இலக்குவனார் திருக்குறள் எளிய பொழிப்புரை : சிறப்புகள்: குமரிச்செழியன்எ
இலக்குவனார் திருக்குறள் எளிய பொழிப்புரை : சிறப்புகள்
இலக்கியங்கள் என்பவை மக்களின் வாழ்க்கை இலக்குகளை உரைப்பவை. உலகில் எண்ணற்ற இலக்கியங்கள் பல்வேறு மொழிகளிலும் உள்ளன என்றாலும் உலகத்தொன்மொழியாகிய தமிழ்மொழிக்குத் தனியிடம் உள்ளது. தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களிலும் திருக்குறளுக்குத் தனியிடம் உள்ளது. உலக மக்களின் வாழ்க்கை நெறிகளைப் பகுத்தும் தொகுத்தும் வழங்கும் நூல் திருக்குறள். உலகில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பெற்ற ஒரே நூல் திருக்குறள். உலக மக்கள் அனைவராலும் போற்றப்பட்டும் உரிமை கொண்டாடப்பட்டும் வருகின்ற ஒப்புயர்வற்ற உயர்ந்த நூல்.
திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூல். தமிழ்வாழ்வே திருக்குறள். திருக்குறளே தமிழர் வாழ்வு. உள்ளதை உள்ளபடியே எடுத்துரைக்கும் உண்மை நூல். தொன்மையும் எதிர்மையும் ஒருங்கே காட்டும் காலக் கண்ணாடி. தமிழ் மக்களின் வாழ்க்கைச் சட்டம். மக்களுக்கு திருவள்ளுவர் தெளித்து வைத்த பாதுகாப்புப்படை.
திருக்குறளுக்கு முதலில் உரைகண்டவராக அறியப்படுபவர் மணக்குடவர். அவர் உரை பொழிப்புரையாக அமைந்தது. எனவே அவர் திருக்குறள் மொழிப்புரையின் தந்தையாவார். அவருக்குப் பின்னால் வந்த பரிமேலழகர் பதவுரையும் பொழிப்புரையும் வரைந்தார். எனவே அவரைத் திருக்குறள் பதவுரையின் தந்தை என்றனர்.
முதலில் அச்சேறியது பரிமேலழகர் உரையே. அது பரவலாகவும் படிக்கப்பட்டுவந்தது. அதனைப் புரிந்து கொள்வதில் சிரமங்கள் இருந்தன. மேலும் அவருடைய உரை வைதிகச் சார்புடையதாகவும் இருந்தது. இந்நிலையில் எளிமையாகவும் சமயச்சார்பின்றியும் உரைகள் காணும் முயற்சியில் பல உரைகள் எழுந்தன. பரிமேலழகர் உரையைத் தழுவியே பிற்காலத்தில் பல உரையாசிரியர்கள் தோன்றி பல தெளிவுரைகளை வழங்கினர்.
உரையாசிரியர்
பலராலும் பின்பற்றப்பட்டுவரும் பரிமேலழகர் உரையையே தழுவிப் பலரும் உரைவரைந்தனர். புத்தம்புதுரை, பகுத்தறிவு உரை, கவிதை உரை எனப் பல நிலைகளில் அமைந்துள்ளன. பேராசிரியர் சி. இலக்குவனார் மணக்குடவரைப் போல பொழிப்புரை மட்டுமே வரைந்துள்ளார்.
பேராசிரியர் சி.இலக்குவனார் தனித்தமிழ்ப்பற்றுடன் எளிமையாகப் பொழிப்புரை வரைந்துள்ளார். அவர் நாகர்கோயில் தெ.தி இந்துக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபோது திருவள்ளுவர் திருவிழாவை நடத்தினார். யானையின் மீது திருவள்ளுவர் படத்தை ஏற்றி மக்களிடையே மாபெரும் ஊர்வலம் நடத்தினார்.
புதுக்கோட்டையில் திருக்குறள் கழகம் அமைத்தார். குறள்நெறி என்னும் இதழை நடத்தினார். விடுமுறை நாட்களில் குறள் வகுப்புகள் நடத்தினார். ஊர் ஊராகச் சென்று திருக்குறள் அதிகாரங்களை விளக்கிச் சொற்பொழிவுகள் ஆற்றினார். தமிழ்மொழிக்காப்புக்காகப் போராடிய அவரை மொழிப்போர் தந்தை என்று அழைத்தனர் அவருடைய திருக்குறள் உரைச் சிறப்பைக் காண்பதே இக்கட்டுரை.
