Skip to main content

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 68 -70

 

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 68 -70



(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 65-67-தொடர்ச்சி)

1929ல், அஃதாவது அறுபத்திஇரண்டு ஆண்டுகளுக்கு முன், நானும் பெரியாரும் திருநெல்வேலியில் ஒரு சொற் பொழிவுக்காகச் சென்றிருந்தோம்.

எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த இல்லத்தை நாங்கள் அடைந்ததும், எதிர்பாளர்கள் அன்றைய கூட்டத்தை நடக்கவிடாமல் செய்வதற்காக அச்சடித் திருந்த எதிர்ப்பு துண்டறிக்கைகள் சிலவற்றைக் கண்டோம். அதில் பெரியார் புராணங்களையெல்லாம் பொய் என்று சொன்னவர். நாத்திகர் – பெரியார். அவரை இன்று நெல்லையில் பேசவிடக் கூடாது என்றிருந்தது.

கூட்டம் மாலை 6 மணிக்கு என்பது எங்களுக்குத் தெரியும். மணி 6½யும் ஆயிற்று.
எங்களை அழைத்தவர்களும் அங்கே வரவில்லை. ஆகவே, நான் பெரியாரிடம், நாம் பேசாமல் திரும்பிப் போய்விடுவது நல்லது என்றேன். அவரும் சரி என்று தொடரி(இரயில்) நிலையத்திற்குப் போக ஏற்பாடு செய்யும்படி சொன்னார். நான் போய் எட்டணாவுக்குப் பேசி ஒரு குதிரை வண்டியைக் கூட்டிவந்தேன்.

வண்டியில் முதலில் என்னை ஏறச் சொல்லிவிட்டுப் வண்டியில் பின் ஏறி அமர்ந்து பெரியார் வண்டிக்காரனிடம் கூட்டம் நடக்கும் இடத்தின் வழியாக இரயிலடிக்குப் போகும்படி சொன்னார். அந்த இடம் , வந்ததும் பெரியார் பார்த்தார். சுமார் ஐநஙநூறு அறுநூறு பேர்கள் அங்கு கூடியிருந்தனர். மேடையில் மேசை நாற்காலிகள் எல்லாம் இல்லை, எங்களை வரவழைத்த ஆட்களும் இல்லை

உடனே பெரியார் வண்டியை நிறுத்தும்படி, சொல்லிக் கீழே இறங்கினார். தனியாகவே போய் மேடையில் ஏறினார். “பொதுமக்களே! நான் உங்கள் முன் இப்போது பேச வரவில்லை. ஓர் உண்மையைச் சொல்லிப் போகவே வந்தேன். புராணங்களைப் பொய் என்று நான் சொன்னதாக என்னை எதிர்த்து துண்டறிக்கை போட்டிருக்கிறார்கள். அது நான் சொல்லவில்லை.

சைவப் புராணங்களை எல்லாம் பொய் என்று கண்டு பிடித்துச் சொன்னவர்கள் வைணவப் பண்டிதர்கள். வைணவப் புராணங்ளையெல்லாம் பொய் என்று கண்டு பிடித்துச் சொன்னவர்கள் சைவப் பண்டிதர்கள். இந்த இரண்டு புராணங்களுமே பொய்யாக இருக்குமோ என்று நான் எண்ணியதுண்டு. ஆக, புராணங்களைப் பொய் என்று சொன்னவர்கள் சைவ – வைணவப் பண்டிதர்கள் தான். இதைச் சொல்லிப் போகத் தான் நான் வந்தேன். என்மேல் பழிபோடாதீர்கள்” என்று சொன்னதும் ஓயாமல் கைதட்டி மக்கள் ஆரவாரம் செய்தார்கள். தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டே யிருந்தார் அனைவரும் அமைதியாக இருந்து கேட்டார்கள்.

அந்தக் காலத்தில், பெரியாரும் நானும் சேர்ந்து பிரச்சாரப் பணியில் ஈடுபட்டதில் நடந்த இம்மாதிரி நிகழ்ச்சிகள் பல என் நினைவை விட்டு அகலவில்லை.
———–

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களிடம் புலவர் பெருமக்கள் மேலும் கல்வி கற்க அடிக்கடி சென்றுவருவதுண்டு. பலரும் கவிபாடிப் பெருமையடைவதை அறிந்த பள்ளி மாணவன் ஒருவன் தானும் கவிபாட விரும்பினான். பிள்ளையவர்களை நெருங்கிக் கவிபாடச் சொல்லிக் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டான். அவர்கள் அவனது தமிழறிவை அறிய விரும்பி ஒரு சொற்றொடரைக் கூறி, இதன் (வாக்கிய உறுப்புகள்) எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் என்ன என்று கேட்டார். பையனும் சொன்னான், தவறுதலாக. உடனே மகாவித்துவான் அவர்கள் –

தம்பி, நீ எழுவாய்
உன்னால் ஏதும் பயனிலை,
நீ எழுந்து நடப்பதே இப்போது செயப்படுபொருள்
.”

என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

கவிதைபாட எழுவாய் பயனிலையாவது தெரிந்திருக்க வேண்டும் என்பது அவர் கருத்து. எதுகை மோனை கூட இல்லாமல் இக்காலத்தில் கவிதை பாடுபவர்களைக் கண்டால் அவர் என்ன செய்வார்? என்ன சொல்லுவார்?
————-

இருவரும் மாமன் மைத்துன உறவினர். கரூர்ப் புலவர், மாமன்; திருச்சிப் புலவர், மைத்துனர். கரூர்ப் புலவர் தன் மைத்துனரிடம் ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னார். திருச்சிப் புலவரோ பிடிவாதமாகச் செய்ய மறுத்துவிட்டார். அவருக்குக் கோபம்.

‘மைத்துனரே, எம் கால்வழியே வருகிற நீரைக் குடிக்கிற உமக்கு இவ்வளவு இருந்தால், எமக்கு எவ்வளவு இருக்கும்’ – என்று நிமிர்ந்து பேசினார்.

இதற்கு மூன்று பொருள் –

கால்வழி நீர்: 1. எம் கால் மிதிபட்டு வருகிற நீர்
      2. தாம் குடித்த எச்சில் நீர்
      3. கால்வழியே விரும் சிறுநீர்.

சொன்னவரோ பெரியவர்! கேட்டவரோ சிறியவர்! வெட்கப்பட்டார்; வருந்தினார். பெரியவர் ஆயிற்றே என்று அஞ்சினார்.

‘தமிழ் இருக்கும்போது நமக்கு எதற்கு அச்சம்’ என்று பேசத் துணிந்தார்.

‘மாமா, நீரே வந்து எம் காலில் விழுந்தால் – ஏற்றுக் கொள்ளாமல் என்ன செய்வது?’ – என்றார். (நான் தேடிப் போகவில்லை).
ஏதோ, தவறாகப் பேசிவிட்டோம் என்று தாங்கள் வருத்தப்பட்டு, எம் காலில் விழலாமா – அப்படி விழுந்தால், நான் என்ன செய்வது? (நீரே – தண்ணிரே; காலில் வாய்க்காவில்.)

எப்படி மாமன் மைத்துனர்! எப்படி தமிழ்!

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்