Skip to main content

௪. திருத்தமாய்ப் பேசுங்கள்!-புலவர் வி.பொ.பழனிவேலனார்

 




(௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்?-புலவர் வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி)

தமிழ்மொழி தோன்றிய காலம், மொழியறிஞர்களாலும் கணிக்கவியலாத புதிராயுள்ளது.  அஃது, உலக மொழிகட்கு முன்னோடியும், முதல் தாய்மொழியுமாகும்.  இத்தகு தமிழ்மொழி சேரசோழபாண்டிய அரசர்களால் சீராட்டிபாராட்டி வளர்க்கப் பெற்றதாகும்.  பாண்டியப் பேரரசு முத்தமிழ்க் கழகங்கள் மூன்று நிறுவிப் பேணியது.  மூவேந்தர் காலத்திற்குப் பின்னர் தமிழ் பல இடர்ப்பாடுகட்கு உள்ளாகியது.  தமிழ்நாடும் பலரது படையெடுப்புக்கு ஆளாகியது. 

தமிழ்நாட்டை வென்று ஆண்ட அரசர்கள் தம் மொழிசமயம்நாகரிகம்பண்பாடு முதலியவற்றையும் தமிழ்நாட்டில் பரவச் செய்தனர்.  அல்லாமலும்தம் நாட்டு மக்களையும் இங்கு குடியேற்றினர்.  அதனால்தமிழ் தன் செம்மைசீர்மை கெட்டு நின்றது.

பிறமொழிக் கலப்பு

அயலார் ஆட்சிக்குட்பட்ட தமிழகம் அவர்தம் மொழிகளையும் ஏற்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியது.  அப்பொழுது அம்மொழிச் சொற்கள் தமிழில் கலக்க வாய்ப்பு உண்டாயிற்று. ஏன்இன்று ஆங்கிலம் கலக்காமல் பேசுகிற அல்லது எழுதுகிற தமிழரைக் காண்பது அரிதாகி விட்டதை நாம் அறிவோம்.  எனவேஎந்தெந்த மொழிக்காரர் தமிழ்நாட்டை  ஆண்டார்களோ,  அந்தந்த  மொழிச் சொற்கள் தமிழில் கலந்து வழங்கத் தலைப்பட்டன.  சொல்வளம், பொருள்வளம்   மிக்க  தமிழுந்  தன்  கன்னிமை  கெடாது நிலைத்திருப்பதற்குக் காரணம் அதன் தனித்தியங்கும் தன்மையேயாகும். 

தேவையற்ற சொற்கள்

இன்றைய தமிழ் மக்கள் பேசும்போதுஇடையிடையே தேவையில்லாத,  பொருளற்ற சொற்களையும் சேர்த்துப் பேசும் பழக்கமுள்ளவர்களாக இருக்கின்றனர்.  எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் காண்போம். 

1.     நான் என்ன சொல்றேன்னாநீ வந்து இப்படிச் செய்வது வந்து சரியில்லைநீ வந்துட்டுஎன்ன நான் சொல்றது?, வந்து புரியுதா?

2.     அவர் வந்தாப்லேதம்பி சொன்னாப்லேநாலு மணியைப் போல வந்து கேட்டாப்ல.

இப்படிப் பயனில்லாத சொற்களை இடையில் இணைத்துப் பேசுவோர் இன்று மிகுதியாகி வருகின்றனர்.

இத்தகையோரை மனத்தில் கொண்டுதான் திருவள்ளுவர்,

           பயனில்சொல் பாராட்டுவானை மகனெனல்

           மக்கட் பதடி எனல் (எண் : 196)

   என்ற குறளை யாத்தாரோ?

இழிபொருளும் இன்பொருளும்

ஒரு காலத்தில் இழிந்த பொருளில் வழங்கப்பட்ட சொற்கள் இன்று  நல்ல  பொருளிலும்,  நல்ல  பொருளில்  வழங்கிய சொற்கள் இழிந்த பொருளிலும் வழங்குவதைக் காண்கின்றோம்.

களிப்பு என்னும் சொல் முன் கள்ளுண்டு மகிழ்வதைக் குறிக்கப் பயன்பட்டது.  ஆனால்இன்று மகிழ்ச்சியென்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. 

           ‘கள்ளுண்டு களித்தனர் களம்புகு மறவர்

                      (புறப்பொருள்வெண்பாமாலை)  என்ற அடி இதனை விளக்குகின்றது.  நாற்றம் என்னும் சொற்கு மணம் என்பது பொருள்.  இப்பொழுது நாற்றம் என்றால் எல்லோரும் மூக்கைப் பிடிப்பர்.  கெட்ட மணம் என்று பொருள் கொள்கின்றனர்.

           முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போல் பேதை

           நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு (எண் :1274)

என்ற குறளிலும்நாற்றமுரைக்கும் மலருண்மை என்று நானமணிக்கடிகையிலும்நாற்றம் என்ற சொல் நறுமணம் என்னும் பொருளில் எடுத்தாளப்பட்டிருப்பது இதற்குச் சான்றாகும்.  முன்புஉரியவன்உடையவன் எனப் பொருள்பட்ட கிழவன் என்ற சொல் இன்று முதியவன் எனும் பொருளில் வழங்குகிறது. 

           கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

           கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே

என்ற தொல்காப்பிய அகத்திணையியல் நூற்பாவிலும்,

           செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து

           இல்லாளின் ஊடி விடும் (எண் :1039)

என்ற திருக்குறளிலும் கிழவன் என்னும் சொல் உரியவன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதறிக.

பிழையான பலுக்கல்

சில தமிழ் எழுத்துகளையும், சொற்களையும் சிலர்க்குச் சரியாகப் பலுக்கக் கூடத் (உச்சரிக்கத்) தெரியவில்லை.  சிலர் ழகரத்தை லகரகமாகவும்யகரமாகவும்லகரத்தை ளகரமாகவும்ளகரத்தை லகரமாகவும்பலுக்குகின்றனர்.  பழக்கவழக்கம் என்பதைப் ‘பளக்க வளக்க’ மென்று சிலர் பலுக்குவதையும்கோழியைக் ‘கோளி’யென்றும்பள்ளத்தைப் ‘பல்லம்’ என்றும் உச்சரிப்பதையும் கேட்கின்றோம்.  சிலர் சொன்னேன் என்று சொல்வதற்குச் ‘சென்னேன்’ என்றும்கோழியை ‘கோயி’ என்றும் சொல்லுகின்றனர்.  இவற்றிற்குக் காரணம் என்ன? பொருள் உணர்ந்து  பேசாமையும், பலுக்கத் தெரியாமையுமேயாம்.

பிழையாக வழங்கும் சொற்கள்

பேச்சு வழக்கிலும், நூல் வழக்கிலும் பல தமிழ்ச்சொற்களைப் பொருளறியாமல் பிழையாகப் பேசுகின்றனர்;  எழுதுகின்றனர்.  அத்தகைய சொற்கள் நூற்றுக்குமேல் உள்ளன. 

முதலில் ஏழ்மை என்ற சொல்லைப் பார்ப்போம்.  ஏழ்மை என்றால்  ஏழு  என்றே  பொருள்.  ஏழ்  தெங்க  நாடு;  ஏழ் முன்பாலை நாடு என்னும் வழக்குகளைக் காண்க.  ஏழ் என்பதனொடு மை என்னும் பண்புப் பெயர் விகுதி சேர்த்து ஏழ்மை என்றாகிறது.  இச்சொல்லைத் தமிழறிஞர்களும்மேடைப்  பேச்சாளர்களும்    வறுமையென்னும்   பொருளில் பயன்படுத்துவது   மிகவும்   வியப்பாகவும்,  வேதனையாகவும் இருக்கிறது.  ஏழை என்ற சொற்கு வறியவன்.  அறிவிலான் எனப் பொருளாம். ‘ஏழை’ என்பதனுடன் ‘மை’ யைச் சேர்த்தால் ஏழைமை என்றாகும். இதன் பொருள் வறுமை, அறியாமை என்பனவாகும்.  ‘ஏழ்’ என்றாலும் ஏழ்மை என்றாலும் ஏழு என்றே பொருளாகும். 

அடுத்துக் கண்ட்ராவியைக் காண்போம்.  இதைக் ‘கண்ட் + ராவி’ எனப்பிரிக்கலாம்.  பார்த்து ராவுதல் எனப் பொருள்படும்.  ஆனால் அத் தொடரை எப்பொருளில் பயன்படுத்த வேண்டும்கண்ணை அராவுவது போன்ற துன்பம் தருவது என்ற பொருளிலன்றோ?  ஆம்அதன் சரியான வடிவம் கண்ணராவி என்பதாகும்.  ‘கண் + அராவி’ எனப் பிரித்தல் வேண்டும்.  இது எப்படி கண்ட்ராவி ஆயிற்று?  நல்ல பொருள் தர கண்ணராவி எனப் பயன்படுத்தலாம்?

காக்கைப்  பிடித்தலைக் காண்போம்.  காக்கைப் பிடித்தல் என்பதன் பொருள் வெளிப்படை.  ஆனால்எப்பொருளில் நீங்கள் பயன்படுத்துகின்றீர்கள்?  நயமாகப் பேசி ஒருவரைத் தன்வயமாக்கிக் காரியஞ்சாதித்தல் எனப் பொருள்பட வழங்குகின்றீர்கள்.  காக்கையைப் பிடிப்பதற்கும்இதற்கும் என்ன தொடர்புஆகையால்அத்தொடர்பு கால் கைப்  பிடித்தல்  என்றே  இருத்தல்  வேண்டும்.   இதனைப் பலுக்கத் தெரியாமலோ என்னவோ காக்கைப் பிடித்தலாக்கிவிட்டீர்கள்?  ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ (எண்:423) என்ற வள்ளுவன் வாய்மொழியின் பொருளுக்கேற்ப நடந்தால்பொருள் புரிந்திருக்கும்.

காலைப் பிடித்தாவதுகையைப் பிடித்துக் கெஞ்சியாவது தன்  காரியத்தை  நிறைவு  செய்து  கொள்ள முயல்வதையே கால்கைப் பிடித்தல் என்கிறோம்.  இப்பொழுது சொல்லுங்கள்.  சரியான வடிவம் காக்கைப் பிடித்தலா?  கால் கைப் பிடித்தலா?

அடுத்து அருகாமைக்கு வருவோம்.  அருகாமையைப் பகுத்தால் அருகு+ஆ+மை எனவரும் .  அருகு முதனிலை. மை இறுதி நிலை. ஆ எதிர்மறை இடைநிலைப் பொருள். அருகில் இல்லாதது.  அதாவது சேய்மையிலுள்ளது என்பதாம்.  ஆனால்நீங்கள் அருகில்அண்மையில் என்ற பொருளில் பயன்படுத்தும் அருகாமை என்ற சொல், அப்பொருளுக்கு எதிரான பொருளைத் தருகின்றது. ஆகையால் அருகமை, அருகில் என்றே பயன்படுத்துவீர்களாக. 

அடுத்து இருப்பது மானாவாரி. மானா என்ற சொல்லுக்குஅகர முதலி தரும் பொருள் பாட்டன் என்பது.  வாரி என்பதற்கு நீர்வருவாய்கடல் எனப்பொருள்.  எனவே மானாவாரி யின் திரண்ட பொருள் பாட்டன் நீர் என்பதும்பிறவுமாம்.  ஆனால்நீங்கள் மானாவாரியை வறண்ட நிலம்நீர்ப்பாய்ச்சல் இல்லாத நிலம் என்னும் பொருளில் பயன்படுத்துகின்றீர்கள்.  பொருந்துமாஅதன் உண்மையான உருவம் வானவாரி என்பதே வானம் – மழைவாரி- நீர்,  இதன் திரள் பொருளாவது  மழை நீரால்  விளையும் பொருள்,  நீர்ப்பாய்ச்சலில்லாத நிலப்பகுதி என்பதாம்.  ஆகவே. மானாவாரிக்கு மாற்றாக இனிமேல் வானவாரியைக் கையாளுவீர்!

இறுதியாக இருப்பவர் வாத்தியார்.  இச்சொல் தமிழில் ஆசிரியரைக்   குறிப்பதாகும்.   ஆனால்,  அது  தமிழுமன்று. வடமொழியுமன்று.  வடமொழியில் உபாத்தியாயர் என்று ஒரு சொல்லுளது.  அது வாத்தியார் என மருவியிருக்கலாம்.

வாத்தியாரைப் பிரித்தெழுதினால் வாய்-தீ-ஆர் என்றாகும்.  தமிழில் வாயில் தீயுடையவர் என்றே பொருள்படும்.  ஆனால்ஆசிரியர் என்றோகற்றுச் சொல்லி என்றோ பொருள் தராது.  எனவே, கணக்காயர், ஆசான், ஆசிரியர் என்னும் இனிய தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது, பொருத்தமில்லாத வாத்தியார் ஏன்? ஆதலின்வாத்தியாரை விரட்டி ஆசிரியரை அழைப்பீர்களாக.

இங்ஙனம் பல நல்ல தமிழ்ச்சொற்களை இழிபொருள் தருஞ்சொற்களாக்கித் தமிழில் இழிந்த கொச்சை வழக்கை உருவாக்காமல்பொருளறிந்து யாவரும் பயன்படுத்தச் செய்வதில் தமிழறிஞர் அனைவரும் கண்ணுங் கருத்துமாயிருக்க வேண்டியது  கடமையும்உரிமையுமாகும்.

                          (நன்றி : தமிழியக்கம்)

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்