Skip to main content

ஆரியர்க்கு முற்பட்ட வெளிநாட்டு வாணிகம் – புலவர் கா.கோவிந்தன்



(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ச்சமயம் 2 – புலவர் கா.கோவிந்தன்-தொடர்ச்சி)

சீனர், யவனர் போலும், இந்தியரல்லாத இனத்தவர் பாரதப்போரில், போரிட்ட படைப்பிரிவுகளுக்குக் கொடுத்ததை மகாபாரதம் குறிப்பிடுகிறது. (CINAS fought in the Contingent of Bhagadatra of prajotisa. Magabharata. 5:18; 584:5 18:321) மகாபாரத காலத்தில், வட இந்திய அரசர்களுக்கும் இந்தியாவுக்கு வெளியிலிருந்த அரசர்களுக்குமிடையில், அரசியல் உறவுகள் இருந்தன என்பதைக் குறிப்பாக உணர்த்தும் இந்த அறிவிப்பில் பொருத்தமற்றது எதுவுமில்லை. இஃது உண்மையோ அல்லவோ , ஆனால் ஒருபக்கம் தென்னிந்தியா, மறுபக்கம் பாபிலோனியா, அரேபியா, ஆப்பிரிக்க நாடுகள், ஆகிய இவற்றினிடையே, வேதகாலத்தில் நிலைபெற்றிருந்த வாணிக உறவு, கி.மு. இரண்டாயிரத்தில் செழிப்புற வளர்ந்திருந்தது என்பதை உணர்த்த சில அகச்சான்றுகள் உள. வடமேற்கு ஐரோப்பா வின் வடகோடியின் பாலைநிலங்களாம் காண்டினேவியாவைச் சார்ந்த, நெட்டையான உருவமும், நெடிய மண்டை ஓடும் கொண்ட வெள்ளை நிறத்துப் பழங்குடியினர் (Nordic Tribe) உரிய தமிழ்ப் பெயரில் கூறுவதானால், வடகோடி நெடிய முல்லை நிலத்து ஆயர் கி.மு. 2000இல் மேற்கு நோக்கி இடம்பெயர்ந்து, கோதான் முதல் கிழக்கு மத்திய தரைக்கடற்கரை வரையான பண்டை நிலவழி வாணிகத்தை அழித்துவிட்டு, சீனாவுக்கும் மிகப்பழைய நகரங்களுள் ஒன்றான திராய் (Troy) நகருக்கும் இடையில் நடைபெற்று வந்த பச்சைமாணிக்கம் (Jafe – stone) வாணிகத்தைத் துண்டித்துவிட்டனர். அவர்கள் இந்திய ஆரியரோடு, இன்று நிலவும் பண்பாட்டுச் சார்பான மனித இனநூல் கொள்கைக்கு முரணாக, நான் கருதுவதற்கேற்ப, கொண்ட உறவு எதுவும் இல்லை. வடநாட்டில் இவ்வாறு ஆணையிட்டுத் தடுக்கப் பட்டுவிட்ட வணிக அலை. தெற்கு நோக்கி வீசி, இந்தியாவின், குறிப்பாகத் தென் இந்தியாவின் கடல்வழி வாணிகத்து மேல் வளர்ச்சிக்கு வழிவகுத்து விட்டது.

“வாணிகப் பொருளாகவும், கி.மு. 1580 – 1350இல், பதினேழாவது அரசகுலத்து ஆட்சியில், திறைப் பொருளாகவும், தந்தம் பெறப்பட்டதற்கான எண்ணற்ற ஆவணச் சான்றுகள் உள்ளன. தந்தம் போலவே, தந்தத்தாலான நாற்காலிகள், மேசைகள், இழுப்பறைப் பெட்டிகள், உருவச்சிலைகளும் பெறப்பட்டன”. (Scoff’s periplus.page:61) இவை பல்வேறு இடங்களிலிருந்து வந்தன. அந்நாட்களில் எகிப்துக்கும், இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற வாணிகத்தில், பெரிய பொருள் சேமிப்பு இடமாக விளங்கிய, சோமாலிலேண்டைச் சேர்ந்த புண்டு (punt) அவ்விடங்களில் ஒன்று. இச்செய்தி, பழைய காலத்தில் நிகழ்ந்தது போலவே, தந்தமும், தந்தத்தினாலான பொருள்களும் இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலிருந்து நைல் பள்ளத்தாக்கிற்குச் சென்றதை உணர்த்துகிறது.

