Skip to main content

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 43

 அகரமுதல

     19 December 2021      No Comment



(அகல் விளக்கு – மு.வரதராசனார். 42. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 18 தொடர்ச்சி

‘பார்ப்பதற்கு நல்லபடி இருக்கிறாயே’ப்பா உனக்கு என்ன குறை, சொல். ஆங்கில மருத்துவரிடம் போனாலும், அவர்கள் உடனே தெரிந்துகொள்ளமாட்டார்கள். நம் உடம்பில் உள்ள குறை இன்னது என்று நாமே தெளிவாகச் சொன்ன பிறகுதான் ஆராய்ந்து மருந்து கொடுப்பார்கள். இல்லையானால் ஒன்று கிடக்க ஒன்று செய்வார்கள், ‘முதலில் உன் உடம்புக்கு என்ன என்று சொல்’ என்று கேட்டேன். உடம்பில் சத்து எல்லாம் வீணாகிறது என்றான். ஏன் அப்படி என்றேன். தூங்கும்போது என்றான். உடனே அவனுடைய குறையைத் தெரிந்துகொண்டேன். ‘தூங்கும்போது இந்திரியம் வெளிப்பட்டு விடுவதைச் சொல்கிறாயா? மாதத்துக்கு எத்தனை முறை?’ என்று விளக்கமாகக் கேட்டேன். ‘ஐந்தாறு முறை’ என்றான். ‘அது இயற்கை. அதைப்பற்றிக் கவலைப்படாதே!’ என்று அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கித் தைரியம் ஊட்டி அனுப்பினேன். அதுவும் போதாது என்று ஒரு மருத்துவரிடமும் அழைத்துச்சென்று, அவரையே சொல்லுமாறு செய்தேன். வாரம் ஒருமுறை ஆனால் கெடுதியே இல்லை என்றும் அவரே அவனுக்குச் சொல்லியனுப்பினார். அப்படி மனம் சோர்ந்து கலங்கிய அந்தச் சந்திரனா இப்போது இப்படிப்பட்ட வாழ்க்கை நடத்துகிறான்? எண்ணிப் பார்த்தால் நம்ப முடியவில்லையே” என்றார்.

குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருந்த சாமண்ணா அப்போது விழித்துப்பார்த்து, “எது? என்ன நம்பமுடியவில்லை?” என்றார்.

“ஒன்றும் இல்லை. நீங்கள் தூங்குங்கள்” என்றார் ஆசிரியர்.

“தூக்கமாவது, பாழாவது! அவள் போன நாள் முதல் நல்ல தூக்கமே இல்லை. குடும்பப் பாரத்தை என்மேல் போட்டுவிட்டுச் சுகமாகப் போய்ச் சேர்ந்துவிட்டாள். கடவுளே கடவுளே” என்றார்.

மறுபடியும் என் மனம் சந்திரனுடைய தாயைப்பற்றி நினைத்து வருந்தியது. அன்பான மனம், தான் செய்யாத ஒரு குற்றத்துக்காக, தன் மகனுக்காக நொந்து நொந்து அழிந்ததே என்று வருந்தினேன்.

தொடர் வண்டி மேட்டுப் பாளையத்தில் நின்றதும் இறங்கிப் பல்சக்கர வண்டியில் ஏறி உட்கார்ந்தோம். சிற்றுண்டி உண்டோம். ஆசிரியர் குடிக்கத் தண்ணீர் கேட்டார். தண்ணீர்க் குவளையைக் கையில் ஏந்தியதும் அதன் நிறத்தைப் பார்த்துத் தயங்கினார். “என்ன இது! இப்படிக் கலங்கலாக மண்ணாக இருக்கிறதே! இதை எப்படிக் குடிப்பது?” என்றார். பக்கத்திலே இருந்த ஒருவர், “குடியுங்கள், குடிக்கலாம். ஒன்றும் செய்யாது; இங்கே இப்படித்தான்” என்றார். குடிக்க மனம் இல்லாமல் ஒரு விழுங்குநீர் குடித்துவிட்டு நிறுத்தினார் “காப்பியிலும் இந்தத் தண்ணீர்தான் கலந்திருக்குமா? நீங்கள் எப்படிக் குடித்தீர்கள்?” என்று சாமண்ணாவைப் பார்த்துக் கேட்டார். “என் வாழ்க்கையே ஒரே கலங்கலாக இருக்கிறது. தண்ணீர் கலங்கலாக இருந்தால் என்ன?” என்று சிறிது சிரித்தார், அந்தச் சிரிப்பில் பெருந்துன்பம் கலந்திருந்தது.

பல்சக்கர வண்டி புறப்பட்டு மலையை நோக்கி ஏறியவுடன் புதிய புதிய காட்சிகள் கண்ணுக்கு விருந்தாகத் தோன்றின. நாங்கள் அந்த வழியில் அதற்கு முன் சென்றதில்லை. மலைமேல் தொடர் வண்டி செல்வதே எங்களுக்கு ஒரு புதுமையாக இருந்தது. நீலகிரி மலையில் வளமான காட்சிகளும் புதுமையாக இருந்தன. அவற்றை நானும் ஆசிரியரும் ஆர்வத்தோடு கண்டு மகிழ்ந்தோம். ஆனால் சாமண்ணா எங்கள் மகிழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை, அவர் முகத்தைப் பார்த்தபோதெல்லாம் எங்கள் மகிழ்ச்சி குன்றியது. அந்த மலையின் வளத்தைக் கண்டு வியப்படைந்தபோதெல்லாம், என்னை மீறி ஏதேனும் சொல்ல வாய் திறந்தேன்.

சாமண்ணாவின் துயரம், என் ஆர்வத்திற்கு தடையாக நிற்க, சொல்வதைச் சுருங்கச் சொல்லி முடித்தேன். எத்தனையோ மலைகளை எங்கள் ஊர்ப்பக்கம் கண்டிருக்கிறோம். ஆனால் மரம் செடி கொடிகள் தழைத்து வளர்ந்த மலைகள் காடுகள் செழித்தோங்கிய மலைகள்-விண்ணை முட்டி நின்ற மலைகள் – ஒன்றோடொன்று இணைந்து உயர்ந்து செல்லும் அழகை அதுவரையில் கண்டதில்லை. கண்ட இடமெல்லாம் வளப்பம் எங்களுக்குப் புதுமையாக இருந்தது. பயிரிடாமல் அங்கங்கே சரிவுகளில் இயற்கையாகவே வளர்ந்துள்ள வாழை மரங்களை ஆசிரியர் காட்டினார். அப்போது மட்டுமே சாமண்ணா தலை நீட்டி எட்டிப் பார்த்தார்.

மலையின் இயற்கை வளம் ஒருபுறம் இருக்க, பல்சக்கரத் தொடர் வண்டி ஆடி அசைந்து மலை ஏறிச் செல்வது தனி இன்பமாக இருந்தது. அங்கங்கே மலைக் குடைவுகளின் வழியாக வண்டி சென்றபோது, சுற்றிலும் இருள் சூழ்ந்து கிடக்க, சிறுவர்கள் ஓ என்று கூச்சலிட்டது வேடிக்கையாக இருந்தது. ஒரு முறை நீண்ட மலைக்குடைவின் வழியாக வண்டி சென்றபோது நானும் என்னை அறியாமல் சிறுவர்களோடு சேர்ந்து கூச்சலிட்டேன். குடைவைக் கடந்ததும் ஒளியில் ஆசிரியர் முகத்தைக் கண்டேன்.

அவருடைய முகமும் சிறுவர்களின் முகம் போலவே புதுமை இன்பம் நிறைந்ததாக இருந்தது. ஆனால் சாமண்ணாவின் முகத்தில் ஒரு மாறுதலும் இல்லை. பேரொலி கேட்டு வெளியே தலைநீட்டிக் கீழே பார்த்தேன். கானாறு ஒன்று நீர் நிரம்பி அலை புரண்டு கற்பாறைகளில் மோதி ஓடியது கண்டேன். மறு பக்கமாகப் பார்த்தேன். மலைமேல் உயரத்திலிருந்து பெரிய அருவி தூய வெண்ணிறமாக விழுந்து ஓடி வருவதைக் கண்டேன். அது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வண்டி அங்கேயே நின்றால் நெடுநேரம் கண்டு மகிழலாம் என்ற வேட்கை உண்டானது. ஆனால் இயற்கையின் மாறாத நிகழ்ச்சிகள் போல் வண்டி சிறிதும் நிற்காமல் ஒவ்வொரு பல்லாக ஏறி ஆடி அசைந்து சென்றுகொண்டே இருந்தது. அந்தப் பெரிய அருவியே மற்றொரு பக்கத்தில் ஆறாக ஓடிச் செல்கிறது என்பதை மறுபடியும் இப்பக்கமாகக் கண்டபோது உணர்ந்தேன்.

எங்கள் மகிழ்ச்சியில் நாங்கள் இங்கும் அங்கும் பார்த்தபடி இருந்த போது சாமண்ணா மேலாடையை விரித்து முக்காடு இட்டுப் போர்த்துக்கொண்டார். அப்போதுதான் காற்று மிகக் குளிர்ந்து வீசுவதை நான் உணர்ந்தேன். இரண்டு மணிநேரத்திற்குள் வெப்பமான சூழ்நிலையை விட்டு, மிகக் குளிர்ச்சியான பகுதிக்கு வந்து விட்டதை உணர்ந்தேன். தமிழ்நாட்டில் வெப்பமும் தட்பமும் வறட்சியும் வளமும் அடுத்தடுத்து விளங்குவதையும், மனிதன் விரும்பக்கூடிய இயற்கையழகுகள் எல்லாம் அமைந்து விளங்குவதையும் எண்ணி எண்ணி மகிழ்ந்தேன். வெயிலே காணாத தட்ப நாடும் வெறுக்கத்தக்கது. தட்பமே இல்லாத கொதிப்பான பகுதியும் வெறுக்கத்தக்கது. எங்கும் மலையாகவும் காடாகவும் இருந்தாலும் பயன் இல்லை. கடல்வளம் முதல் மலைவளம் வரையில், சித்திரையின் வேனில் முதல் மார்கழியின் பனிவரையில், தொண்டை நாட்டின் சிறுவறட்சி முதல் நீலகிரியின் பெருவளம் வரையில் எல்லாம் கலந்து மனித வாழ்வை இனிக்கச்செய்யும் பெருமை தமிழ் நாட்டுக்கு இருப்பதை எண்ணிப் பெருமிதம் உற்றேன்.

இயற்கை அன்னை இங்கே வெறுக்கத்தக்கவளாகவும் இல்லை; சலிப்புறத் தக்கவளாகவும் இல்லை; மாதந்தோறும் மாறிவரும் சிறுவர்களின் பலவகை விளையாட்டுகள் போல், இடந்தோறும் பருவந்தோறும் மாறி மாறிப் பலவகையாய் நின்று மக்களை மகிழ்விக்கின்றாள். இங்கே தாங்க முடியாத கடுமையான குளிரும் இல்லை; தடுக்கமுடியாத கொடுமையான வெயிலும் இல்லை; பெருமழை பொழிந்து வெள்ளத்தால் நாட்டை அழிப்பதும் இல்லை; மழைத்துளியே இல்லாமல் வறட்சியால் பாலையாக்குவதும் இல்லை. வன்மையும் மென்மையும் குறிலும் நெடிலும் ஒத்து அமைந்து ஒலியுறுப்புகளுக்கு அளவான உழைப்புத்தந்து விளங்கும் அருமைத் தமிழ் மொழி போலவே, எங்கள் தமிழ் நாடும் தட்பமும் வெப்பமும் வறட்சியும் வளமும் எல்லாம் அளவு கடவாமல் அமைந்து மக்களின் வாழ்வுக்கு உரிய நானிலமாகத் திகழ்கிறதே என எண்ணி பெருமகிழ்வு எய்தினேன். இயற்கை இங்குதான் தாயாக இருக்கிறாள்; மக்கள் இங்குதான் இயற்கையின் குழந்தைகளாக இருக்கின்றனர்.

குறைந்த அளவு ஆடை உடுத்துத் திரியும் உரிமையும் இங்கே உள்ள மக்களுக்கு உண்டு; திறந்த வெளியில் வானத்தைப் பார்த்தவாறு படுத்து உறங்கும் இன்பமும் இங்குள்ள மக்களுக்குத்தான் உண்டு. கைக்கும் உறை வேண்டா; காலுக்கும் உறை வேண்டா. வீசும் காற்றுக்கு அஞ்சி ஒளியவேண்டா. வேண்டியபோதெல்லாம் காற்றில் திளைக்கலாம். விரும்பியபோதெல்லாம் நீரில் மூழ்கலாம். இவ்வாறு இயற்கையன்னை தன் மக்களுக்கு வேண்டியவை எல்லாம் அளித்துக் காத்துவரும் இந்த நாட்டில் மிக்க குளிர்ச்சி வேண்டும் என்று அழுகின்ற குழந்தைகளுக்காகத் தாய் தனி அன்போடு அழைத்து அளிக்கும் தட்ப இன்பம்போல் விளங்கியது அந்த நீலமலையின் குளிர்ச்சி மிக்க காற்று.

அருவங்காட்டில் இறங்கியபோது மணி இரண்டு ஆகியிருந்தது. அங்கே உபதளைக்கு வழிகேட்டுக்கொண்டு சென்றோம். என் மனம் இயற்கையழகை மறந்து கடமையில் மூழ்கியது. எப்படிச் சந்திரனைக் கண்டுபிடிப்பது, என்ன சொல்வது, எப்படி அவன் மனத்தை மாற்றுவது, சாமண்ணாவையும் ஆசிரியரையும் விட்டுச் செல்வதா, அழைத்துச் செல்வதா என்று பலவாறு எண்ணிச் சென்றேன். ஒரு கல் தூரம் சென்ற பிறகு, வழியில் ஒருவரைப் பார்த்து உபதளை எது என்று கேட்டேன். அவர் ஒரு மலைச்சரிவையும் தோப்பையும் காட்டி அங்கே தெரிந்த ஓட்டுக் கூரைகளையும் காட்டி அந்த ஊர்தான் என்றார். இன்னும் ஒரு கல் நடக்கவேண்டியிருக்கும் என்று எண்ணிக்கொண்டே மேலும் நடந்தோம்.

ஊர்க்கு வெளியே ஒரு தேநீர்க் கடை இருந்தது. சாந்தலிங்கம் சொன்னது இந்தக் கடையாகவே இருக்கும் என்று எண்ணி, ஆசிரியரையும் சாமண்ணாவையும் வெளியே இருக்கச் செய்து நான் மட்டும் உள்ளே நுழைந்தேன். அங்கே இருந்த இளைஞன் ஒருவனைப் பார்த்து, “இங்கே தேயிலைத் தோட்டத்தில் கணக்குப் பிள்ளையாகச் சந்திரன் என்று ஒருவன் – ஆங்கிலம் படித்தவன் – இருக்கிறானே, தெரியுமா?” என்று கேட்டேன். தெரியாது என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராமலே அவன் போனான். இன்னொருவனிடம் நெருங்கி மெல்லக் கேட்டேன். “இப்படிச் சொன்னால் கண்டுபிடிக்க முடியுமா? இன்ன எசுடேட்டு என்று சொன்னால் வழி காட்டலாம். அங்கே போய்க் கேளுங்கள்” என்றான். மற்றொருவனையும் கேட்டுப் பார்த்தோம். பயன் இல்லை. “இன்னும் ஏதாவது ஒரு தேநீர்க் கடை இருக்கிறதா?” என்று வெளியே வந்து ஒருவரைக் கேட்டேன். “இருக்கிறது. தேநீர்க் கடைக்கு ஒரு குறைச்சலும் இல்லை. அதோ அரைக்கல் தொலைவில் தெரிகிறதே, அதுவும் ஒரு தேநீர்க் கடைதான்” என்று அதற்குச் செல்லும் பாதையும் காட்டினார். அவ்வழியாகச் சென்றோம்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue