதிர்த்தாலும், தமிழ் இலக்கியங்கள் எனப்படும் எல்லா நூற்களுக்குமே அவர் எதிரிதான். முன்னொரு சமயம் சேக்கிழார் இயற்றிய சைவ சமயக் காப்பியமான பெரிய புராணத்தை எதிர்த்தார்; தீயிலிட்டுக் கொளுத்தவும் தேதி நிச்சயித்தார். பின்னொரு கலத்தில் சிலப்பதிகாரத்தைத் தமிழாகக் கழகத்தார் போற்றுகின்றார்கள் என்பதற்காக ஈ.வெ.ரா. வாயில் வந்தபடி தூற்றினார். இதற்கெல்லாம் முன்பு பெண்கள் அடிமைப் பட்டதற்கே திருக்குறள்தான் காரணம் என்று அவர் நூல் எழுதியதும் உண்டு. ஆம், சுருங்கச் சொன்னால், ஈ.வெ.ரா. இலக்கியங்களின் எதிரி – கடவுள் நெறியின் எதிரி, ஒருவார்த்தையில் சொன்னால் நாட்டில் நடை முறையிலிருக்கும் நல்லதற்கெல்லாம் எதிரி!
பழைய தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் அனைத்துமே வரலாற்று நிகழ்ச்சிகளென்று நாங்கள் நம்பி விடுவதில்லை. அதுபோல, இலக்கியத்தில் கூறப்படும் செய்திகள் அனைத்துமே கற்பனை என்றும் நாங்கள் எண்ணுவதில்லை. வரலாற்றுச் செய்திகளும், கவிஞனின் கற்பனைகளும் கலந்ததுதான் காப்பியம் என்பது தமிழரசுக் கழகத்தாரின் திடமான கருத்து. இந்தக் கண்ணோட்டத்துடந்தான் நாங்கள் கம்பராமாயணத்தைக் காண்கிறோம்.
கம்பர், பல தெய்வங்கள் உண்டென்று நம்புவோருக்கு எதிராக ஒரே தெய்வக் கொள்கையை வற்புறுத்தி இருக்கின்றார்.
கம்பரின் கடவுள் நெறி
உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளையாட்டுடையார் அவர்
தலைவர்; அன்னவர்க் கேசரண் நாங்களே.
என்பது கம்பர் இயற்றிய இராமாயண நூலின் தொடக்கத்திலுள்ள காப்புச் செய்யுள். இதில் சமய வாதிகள் இட்ட வேலிகளுக்கும், புராணங்கள் புகல்கின்ற நாம-ரூப பேதங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரே தெய்வத்தையே வழிபடுகின்றார் கம்பர். அதையும் ‘தலைவர்’ என்ற பொதுப் பெயராலேயே குறிப்பிடுகின்றார்.
பால காண்டத்திலுள்ள உலாவியற் படலத்திலும். இராமன் உலாவரும் காட்சியைக் கண்ட மிதிலைப் பெண்களின் நிலையைக் கூறுமிடத்து,
தோள்கண்டார் தோளேகண்டார்
தொடுகழற் கமலமன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கைக்க ண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கண்ட சமயத்து அன்னார்
உருவு கண்டாரை ஒத்தார்!
என்றுபாடுகின்றார். இந்தப் பாடலிலும், தெய்வங்கள் பல உண்டு என்று நம்புவோரின் கொள்கையைக் கம்பர் நையாண்டி செய்கிறார். ஆம், கடவுட் கொள்கையில் கம்பர் வள்ளுவரையே பின்பற்றுகிறார். ஆகவே, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை உடைய தமிழரசுக் கழகத்தார் அந்தக் கொள்கைவழிக் காப்பியம் எழுதிய கம்பனைப் போற்றுவதில் தவறு இருக்க முடியாது அல்லவா?
சமூகக் காப்பியம்
கம்பராமாயணம் வைணவருக்கு மட்டுமே உரிய சமயக் காப்பியம் அன்று. சமுதாயம் முழுவதுக்கும் பயன்படத்தக்க சமூகக் காப்பியம் ஆகும். இது தமிழரசுக் கழகத்தாரின் நம்பிக்கை மட்டுமன்று; நாட்டின் நடைமுறைச் சம்பவங்களால் உறுதிப்படும் உண்மையுமாகும்.
ஒரு கூட்டத்தார் கம்ப ராமாயணத்தை எரிக்க முயன்ற போது, அதை எதிர்த்துத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார் பேராசிரியர் இரா.பி.சேதுப் பிள்ளை.
கம்பருடைய காப்பியத்தின் சுவைகளை யெல்லாம் திரட்டி ‘கம்பராமாயண சாரம்’ என்ற பெயரால் நூல் இயற்றினார் வெ.ப. சுப்பிரமணிய முதலியார்.
கம்பருடைய காப்பியத்தைப் போற்றிப் புகழ்வதற்கென்றே தம் வாழ்நாட்களை யெல்லாம் அருப்பணம் செய்தார் இரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார்.
கம்பர் தமிழில் இயற்றிய இராமாயணத்தின் பெருமையை ஆங்கிலத்தில் எழுதி அகில உலகுக்கும் அறிவித்தார் வ.வே.சு. ஐயர்.
இந்தப் பெரியார்களெல்லாம் சைவர்களேயன்றி வைணவர்களல்லர். அவர்கள் கம்ப ராமாயணத்தை வைணவ சமயக் காப்பியமாக அல்லாமல், சைவருக்கும் உரிய சமூகக் காப்பியமாகவே எண்ணினர் என்பது வெளிப்படை. அவர்கள் மட்டுமல்ல. இசுலாமிய கிறித்துவ சமயங்களைச் சேர்ந்த தமிழ்ப் புலவர் பலரும் கம்பராமாயணத்தைப் போற்றிப் புகழ்கின்றனர்.
சருவ தேசக் கண்கொண்டு பழைய காப்பியங்களை ஆராயும் மனப்பான்மை உடைய மார்க்சீய வாதிகள்கூட, கம்பனுடைய காப்பியத்தைப் போற்றிப் புகழ்கின்றனர் என்றால், தமிழரசுக்கழகத்தார் கம்பரைப் போற்றுவதில் அதிசயம் என்ன இருக்கிறது!
கம்ப ராமாயணம் தமிழில் தோன்றிய மூலக் காப்பியமன்று. வால்மீகி இராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டதுதான். இதைத் தமிழரசுக் கழகத்தார் அறிவர். உலகில் மொழிவழி நாடுகளும் இனங்களும் பலவாயினும் மனித சமுதாயம் ஒரே உலக இலட்சியத்தை நோக்கியே பிரயாணம் செய்து கொண்டிருக்கிறது. ஆகவே, ஒரு நாட்டினரின் கருத்துகளையும் கதைகளையும் இன்னொரு நாட்டினர் விரும்பி ஏற்பது வெறுக்கத்தக்கதன்று. ஆகவே, கம்பர், வால்மீகி ராமாயணக் கதையையொட்டித் தமிழில் இராமாயணம் எழுதியது தவறன்று.
கம்பர் சிறந்த பகுத்தறிவாளர். அதனாற்றான், வால்மீகி இராமாயணத்திலுள்ள சம்பவங்கள் ஒவ்வொன்றையும் வரலாற்று நிகழ்ச்சிகளாக நம்பிவிடாமல், தமிழகத்தின் நெறிக்கும் தான் வாழ்ந்த காலத்தின் நிலைமைக்கும் ஏற்ப அக்காப்பியத்தைத் திருத்தியமைத்தார்.
பெண்ணுரிமைப் பிரகடனம்
சங்கக்காலத் தமிழகம் பெண்ணடிமை பேணாதது. ஆனால், கம்பர் காலத்திலே தமிழகத்தில் ஆண்களின் ஆதிக்கம் அரும்பெடுத்து விட்டது. ஆகவே, கம்பர் இராமாயணத்தின் மூலம் பெண்ணுரிமைப் பிரகடனம் செய்தார்.
பெருந் தடங்கண் பிறைநுத லார்க்கெலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்து மன்றி விளைவன யாவையே.
என்ற பாடலில் பெண்கள் செல்வத்திலும் கல்வியிலும் ஆண்களோடு சரிநிகர் சமானமென இருந்ததாகக் கூறுகின்றார். இது அயோத்தியில் கம்பன்கண்ட காட்சியன்று. வருங்காலத் தமிழகத்துப் பெண்கள் எப்படி யிருக்கவேண்டுமென்று கூறும் இலட்சியக் கற்பனையே.
கம்பர் செய்யும் பெண்ணுரிமைப் பிரகடனம் தமிழரசுக கழகத்தார் காண விரும்பும் புதிய தமிழகத்தில் அமுல் நடத்தப்படும். ஆகவே, இவ்விசயத்தில் கம்பர் எங்களுக்குச் சிறந்த வழிகாட்டி.
கம்பர் குடியரசு வாதி
கம்பர் முடிமன்னர் ஆட்சியில் பிறந்து வாழ்ந்தவர். அவர் காலம் வரை தமிழகம் குடிமக்களுக்குத் தீங்கிழைத்த கொடுங்கோலரைக் கண்டதில்லை. ஆயினும் கம்பரின் உள்ளம் முடியரசு முறைக்கு எதிரான குடி அரசையே நாடியது.
தயரத மன்னன் குடிமக்கள் வழிபட்ட கோவேந்தன் என்பதை,
வயிரவான் பூணணி மடங்கன் மொய்ம்பினான்
உயிரெலாந் தன்னுயி ரொப்ப வோம்பலால்
செயிரிலா வுலகிற் சென்று நின்றுவாழ்
உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்
என்ற வரிகளில் நமக்கு நினைப்பூட்டுகின்றார். அயோத்தியில் மன்னன் ஆட்சி நடப்பினும் மக்களில் ஒவ்வொருவரும் தாம் தாமே முடிசூட்டிக் கொண்டு ஆள்வது போல நினைத்தனராம். இதை,
“தத்தமக்குற்ற அரசெனத் தழைக்கின்ற மனத்தர்” என்ற வரிகளில் சுட்டிக் காட்டுகின்றார்.
காப்பிய முறைப்படி கம்பர் தமது குடியரசு இலட்சியத்தை அயோத்தி மன்னன் மீதும், மக்கள் மீதும் வைத்துக் கூறியிருப்பினும், குடியாட்சி முறையில் தமக்குள்ள ஆவலையே இங்கு உணர்த்துகின்றார்.
எனவே தமிழரசுக் கழகத்தார் மட்டுமல்லாமல் குடியரசுக் கொள்கையில் நாட்டமுடைய ஒவ்வொருவரும் கம்பருடைய காப்பியத்தில் வரும் இலட்சியக் காட்சிகளைக் கண்டு மகழ்வது இயற்கை.
Comments
Post a Comment