உரை அமைப்பு முறை
அதிகாரத் தலைப்புகள் பரிமேலழகரையொட்டியே அமைந்துள்ளன. குறள் அதற்கான பொழிப்புரை என்ற வகையிலே அமைந்துள்ளது. தேவைப்படும் இடங்களில் அடைப்புக்குறிக்குள் சொற்கள், விளக்கங்கள், மாற்று உரை என அமைக்கப்பட்டுள்ளன.
(எ.டு) குறள் எண் 1,3,234,239,413,520,504,521,523,562,655,811,835,1152,1289.
உரைகள் பொதுவாகக் குறுகியதாக இருந்தாலும் சில குறட்பாக்களுக்கு விளக்கமாக எழுதியிருப்பதையும் காணலாம்.
(எ.டு) குறள்கள் 59,141,412, 671,516, 1107,1155,1190,1316.
திருக்குறளில் ஒன்பது இயல்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் முடியும்போது அந்தப் பெயரைச் சொல்லி ‘இல்லறவியல் முற்றும்’ என்பதைப் போல முடிவு சொல்லி அடுத்த இயல் தொடங்கப்பட்டுள்ளது. இயல்முற்றும் என்று சொல்லி, பால்தொடக்கம் சொல்லி இயல் தொடக்கமும் இடம்பெறக் காணலாம்.
பொருள் கொள்ளும் முறை
புராண கருத்தாக்கங்களை அப்படியே எடுத்துக்காட்டுகின்றார்.
(எ.டு) 1.தாமரைக் கண்ணான் உலகு (குறள்.1103)
என்பதற்கு தாமரைப் போன்ற கண்களை யுடைய திருமாலின் உலகம் என்றே பொருள் கொள்கின்றார்.
2.தெய்வம் மடிதற்றுத் தான்முந்துறும் (குறள்.1023)
என்னும் தொடருக்குத் தெய்வம் தனது ஆடையை இறுகக் கட்டிக்கொண்டு உதவுவதற்கு முன்னே நிற்கும் என்றே பொருள் கொள்கின்றார்.
3.”மிக நலம் பெற்றாள் தமியள் முத்தற்று” (குறள்.1007)
என்னும் தொடருக்கு “அழகினைப் பெற்றாள் ஒருத்தி தமியளாய் ‘முதிர்ந்தாற் போலும்’ என்று மணக்குடவர் உரைகொள்ள, அதற்கு ‘மிகுந்த அழகினை உடையாள் ஒருத்தி கணவனில்லாமல் தனியே மூத்த தன்மைத்து’ என்று இலக்குவனார் உரை காண்கின்றார். இங்குக் ‘கணவன் இல்லாமல்’ என்னும் பொருளை இணைத்திருப்பதைக் காண்கிறோம். இது உரை மாற்றமாகக் காணப்படுகிறது. திருமணம் ஆகிக் கணவன் இல்லாமல் மூப்படைந்தவளா என்ற ஐயத்தைத் தருகிறது.
உரை வேறுபாடு
உரைகளில் சிற்சில வேறுபாடுகள் இருக்கின்றன. சான்றாகச் சிலவற்றைக் காணலாம்.
(எ.டு) 1.கடவுள் வாழ்த்தில் இடம்பெறும் “மலர்மிசை ஏகினான்” (குறள்.3)
என்னும் தொடருக்கு மலர்மேல் நடந்தான் என்று பலரும் உரை கொள்ள இவர் “மனமாகிய மலர்மீது சென்று பொருந்தி இருப்பவனாகிய கடவுள்” என்று உரை கொண்டுள்ளதைக் காண்கிறோம்.
2.மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று (குறள்.941)
இக்குறட்பாவில் வளிமுதலா எண்ணிய மூன்று என்பதற்குக் காற்று முதலாக எண்ணபட்ட முன்று என்பர். மூன்று என்பதற்கு வாதம் பித்தம் சிலேட்டுமம் (கபம் கோழை) என்றுரைக்க, இவ்வுரையாசிரியரோ காற்று நீர் உணவு என்று விளக்கம் தருகிறார்.
3.மயிர் நீப்பின் வாழாக் கவரிமா (குறள்.964)
இக்குறளில் இடம்பெறும் கவரிமா என்பதைக் கவரிமான் என்றே குறிப்பிட்டுள்ளார். புலவர் குழந்தையும் மான் என்றே குறிப்பிட்டுள்ளார். ஆனால் பல உரையாசிரியர்களும் கவரிமா என்றே பொருள் கொண்டுள்ளனர். மா என்பது மான் இல்லை என்பது பலருடைய கருத்து. மா என்பது இமயமலை பனிநிலத்தில் வாழ்வது. மான் என்பது நாட்டுப்புறக் காடுகளில் வாழ்வது.
4.வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம் (குறள்.85)
இக்குறளில் இடம்பெற்றுள்ள ‘வித்தும் இடல் வேண்டும் கொல்லோ’ என்பதற்குத் “தன் வயலுக்கு விதை தெளிக்க மாட்டான், விதைக்கென வைக்கப்பட்டுள்ளதையும் விருந்தினருக்கெனச் செலவழிப்பான்” என்னும் உரைவிளக்கம் ஆராயத் தக்கதாக உள்ளது.
5.ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு (குறள்.773)
ஊராண்மை என்பதற்குப் “பகைவர்க்குக் குறைபாடு ஏற்படுமானால் இரங்கி அவருக்கு உதவி செய்வது ஆண்மையின்மிகுதி” என்றுரைப்பது சிந்திக்க வைக்கிறது.
6. கடலைச் செறா அய்வாழிய நெஞ்சு (குறள்.1200)
“கடலைத் தூர்ப்பாயாயின்” என்று மணக்குடவர் கொண்டுள்ளார். பிற உரையாசிரியர்கள் பலரும் கடலைத் தூர்த்தல் என்னும் பொருளில்கொள்ள இவ்வுரையாசிரியர் “துன்பம் செய்கின்ற கடல்” எனக் கூறியிருப்பது சிந்திக்கத் தக்கதாக உள்ளது.
சொல் விளக்கங்கள்
- சில சொற்களுக்குப் புதிய விளக்கங்கள் தந்திருப்பதை அவர் உரையில் காணலாம்.
(எ.டு) 1. தானமிழ்தம் என்று உணரற்பாற்று” (குறள்.11)
இத்தொடரில் இடம் பெற்றுள்ள அமிழ்தம் என்பதற்குச் “சாவா மருந்தாம் அமிழ்தம் என்று விளக்கம் தருகிறார்.
- “தடிந்தெழிலி தான் நல்கா தாகிவிடின்” (குறள்.17)
இத்தொடரில் இடம் பெற்றுள்ள தடிந்தெழிலி என்பதற்கு “மின்னி மழையானது பெய்யாவிடின்” என்று மணக்குடவர் உரைவரைந்து “கூறுப்படுத்து” என்று உரைப்பாரும் உளர் என்பர், இவ்வாசிரியரோ “கடல் நீர் ஆவியாக மாறி மழை பெய்யாவிட்டால்” என்று இக்கால அறிவியல் கண்கொண்டு உரைகண்டுள்ளார்.
- “பிற செய்யாமை செய்யாமை நன்று” (குறள்.247)
என்னும் தொடரில் செய்யாமை செய்யாமை என்பதற்குச் செய்தல் என மணக்குடவர் கூற, அவரைப் பினபற்றியே இவ்வுரையாசிரியரும் ‘வேறு அறங்களை செய்தல்’ என்று பொருள் கொள்கிறார்.
- தேர்ந்து செய்வஃதே முறை (குறள்.541)
என்னும் தொடருக்கு நடுவு நிலைமையைப் பொருந்தி தொடைவிடையால் உசாவித் தெளிந்து செய்வஃதே நல்ல ஆட்சி முறை என்று விளக்கம் தருகிறார்.
- தீயெச்சம் போலத் தெறும் (குறள்.674)
இத்தொடரில் எச்சம் என்பதற்கு ஒழிவுகள் என்னும் சொல்லாக்கத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
- நூலருள் நூல்வல்லன் ஆகுதல் (குறள்.683)
இத்தொடருக்கு எல்லா நூல்களையும் கற்றார் என மணக்குடவர் கூற, இவ்வுரையாசிரியர் ‘அரசியல் நூலைக் கற்று வல்லார்’ என்கின்றார்.
- பிரிவாற்றிப் பின்னிருந்து வாழ்வார் பலர் (குறள்.1160)
“பிரிவினால் உண்டாகும் துன்ப நோயைப் பொறுத்துத் தலைவர் சென்ற பிறகு இருந்து உயிர் வாழ்கின்றவர் பலராவர். ஆனால் என்னால் முடியாது” என்று நீண்ட விளக்கம் அளிப்பதுடன் “என்னால் முடியாது” என்பதை சேர்த்துத் தெளிவுபடுத்துவது கூடுதல் விளக்கமாக உள்ளது.
புதிய விளக்கம் அளித்தல்
சில குறட்பாக்களுக்குப் புதிய விளக்கங்கள் அளிப்பதைக் காணலாம்.
(எ.டு)
1.ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் (குறள். 560)
இக்குறட்பாவுக்குக் “காவலன் அறநெறியில் நாட்டைக் காக்க வில்லையேல் பசுக்கள் பால்தருவதில் குறைவு ஏற்படும். அறுவகைப்பட்ட தொழிலோரும் தம் தொழிலைச் செய்ய இயலாமல் மறந்துவிடுவர். (அறுதொழில் உழவு, நெய்தல், அமைச்சு, அரசு, கற்பித்தல், வாணிபம்) என்று விளக்கம் கொடுப்பதுப் புதுமையாக உள்ளது.
2. ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு (குறள்.1038)
“பயிருக்கு உழுதலினும் எருவிடுதல் நல்லது. களையெடுத்த பின்னர் அதனைக் காத்தல் நீர் விடுதலினும் நல்லது (உழுதல், எருப்போடுதல், களையெடுத்தல், நீர் பாய்ச்சுதல், காத்தல் என ஐந்தும் உழுதொழிலுக்கு இன்றியமையாதன)” என்று உழுதொழில் குறித்த விளக்கம் சிறப்பாக உள்ளது.
3.கடவுள் வாழ்த்தில் “எண்குணத்தான் தாளை வணங்காத்தலை”(குறள்.9) என்னும் தொடரில் இடம் பெறும் எண்குணத்தான் என்பதற்கு “மக்களால் நினைப்பதற்குரிய குணங்களையுடைய கடவுள்” என்று புதுப் பொருள் உரைத்தலைக் காணலாம்.
4.இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு (குறள்.951)
இக்குறட்பாவுக்கு “எண்ணம்,சொல்,செயல் மூன்றும் ஒத்திருக்கும் பண்பும் பழிபாவங்களைக் கண்டு அஞ்சுமியல்பும் ஒருசேர நற்குடியில் பிறந்தாரிடம் அல்லது பிறரிடம் இயற்கையாக இல்லை“ என்பது புதிய உரைப்போக்கு என்பதை அறியலாம்.
5. நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று (குறள்.1020) இக்குறட்பாவிற்கு “ மனத்தின் கண் நாண் இல்லாத மக்கள் உயிருடையார் போன்று நடமாடுகின்ற தன்மை மரத்தினால் செய்த பாவை இயந்திரக் கயிற்றினாலாய தன் ஆட்டத்தால் உயிருடைத்தாக மயங்கினால் போன்றதாகும்” என்று இக்கால மரபிற்குகேற்ப உரை கண்டிருப்பதை எண்ணலாம்.
6.ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதல் புணர்வு (குறள்.1155)
என்னும் குறட்பாவிற்கு “என்னைக் காப்பாற்ற எண்ணினால் என்னைத் தலைவியாக ஆளுவதற்குப் பொருந்தியவருடைய பிரிவைத் தடுக்கவும். தடுக்கப்படாமல் அவர் என்னைவிட்டு நீங்கினால் என் உயிரும் நீங்கிவிடும். பின்னர் அவரைக் கூடுதல் அரிது” என்று தெளிவுறுத்தல் காணலாம்.
சுருக்க உரை
பல குறட்பாக்களுக்கு மிகச்சுருக்கமான உரை தந்துள்ளார்.
(எ.டு)
1.தெய்வம் தொழாஅள்…………… மழை (குறள்.55)
கணவனிடம் காதல்மிக்க மனைவி என்றும் கணவனுக்குரிய கடமைகளைத் தவறாமல் செய்வார் என்பதாம்.
2.சினமென்னும்………………………… சுடும் (குறள்.306)
சினம் என்னும் நெருப்பு தன்னையே அன்றித் தனக்கு துணையாய் உள்ளவரையும் அழிக்கும்.
