கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 80 : 17. எழிலிபாற் பயின்ற காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 79 – தொடர்ச்சி)
பூங்கொடி
17. எழிலிபாற் பயின்ற காதை
பூங்கொடி எழிலியின் இல்லம் அடைதல்
ஆங்ஙனம் புகன்ற அடிகள்தம் வாய்மொழி
பூங்கொடி ஏற்றுளத் திருத்தினள் போந்து
கொடிமுடி நல்லாள் குலவிய தமிழிசை
நெடுமனை குறுகி நின்றன ளாக
பூங்கொடி அறிமுகம்
`வல்லான் கைபுனை ஓவியம் போலும் 5
நல்லாய்! என்மனை நண்ணிய தென்னை?
இளங்கொடி யார்நீ?’ என்றனள் எழிலி;
உளங்கொள அறிமுகம் உரைத்தனள் தன்னை
அடிகள்தம் ஆணையும் அறைந்தனள் பூங்கொடி;
எழிலி பாடம் பயிற்றல்
இசையின் அரசி ஈங்கிவள் விழைவுணர்ந் 10
திசைந்தனள், இசையின் இலக்கண நுணுக்கமும்,
பாடல் திறனும், பாடும் முறைமையும்,
ஏடுரை வகையும், இசைத்தொழில் புரிதலால்
பட்டுணர் அறிவும், பாங்குடன் குழைத்து
மட்டவிழ் கோதை மனங்கொள ஓதினள்; 15
இசைக்கருவிப் பயிற்சி
குழலும் யாழும் முழவும் முதலாப்
பழகும் கருவியின் பான்மையும் பயிற்றினள்;
மீனவன் சுவடியின் மேம்படு பொருளெலாம்
ஞானமீ தூர நாள்பல ஆய்ந்து
குறைவறத் தெருட்டினள் கொடுமுடி நங்கை; 20
—————————————————————
போந்து – சென்று, பட்டுணர் அறிவு – அனுபவ அறிவு, மட்டவிழ் கோதை – பூங்கொடி, மீதூர – மேலும்வளர, தெருட்டினள் – தெரிவித்தனள்.
++
எழிலியின் உள்ளக்களிப்பு
நிறைவுறும் அறிவொடு நேரிய நடையுறும்
இளையாள் திறமெலாம் எழிலி நன்குணர்ந்
திவளால் இசைத்தமிழ் இசையுறல் திண்ணம்;
தவலரும் இப்பணி தரணியில் ஆற்றிட
என்பின் ஒருவரும் இலரே எனமனம் 25
துன்பின் ஆழ்ந்து துவளுங் காலை
அந்நலி வகற்றிட ஆயிழை வந்தனள்;
என்னினும் மேம்பட ஏற்றமுற் றிலங்குவள்,
பைந்தமிழ் இசைத்தொழில் பரம்பரை அறாஅது;
பைந்தொடி நெடுநாள் வாழிய பெரிதென 30
நெஞ்சொடு வாழ்த்தி நெடிதுவந் தனளே;
பூங்கொடி இசையரங்கேறுதல்
பாவை ஏறிய பாட்டரங் கனைத்தும்
நாவை மீறிய நற்புகழ் எய்தினள்;
கேட்டார்ப் பிணித்துக் கேளார் தாமும்
வேட்ப இசைக்கும் வியத்தகு குரலும், 35
பொருளொடு புணர்த்துப் புந்தியிற் படியத்
தெருள்தரச் சுவையொடு செப்பும் முறையும்,
உயர்த்தும் தாழ்த்தும் விரித்தும் சுருக்கியும்
வியக்கும் முறையாற் பண்தரு விறலும்,
தாளமும் இசையும் தவறா வகையில் 40
காலமும் இடமும் கலையா நிலையில்
இணைந்தும் பிணைந்தும் இசைக்கும் திறனும்,
குழைந்து பயன்தரு கொள்கையும் கலந்து
விழைந்த மாந்தர் வியந்திடப் பாடி
இசைப்பணி புரிந்தனள் எழில்வளர் பூங்கொடி; 45
—————————————————————
அறாஅது – அற்றுப்போகாது, பிணித்து – கவர்ந்து, கேளார் – கேளாதவர் (பகைவர்), வேட்ப – விரும்ப.
++
யாப்பியல் பயில்கென எழிலி கூறல்
நசைத்தமிழ் இசைத்திறம் நன்கறி வுறுத்திய
எழிலி மீண்டும் இளையவட் கூஉய்க்
`கழிமிகு புலமை பெற்றனை காரிகை!
பாடல் யாக்கும் பாங்கும் கசடற
நாடிநீ பயிலுதல் நயந்தனென் செல்வி! 50
கவிதை குவிதல் வேண்டும்
யாண்டும் கவிதை யாத்திட முனைவோர்
வேண்டு மளவில் விரிந்திடல் கண்டோம்;
ஆயினும் சிலரே அறிவுடைப் புலவோர்;
தாயினும் மேலாம் தமிழ்மொழி ஓங்கிட
நவையறு கவிதை குவிந்திடல் வேண்டும்; 55
கல்லாக் கவிஞர்
கவியெனும் பெயரால் கற்பனை செய்து
புனைவோர் அனைவரும் புலவோர் அல்லர்,
துணைசெயும் யாப்பும் தொட்டவர் அல்லர்,
எழுத்தும் சொல்லும் பழுத்தவர் அல்லர்,
முழுக்கப் பொருளும் முடித்தவர் அல்லர், 60
பழுதிலா அணியும் படித்தவர் அல்லர்,
ஐவகை இலக்கணம் அனைத்தும் இன்றிச்
செய்யுள் எழுதி உய்வோர் பலரே!
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment