இலக்கியத்தின் எதிரிகள் 1/2: ம.பொ. சிவஞானம்
இலக்கியத்தின் எதிரிகள் 1/2
ஏதேனும் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பது பெரியார் ஈ.வெ.ராவுக்கு வழக்கமாகி விட்டது. காரண காரியத்தோடு எதிர்ப்பு நடத்தப்பட்டால் அதைப்பற்றிக் குறை கூறுவதற்கில்லை. ஆனால், காரண காரியம் இல்லாமலே சுய விளம்பரத்திற்காக எதிர்ப்பு இயக்கம் நடத்துவது குறைமட்டுமல்ல குற்றமுமாகும்.
பெரியார் ஈ.வெ.ரா, அரசியலில் நல்ல அனுபவமுடையவர். சமூக சீர்கேடுகளைப் பற்றியும் வெகுவாக ஆராய்ந்திருக்கிறார். இந்த இரண்டு துறைகளிலும் அவருடைய திறமைக்கு இன்னொருவரை ஈடாகச் சொல்லமுடியாது. ஆம், அந்த திறமையை வேண்டுமென்றே தீய வழியில் பயன்படுத்துகிறார் என்று குற்றம் சொல்லலாம். ஆனால் திறமையைக் குறை கூற முடியாது.
இலக்கியத்துறையில், அதுவும் ஆராய்ச்சி வழியில் ஈ.வெ.ராவுக்குப் போதிய பயிற்சியோ அனுபவமோ இருப்பதற்கில்லை. பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பற்றியே அவருக்கு நல்லெண்ணம் கிடையாது. பழமை எனப்படும் அனைத்துமே பயனற்றவை: தீயிலிட்டுப் பொசுக்கப்பட வேண்டியவை என்பது அவருடைய திடமான கருத்து.
ஆகவே, தமிழ்க்காப்பியங்களில் நல்லெண்ணமும் நம்பிக்கையுமில்லாத ஈ.வெ.ராவுக்கு அவற்றைப்பற்றி ஆழ்ந்த அறிவோ அனுபவ ஞானமோ இருக்குமென்று எப்படி நம்பமுடியும்?
ஆயினும், இலக்கியத் துறையில் எல்லாம் உணர்ந்தவர் போல அடிக்கடி அபிப்பிராயம் கூற முற்படுவதும், ‘ஆராய்ச்சி’ என்ற பெயரால் ஆபாசக் கருத்துக்களை வெளியிடுவதும் ஈ.வெ.ரா-வுக்குத் தொழிலாகிவிட்டது. வேறு வேறு துறைகளில் அவருடைய கருத்துக்களையும் செயல்களையும் வரவேற்பவர்கள் கூட இலக்கியத் துறையில் அவருடைய போக்கை எற்றுக் கொள்வதில்லை.
இப்போது ஈ.வெ.ரா., கம்பராமாயணத்தையும் அதில் கடவுளாக வருணிக்கப்படும் இராமனையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்யப்புறப்பட்டிருக்கிறார். முன்னொரு முறையும் அவர் கம்பராமாயன எதிர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், கண்டனக் கணைகள் உடலைத் துளைத்ததால் அப்போதைக்கு எதிர்ப்பைக் கைவிட்டு விட்டார். இப்போது அரசியல் துறையில் அவருடைய வட்டாரத்திற்கு வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டு விட்டது. பொருளாதாரத் துறையோ அவருக்குப் புரியாத விசயம். பூர்சுவாக்களின் நண்பரான அவருக்கு அது பிடிக்காத விசயமுமாகும். சமூக சீர்திருத்தத் துறையிலும் அவருடைய ‘சரக்குகளு’க்குச் சந்தை இல்லை. ஆகவே, இடைக்கால இயக்கமாக கம்பராமாயண எதிர்ப்பு நாடகத்தை நடத்தப் புறப்பட்டிருக்கிறார். அதற்கு ஆரம்ப ஒத்திகையாக இராமன் சிலைகளை உடைக்கப் போகிறாராம்.
சிலை உடைப்பு ஒரு புறம் இருக்கட்டும். கம்ப இராமாயணத்தை எதிர்ப்பதற்கு அவர் கூறும் காரணங்களை ஆராய்வோம். அயோத்தி இராமனை ‘மன்னன்’ என்று மட்டுமே வால்மீகி சொன்னாராம். ஆனால், தமிழில் இராமாயணம் எழுதிய கம்பர் இராமனைக் கடவுளாக்கி விட்டாராம். ஆகவே வால்மீகி இராமாயணப் பிரச்சாரம் செய்வதின் மூலம் கம்ப இராமாயணத்தின் கடவுள் தன்மையை எதிர்க்கப் புறப்பட்டிருக்கிறார் ஈ.வெ.ரா.
இராமன் சாதாரண மன்னனா? சருவ லோகத்தையும் படைத்துக் காத்து அருள் புரியும் கடவுளா? இந்த விவாதத்தில் நான் இங்கு ஈடுபடப்போவதில்லை. அது சமயப் பிரச்சாரகர்களின் வேலை. ஆனால், தமிழ் மக்களுக்கு இராமனைக் கடவுளாக அறிமுகப்படுத்திய முதற் கவிஞர் கம்பர் அல்லர். அவருக்கு முன்பே அகில இந்தியாவிலும்-ஏன்? நமது தாயகமாம் தமிழகத்திலும் இராமன் கடவுளாகவே கருதப்பட்டு வந்திருக்கிறான்.
சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ, கம்பருக்கு முற்பட்டவர். ஆம். கம்பர் தோன்றி இராமாயணத்தைத் தமிழில் எழுதுவதற்கு முன்பே இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றிக் கொடுத்திருக்கிறார். அந்தச் சிலப்பதிகாரமும் இராமனைக் கடவுளாகவே கூறுகிறது
மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே
என்ற வரிகள் சிலப்பதிகாரத்துள் ‘ ஆய்ச்சியர் குரவை’யில் வருகின்றன. இவ்வரிகளில் இராமன் ‘திருமால்’ என்ற தெய்வமாகவே அறிமுகப்படுத்தப் படுகின்றான். மற்றும் ‘ஊர்காண்காதை’யில்,
தாதை யேவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன்
வேத முதல்வற் பயந்தோன் என்பது
நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ
எனக், கவுந்தியடிகள் இராமனைப் பற்றிக் கோவலனிடம் கூறுமிடத்து, “அவர் நான்முகனைப் பெற்ற திருமால்” என்றே தெரிவிக்கின்றார். மற்றும், இராமன் கடவுள் என்பது தமிழகத்தின் புது மொழியல்ல; நெடுமொழி. அதாவது; நீண்ட காலமாகவே தமிழ் மக்களிடையே இருந்துவரும் நம்பிக்கை என்றும் கவுந்தியடிகள் கூறுகின்றார்.
பெரியார் ஈ.வெ.ரா சிலப்பதிகாரத்தைக் கருத்தூன்றிப் படித்திருப்பாராயின், இராமனைக் கடவுளாக்கியது கம்பர்தான் என்று கூற மாட்டார்.
சிலப்பத்காரத்துக்கு முன்பே இயற்றப்பட்ட சங்க இலக்கியங்களில் கூட இராமனைப்பற்றிய செய்திகள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றிலும் இராமன் வழிபடும் கடவுளாகவே வருணிக்கப்படுகின்றான்.
கடவுள் மனித உடல் தாங்கி மண்ணுலகில் பிறப்பதில்லை என்பது மதவாதிகளும் அறிந்த உண்மைதான். ஆனால்; மண்ணுலகில் வாழ்வாங்குவாழ்ந்த மனிதர்களை விண்ணுறையும் தெய்வமாக எண்ணுவது மதவாதிகளின் மரபு. அந்த மரபு வழிதான் மண்ணாண்ட மன்னனான இராமபிரான் தம்முடைய ஒழுக்கம், உயர்குணம், ஏகபத்தினி விரதம், அரக்கத் தன்மையை அழித்த ஆற்றல், அரசுரிமையைத் துறந்த தியாகம் ஆகியவற்றிற்காகத் தெய்வமாக எண்ணப்பட்டான். பெரியார் ஈ.வெ.ரா. போற்றிப்புகழும் திருக்குறளும்,
வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்
என்றே கூறுகின்றது. இதற்காக ஈ.வெ.ரா. திருக்குறளுக்கும் தீ வைப்பாரா? அல்லது இந்தக் குறளை யேனும் எடுத்தெறிவாரா? முடியாதே!
சிலப்பதிகாரத்துள் கதாநாயகியான கண்ணகிதேவி மனித வடிவந்தாங்கி மாநாய்க்கனுக்கு மகளாய்ப் பிறந்தவள்தான். ஆயினும், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து பெண்ணுலகத்திற்குப் பெருமை தேடிய காரணத்தால் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டாள்.
“அயோத்தி வேந்தன் தயரதன் அறுபதினாயிரம் மனைவியரை மணந்து வாழ்ந்ததாக இராமாயணம் கூறுகின்றதே, இது அடுக்குமா? பெண்ணுலகம் அங்கீகரிக்குமா?” என்றெல்லாம் கேள்வி கேட்டு அங்கலாய்த்துக் கொள்கிறார் ஈ.வெ.ரா. வடமொழியில் இராமாயணம் எழுதிய வால்மீகியும் சரி; அந்தக் காப்பியத்தின் கட்டுக் கோப்புக் குலையாமல் தமிழில் எழுதிய கம்பரும் சரி; தயரதன் அறுபதினாயிரம் மனைவியரை “மணந்து வாழ்ந்த” சம்பவத்தைச் சிறப்பித்துக் கூறவில்லை, உண்மையில், அது நிகழ்ந்த சம்பவமும் அல்ல; கவிஞன் வால்மீகியின் கற்பனைச் செய்தியே. அதைக் கம்பனும் அப்படியே ஒலி பரப்பி யிருக்கிறான். இதை மெய்யென்று நம்பிய ஈ.வெ.ரா வின் அறிவுக்கு எனது அனுதாபம் உரித்தாகுக!
வரலாற்றுச் சம்பவங்களும், கவிஞனின் கற்பனைகளும் கலந்துதான் காப்பியம் உருவாகின்றது. இராமாயணக் காப்பியம் மட்டும் இதற்கு விதி விலக்கல்ல. காப்பியத்தில் வரும் செய்திகளை யெல்லாம் உண்மைச் சம்பவங்களாக நம்பிவிடுவது அப்பாவித்தனம். காப்பியப் புலவன் நடந்த சம்பவங்களை மட்டுமே கூறும் சரித்திர ஆசிரியன் அல்லன். நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து, நடக்க வேண்டும் என்று தாம் விரும்பும் நல்ல எண்ணங்களையும் அவற்றோடு இணைத்து விடும் லட்சியவாதி,
கவிஞனுடைய கற்பனைகள் இருவகைப்படும்.
நிகழாத, ஆனால் மனித சக்தியால் நிகழ்த்தக்கூடிய கற்பனைகள் ஒருவகை. நிகழாததுமட்டு மல்லாமல், மனித சக்தியால் நிகழ்த்த முடியாததுமான கற்பனைகள் இன்னொரு வகை. அவற்றில், தயரதன் அறுபதினாயிரம் மனைவியரை மணந்ததாகக் கூறப்படும் செய்தி, இரண்டாவது வகையைச் சேர்ந்த-மனித சக்தியால் சாத்தியமில்லாத -கற்பனையாகும். இதை ஈ.வே.ரா. புரிந்துகொள்ள வேண்டும். மனித சக்தியை மீறிய கற்பனைச் சம்பவத்தை வால்மீகி போன்ற பெரும் புலவர், இராமாயணம் போன்ற பெருமை மிக்க காப்பியத்தில் சேர்க்கக் காரணம் என்ன?
24 ஆயிரம் சுலோகங்களால் பிரம்மாண்டமான காப்பிய மாளிகையைக் கட்டி முடித்த வால்மீகியும் சரி, பன்னீராயிரம் கவிதைகளில் இராமாயணத்தைத் தமிழில் எழுதிய கம்பரும் சரி, ஈ.வெ.ராவை விட அறிவில் குறைந்தவரல்லர். பொய் சொல்லிப் பணம் திரட்ட வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இருந்திருக்க முடியாது.
பின் எதற்காக நடக்க முடியாத சம்பவத்தைக் கற்பனை செய்தார்கள்? இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பது கடினமல்ல; சுலபந்தான்.
இராமாயணக் காப்பியத்தின் தலைவன் இராமனே ஒழிய, அவன் தந்தை தயரதன் அல்லன். ஆகவே காப்பியத்தின் கருப்பொருளை-அதன் பயனை இராமனிடம் காணமுயல வேண்டுமேயன்றி, தயரதனிடம் காண முயற்சி செய்யக்கூடாது.
இராமனிடம் காணும் நற்பண்புகள் பலவற்றுள்ளும் தலையாயது அவன் கடைப்பிடிக்கும் ஏகபத்தினி விரதமே. காப்பியத் தலைவனிடம் காணப்படும் இந்த உயர் பண்பையே காப்பியத்தின் கருப்பொருளாகவும் கொள்ளவேண்டும். இதன்படி பார்த்தால், ஏக பத்தினி விரதத்தை மனித சமுதாயத்திற்கு; குறிப்பாக அரச பரம்பரைக்கு அறிவுறுத்தவே வால்மீகி முனிவர் இராமாயணத்தை இயற்றினாரென்று சொல்லலாம்.
மேலும், ராமாயணம் இயற்றப்படும் காலம் வரை இல்வாழ்க்கையில்’ஒருத்திக்கு ஒருத்தன்’ என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதுபோல, ‘ஒருத்தனுக்கு ஒருத்தி’ என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆம்; பெண் கற்பு வற்புறுத்தப்பட்டதே யன்றி ஆண் கற்பு வற்புறுத்தப்படவில்லை. இந்தக் கொடுமைக்கு எதிராக ஆண் கற்பைப் போதிக்கின்றது இராமாயணம்.
தந்தை தயரதன் அறுபதினாயிரம் மனைவியரை மணந்தவன். மைந்தன் இராமனோ எகபத்தினி விரதன்! இல்வாழ்க்கைப் பண்பில் எத்தகைய புரட்சிகரமான மாற்றம்!
இவர்களில், ஈ.வெ.ரா, பின்பற்ற வேண்டியது தயரதனை அல்ல. இராமபிரானையே! அப்படியிருக்க, இராமனை மறந்து தயரதனை நினைத்துக்கொள்வானேன்?
Comments
Post a Comment