3.பிறப்பொக்கும்……………………….. வேற்றுமையான் (குறள்.972)
எல்லா உயிர்கட்கும் இறப்பு இயல்பு ஒக்கும். செய்யப்படுகின்ற தொழில்களின் வேறுபாட்டால் சிறப்பு இயல்புகள் ஒவ்வா.
4.தொடிற்சுடின்………………………………………… தீ (குறள்.1159)
நெருப்பானது தொட்டால் சுடுமேயன்றிக் காதல் நோய்போல தன்னை நீங்கினால் சுடுதல் கூடுமோ?
5.புலத்தலிற்……………………………………………….. அகத்து (குறள்.1323)
நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலரிடம் புலத்தல் போல நமக்கு இன்பம் தருகின்ற தேவர்நாடு உண்டோ! இல்லை.
6.தொடிப்புழுதி………………………………… சாலப்படும் (குறள்.1037)
“பலப்புழுதி கஃசு ஆகும் வண்ணம் காயவிட்டால் பிடியளவு எருவும் வேண்டாமல் மிகுதியாக விளையும்” என்று குறளுரை கண்டிருப்பது சுருக்கமாகவும் செறிவாகவும் இருக்கிறது.
உரையின் போக்கு
குறள்களுக்கான உரைகள் சுருக்கமாகவும் செறிவாகவும் உள்ளன. சில குறட்பாக்களுக்கு தெளிவான விளக்கவுரை வழங்கப்பட்டுள்ளன. சில குறட்பாக்களுக்கு அடைப்புக் குறிகளுக்குள் மேல்விளக்கங்களும் மாற்று உரைகளும் வழங்கப்பட்டுள்ளன. சில குறட்பாக்களுக்குப் புதிய விளக்கங்களும் புதிய உரைகளும் இடம்பெற்றுள்ளன. சில குறட்பாக்களில் இடம்பெறும் தொகைச்சொற்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன. ஆய்வாளர்கள் நுட்பமாகக் கூர்ந்து ஆய்வு செய்யும் வண்ணம் பல நுட்பங்களைக் கொண்டுள்ளன. சில குறட்பாக்களுக்கு மரபில் இருந்து மாறாமல் உரைகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்கால கண்ணோட்டத்துடன் மரபும், புதுமையும், அறிவும், உணர்வும் கலந்த நடையில் உரைப்போக்கு அமைந்துள்ளது. முற்போக்கு உரைகளுடன் வைத்து எண்ணத்தக்கதாக உள்ளது. பட்டறிவில் தொட்டெழுதப்பட்டுள்ள எளிய உரையாக அமைந்துள்ளது, திருக்குறள் மூலமும் உரையும் என்னும் இந்த நூல்.
முடிவுரை
பேராசிரியர் சி.இலக்குவனார் உரைவளம் என்பது காலத்தால் நிலைத்திருப்பது. மரபும், புதுமையும் கைகோத்து நடப்பது, சுருக்கமும், பெருக்கமும், தெளிவையும், வாசகர் நலத்தையும் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. பிற்கால உரையாசிரியர்களின் வரிசையில் சிறந்த உரைகள் வழங்கிய சிறப்புக்குரியவர்களுள் ஒருவராக இவ்வுரையாசிரியர் விளங்குகிறார். எதிர்கால உரையாசிரியர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் வழிகாட்டியாக அமையதக்க சிறந்த உரை என்பதில் ஐயமில்லை
***********************************
முதன்மை நூல்
இலக்குவனார் திருக்குறள் மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை,2019.
துணை நூற்கள்
1.குமரிச்செழியன்,கவிமாமணி,திருக்குறள் தெளிவுரை,
சாரதா பதிப்பகம், சென்னை (2018)
2.புலவர் குழந்தையுரை, சாரதா பதிப்பகம், சென்னை (2014)
3.மணக்குடவர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை (2023)
4.மதுரை இளங்குமரனார், திருக்குறள் வாழ்வியலுரை, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை (1999)
5.மோகனராசு, பேராசிரியர் முனைவர். கு., திருக்குறள் மக்கள் உரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை (2007)
6.மோகனராசு, பேராசிரியர் முனைவர்.கு., திருக்குறள் உரை ஆய்வுத் தெளிவுகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை ( 2016)
ஆய்வறிஞர் முனைஞர் குமரிச்செழியன்
பல்வேறு திருக்குறள் அமைப்புகளின் பொறுப்பாளர்
வில்லிவாக்கம், சென்னை, 600049 : பேசி 9444558848
Comments
Post a Comment