ரு. தமிழ் வளர்ச்சிக்கு அரசு செய்யவேண்டியன-புலவர் வி.பொ.பழனிவேலனார்
(௪. திருத்தமாய்ப் பேசுங்கள்!–வி.பொ.பழனிவேலனார், தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
ரு. தமிழ் வளர்ச்சிக்கு அரசு செய்யவேண்டியன
இன்றைய தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்கென செய்து வரும் பணிகள் பலவாகும். தஞ்சையில் தொடங்கவிருக்கும் தமிழ்ப்பல்கலைக்கழகம் அவற்றிற்கு முத்தாய்ப்பு வைத்தது போன்றதாகும். ஆயினும், நடைமுறையில் சில வழுக்களும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பல தமிழ்க்கல்லூரிகள் உள்ளன. ஆண்டுதோறும் தமிழ்ப்புலமை பெற்று வெளியேறுகின்றனர். பலர் தமிழாசிரியர் பயிற்சியும் பெறுகின்றனர். தமிழ் பயின்று, தமிழாசிரியர் பயிற்சியும் முடித்த பல்லாயிரவர், பணியின்றி வாடுகின்றனர். ஆனால், அஞ்சல்வழியும், தனியேயும் பலர் படித்துத் தமிழாசிரியராகி விடுகின்றனர். தமிழ்க் கல்லூரிகளில் சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றவர்கட்கு வேலை கிடைக்கவில்லை.
காட்டாக, இந்தக் கல்வியாண்டில் 500 தமிழாசிரியர்கட்கு வேலை வாய்ப்பு அளிப்பதாக அரசு அறிவித்திருந்தது. கல்லூரியில் படித்தவர் 100 பெயர்க்குக் கூட இடம் கிடைக்கவில்லை. பணிகளிலிருந்து கொண்டே அஞ்சல் வழியிலும், தனிப்பட்ட முறையிலும் படித்தவர்கட்கே அவ்விடங்கள் கிடைத்துள்ளன. அவர்கள் முன்னர்ப் பணியாற்றிய இடங்கள் யார்க்குக் கிடைத்தன? இடைநிலை ஆசிரியர், ஓவிய ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கைத்தொழில் ஆசிரியர் ஆகியோருக்கே கிடைத்தன.
உயர்ந்த ஊதியம் கிடைப்பதால், குறுக்கு வழிகளில் தமிழ் பயின்று, தமிழாசிரியராகிவிடுகின்றனர். கல்லூரிகளில் பயின்ற பலர்க்குப் பணிகளும் கிடைப்பதில்லை; அகவையும்
குறியளவைக் கடந்துவிடுகின்றது; என்று அவர்க்குப் பணி கிட்டும்?
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ‘தேறிய ஆண்டுக் கணக்கின்படி பணியளிக்கின்றோம்’ என்கின்றனர். ஆனால், முன்னால் தேறிய பலரிருக்கப் பின்னால் தேறியவர் பணியிலிருக்கின்றனரே! அதெங்ஙனம்? என்பது எமக்குப் புலனாகவில்லை.
இன்று தமிழ்நாட்டில் தமிழின் நிலைமை எவ்வாறுளது? தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்களின் பெயர்கள் தமிழில் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் பெயர்களில் 99 விழுக்காடு தமிழில் இல்லை. தமிழ்நாட்டிலுள்ள கடைகளின் பெயர்கள் பல தமிழாக இல்லை. பிற தொழில் நிறுவனங்களின் பெயர்களும் தமிழில் இடப்படவில்லை. அரசுப் பணிமனைகளில் எல்லாத் துறைகளிலும் தமிழ் வழக்கிற்கு வரவில்லை. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் – தொடக்கப்பள்ளி முதல் மேனிலைப்பள்ளி முடிய – பயிலும் மாணாக்கர், மாணாக்கியர் பலர்க்குத் தமிழ் என்று கூடச் சொல்லத் தெரியவில்லை. தமில் என்றே செப்புகின்றனர்.
எனவே, தமிழ்நாட்டில் தமிழ், களிநடம் புரிய வேண்டுமாயின், தமிழ்ப்புலமை பெற்றவர்களையே அனைத்து அரசுப் பணிமனைகளிலும் வேலைக்கமர்த்தல் வேண்டும். தொடக்கப்பள்ளி ஒவ்வொன்றிற்கும் ஒரு தமிழாசிரியர் அமர்த்தம் செய்தல் வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள எந்த நிறுவனமாயினும், முதலில் தமிழில் பெயர் எழுதி, அடுத்தபடி வேற்று மொழியில் எழுதுமாறு ஆணையிடல் வேண்டும்.
தமிழ்நாட்டு அரசுப்பணிமனைகள் அனைத்திலும் எல்லா நடவடிக்கைகளும் தமிழிலேயே நடைபெறல் வேண்டும் என்று வற்புறுத்தி ஆவன செய்தல் வேண்டும். தமிழ்நாட்டில் வாழும் மக்கள் யாவரும் தம் பெயர்களைத் தமிழில்தான் இடவேண்டுமென்றும், வேற்று மொழியிலுள்ள தமிழ்நாட்டு ஊர்ப் பெயர்களையெல்லாம் தமிழாக்க வேண்டுமென்றும் கட்டளையிடல் வேண்டும்.
தமிழ்ப்பற்றும், தூய தமிழறிவும், ஆங்கில அறிவும் உள்ள ஆராய்ச்சி அறிஞர்கள் குழு ஒன்று அமைத்து, வேற்றுமொழிச் சொற்களையெல்லாம் தமிழாக்கம் செய்தல் வேண்டும். தமிழ்க் கல்லூரிகளில் சேர்ந்து படித்தவர்கட்கே தமிழாசிரியர் பணி அளித்தல் வேண்டும். அஞ்சல்வழியும், தனியாகவும் தமிழ் படித்தவர்கட்குத் தமிழாசிரியர் பணி தவிர்த்த பிற பணிகள் அளிக்கப்படல் வேண்டும். எல்லா அரசுத் திணைக் களங்களிலும் தமிழ் நடைமுறையில் நல்ல முறையில் கையாளப்படுகின்றனவா? என்று கண்காணிக்க நல்ல தமிழறிவுள்ள – தமிழ்ப்பற்றுள்ள சிலரையே அமர்த்தல் வேண்டும்.
தமிழாசிரியர் வேலைக்குப் படித்துள்ள – படிக்கின்ற – அனைவர்க்கும் தமிழ்நாட்டில் தவறாது பணியமர்த்தம் அளித்தல் வேண்டும். தமிழ்வழிப் படித்துப் பட்டம் பெற்றவர்கட்குத் தமிழகத்து அரசுப் பணிகளில் முதன்மையிடம் அளித்தல் வேண்டும். இங்ஙனம் செய்தால்தான் தமிழ்நாட்டில் தமிழ் வளம்பெற வாய்ப்புண்டாகும்.
(நன்றி : செந்தமிழ்ச்செல்வி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
Comments
Post a Comment