Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 38

 அகரமுதல




(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  37 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர் 14 தொடர்ச்சி

 

“வழி தவறுகிற இந்தத் துணிச்சல் எங்கிருந்து பழகத் தொடங்குகிறது என்பதுதான் எனக்கும் விளங்கவில்லை. இன்னும் சிறிது காலத்துக்குக் கணக்கும், வரலாறும், விஞ்ஞானமும் கற்றுக் கொடுப்பதை நிறுத்திவிட்டு ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கற்றுக் கொடுக்கலாமா என்று கூடத் தோன்றுகிறது. சுதந்திரமும் உரிமைகளும் பெருகுவதற்கு முன்னால் படிக்காதவர்களில் சிலர் அறியாமையால் தவறு செய்து கொண்டிருந்தார்கள். இப்போதோ படித்தவர்கள், தவறுகளை அவை தவறுகளென அறிந்து கொண்டே செய்கிறார்கள். கீழ்நாட்டு வாழ்வின் அசௌகரியங்கள் நிறைந்த ஏழைக் குடும்பங்களிலிருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு மேல்நாட்டு வாழ்வின் சௌகரியங்களையும் ஆடம்பரங்களையும் கற்பித்து அனுப்பிவிடுகிறார்கள். வட்டமான டப்பாவுக்கு சதுரமான மூடி போடுகிற மாதிரி ஏழை நாட்டில் ஆடம்பரக் கனவுகள் சிறிதும் பொருந்த மாட்டேனென்கின்றன.”

அரவிந்தனை இந்த மாதிரிக் கருத்து வெள்ளமாகப் பேசுவதற்குத் தூண்டிவிட்டுக் கேட்பதில் முருகானந்தத்துக்குத் தனி ஆனந்தம். மனம் உருகித் துடிப்போடு இப்படி அவன் பேசுகிற சந்தர்ப்பங்கள் எப்போதாவது அத்திப்பூத்த மாதிரிதான் வாய்க்கும். அப்படி வாய்க்கிற நேரங்களில் அந்த அறிவு வெள்ளத்தில் நன்றாக மூழ்கி எழுந்துவிடுவது முருகானந்தத்தின் வழக்கம். அரவிந்தன் மேலும் தொடர்ந்தான். “நீதான் தினசரி செய்தித்தாள்களில் படிக்கிறாயே, முருகானந்தம்! ஓடிப்போதல், பணத்தை எடுத்துக் கொண்டு தனியே போதல் என்று இளைஞர்களையும் யுவதிகளையும் பற்றி எவ்வளவு சேதிகள் வருகின்றன? அவ்வளவுமா பொய்யாக இருக்கும்? எப்படி எப்படி எந்தச் சமயங்களில் தவறு செய்யலாமென்பதைச் செய்தித்தாள்களே கற்றுக் கொடுக்கின்றன என்பது உனக்குத் தெரியுமா?”

“நீ சொல்வது உண்மைதான் அரவிந்தன். ஒழுக்கத்தைப் பற்றிய ஆர்வம் இளைஞர்களிடையே குன்றிவிட்டது. ஆனால் அதற்கு இளைஞர்கள் மட்டும்தான் காரணமென்று நினைக்கிறாயா?”

இதற்கு அரவிந்தன் பொருத்தமாகவும், நன்றாகவும் பதில் சொன்னான். இப்படிக் கேள்வியும் பதிலுமாகச் சிறிது நேரம் விவாதம் செய்துவிட்டு அவர்கள் உறங்கிப் போனார்கள்.

காலையில் அரவிந்தன் விழிக்கும்போது கொல்லையில் முருகானந்தம் யாருடனோ இரைந்து கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தான். போய்ப் பார்த்தபோது பின்புறம் குப்பை அள்ள வருகிற தோட்டியை அவன் விரட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. தோட்டி தனக்கு ஒரு பாவமும் தெரியாதென்று கெஞ்சிக் கதறிக் கொண்டிருந்தான். முருகானந்தம் தனக்கு இருந்த கோபத்தில் தோட்டியைக் கீழே தள்ளி மிதித்துவிடுவான் போலிருந்தது. நல்ல வேளையாக அந்தச் சமயத்தில் அரவிந்தன் எழுந்து போய்த் தோட்டிக்கு அடியும் உதையும் விழாமல் காப்பாற்றினான்.

“அவன் என்னப்பா செய்வான்? செய்திருந்தாலும் உன்னிடம் நான் செய்தேன் என்று சொல்லிக் கொண்டிருப்பானா? நாம் ஒழுங்காகச் சுவரைப் பெரிதாக்கிச் சந்து வழிக்குக் கதவும் போட்டுவிட்டால் யாரும் நுழைய முடியாது அப்புறம்” என்று முருகானந்தத்தைச் சமாதானப்படுத்திக் கூட்டிக் கொண்டு வந்தான் அரவிந்தன்.

“மயிலே மயிலே இறகு போடு – என்றால் போடாது அரவிந்தன். கன்னத்தில் கொடுத்தால் உண்மையைக் கக்கியிருப்பான். நீ எழுந்திருந்து வந்து காரியத்தைக் கெடுத்து விட்டாய். போய்த் தொலையட்டும். அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்கிற காரியத்தையாவது இன்று காலையிலிருந்து தொடங்கலாம்” என்று அன்று செய்ய வேண்டிய வேலையை நினைவுபடுத்தினான் முருகானந்தம்.

அரவிந்தன் மேசை இழுப்பறையைத் திறந்து வசந்தாவின் படத்தை எடுத்து முருகானந்தத்திடம் தந்தான். அந்தப் படத்தை வாங்கிப் பார்த்தவுடன் முருகானந்தம் வியப்பால் துள்ளினான் அவன் முகம் அகன்று மலர்ந்தது.

“அடி சக்கை! இப்படியல்லவா வகையாக மாட்டிக் கொள்ள வேண்டும்” என்ற சொற்கள் அவன் வாயிலிருந்து வெளியாயின.

அதைக்கேட்டு அரவிந்தன் ஒன்றும் புரியாமல் திகைத்தான். “என்னடா முருகானந்தம்? இந்தப் படத்திலிருக்கிற பெண்ணை இதற்கு முன்பே உனக்குத் தெரியுமா?”

“பெண்ணைத் தெரியாது. இந்தப் படத்தை நன்றாகத் தெரியும். இதோ பார் வேடிக்கை…” என்று சொல்லிக் கொண்டே ஒரு மணிபர்சை எடுத்துப் பிரித்தான். அதில் சிறிய அளவில் எடுக்கப்பட்ட வசந்தாவின் புகைப்படங்கள் இரண்டும் அவள் கையொப்பத்தோடு கூடிய கடிதம் ஒன்றும், மூன்று நூறு உரூபாய் நோட்டுகளும் இருந்தன. மணிபர்சின் மேற்பாகம் வெளியே தெரிகிறாற் போன்ற ‘மைக்கா’ உறைக்குள் ஓர் ஆண் படமும் இருந்தது. மணிபர்சின் சொந்தக்காரனுடைய படமாக இருக்க வேண்டும் இது. கடிதத்தைப் பிரித்து அரவிந்தனுக்குப் படித்துக் காட்டினான் முருகானந்தம்.

“அன்புடையீர் வணக்கம்.

உங்கள் விண்ணப்பத் தாளும் நிபந்தனைகள் அடங்கிய விவரமான கடிதமும் கிடைத்தன. புதிய முகங்களைத் திரைப்படத்தில் அறிமுகப்படுத்த நடிப்புக் கலையை வளர்க்கும் உங்கள் பண்பைப் பாராட்டுகிறேன். என்னுடைய ஆர்வத்தை நீங்கள் புரிந்து கொண்டதற்கு நன்றி. பள்ளிக்கூட நாட்களிலும், கல்லூரி உடை அழகுப் போட்டிகளிலும் பலமுறை நான் பரிசு வாங்கியிருக்கிறேன். எனக்குத் திரைப்படத்தில் நடிக்க வேண்டுமென்ற தணியாத ஆசை. என்னுடைய புகைப்படத்தைப் பார்த்துவிட்டு முதல் படத்திலேயே என்னைக் கதாநாயகியாக நடிக்க வைக்கலாமென்று எழுதியிருக்கிறீர்கள். உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். நிபந்தனையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தொகையை எப்போது வேண்டுமானாலும் தருவதற்குத் தயாராயிருக்கிறேன். நீங்கள் எப்போது இங்கே வருவதாயிருந்தாலும் வருகிற சேதியும், தங்கும் இடமும் எழுதுங்கள். கவரிலேயே எழுதுங்கள். எது எழுதினாலும் தயவு செய்து அட்டையில் எழுத வேண்டா. நான் உங்களைச் சந்திக்கிறேன்.

தங்கள்,
வசந்தா.

கேட்டுவிட்டு ஏளனமாக நகைத்தான் அரவிந்தன். “நாலு எழுத்து படித்து விவரம் தெரிந்த பெண்களுக்கு இன்று இருக்கிற திரைப்படப் பித்துக்கு அளவே இல்லை. ஒவ்வோர் இளம் பெண்ணும் நிலைக்கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கும் போது தன்னை ஒரு நடிகையாக, அல்லது நடிகையைப் போல் நினைத்துக் கொண்டு தான் பார்க்கிறாள். அந்தக் கலையில் சேர்ந்தவர்களின் நடிப்பைப் பார்த்து இரசிப்பதோடு மனநிறைு அடையலாம். ஆனால் எல்லாரும் கவர்ச்சி நிறைந்த அந்தக் கலைப்பள்ளத்தில் கண்ணை மூடிக்கொண்டு குதித்துவிடத் துடிக்கிறார்களே! இந்த மோகம் கன்றிய வெறிக்கு மருந்தை எங்கே தேடுவது?”

“மருந்தை அப்புறம் தேடலாம்! முதலில் அந்த ஆளைத் தேடிக் கைக்கு விலங்கு மாட்டி உள்ளே தள்ளவேண்டும். எல்லாம் புத்திசாலித்தனமாகச் செய்த பயல், இந்த மணிபர்சை மட்டும் என் கடையில் மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டான். நேற்று நான் கடை பூட்டுமுன், தற்செயலாக இதைப் பிரித்துப் பார்த்த போது இந்தப் படம் கண்ணில் பட்டது. அது நினைவிருந்ததனால் தான் நீ கொடுத்த படத்தைப் பார்த்த அளவில் கண்டுபிடித்தேன்” என்று முருகானந்தம் கூறியதைக் கேட்டு, “அது சரி தம்பி! படத்தையும் மணிபர்சையும் வைத்துக் கொண்டு ஆளை எப்படி நீ கண்டுபிடிப்பாய்? கடிதம் உறையின்றி இருக்கிறதே? முகவரியும் எழுதப்பெறவில்லையே” என்று சந்தேகத்தை வெளியிட்டான் அரவிந்தன்.

“பயல் இன்னும் நாலைந்து மாதங்களாவது நான் தைத்துக் கொடுத்த உடையைப் போட்டுக் கொண்டுதானே திரிய வேண்டும். போட்டோ வேறு இருக்கிறது நம்மிடம். கண்டுபிடித்துவிடலாம் பயப்படாதே” என்று முருகானந்தம் அரவிந்தனுக்குச் சொல்லிக் கொண்டிருந்த போது பூரணி உள்ளே வந்தாள். அவள் கையில் ஒரு தந்தி உறை இருந்தது. உறையிலிருந்து தந்தியை எடுத்து அவள் அரவிந்தனிடம் தந்தாள். தந்தி விடியற்காலம் நான்கு மணிக்குத் திருச்சியிலிருந்து கொடுக்கப்பட்டிருந்தது.

‘திரும்பி வர வழிச் செலவுக்குப் பணமில்லை. திருச்சி இரயில் நிலையத்தில் இருக்கிறேன். வந்து அழைத்துப் போகவும். விவரம் நேரில் – வசந்தா.”

தந்தி மங்களேசுவரி அம்மாள் பேருக்கு வந்திருந்தது. அரவிந்தன் படித்துவிட்டு முருகானந்தத்திடம் கொடுத்தான்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்