Skip to main content

திருக்குறள் அறுசொல் உரை – 067. வினைத் திட்பம் : வெ. அரங்கராசன்

attai_kuralarusolurai

02. பொருள் பால்   
06. அமைச்சு இயல்
அதிகாரம் 067. வினைத் திட்பம்  

  செயல்வெற்றிக்கு மிகவும் தேவையான   
        செயல்உறுதி மேலாண்மைத் திறன்இயல்

  1. வினைத்திட்பம் என்ப(து), ஒருவன் மனத்திட்பம்;
     மற்றய எல்லாம் பிற.

        செயல்உறுதி என்பது மனஉறுதி;
        மற்றவை, எல்லாம் வேறு.          

  1. ஊ(று)ஒரால், உற்றபின் ஒல்காமை, இவ்இரண்டின்
    ஆ(று)என்பர் ஆய்ந்தவர் கோள்.

        வரும்முன் காத்தலும், வந்தபின்
        தளராமையும் ஆய்வாளர் கொள்கை.

  1. கடைக்கொட்கச், செய்தக்க(து) ஆண்மை; இடைக்கொட்கின்,
    எற்றா விழுமம் தரும்.

        செயல்கள் முடிந்தபின், வெளியிடு;
        இடையில் வெளிப்படின் துன்பம்.   

  1. சொல்லுதல், யார்க்கும் எளிய; அரியஆம்,
     சொல்லிய வண்ணம் செயல்.

        சொல்லுதலோ, யார்க்கும் எளிது;
        சொல்லுவதைச் செய்தலோ, கடிது.

  1. வீ(று)எய்தி மாண்டார் வினைத்திட்பம், வேந்தன்கண்
     ஊ(று)எய்தி உள்ளப் படும்.

        வெற்றியாய் முடிப்பார் செயல்உறுதியை,
        ஆள்வார், நினைப்பார்; மதிப்பார்.

  1. எண்ணிய எண்ணியாங்(கு) எய்துப, எண்ணியார்
     திண்ணியர் ஆகப் பெறின்.

        யாராயினும் உறுதியார் ஆயின்,
        நினைத்ததை நினைத்தபடி பெறுவார்.

  1. உருவுகண்(டு) எள்ளாமை வேண்டும், உருள்பெரும்தேர்க்(கு)
    அச்(சு)ஆணி அன்னார் உடைத்து.
        உருவுகண்டு இகழாதே; தேரின்
        அச்சாணிபோல் அவரும் அமைவார்.
.
  1. கலங்காது, கண்ட வினைக்கண், துளங்காது,
     தூக்கம் கடிந்து, செயல்.

        ஆராய்ந்து தேர்ந்த நல்செயலைக்,
        கலங்காது, காலத்தே செய்துமுடி.    

  1. துன்பம் உறவரினும் செய்க, துணி(வு)ஆற்றி,
     இன்பம் பயக்கும் வினை.         

        துன்பம் அழுத்தினும், உறுதியோடு
        இன்பச் செயலைச் செய்க.

  1. எனைத்திட்பம் எய்தியக் கண்ணும், வினைத்திட்பம்
     வேண்டாரை வேண்டா(து) உலகு.

        எவ்உறுதி பெறினும், செயல்உறுதி
        விரும்பானை மக்கள் விரும்பார்.
(அதிகாரம் 068. வினை செயல் வகை)
பேராசிரியர் வெ. அரங்கராசன்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue