தந்தை பெரியாரின் பொதுவான சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 25 இன் தொடர்ச்சி)
தந்தை பெரியார் சிந்தனைகள் 26
4. பொதுவானவை தொடர்ச்சி
(7) இன்னஇன்ன கிரகம் இன்னஇன்ன வீட்டில் இருப்பதாலும், இன்னஇன்ன காலத்தில் இன்னஇன்ன கிரகங்கள் இன்னஇன்னகிரங்களைப் பார்ப்பதாலும் இந்தச் சாதகன் இன்னஇன்ன காரியம் செய்து இத்தனை தடவை சிறைக்குப் போவான் என்பதாக ஒரு சரியான பிறந்தகாலம் கண்டுபிடிக்கப்பட்ட சாதகன் ஒருவனுக்குச் சரியான கெட்டிக்காரச் சோதிடன் ஒருவன் பலன்சொல்வதாக வைத்துக்கொள்வோம். இவற்றுள் சாதகன் இன்னவேளையில் இன்னாரைக் கொன்று சிறைக்குப் போவான் என்று இருந்தால், அந்தக் கொல்லப்பட்டவன் சாதகத்திலும் இன்ன வேளையில் இன்னாரால் கொல்லப் பெற்றுச் சாவான் என்று இருந்தாலொழிய ஒருகாலமும் பலன் சரியாகவே இருக்கமுடியாது என்பது உறுதியானதாகும்.(குறிப்பு 1)
(8) சோதிடம் மெய்யென்றோ, அது மனிதச் சமூகத்துக்குப் பயன்படக்கூடியதென்றோ இருக்குமானால் காற்று அலைகளில் இருக்கும் ஒலியையும் அசைவையும் கண்டுபிடித்த அறிவியலறிஞர்களும்; கம்பியில்லாத் தந்தியில் ஒலி, கம்பியில்லாத் தந்தியில் உருவம், கம்பில்லாத்தந்தியில் அசைவு ஆகியவற்றைக் கண்டுபிடித்த வல்லுநர்களும், விண்வெளியில் மேலாகப் பலகோடி கல்(மைல்) தூரமும் கீழாகப் பல இலட்சக் கல் தூரமும் கண்டுபிடித்தவர்களான வானநூல் வல்லுநர்களும் பெரும் பெரும் அரசாங்கமும் இப்படிப்பட்ட பெரும் இலாபகரமான விசயத்துக்குப் பெருத்ததொரு ஆய்வுக்கூடம் வைத்துப் பரிசீலனை செய்து, சோதிடச்சாத்திரத்தில் மக்களுக்குப் பயிற்சி தந்து, மனிதருடைய வாழ்க்கையில் உள்ள கடினங்களை அடியோடு ஒழித்திருக்கமாட்டார்களா என்பது மிகவும் யோசிக்கத்தக்க விசயமாகும்.
(9) சோதிடர்கள் கிரகங்கள் ஒன்பது என்று சொல்லுகிறார்கள். மனிதன் பிறந்தநேரத்தில் வானத்தில் இருக்கும் கிரகங்களின் நிலையை வைத்துச் சோதிடம் கணிக்கின்றனர் என்று கூறப்பெறுகின்றது. இப்பொழுது யுரேனசு, நெப்பிடியூன், புளுட்டோ போன்ற புதிய கிரங்களை அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றிற்குச் சோதிடர்களின் சாதகத்தில் என்ன பலன்?
(இ) விழாக்கள்: விழாக்கள் பற்றியும் ஐயா அவர்களின் சிந்தனைகள் உள்ளன. அவற்றைக் காட்டுவேன்:
(1) இது நாகரிகக் காலம் என்பதைக்கூட உணராது காவடி என்றும், கரகம் என்றும் சிறிதும் கூட வெட்கம் இன்றி நடுத்தெருவில் கூத்தாடுகிறாய் என்றால், உன்னை எவ்வளவு திருத்தமுடியாத நிலையில் உன்னிடம் பார்ப்பனன் கடவுளையும் சாத்திரத்தையும் புகுத்திவிட்டான்? எந்தப்பார்ப்பானாவது காவடி எடுத்தும் கரகம் தூக்கியும் நடுத்தெருவில் ஆடுகிறானா? இல்லையே. (குறிப்பு 2). நீ இன்றைய தினம் திருவிழாவும் அபிசேகமும் காவடியும் எடுத்தால் அவனுக்கு அதனால் நன்மை உண்டு; வரும்படியும் உண்டு; இதை உணராத நம் மக்கள் இவ்வளவு மோசமான நிலைமையில் நாகரிகத்தையும் கொள்கையும் கொண்டுள்ளவர்களாக இருக்கும் தற்காலத்தில் கூட வசிக்கிறார்கள் என்றால் இதைவிட முட்டாள்தனமும் மூடநம்பிக்கையும் என்ன இருக்கிறது?
(2) மகாமகக்குளத்தில் யார் வந்து குளித்தாலும் பாவம் எல்லாம் தீர்ந்து போகுமாம். இக்கற்பனைக் கதையை நம்பி இலட்சக்கணக்கில்கூடத் தம் மடமையைத் தாமே காட்டிக் கொள்கிறார்கள். இது மக்களை ஏய்த்துப் பிழைக்கும் கூட்டாத்தாருக்கே இலாபமாகும்.
(3) முட்டாள்தனமும் மூடநம்பிக்கையும் உள்ள நிகழ்ச்சிகளில் தலைசிறந்தது மகாமகம் என்னும் மதக்கற்பனை விழாவே. நம்மைப் பச்சைக் காட்டுமிராண்டிகளாக அந்நியர் கருதச் செய்யும் விழா. இதுபற்றி இந்துக்களுக்கு மானமோ வெட்கமோ சிறிதும் ஏற்படவில்லையே.
(4) கார்த்திகை என்கின்றான்; குடம் குடமாகப் பீப்பாய் பீப்பாயாக நெய், வெண்ணெய், எண்ணெய் பாழாகிறது. இலட்சத்தீபம் என்கிறான்; டின் டின்னாக எண்ணெய் பாழாகிறது. அபிசேகம் என்கிறான்; நெய், எண்ணெய், பால், தயிர், வெண்ணெய் படிப்படியாகச் சலதாரைக்குப் போகிறது. இப்படிப்பட்ட வழக்கமோ பழக்கமோ வேறு எந்த நாட்டிலாவது உள்ளனவோ? நம்நாட்டில்தான் இவை போன்றவற்றிற்குக் கேள்வி கேட்பாரே இல்லை.
சில விழாக்களைப்பற்றி ஐயா அவர்களின் சிந்தனைகள்.
(1) பொங்கல்:
(1) பொங்கல் நாள் ஒன்றுதான் தமிழர்நாள்; மற்ற பண்டிகைகளெல்லாம் பெரிதும் தமிழருக்கு அவமானம், கேடு. தமிழர்களைக் கொலைசெய்த, செய்யும்நாள்.
(2) தமிழர்களைக் கொன்று தமிழர்களின் பண்பு, நாகரிகம், கலாச்சாரம், பழக்கவழக்கம் இவற்றைக் கொண்டதாக ஒரு பண்டிகை இருக்குமானால் அதற்குத் தமிழிலேயே பெயர் இருக்கவேண்டும். ஆனால் வடமொழியில் இருக்குமானால் அது எப்படித் தமிழர்க்குண்டான பண்டிகை என்று கூறமுடியும்? பொங்கல் பண்டிகை என்று கூறும் முறையில் அது தமிழ்ப்பெயராக இருப்பதும் அன்றி நம்மக்களுக்கு ஏற்ற பண்டிகையாகவும் உள்ளது. (குறிப்பு 3)
(3) தமிழர்கள் கொண்டாடும் மற்ற பண்டிகைகட்கு எல்லாம் தமிழனுடையவை என்று சொல்ல ஆதாரம் இல்லை; பார்ப்பானுடையவை என்று கதைகள் எழுதிவைத்துள்ளனர். ஆனால் பொங்கல் பண்டிகைக்கு இப்படி ஒன்றும் கூறவழி இல்லை; என்றாலும் இதற்கும் மற்ற பண்டிகை போலக் கதை கட்டிவிட முனைந்து விட்டார்கள்.
(4) நான் பொங்கல் பண்டிகை ஒன்றுதான் மூடநம்பிக்கையற்ற, முட்டாள்தனமற்ற அறிவிற்குப் பொருத்தமான விழாவாகும் என்று சொல்லி வருகிறேன்.