பதினெட்டாவது அரசர்குலமாகிய தேவன் (The ban) அரசகுலத்து ஆட்சியின் போது, சிறந்த எகித்துக் கப்பற்படைகள், புண்டு பகுதிக்கு அனுப்பப்பெற்றன. அவை திரும்பி வரும்போது, நறுமணப் பொருள் செய்யப் பயன்படும் பிசின், கருங்காலி மரம், தந்தம், பொன், இலவங்கம் மணம் கமழும் புகைதரும் பொருள்கள், கண் மை, வாலில்லாக் குரங்குகள், குரங்குகள், நாய்கள், சிறுத்தையின் தோல்கள் ஆகிய பெரும் பொருட் குவியலோடு வந்தன. “சிரியா நாட்டிலிருந்தும், அரேபியா மற்றும் கிழக்கு நாடுகளின் கருவூலங்களின் பெரும் பகுதியாம், மணம் கமழ் புகை தருவான்கள், எண்ணெய், உணவு தானியங்கள், மது, பொன், வெள்ளி, மதிப்புமிக்க கல் வகைகள் ஆண்டுதோறும் செலுத்தப்பட்டன”. பாபிலோனியாவிலிருந்து, மாணிக்கக் கல்வகைகள் வரப்பெற்றன. “கி.மு. 1798-1167 இல் இருபதாவது அரசர் குலத்தில் மூன்றாம் இரமேசசு (Rameses III) என்பான் ஆட்சியின் கீழ், நாட்டின் செல்வவளம் அனைத்தும் அமோன் (Amon) என்பான் மடியில் கொட்டப்பட்டு விட்டதுபோல் காணப்பட்டது. பாபிரசு ஆரிசு என்பார், (Papyrus Haris) அமோன் என்பான் கல்லறைக்காக “பாபிரசுஸ் ஆரிசு” என்ற பெயரில், தொகுத்து இயற்றிய, தம்முடைய நன்கொடை அறக்கொடைகளின் சிறந்த ஆவணத்தில், ஆண்டுதோறும், “பொன், வெள்ளி, மணிக்கல், உயர்மெருகு ஏற்கும் பச்சைநிறக் . கனிப்பொருள், மதிப்புமிக்க மாணிக்க வகைகள், செம்பு, சிறந்த நார்மடியால் ஆன அரச உடைகள், இலவங்கம் 246 நாழி” என்ற தொடர்கள் இடம் பெற்றுள்ளன. (இம் மேற்கோள்கள், திருவாளர் பிரசுஸ்டெடு (Breasted) என்பாரின் எகித்தின் பழைய ஆவணங்கள் (Ancient Records of Egypt) என்பதிலிருந்து எடுக்கப்பட்டன. (Schoffs periplus. p. 121-122) மேலே காட்டிய மேற்கோள்களில் குறிப்பிடப் பட்டிருக்கும் பொருள்களில், கருங்காலி, பெரும்பாலும் தென்னிந்தியாவிலிருந்தே சென்றது என்பது, ஏற்கெனவே விளக்கப்பட்டுள்ளது. மணிக்கல் உட்பட, மதிப்புமிக்க கல்வகைகள், பிற்காலத்தில், மேற்கத்தவர்களால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பது பின்னர் விளக்கப்படும்.

இவ்வாணிகம், பெரும்பாலும் 18ஆவது அரசர் குல ஆட்சியில், செல்வ வளங்கொழித்திருந்த நாட்களில், எகித்தோடு வாணிகத் தொடர்பு கொண்டிருந்த அனைத்து நாடுகளும், ஆமோன் அவர்களுக்கு வழிபாடு செலுத்துவான் வேண்டி வந்து, அலைமோதிய காலத்தில் தொடங்கியதாதல் வேண்டும். எகித்தியர்களால், “இலாப்பிசு லாச~லி ” (Lapis-Lazwli) என அழைக்கப்படும் நீலமணிக்கல், எகிப்தியர்களால் நன்மிகப் பழங்காலத்திலிருந்தும், அஸிரியர்களால் அதனினும் பிற்பட்ட காலத்திலிருந்தும் அறியப்பட்டது ‘என்கிறார் திருவாளர் குட்சைல்டு (Good Cuild) என்பார்.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்