அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 65-67
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 62-64-தொடர்ச்சி)
அறிவுக்கதைகள் நூறு
65. அமைச்சர் பதவி
தன் உடன் பிறந்தவனுக்கு மந்திரி பதவி கொடுக்கும் படி அரசனை வற்புறுத்திக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. அரசனும், அரண்மனையில் இருந்தபடியே தன் மைத்துனரை வரச்சொல்லி உரையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது வீதியில் ஏதோ வண்டிச் சத்தம் கேட்கவே, அரசன் ஏதோ யோசனை செய்து, உடனே தன் மைத்துனனிடம், ‘அது என்ன வண்டி? விசாரித்துவா’ என்று சொல்லி அனுப்பினான்.
மைத்துனனும் ஒடிப்போய் விசாரித்து வந்து, அரசனிடம் ‘நெல் வண்டி’ என்று கூறினான். அரசன் ‘என்ன நெல்?’ என்று கேட்க, உடனே வெளியே ஒடிப் போய்வந்து ‘சம்பா நெல்’ என்று கூற, அரசன் “எங்கே போகிறது?” என்று கேட்டான். மீண்டும் வெளியே வண்டியின் பின்னால் ஒடிப்போய்க் கேட்டுவந்து ‘பக்கத்து ஊர் சந்தைக்குப் போகிறது’ என்றான். அரசன் என்ன விலை?’ என்றான். மீண்டும் மைத்துனன் வெகுதூரம் ஓடிவந்து வண்டியை விசாரித்து, “மூட்டை 7 உரூபாய்” என்று கூறினான். அரசன் ‘எவ்வளவு மூட்டைகள் வந்துள்ளன?” என்று கேட்டான். அதை விசாரிக்கப் போன மைத்துனன் மிகவும் களைத்துப்போய் திரும்பிவந்து கொண்டிருந்தான்.
சற்று நேரம் ஆகியும் மைத்துனன் திரும்பி வராததை அறிந்த அரசன், தெருவில் மீண்டும் வேறு வண்டிச்சத்தம் கேட்டதும், தேவியின் முன்னிலையிலேயே, மந்திரி பதவிக்காகத் தான் வரவழைத்திருந்த ஒருவனை அழைத்து, “வீதியில் என்ன வண்டி? விசாரித்து வா” என்றான்.
அவன் திரும்பி வந்து அரசனிடம், “வண்டியில் கேழ் வரகு, ஒரு வண்டியில் பத்து மூட்டை இருக்கிறது. மொத்தம் ஐந்து வண்டிகள். ஏழாவது கல்லில் உள்ள சந்தைக்கு விற்பனைக்குப் போகின்றன. மூட்டை 6 உரூபாய் என்று சொல்கின்றனர். என் மதிப்பு 5 உரூபாய், மன்னரின் கட்டளை என்ன?” என்று சொல்லி நின்றான்,
அரசன், உடனே தன் தேவியைப் பார்த்து, “எங்கே மைத்துனரை இன்னும் காணோம்? இப்போது சொல்; யாரை அமைச்சராக்கலாம்?” என்று கேட்க, புதில் ஒன்றும் கூற முடியாமல் தலைகுனிந்து நின்றாள் பெருந்தேவி.
————-
66. பல்லக்கும் கன்றுக்குட்டியும்
ஒரு மடத்திற்குச் சொந்தமான கன்றுக்குட்டியைக் காணாமல் தவித்த அந்த மடாதிபதி, தம் பல்லக்குத் தூக்கும் ஆட்கள் நால்வரையும் அழைத்து, கன்றுக் குட்டியைத் தேடி வரும்படி ஏவினார் அவர்கள் நால்வருமாகச் சேர்ந்து,
“சாமி, பல்லக்குத் தூக்குவதுதான் எங்கள் வேலை; கன்றுக்குட்டியைத் தேடுவது எங்கள் வேலையல்ல” என்று சொல்லிவிட்டனர்,
உடனே மடாதிபதி, “சரி, நானே கன்றுக்குட்டியைத் தேடப் புறப்படுகிறேன். பல்லக்குத் தயாராகட்டும்” என்றார். வெற்றிக் களிப்புடன் பல்லக்கைக் கொண்டு வந்தனர்.
