கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 81 : தமிழைப் பழிக்க விடுவதோ!
09 January 2025 No Comment
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 80 : 17. எழிலிபாற் பயின்ற காதை – தொடர்ச்சி)
பூங்கொடி
எழிலிபாற் பயின்ற காதை
தமிழைப் பழிக்க விடுவதோ!
இவர்தம் பாடல் எழிலுற அச்சுச்
சுவடி வடிவில் சுற்றுதல் கண்டோம்; 65
விடுத்தஇச் சுவடிகள் அடுத்திவண் வருமவர்
படித்தவர் விழியிற் படுமேல் நம்மைப்
பழிப்பவர் ஆவர்; பைந்தமிழ் வளர்ச்சி
இழித்துரை கூறுமா றிருந்ததே என்பர்;
செழித்துயர் தமிழைப் பழித்திட நாமே 70
விடுத்திடல் நன்றோ? விளம்புதி மகளே!
நிலைத்திடுங் கவிதை தொடுத்திடுங் காப்பியம்
விளைத்திடல் வேண்டும் பலப்பல இன்றே,
அருமைத் தமிழ்க்கிஃ தாக்கப் பணியாம்,
தரும்நமைத் தலைமுறை தலைமுறை வாழ்த்தும்; 75
போலிக் கவிதைகள்
போலிக் கவிஞர் புனைபவை புனைக!
வேலி யிடினும் விளைபவை விளையும்;
பயனும் பண்பும் பழுநிய நூல்கள்
வியனுற வெளிவர முயலுதல் வேண்டும்;
புதியநம் சுவடிமுன் போலிச் சுவடிகள் 80
கதிரோன் முன்னர்க் கைவிளக் காகும்;
நாளைய உலகம் நந்தமிழ் ஏத்தும்;
மன்னுபுகழ் நிறுவுக
பாளை விரிநகைப் பாவாய்! நின்பாற்
பல்வகைப் புலமை படிந்திடல் கண்டேன்;
நல்லிளம் பருவத்து நாலுந் தெரிந்தனை! 85
நால்வகைப் பாவும் நன்கனம் யாத்தல்
கைவரப் பெறுதியேல் கன்னிநீ பூண்டுள
செய்கைக் குறுதுணை சேர்க்கும், அவ்வினை
அரிவை நினைக்கும் அரியதொன் றன்று,
சிறிதின் முயலினும் தேர்ந்து தெளிகுவை; 90
மன்னா உலகத்து மன்னுதல் வேண்டின்
தன்புகழ் நிறுவிடத் தலைப்படல் வேண்டும்;
நின்னுளம் யாதென நிகழ்த்துதி’ என்னலும்;
—————————————————————
பழுநிய – நிறைந்த, மன்னா – நிலைபெறாத, மன்னுதல் – நிலைபெறல், நிகழ்த்துதி – சொல்லுவாய்.
+++
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Comments
Post a Comment