Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 15

 அகரமுதல




(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 14. தொடர்ச்சி)



குறிஞ்சி மலர்
அத்தியாயம்  6

நிலவைப் பிடித்துச் – சிறு
கறைகள் துடைத்துக் – குறு
முறுவல் பதிந்த முகம்,
நினைவைப் பதித்து – மன
அலைகள் நிறைத்துச் – சிறு
நளினம் தெளித்த விழி


பசித்த வயிறும் கொதித்த மனமுமாகப் பூரணி என்னும் பெண் மதுரை நகரத்து நாற்சந்தியில் மயங்கி விழுந்தபோது மங்களேசுவரியம்மாளும், இந்தக் கதையின் வாசகர்களும் தான் அனுதாபப்பட்டு உள்ளம் துடித்தார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் அன்று அங்கே அந்தச் சம்பவம் நடந்த இடத்துக்கு மிக அருகில் ஓர் இளம் கவியுள்ளமும் துடித்திருக்கிறது! வெறும் மனிதர்கள் வாழுகிற தலைமுறையின் துன்பத்தைக் கண்டு கொதித்திட ஒரு கவியுள்ளமா? செய்தியாளரி்கள் ( ‘நியூசு ரிப்போர்ட்டர்கள்’ ) வாழும் நூற்றாண்டு அல்லவா இது? ‘நடுத்தெருவில் பெண் மயங்கி விழுந்தாள்’ என்று செய்தி எழுதலாம். கவி எழுதத் துடித்த அந்த உள்ளம் யாருடையது? கைகள் யாருடையவை? அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறதல்லவா? ஆச்சரியகரமான அந்த இளைஞனைச் சந்திக்கலாம் வாருங்கள்.

அதோ, அந்த நாற்சந்திக்கு மிக அருகில் கிழக்கைப் பார்த்த வாயில் அமைந்த அச்சகம் ஒன்று தெரிகிறதே; அதற்குள் நுழைந்து அங்கே நடப்பதைக் கவனிக்கலாம்.

‘மீனாட்சி அச்சகம் – எல்லாவிதமான அச்சு வேலைகளும் ஏற்றுக் கொள்ளப்படும். குறித்த நேரம் – குறைந்த செலவு’ என்று பெரிய விளம்பரப் பலகை வெளியே தொங்குகிறது. அப்போது சரியான பிற்பகல் நேரம். அச்சகத்து முகப்பு அறையைத் தெருவிலிருந்து பார்த்தாலும் அறையிலிருந்து தெருவைப் பார்த்தாலும் நன்றாகத் தெரிகிற விதத்தில் அது அமைந்திருக்கிறது. வாசலில் வந்து நின்ற வண்டியிலிருந்து அச்சகத்தின் உரிமையாளர் போல் தோற்றமளிக்கும் முதியவர் ஒருவர் இறங்கி வேகமாக உள்ளே வருகிறார். முகப்பு அறைக்குள் நுழைகிறார். மேசையில் எதையோ தேடுகிறார். ஏட்டுப் புத்தகம் போல் பெரிய நாட்குறிப்பு ஒன்று விரிந்து கிடக்கிறது. கண்ணாடியை மாட்டிக் கொண்டு எடுத்துப் படிக்கத் தொடங்குகிறார். படிக்கப் படிக்க முகத்தில் சிடுசிடுப்பும் சீற்றமும் பரவுகின்றன.

“இந்தச் சமூகம் எங்கே உருப்படப் போகிறது? உச்சி வெயிலில் கேள்வி முறையின்றி ஒரு பெண் நடுத்தெருவில் சோர்ந்து விழுந்து கிடந்தாள். காரும் லாரியும் கூட்டமுமாக வேடிக்கைப் பார்க்கத்தான் எவ்வளவு நெருக்கம். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகோடு ஒரு பெண் இப்படி மண்ணில் தளர்ந்து விழலாமா? பெண் மண்ணில் விழும் போது இந்த நாட்டின் மங்கலப் பண்புகளெல்லாம் மண்ணில் உடன் விழுகின்றனவே. ஐயோ! என் உள்ளம் கொதிக்கிறதே. இந்த மதுரை நகரத்துத் தெருக்களில் தமிழ் வாழ்ந்து செங்கோல் செலுத்தியதாம். செல்வமும் செழுமையுமாகப் பெருமை முரசறைந்ததாம்! எல்லாம் வாழ்ந்த பெருமைகள், வாழ்கின்ற பெருமை ஒன்றுமில்லை.