(5) பொங்கல் பண்டிகை என்பது நாள் நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலியன எதுவுமே இல்லாமல் தைமாதம் முதல் நாள் என்பதாக, தைத்திங்களையும் முதல் நாளையுமே ஆதாரமாகக் கொண்டதாகும்.
(6) தமிழ் மக்களுக்குப் பாராட்டத் தகுந்த ஓர் உண்மையான திருநாள் உண்டு என்றால் அது தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள்தான். மற்றத் திருநாள் எல்லாம் வைதிக சம்பந்தமானவை. இந்தத்திருநாள் ஒன்றுதான் பகுத்தறிவை அடிப் படையாகக் கொண்டது; அறிவியலையும் அடிப்படையாகக் கொண்டது. (குறிப்பு 4)
(2) தீபாவளி:
(1) தீபாவளி உலகச் சேமத்திற்கு என்று ஆரியர்களால் உற்பத்தி செய்யப்பெற்ற ஐந்தாம் படைக்கதை. திராவிடர்களை (தமிழர்களை) இழிவுபடுத்தித் திராவிட ஆதிக்கத்தை அழித்த கதை.
(2) தீபாவளிக் கொண்டாட்டமானது தமிழ்மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்லாமல் தமிழர் (திராவிடர்) இன்னமும் ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது கலைக்கு அடிமை, மீட்சி பெறவிருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப்பிறவி என்பதைக் காட்டிக் கொள்ளப் போட்டிப் போடுகின்றனர் என்பதேயாகின்றது.
(3) தீபாவளியன்று கறுப்புடைத் தரித்து நரகாசுரனுக்கு (திராவிடத்தலைவனுக்கு) வாழ்த்துக்கூறி வலம் வருவதுடன் ஆங்காங்குக் கூட்டம்கூடி அவனது கொலைக்காகத் துக்கப்பட வேண்டியதை விளக்கி “துக்கநாளாக” கொள்ளவேண்டும்.
(4) தீபாவளி நாளன்று நாம் (திராவிடர்கள்-தமிழர்கள்) இரணியனையும் இராவணனையும் எப்படிப் புகழ்ந்து மரியாதை செய்கிறோமோ அது போலவே, நரகாசுரனும் நம் மரியாதைக்கு உரியவனாவான். ஆதலால் அப்படிப்பட்ட நம் தலைவனைத் தேவர் கூட்டம் கொன்றதற்காக நாம் துக்கப்படவேண்டுமேயொழிய மகிழ்ச்சியடைவது மடமையும் இழிவுமான ஈனச்செயலாகும்.
(5) தீபாவளி என்கிறார்கள்; கடவுள் பன்றி அவதாரம் எடுத்துப் பூமியை மீட்டது என்கிறார்கள். பூமிக்கும் பன்றிக்கும் பிள்ளை பிறந்தது என்கின்றார்கள். இவற்றை நம்புகிறீர்களா? கடவுள் என்கிறவனுக்கு ஒரு யோக்கியதை வேண்டாமா? போயும் போயும் மலம் தின்கின்ற பன்றியாகவா கடவுள் அவதாரம் எடுக்க வேண்டும்?
(6) எவனாவது போரில் கொல்லப்படுகிறவன் “நான் அயோக்கியன்; நான் சாகப்போகிறதை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள் என்று கூறுவானா?” நம்மை இழிவுபடுத்த நம்மவனையே கொன்ற எதிரிகளின் செயலை நாம் மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறோம் என்றால் என்ன பொருள்? இந்த அக்கிரமம் ஒழிய, மனிதர்கள் மான உணர்ச்சி பெறவேண்டும். எனவே, இந்த நாளை நாம் மகிழ்ச்சியாகக் கொண்டாடாமல் இழிவுபடுத்த எதிரிகள் ஏற்படுத்தி துக்க நாளாகக் கொண்டாடவேண்டும்.
(3) சரசுவதிபூசை:
(1) இது ஓர் அர்த்தமற்ற பூசை. கல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்குச் ‘சரசுவதி’ என்று பெயர் கொடுத்து அதைப்பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்றும் சொல்லி நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றிக் கல்விகற்கச் சொந்தமுயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு நாம் அந்தச் சாமிக்கு பூசை செய்வதன் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே பார்ப்பனர்கள் மட்டும் படித்துப் பெரிய படிப்பாளிகளாக ஆகிகொண்டு (குறிப்பு 5) நம்மைப் படிப்பு வரமுடியாத மக்குகள் என்றும் சொல்லிக்கொண்டும் உள்ளனர்.
(2) சரசுவதி பூசை என்கிறான்; ‘தசரா’ என்கிறார்கள். தராசை வைத்துக் கும்பிடுகிறார்கள். கணக்குப் புத்தகங்களை வைத்துப் படைக்கிறார்கள். உண்மையிலேயே இப்படிக் கும்பிடுகிறவர்கள் பொய்க் கணக்கு எழுதாமல் இருக்கிறார்களா? தராசை வைத்துக் கும்பிடுகிறவர்கள். ஒழுங்காக வியாபாரத்தில் நிறைவை செய்கிறார்களா? எல்லாப் பித்தலாட்டங்களையும் செய்வதைச் செய்துவிட்டு அதற்குப்பூசை என்றால் என்ன பொருள்?
(3) சரசுவதியைக் கொலுவிருத்திப் பெரிய உற்சவங்களை செய்யும் நமது நாட்டில் ஆயிரத்துக்கு ஐம்பது பேர்க்குகூட கல்வி இல்லை. சரசுவதியே இல்லாத நாட்டில் ஆயிரத்திற்கு 996 பேர்கள் கல்விகற்றவர்களாக இருக்கிறார்கள்.
(4) ஆயுதத்தை வைத்துப் பூசை செய்து வந்த நம் நாட்டு அரசர்கள் கதி என்னவாயிற்று? ஆயுதத்தை வைத்துப்பூசை செய்வதையே அறியாத வெள்ளையன் துப்பாக்கி முனைக்கு மண்டியிடவில்லையா? சரசுவதி பூசை செய்யும் வணிகர்களில் ஒரு வியாபாரியாவது சரசுவதிக்குப் பயந்து பொய்கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ, குறை அளவு அளக்காமலோ இருக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா? அதுபோலவே புத்தகங்களையும் பேனா-பென்சில்களையும் வைத்துச் சந்தனப்பொட்டிட்டு பூசை செய்கிறார்களே அல்லாமல் காலோ, கையோ பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கும்பிடுகிறார்களே அல்லாமல் நமது நாட்டு மக்களில் படித்தவர்கள் 100க்கு 25 பேர்களுக்குள்ளாகத்தானே இருந்து வருகிறார்கள்?
இவ்வளவு ஆயுதப்பூசை செய்தும் சரசுவதிபூசை செய்தும் இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் கதி என்னவாயிற்று? நமது வணிகர்களின் நிலை என்ன? எவ்வளவு இழப்பு அடைந்து வருகிறார்கள்? நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்புக்காக வேறு நாட்டிற்குப் போகிறார்களே இதன் காரணமென்ன? நாம் செய்யும் பூசைகளைச் சரசுவதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரசுவதி தெய்வத்துக்கும் இந்த விசயத்துக்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லையா? அல்லது சரசுவதி என்கிற ஒரு தெய்வம் பொய்க்கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தானே இருக்க வேண்டும்?
(5) இங்ஙனமே இராமநவமி கிருட்டிணன் பிறப்பு போன்ற வழிபாடுகளையும் சாடுகிறார்.
இவ்விடத்தில் நம் நாட்டு மக்கள் பாரதமாதா, தமிழ்த்தாய், தெலுங்குத்தல்லி என்றெல்லாம் கொண்டாடி வருகிறார்களே இவற்றையெல்லாம் நோக்கும்போது நம்நாட்டின் மரபு தெய்வமரபாகி வருவதைக் காணமுடிகிறது. மக்கள் மரபு நம்பிக்கையின் அடிப்படையில் அமைகிறது. ஐயா அவர்கள் குறிப்பிடும் மரபு காரணகாரியத்தை ஒட்டி அமைகின்றது. மக்களில் பலரோ சிலரோ அவரவர் மனப்பான்மைக்குத் தக்கவாறு மனப்பக்குவத்திற்கு உகந்தவாறு அவற்றைத் தழுவிக்கொண்டு வாழ்கிறார்கள்.
(தொடரும்)
சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. அ.பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல்,
‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’ பேராசிரியர் முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்),
தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம்,
சென்னைப் பல்கலைக் கழகம்
Comments
Post a Comment