மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 40
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 39 தொடர்ச்சி)
குறிஞ்சி மலர் 15 தொடர்ச்சி
தற்செயலாகச் சந்திக்கும் போதும் உரையாடும் போதும் கூட தமிழில் இப்படி எத்தனையோ நுணுக்கமான செய்திகளை அரவிந்தனுக்குச் சொல்லியிருந்தாள் பூரணி. அவள் தன் அன்பை மட்டும் அவனுக்குத் தந்துகொண்டிருக்கவில்லை. அன்போடு சேர்த்துத் ‘தமிழ்’ என்னும் அளப்பரிய செல்வத்தையும் கலந்து தந்துகொண்டிருந்தாள். பூரணியோடு அவன் பழகுவதில் மூன்றுவித நிலைகள் இருந்தன.
அவள் பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் பெண். அவள் தந்தையின் நூல்களை அவளிடமிருந்து வாங்கி வெளியிடுகிற முறையில் ஓர் உறவு. அந்த உறவுதான் மற்ற உறவுகளுக்கும் காரணம். ஒருவருக்கொருவர் தத்தம் இலட்சியங்களையும், உள்ளங்களையும் உணர்ந்து பழகிய அன்புப் பழக்கம் ஓர் உறவு. அஃது அந்தரங்கமான உறவு. இதயங்களுக்கு மட்டுமே புரிந்த உறவு அது. வாழ்க்கையின் நடைமுறையில் ஆண்களும் பெண்களும் முகத்தையும் உடம்பையும் பார்த்துக் கொள்கிற இச்சைக் காதல் அன்று அது. மெல்லிய மன உணர்வுகளில் நுணுக்கமாகப் பிறக்கும் காவியக் காதல் அவர்களுடையது. மூன்றாவது நிலை அறிவுக்கடலாய் விளங்கும் அவள், தமிழில் நுணுக்கங்களைப் பற்றிப் பேசுகிறபோது அவன் சாதாரண மாணவனைப் போல் ஆகிக் கேட்டுக்கொண்டிருக்கிற உறவு. அரவிந்தன் கவிஞன். சிந்தனையாளன். இலட்சியவாதி. அழகன். எல்லாமாக இருந்தும் ஞானச்செல்விபோல் அவள் தமிழை வாரி வழங்கும்போது அவள் முன் தன் கம்பீரங்களை மறந்து சிறுபிள்ளைபோல் கேட்டுத் தெரிந்து கொள்வதே இன்பமாக இருந்தது அவனுக்கு. முருகானந்தம் தன்னிடம் அப்படி இருப்பதையும் அவன் உணர்ந்திருந்தான். நண்பனைப் போல் தோளோடு தோள் பழகினாலும் சில சமயங்களில் முருகானந்தம் தன்முன் மாணவனாக அமர்ந்து விடுவதைப் போன்று, தன் இதயம் கவர்ந்து, தனக்கு இதயம் கொடுத்தவளாகப் பழகினாலும் பேராசிரியராகிய தந்தையிடம் கற்றிருந்த பேருண்மைகளைப் பூரணி பேசும்போது அவன் குழந்தைபோலாகிக் கேட்டுக் கொண்டிருந்து விடுவதிலேயே இன்பம் கண்டான்.
அன்று காலை எண்ணங்கள் அலைபாயும் நிலையற்ற மனநிலையோடு இருந்தபோது இவ்வளவும் நினைவுற்றான் அவன். தன்னுடைய ஏட்டுப் புத்தகத்தை எடுத்துக் கீழ்வருமாறு எழுதினான்.
‘பழைய காலத்தில் அசுணம் என்ற ஒருவகைப் பறவை இருந்ததாம். அதன் செவிகளுக்கு இனிய நளினமான இசைகளை உணர்ந்தே பழக்கமாம். விவகாரமான கெட்ட ஓசைகளைக் கேட்க நேர்ந்துவிட்டாலே போதும், துடிதுடித்துக் கீழே விழுந்து உயிர் பிரிந்துவிடுமாம் அந்த அசுணப் பறவை.’
‘வாழ்வின் தீமை நிறைந்த கெட்ட செய்திகளை உணரும் போது இந்த அசுணப் பறவைபோல் நாமே அழிந்து விட்டாலென்ன என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. நேற்றுதான் எத்தனை கெட்ட செய்திகளை உணரும்படி நேர்ந்து விட்டது. அந்தச் சிறுபையன் திருநாவுக்கரசு எப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து, எந்த மாதிரி கெட்டுப் போய்விட்டான் என்று நினைக்கவே வேதனையாக இருக்கிறது. அவனாவது சிறு பையன். கண்டித்துப் பயமுறுத்தி வழிக்குக் கொண்டுவந்து விடலாம். குதிர்மாதிரி வளர்ந்த பெண்ணுக்கு ஓடிப்போக தைரியம் வந்திருக்கிறது! ‘பெண்கள்’ நம்முடைய சமுதாயப் பண்ணைக்கு விதை நெல்லைப் போன்றவர்கள். வருகின்ற தலைமுறைகளை நன்றாகப் பயிர் செய்ய வேண்டியவர்கள். விதை நெல்லே கெட்டுச் சீரழிந்தால் விளைவு என்ன ஆகும்? நினைக்கவே அச்சமாக இருக்கிறது. பாரத புண்ணிய பூமியின் பெருமையெல்லாம் கங்கையும் காவிரியும் போலப் புனிதமாகப் பாய்ந்து வரும் அதன் தூய தாய்மைப் பிரவாகத்தில் அல்லவா இருக்கிறது? இந்தப் பெண்மையின் புனித வெள்ளத்தில் அழுக்குகள் கலந்தால் என்ன ஆகும்? விதை நெல்லையே அழித்துக் கொண்டிருக்கிறோமா நாம்?”
உள்ளே யாரோ நடந்து வருகிற மிதியடி ஒலி கேட்கவே அரவிந்தன் எழுதுவதை நிறுத்திவிட்டுத் தலை நிமிர்ந்தான். அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் உள்ளே வந்துகொண்டிருந்தார். அவசர அவசரமாக ஏட்டுப் புத்தகத்தை மூடி மேசை இழுப்பறைக்குள் திணித்துவிட்டு எழுந்து நின்றான் அரவிந்தன்.
“என்னடா அரவிந்தன்! நேற்று இரவு வீட்டில் குழந்தைகள் தொந்தரவு பொறுக்க முடியாமல் இரண்டாவது ஆட்டம் திரைப்படத்திற்கு அழைத்துக் கொண்டு போனேன். ஆங்கிலப் படமாக இருந்ததினால் சீக்கிரம் விட்டுவிட்டான். திருப்பிப் போகிறபோது பார்த்தால் இங்கே அச்சகத்தில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறதே! அவ்வளவு நாழிகை உறக்கம் விழித்து என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ?”
மீனாட்சிசுந்தரம் உள்ளே வருகிறபோது மேற்படி கேள்வியோடு வந்தார். அவருக்கு அவன் பதில் சொல்லுவதற்குள் மேலும் அவரே தொடர்ந்தார்: “என்னதான் வேலை மலையாகக் குவிந்து கிடந்தாலும் இராத்தூக்கம் விழிக்கிற பழக்கம் உதவாது. நேற்று இரவு திரைப்படம் விட்டுப் போகும்போது இங்கே விளக்கு எரிவதைப் பார்த்தவுடனேயே காரை நிறுத்தி இறங்கி உன்னைக் கண்டித்துவிட்டுப் போக நினைத்தேன். நீ தூக்கம் விழித்துக் கண்ணைக் கெடுத்துக் கொள்வது போதாதென்று அந்தத் தையற்கடைப் பிள்ளையாண்டானை வேற துன்பப்படுத்துகிறாயே?”
“உட்காருங்கள், எல்லா விவரமும் சொல்கிறேன்” என்று அவரை உட்காரச் செய்துவிட்டு எதிரே நாற்காலையைப் பிடித்துக் கொண்டு நின்றவாறே கூறலானான் அரவிந்தன்.
அவன் பாதி கூறிக் கொண்டிருக்கும்போதே வாசலில் ‘ஐயா’ என்று குரல் கேட்டது. அரவிந்தன் வெளியே எட்டிப் பார்த்து தையற்கடை வேலையாள் வந்திருப்பதைக் கண்டான். முருகானந்தம் கொடுத்துவிட்டுப் போயிருந்த சாவியை அந்த வேலையாளிடம் அளித்து, “முருகானந்தம் திருச்சிக்குப் போயிருக்கிறான். சாயங்காலத்துக்குள் வந்துவிடலாம். வழக்கம் போல் கடையைத் திறந்து வேலையைக் கவனித்துக் கொள்ளச் சொன்னான்” என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
அரவிந்தன், மங்களேசுவரி அம்மாளின் பெண்ணைப் பற்றியோ, பூரணியின் தம்பியைப் பற்றியோ மீனாட்சிசுந்தரத்திடம் விவரிக்கவில்லை. அச்சகத்தின் பின்புறம் இரவில் நடந்த அசம்பாவிதத்தைச் சொல்லி, சுவர் எழுப்பி கதவு போட வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினான். அச்சகத்தின் பின் பக்கத்தில் முதல் நாளிரவு நடக்க இருந்த கொடுமையைக் கேள்விப்பட்டபோது, மீனாட்சிசுந்தரம் அப்படியே மலைத்துப் போய் உட்கார்ந்து விட்டார். சிறிது நேரம், அரவிந்தனுக்குப் பதிலே கூறவில்லை. அவர் முகத்தில் திகைப்பும், வேதனையும் தோன்ற இருந்தார் அவர்.
“நான் யாருக்கும் ஒரு கெடுதலும் செய்வதில்லையே அப்பா. அறிவுக் களஞ்சியமாகிய பேராசிரியரின் நூல்களை மலிவான விலையில் வெளியிட்டால் நல்ல கருத்துகள் நாட்டில் பரவுமே என்று தான் இந்த வெளியீட்டு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டேன். இதற்காக என்மேல் இவ்வளவு விரோதமும் பொறாமையும் கொள்ள வேண்டுமா?” என்று நொந்து கூறினார் அவர்.
உடனே கொத்தனாரை அழைத்துக் கொண்டு வந்து சுவர் எழுப்பிக் கதவும் அமைக்க ஏற்பாடு செய்தார். அரவிந்தன் அவரிடம் ஒரு மணி நேரம் வெளியே செல்ல அனுமதி வாங்கிக் கொண்டு போய் அந்தப் பையன் திருநாவுக்கரசுக்கு பிணை கொடுத்து அழைத்து வந்தான். “இன்னும் நாலைந்து நாட்களில் பெஞ்சு கோர்ட்டில் விசாரணை நடக்கும்போது பையனை அழைத்து வந்து என்ன அபராதம் போடுகிறார்களோ அதைக் கட்டிவிட்டுப் போகவேண்டும்” என்று காவல் ஆய்வாளர் அவனிடம் கூறியனுப்பினார். வரும்போதே அந்தப் பையன் மனத்தில் பதியும்படி இதமாக அறிவுரை சொல்லிக் கொண்டு வந்தான் அரவிந்தன். பையன் பதில் சொல்லாமல் தலையைக் குனிந்தவாறே உடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.
பையனோடு அரவிந்தன் அச்சகத்துக்குத் திரும்பியபோது கொல்லைப் பக்கம் சுவர் எழுப்புகிற வேலை துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. செங்கல்கள் வந்து இறங்கியிருந்தன. சிமெண்டு மூட்டைகள் அடுக்கியிருந்தன. மீனாட்சிசுந்தரம் அருகில் நின்று சிற்றாட்களையும் கொத்தனாரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தார். உட்புறம் அச்சகத்து வேலையாட்களும் வந்து வழக்கம்போல் தத்தம் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அரவிந்தன் நீராடி உடை மாற்றிக் கொண்டான். திருநாவுக்கரசையும் உள்ளே அழைத்துப் போய் முகங்கழுவித் தலை சீவிக்கொள்ளச் செய்தான். காலிப் பையனுக்குரிய தோற்றத்தை மாற்றிப் பள்ளிக்கூடம் போகிற பையன் மாதிரி ஆக்கின பின்பே அரவிந்தனுக்கு நிம்மதி வந்தது. சிற்றுண்டி வரவழைத்து இருவரும் சாப்பிட்டனர். “தம்பி! இந்த விநாடியோடு உன் கெட்ட பழக்கங்களையெல்லாம் மறந்து விடு. பழையபடி உன்னைப் படிக்கும் மாணவனாக்கிக் கொள். மார்ச்சு மாதத்துக்கு இன்னும் அதிக நாளில்லை. இந்தப் பரீட்சை தவறினால் இன்னும் ஓராண்டு வீணாகிவிடும். இரவு-பகல் பாராமல் உழைத்துப் படித்துத் தேர்ச்சி பெற்று விட்டாயானால் புதிய ஆண்டில் கல்லூரிப் படிப்புக்கு நுழையலாம். உன் குடும்பத்து நிலையை நான் சொல்லி நீ தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. உன் அக்கா எவ்வளவு காலம் இப்படித் தானே உழைத்து உங்களைக் காப்பாற்ற முடியும்? நீ படித்த பின் உன் தம்பி படிக்க வேண்டும். தங்கை படிக்க வேண்டும். எல்லாவற்றையும் உன் அக்கா ஒருத்தியே தாங்கிச் சமாளிக்க முடியுமா? வீட்டுத்துன்பம் தெரிந்து அதற்கேற்ப உன்னைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும் அப்பா!” என்றெல்லாம் மனத்தில் உறைக்கும்படி சொல்லித் திருநாவுக்கரசைப் பசுமலையிலுள்ள அவன் பள்ளிக்கு அழைத்துச் சென்றான். பையனைப் பள்ளிக்கூடத்துக்குப் போகச் சொல்லித் தனியாக அனுப்பினால் மறுபடியும் “கழுதை கெட்டால் குட்டிச் சுவர்தான்” என்கிற மாதிரி எங்கேயாவது ஊர்சுற்றக் கிளம்பி விடுவானோ என்று அரவிந்தன் சந்தேகப்பட்டான். அதனால் தான் அச்சகத்தில் மேசை நிறையக் குவிந்து கிடந்த வேலைகளையெல்லாம் திரும்பி வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று போட்டுவிட்டுத் தானும் பையனோடு பசுமலைக்குச் சென்றான்.
(தொடரும்)
தீபம் நா.பார்த்தசாரதி
குறிஞ்சி மலர்
Comments
Post a Comment