ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ச்சமயம் 2 – புலவர் கா.கோவிந்தன்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ச்சமயம் 1 – புலவர் கா.கோவிந்தன்-தொடர்ச்சி)
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 12
சமயம் 2
மேய்புலமாம் முல்லைநிலக்கடவுள், ஆயர் மகளிர் பாலும், ஆனினங்கள் பாலும் அன்புடையோனாகிய கார்மேனிக் கடவுள் மாயோன். அவன் எப்போதும், குழலில் ஒலி யெழுப்பிக் கொண்டேயிருப்பான். அதன் இசை அனைத்து உயிர்களையும் ஈர்த்து உருகச் செய்யும். இசையில் மட்டுமல்லாமல், ஆடலிலும் மகிழ்வூட்டுவன். ஆய மகளிர் கூட்டம் புடைசூழ, அவன், அல்லது அவன் பக்தன் , இன்றைய ஆயர்களைப் போலவே, எளிதில் பொருள் விளங்காப் பல் வேறு ஆடல்களை மேற்கொள்வர். பால், பால் படு பொருள்கள், சில சமயம், இவற்றொடு கலந்த சோறு, அவன் படையல்களாம்.
மீண்டும் கூடலால் பிறக்கும் இன்பத்தைப் பெரிதாக்கவே உதவும். காதலர்களின் சிறு பிரிவுக்கான வாய்ப்பினை அளிக்கிறது ஆனிரை மேய்க்கும் வாழ்க்கை . ஆதலின், காதல் இன்பத்தை விருப்பம் போல் நுகர, வேட்டையாடும் வாழ்க்கையிலும், ஆனிரை மேய்க்கும் வாழ்க்கை, பெரிதும் துணை நிற்கின்றது, வேட்டையாடுவான் போலவோ, எதிர்பாரா இன்னல்கள் நிறைந்த, நெடுந்தொலைவு கடல் மேல் செல்லும் வாழ்க்கை உடையவரைப் போலவோ அல்லாமல், ஆனிரை மேய்ப்பவர் காட்டில் ஓய்வாக இருந்து ஆனிரை ஓம்புவதில் ஈடுபட்டுள்ளமையால், அவர் வாழ்க்கையே மகிழ்ச்சி நிறைந்த ஒன்றாம், ஆகவேதான் ஆனிரை ஓம்புவாரின் கார்மேனிக் கடவுளும், இந்தியக் கடவுள்களனைத்திலும் மகிழ்ச்சியால் நிறைந்த கடவுளாவன்.
கடற்கரையைச் சார்ந்த நிலத்துத் தெய்வம், அச்சமூட்டும் கடல் தலைவன் ஆவான். கரிய மேனியராகிய ஆடவரும் மகளிரும், இடுப்பில் தங்கள் குழந்தைகளோடு கடற்கரைக் . கண் திரண்டிருந்து, அன்று பிடித்த புத்தம்புதிய அல்லது , உப்பிட்டு உலர்ந்த மீனையும், ஊனையும் அக்கடல் , தெய்வத்துக்குப் படைக்கும் மீனவ வழிபாட்டாளர்களின் வழிபாட்டுச் சடங்குகளில், அக்கடற் கடவுளின் அடையாளமாகக் கொடிய சுறாமீனின் கொம்பு அமையும். காதல் இன்பம், மீனவர்களுக்கு மறுக்கப்படவில்லை , கழி நீரில் படர்ந்திருக்கும் அல்லி மலர்களை, அவற்றின் மீதுற்ற ஆசையால் அணிந்து கொண்டு தங்களை ஒப்பனை செய்துகொள்ளும் கரிய மேனியராகிய மீனவ இன மகளிரின் . நன்கு வளர்ந்த உடல் உறுப்புகள், மீன் முடைநாறும் நிலையிலும், அவர்களின் இல்லத்து ஆடவர் கடல் மேல் செலவு குறித்துப் போய்விட்ட நிலையில் அண்டை நிலத்துச் சிறந்த ஆடவர், தங்கள் காதலியராம் அம்மகளிரைக் காண்டல் விருப்போடு, தங்கள் வண்டிகள் அல்லது தேர்களில் கடற்கரைக்கு வந்து செல்வர் என்பதைப் பிற்கால இலக்கியங்களில் படிக்கிறோம்.
ஏனைய நிலப்பகுதிகளிலும், நாகரீகம் நனிமிக வளர்ந்துவிட்ட ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில், களவுக் காதல், கற்புக்காதலுக்கு வழிவகுத்துவிட்டது. தமிழர்களிடையே இடம்பெற்றுவிட்ட, ஆரியர்களால் திருத்தப் படுவதற்கு முற்பட்டதால், பழைய திருமணச் சடங்குமுறை, அகநானூறு என்ற தொகை நூலைச் சேர்ந்த இரண்டு செய்யுட்களில் விளக்கப்பட்டுள்ளது. “உழுத்தம் பருப்புக் கலந்து நன்கு குழையச் சமைத்த பொங்கலோடு, பெரிய சோற்றுக் குவியல், பலரும் உண்ட பிறகும் குவிந்து கிடக்கிறது. வரிசையாகக் கால்களை நட்டுப் போடப்பட்ட பந்தலின் கீழ், புதுமணல் பரப்பப்பட்டுள்ளது. மனை விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. மணமக்கள் மாலைகளால் அணி செய்யப்பட்டுள்ளனர். தீயன விளைவிக்கும் கோள்களின் தொடர்பு நீங்கப்பெற்ற, வெண்பிறைத் திங்கள், சிறந்த புகழ் வாய்ந்த உரோகிணி எனும் நாளோடு கூடிய அந்த நல்ல நாளில் இருள் அகன்ற விடியற்போதில், திருமண ஆரவாரத்தில் மூழ்கிவிட்ட முதிய மகளிர், தலையில் கொண்ட குடங்களிலும், கையிற் கொண்ட பண்டங்களிலும் நீரைக் கொண்டு வந்து, வரிசையாகக் கொடுக்கக் கொடுக்க, மகப்பேறு பெற்று மாண்புடைய தூய அணிகள் அணிந்த மகளிர் நால்வர், ‘கற்பு நெறி வழுவாது, நல்ல பல பேறுகளையும் பெற்றுத்தந்து, கணவனைப் பேணும் அன்புடையை – ஆகுக’ என வாழ்த்தியவாறே, அத்தண்ணீரால் குளிப்பாட்ட, அந்நீரோடு கலந்து சொரியப்பட்ட நெல்லும் மலரும் மணமகள் கூந்தலில் கிடந்து சிறக்க, திருமணச் சடங்கு இனிதே முடிவுற்ற பின்னர், அன்று இரவு, தமரகத்து மகளிர் எல்லாம் ஒன்று கூடியிருந்து, மணமகளுக்குப் புதுக்கூறை உடுத்திப் பெரிய மனைக்கிழத்தி ஆகுக’ என வாழ்த்தி அவள் காதலனோடு ஓர் அறைக்குள் அனுப்பி வைத்தனர். அவளும் நாண்தரு நடுக்கத்தோடு உள்ளே நடந்தாள்”
உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை,
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணமல் ஞெமிரி
மனைவிளக்கு உறுத்து மாலை தொடரிக்,
கனை இருள் அகன்ற கவின் பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்து அகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்,
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்,
புதல்வன் பயந்த திதலை அவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழாஅ நற்பல உதவிப்,
பெற்றோன் பெட்கும் பிணையை ஆகுஎன
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி,
பல்லிருங் கதுப்பில் நெல்லொடு தயங்க,
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்,
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
‘பேரிற் கிழத்தி ஆகு’ எனத் தமர்தர
ஓரில் கூடிய உடன்புணர் கங்குல்
கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள்.”
அகநானூறு 86 : 1:22
(தொடரும்)
புலவர் கா.கோவிந்தன்
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
Comments
Post a Comment