இன்று என் கண்கள் இந்தத் தெருக்களில் எதைப் பார்க்கின்றன? ஏமாற்றத்தைச் சுமந்து திரியும் மனிதர்களைப் பார்க்கிறேன். ஏழ்மையையும் ஏக்கத்தையும் சுமந்து நடமாடும் உடல்களைக் காண்கிறேன். குழந்தைகளும் கையுமாகக் கந்தல் புடவையோடு பிச்சைக்கு வரும் பெண் தெய்வங்களைப் பார்க்கிறேன். நெஞ்சு பொறுக்குதில்லையே! அழகும், படிப்பும், பண்பும் உள்ள ஒரு பெண் இப்படி மண்ணில் விழலாமா? ஏன் விழுந்தாள்? யாரால் விழ நேர்ந்தது? அடே, அரவிந்தா! நீ கவிஞன். உன்னுடைய உள்ளம் இன்னுமா துடிக்கவில்லை? இதைக் கண்டுமா கொதிக்கவில்லை? பாடு, துடிப்பதெல்லாம் திரட்டி ஏதாவது பாடி வை. நீ அச்சகத்தில் பிழை திருத்தப் பிறந்தவனா? இல்லை, இல்லவே இல்லை. நீ கவி உள்ளம் படைத்தவன். சமூகத்தைத் திருத்தி நேர் செய்யப் பிறந்தவன்.”

படித்துக் கொண்டே வந்த முதியவரின் முகம் சீற்றத்தின் எல்லையைக் காட்டியது. அவ்வளவு சினத்தையும் கையில் சேர்த்து மேசை மேலிருந்த மணியை ஓங்கிக் குத்தினார். இரண்டு, மூன்று முறை அப்படிக் குத்தி மணி அதிர்ந்த பின் ஒரு சிறுவன் வேகமாக ஓடி வந்து அடக்க ஒடுக்கமாக நின்றான்.

“அந்தக் கழுதை அரவிந்தன் இருந்தால் உடனே கூப்பிடு, வரவரப் பைத்தியம் முற்றித்தான் போய்விட்டது பையனுக்கு!”

சிறுவன், அரவிந்தன் என்று பெயர் குறிக்கப்பெற்ற ஆளைக் கூப்பிட்டுக் கொண்டு வருவதற்காக அச்சகத்தின் உட்புறம் ஓடினான். பலவிதமான அச்சு எந்திரங்களின் ஓசைக்கிடையே அச்சுக் கோப்பவர்களுக்குப் பக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த ஓர் அழகிய வாலிபனைப் போய் கூப்பிட்டான் சிறுவன். சிவந்த நிறம், உயர்ந்த தோற்றம். நாட்காட்டிகளில் கண்ணனும் இராதையுமாகச் சேர்ந்து வரைந்துள்ள ஓவியங்களில் குறும்பும் அழகும் இணைந்து களையாகத் தோன்றுமே கவர்ச்சியானதொரு கண்ணன் முகம் அதுபோல் எடுப்பான முகம் அந்த வாலிபனுக்கு. கதர் சிப்பாவும் நாலு முழம் வேட்டியுமாக எளிமையில் தோன்றினான் அவன்.

“ஐயா, முதலாளி வந்திருக்காரு. உங்களைக் கூப்பிடறாரு. மேசை மேலிருந்து எதையோ எடுத்துப் படிச்சுட்டு ரொம்பக் கோபமாயிருக்காருங்க…”

தேடி வந்த சிறுவன் பின் தொடர வாலிபன் முன்புறத்து அறையை நோக்கி விரைந்தான். மனத்தில் துணிவையும் நம்பிக்கையையும் காட்டுகிற மாதிரி அவனுடைய நடை கூட ஏறு போன்று பீடு நடையாக இருந்தது!

முன்புறத்து அறை வாசலில் அவன் தலை தென்பட்டதோ இல்லையோ! அவர் சீறிக் கொண்டு இரைந்தார்.

“அரவிந்தா! இதென்னடா இது உளறல்? உன்னை இங்கே நான் பிழை  திருத்துவதற்காகத்தான் வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கிறேன். சமூகத்தைத் திருத்துவதற்காக அல்ல.”

அவர் கையிலிருந்த ஏட்டுப் புத்தகத்தைப் பார்த்தவுடன், அவன் உதட்டைக் கடித்துக் கொண்டு சற்றே வெட்கத்தோடு தலை குனிந்தான். அப்போதும் அந்த முகத்தின் அழகு தனியாகத் தெரிந்தது. நீள முகம். அதில் எழிலான கூரிய நாசி எடுப்பாக இருந்தது.

“என்னடா நான் கேட்கிறேன், பதில் சொல்லாமல் கல்லடி மங்கன் மாதிரி நிற்கிறாய்? பத்து மணியிலிருந்து சாயங்காலம் ஐந்து மணி வரையில் இந்த வேலைதான் தினம் இங்கே நடைபெறுகிறதோ?”

“இல்லை ஐயா!… இன்றைக்கு மத்தியானம் இங்கே எதிர்த்தாற்போல் நடுத்தெருவில் ஒரு பெண் மயங்கி விழுந்து விட்டாள். அதைப் பார்த்துக் கொண்டேயிருந்த நான் ஏதோ மனத்தில் தோன்றியதையெல்லாம் . . .”

“மனத்தில் தோன்றியதையெல்லாம் அப்படியே கவிதையாகத் தீட்டிவிட்டாயோ?”

“அதில்லை ஐயா. இப்படி ஏதாவது தோன்றினால் அதை இந்த நாட்குறிப்பில் எழுதி வைப்பது வழக்கம்.”

“ஆகா! எழுதி வைக்காமல் விட்டுவிடலாமா பின்னே? அப்புறம் உலகத்துக்கு எத்தனை பெரிய இழப்பாகப் போய் விடும். போடா கழுதை; அச்சுக்கு வந்திருக்கிற வேலைகளை யெல்லாம் தப்பில்லாமல் செய்து நல்ல பேர் வாங்க வழியில்லை. கவி எழுதுகிறானாம் கவி. உருப்படாத பயல்.”

சொல்லிவிட்டு ஏட்டுப் புத்தகத்தை அவன் முகத்துக்கு நேரே வீசி எறிந்தார் மீனாட்சி அச்சகத்தின் உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. ஏட்டுப் புத்தகம் கீழே விழுந்து விடாமல் இரண்டு கைகளாலும் எட்டிப் பிடித்துக் கொண்டான் அரவிந்தன். அவனுக்கு அந்த ஏட்டுப் புத்தகம் உயிர் போன்றதல்லவா? எத்தனை எத்தனை உயர்ந்த குறிப்புகளையும் உணர்ச்சிகளைத் துண்டு துண்டாக வெளியிடுகிற கவிதைகளையும் அவன் அந்த ஏட்டுப் புத்தகத்தின் பக்கங்களில் செல்வம் போல் எழுதி வைத்திருக்கிறான். அவருக்குத் தெரியுமா அதன் அருமை?

ஏட்டை வீசி எறிந்த சூட்டோடு அவனை முறைத்துப் பார்த்துவிட்டு உள்ளே அச்சுவேலை நடந்து கொண்டிருந்த இடத்துக்குச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் தான் எழுதியிருந்த கவிதைகளைத் தானே ஒரு முறை கள்ளத்தனமாக இரசித்து விடும் ஆவலுடன் அவசர அவசரமாக ஏட்டைப் பிரித்தான் அரவிந்தன். ‘நிலவைப் பிடித்து’ என்று தொடங்கிய முதல் இரண்டு வரிகளை மனத்துக்குள்ளேயே விரைவாகப் படித்த பின் மற்ற வரிகளை சத்தத்தோடு வாய்விட்டுப் படிக்கத் தொடங்கினான்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue