Skip to main content

அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 62-64

 

அறிவுக்கதைகள்நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 62-64


(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 59-61-தொடர்ச்சி)

அதிக வரி வாங்கி நாட்டு மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான் அந்நாட்டு அரசன். மக்கள் அனைவரும் ஒன்றுகூடித் தங்கள் மேல் கருணை காட்டுமாறு அரசனை மிகவும் மன்றாடி வேண்டினர்.

மறுநாள் அரசன் குடிமக்கள் அனைவரையும் அழைத்து, “தாங்கள் கோரிக்கைகளைப் பற்றிச் சிந்தித்தேன். இன்று முதல் நீங்கள் அனைவரும் வந்து, அரண்மனையிலிருந்து ஒரு மூட்டை நெல் எடுத்துக் கொண்டுபோக வேண்டும். ஒரு மூட்டை அரிசியாகத் திருப்பிக் கொண்டுவந்து கொடுத்துவிட வேண்டும். இது என்னுடைய உத்தரவு” என்றான்.

இதனால் மிக வருந்திய நாட்டு மக்கள் புலம்பவும், அரசனைத் திட்டவும் ஆரம்பித்தனர். இது அரசன் காதுக்கும் எட்டியது.

சிறிது காலம் கழித்து அரசன் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில், தான் குடிமக்களுக்குச் செய்த தவறுகளுக்கு வருந்தி, தன் மகனை அழைத்து, “நான் மக்களை மிகவும் வருத்தி வரிகளை வாங்கிக் கெட்ட பெயர் எடுத்தேன். நீ இனிமேல் அப்படி நடக்கக் கூடாது. எனக்கு நல்ல பெயர் வரும்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பலவாறு புத்திமதிகள் சொல்லி உயிர் துறந்தான்.

இளவரசன் ஆட்சிக்கு வந்ததும், குடிமக்களைக் கூட்டினான். “என் தந்தையின் வேண்டுகோளை நான் எப்படியாவது நிறைவேற்றியாக வேண்டும். ஆகவே என் மேல் வருத்தப்படாதீர்கள்” என்று சொல்லி, “நாளை முதல் குடிமக்கள் அரண்மனையிலிருந்து ஒரு மூட்டை உமி எடுத்துக்கொண்டு போய், அதற்குப் பதிலாக ஒரு மூட்டை அரிசி கொண்டுவந்து இங்குப் போடவேண்டும். இன்று முதல் இது புது உத்தரவு” என்று கூறினான்.

இது கேட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்து ஐயோ அந்தப் புண்ணியவானே தேவலையே! நெல் கொடுத்து அரிசி கேட்டான். இந்தப் பாவி உமியைக் கொடுத்து அரிசி கேட்கிறானே?” என்று இறந்த அரசனைப் புகழ்ந்து இளவரசனை இகழத் தொடங்கினர்.

இளவரசனும் நாம் தந்தையின் சொல்லை நிறை வேற்றிவிட்டோம் என்று மகிழத் தொடங்கினான்.
————

மழைக்காகப் பயந்து மரத்தடியில் ஒதுங்கி நின்றது ஒரு குரங்கு.

அப்போது அம் மரத்தில் கூடு கட்டிக்கொண்டு வாழ்ந்துவரும் தூக்கணாங் குருவி, குரங்கைப் பார்த்து, “அண்ணே, நீ உருவத்தில் மனிதனைப் போலவே இருக்கிறாயே, உன் கை கால்களை உபயோகித்து ஒரு நல்ல குடிசை உனக்காகக் கட்டிக் கொள்ளலாமே! அதைவிட்டு நீ ஏன் இப்படி மழையில் நனையவேண்டும்?” என்று கேட்டது.

அதைக் கேட்ட குரங்கு, உடனே ஆத்திரமடைந்து, குருவிக் கூண்டைப் பிய்த்து எறிந்து நாசமாக்கியது.

அதனால் வருந்திய குருவி, அரசனிடம் சென்று முறையிட்டு, தனக்கு நீதி வழங்கும்படி கேட்டது.

அரசனும் விசாரணைக்காக குரங்கை அரண்மனைக்கு அழைத்தான். குரங்கும் ஒரு பெரிய பலாப்பழத்தைத் தன் தலையில் தூக்கி வந்து, யாருக்கும் தெரியாமல் அரசனுக்குப் பின்னால் வைத்துவிட்டு, எதிரில் வந்து நின்றுகொண்டது.

மிகவும் பயபக்தியுடன் தன்னை வணங்கி நின்ற குரங்கைப் பார்த்து அரசன், “ஏ அற்பக் குரங்கே உனக்கு எவ்வளவு திமிர்! ஒரு சிறு பிராணி உனக்கு நல்ல புத்திமதி சொன்னால், அதற்காக இப்படியா பழி வாங்குவது?” என்று கேட்டான்.

அதற்குக் குரங்கு, “மகாராசா முன்னே பின்னே பார்த்துப் பேசுங்கள்” என்றது. அரசனும் திரும்பிப் பின்னால் பலாப்பழம் இருப்பதைக் கண்டான்.

உடனே அரசன் குருவியைப் பார்த்து. “ஏ அற்பக் குருவியே! உனக்கு என்ன திமிர் இருந்தால் குரங்குக்குப் போய் புத்தி சொல்வாய்? உன்னுடைய முட்டாள்தனத்திற்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். சரி, தொலையட்டும். இத்தோடு நீ ஒடிப்போ” என்று கூறி, குருவியை விரட்டிவிட்டான்.

எப்படி பலாப்பழம் செய்த வினை.
————

வெள்ளம் ஆற்றில் கரைபுரண்டு ஒடும்போது, அதில் அடித்துச் செல்லப்பட்ட நரி ஒன்று, “ஐயோ உலகம் போச்சு, உலகம் போச்சு’ என்று சத்தமிட்டுக் கொண்டே போனது.

கரையின் அருகிலிருந்த ஒரு குடியானவன் அது கேட்டு ‘ஐயோ, பாவம்’ என்று இரங்கி நீந்திப் போய் நரியைப் பிடித்துக் கரை சேர்த்துக் காப்பாற்றிய பிறகு கேட்டான். ‘உலகத்துக்கு என்ன ஆபத்து?” என்று.

அதற்கு நரி சொன்னது, ‘ஆமாம் நீ என்னைத் தூக்காவிட்டால் நான் இறந்திருப்பேன். எனக்கு உலகம் போச்சு அல்லவா? அதனால்தான் அப்படிக் கூவினேன்’ என்றது.

அதுகேட்ட குடியானவன். ஒரு தனிமனிதன் தன் நலம் கருதி எப்படிச் சமயத்திற்குத் தகுந்தாற்போல் பேசுவானோ, அப்படிப் பேசி தன் காரியத்தை சாதித்துக் கொண்டதே இந்தப் பொல்லாத நரி என்று மனதுக்குள் எண்ணி வியந்துகொண்டே சென்றான்.
————

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 6/6: பேராசிரியர் வெ.அரங்கராசன்