மடாதிபதி அதில் ஏறி அமர்ந்து, ஊர் முழுவதும் பெரிய சாலைகள் எல்லாம் அலைந்து, பிறகு, சந்து பொந்து மூலை முடுக்குகளில் எல்லாம் பல்லக்கைக் கொண்டுபோகச் சொன்னார். மிகக் குறுகிய, நெருக்கடியான சந்துகளில் எல்லாம் போகமுடியாமல் துன்பப் பட்ட அந்த நால்வரும், பல்லக்கைக் கீழே இறக்கி வைத்து,
“சாமி, தாங்கள் இங்கேயே இருங்கள். நாங்களே போய்க் கன்றுக்குட்டியைத் தேடி வருகிறோம்” என்றனர்.
உடனே மடாதிபதி புன்னகையுடன் அவர்களைப் பார்த்து, “இவ்வளவு தூரம் நீங்கள் பல்லக்கையும், என்னையும் சுமந்துவந்து இங்கே இறக்கிவிட்டு, இப்போது தேடுவதை அப்போதே தேடியிருக்கலாமே!” என்றார்.
அவர்கள் வெட்கித் தலைகுனிந்து கன்றைத் தேடப் புறப்பட்டனர்.
இப்படிப்பட்ட வேலையாட்களும் உண்டு.
———–
67. உள்ளுர் நிலைமை
தன்னை வந்து பார்க்கும்படி அந்த ஊர் பஞ்சாயத்து தலைவனுக்குக் கட்டளையிட்டிருந்தார் மாவட்ட ஆட்சியாளர். அவர் போய்ப் பார்க்கவில்லை. கடுமையான கோபத்துடன் அப் பஞ்சாயத்துக் கழக(போர்டு)த் தலைவரை அழைத்துவரச் செய்து, ‘ஏன் வரவில்லை’ எனக் காரணம் கேட்டார் மாவட்ட ஆட்சியாளர்.
அதற்கு அவர் சொன்னார். “நான் எப்படி வரமுடியும். எங்க ஊரில் பொறியாளர், தான் கட்டிய வீடு இடிந்து விட்டதே என்று அழுகிறார். மருத்துவருக்கே காய்ச்சல் வந்து என்ன செய்வது என்று கதறுகிறார்.
“இதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது, பள்ளிக்கூட வாத்தியார் தம் பிள்ளைகள் மூவருமே வகுப்பில் தேறவில்லையே. நான் என்னசெய்வேன் என்று என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுகிறார். ஊர் இப்படி இருக்கிறதனாலே நான் வரமுடியவில்லை. என்னை மன்னிக்கனும் எசமான்” என்று பணிவோடு வேண்டிக் கொண்டார்.
அதற்கு ஆட்சியாளர் கேட்டார். இஃது உங்கள் ஊரில் மட்டும்தானா நடக்கிறது; நாட்டில் எல்லா இடங்களிலும் இப்படிதானே நடைபெறுகிறது. இதற்கா நீங்கள் வராமல் இருக்கலாமா? சரி நீங்கள்தான் வரவில்லையே, இதற்காக அங்கிருந்துகொண்டு நீங்க என்னதான் செய்தீர்கள்? அதையாவது சொல்லுங்கள்” என்றார் ஆட்சியாளர். என்ன சொல்லுவார் பஞ்சாயத்துத் தலைவர்.
இது நம் நாட்டின் நிலை என்றா சொல்லுவார்?
————
(தொடரும்)
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்,
அறிவுக்கதைகள் நூறு
Comments
Post a Comment