Skip to main content

ஈழத்துச் சிறுகதை இலக்கியம் – தொடர்ச்சி: . மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

 அகரமுதல




(முன்னிதழ்த் தொடர்ச்சி)

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 13

அத்தியாயம்  5. சிறுகதை (தொடர்ச்சி)

 

3

1950 ஆம் ஆண்டுகள் ஈழத்துச் சமுதாய, அரசியல் வரலாற்றில் முக்கியமான காலக்கட்டமாகும். 1948 ஆம் ஆண்டு இலங்கை விடுதலை பெற்றதாயினும் தேசிய நலனை முன்வைத்த உண்மையான போராட்டம் 1950 ஆம் ஆண்டுகளில் தான் ஆரம்பித்தது. சமுதாய முரண்பாடுகளும், போராட்டங்களும் கூர்மையடைந்து அரசியல் வடிவம் பெறத் தொடங்கின. 1953 இல் நிகழ்ந்த அருத்தால் இன்னலுற்ற மக்களின் எழுச்சிக் குரலாக அமைந்தது. 1956 ஆம் ஆண்டின் அரசியல் மாற்றத்துக்கும் அது வழி கோலியது. தேசியச் சக்திகள் அரசியல் அரங்கில் ஆதிக்கம் பெற்றன. தேசியப் பண்பாட்டுணர்வு, சோசலிச சிந்தனை என்பன பொதுமக்கள் மயமாகத் தொடங்கின. அதேவேளை சிங்களத் தேசியவாதிகளின் தீர்க்கதாிசனமற்ற, சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளால் சிங்களம் மட்டும் அரசகரும மொழியாகியது. தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்க முடியாத பெரும் சிக்கலாக இது மாற்றியது. 1958 இல் நாடு பரந்த இனக்கலவரத்துக்கு இது வழியமைத்தது. ஒருபுறம் பொதுவுடைமை, தேசிய ஐக்கியம் முதலிய கருத்துகள் வளர்ச்சியடைய மறுபுறம் இன உணர்வு, இனவிடுதலைக் கொள்கை என்பன வலுப்பெறத் தொடங்கின.

இத்தகைய சமுதாய அரசியல் பின்னணியிலேயே ஈழத்துச் சிறுகதை இலக்கியத்தின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் உருவாகினர். வ.அ. இராசரத்தினம், செ. கணேசலிங்கன், டொமினிக்கு சீவா, கே.டானியல், எசு.பொன்னுத்துரை, காவலூர் இராசதுரை, நீர்வை பொன்னையன், என்.கே. ரகுநாதன்,பித்தன், அ.ச.அப்துமது, என்.எசு.எம். இராமையா, நந்தி, மு.தளையசிங்கம், கே.வி.நடராசன், அ. முத்துலிங்கம், இ.நாகராஜன், அகஸ்தியர், தௌிவத்தை ஜோசப் முதலியோர் இக் காலப் பகுதியில் சிறுகதை உலகில் பிரவேசித்தவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்களாவர். 60, 70 களில் இவர்களது சிறு கதைகள், பல தொகுப்பு நூல்களாகவும் வௌிவந்துள்ளன.

1950 ஆம் ஆண்டுகளில் தான் அரசியல் சார்பான இலக்கியப் பிாிவுகள் இலங்கையில் தோன்றின. இக்கால எழுத்தாளர்களை அவர்களின் அரசியல், இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் இரண்டு பிாிவுக்குள் அடக்கலாம். சமுதாய அரசியல் போராட்டங்களுடன் இலக்கியம் பிாிக்கமுடியாத உறவுடையது என்று கருதுவோர் ஒரு சாரார். இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள உறவினை மறுப்பவர்கள் அல்லது அது பற்றிய பிரக்ஞையற்றோர் மறுசாரார்.

செ. கணேசலிங்கன், டொமினிக் ஜீவா, டானியல், இரகுநாதன், காவலூர் இராசதுரை, நீர்வை பொன்னையன், அகத்தியர் முதலியோர் முதலாவது பிாிவுள் அடங்குவர். இவர்கள் மார்க்குசீய சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என்ற வகையில் சமுதாய அரசியல் பிரக்ஞை இவர்களின் கதைகளில் முனைப்பாகக் காணப்படுகின்றது. சமுதாய ஏற்றத் தாழ்வு, தொழிலாளர் போராட்டம், சாதி அடக்குமுறை, தீண்டாமை, வறுமை, சுரண்டல் ஆகியன இவர்களின் சிறு கதைகளில் காணப்படும் பொதுப் பொருள்களாகும். சுருக்கமாகச் சொல்வதானால் சமுதாய வருக்கங்களுக்கிடையே நடக்கும் போராட்டமே இவர்களது கதைப் பொருளாக உள்ளது.

அடிநிலை மக்களின் துயர் நிறைந்த வாழ்வும் ஆளும் வருர்க்கம் அவர்களைச் சுரண்டும் விதங்களும், புதுவாழ்வு ஒன்றினைப் போராடி வென்றெடுக்கும் வகையில் அவர்கள் விழிப்படைந்து வருவதும் இவர்கள் கதைகளில் சித்திாிக்கப்பட்டுள்ளன. இவர்களது கதைகளில் சமுதாய சீர்திருத்த நோக்குக்குப் பதிலாக சமுதாய அமைப்பை முற்றாக மாற்றி அமைக்கும் புரட்சிகர உணர்வே பொதுவாக வௌிப்பாடு பெற்றுள்ளது எனலாம். செ. கணேசலிங்கனின், சங்கமம், ஒரே இனம், நல்லவன்; டொமினிக் ஜீவாவின் பாதுகை, தண்ணீரும் கண்ணீரும், சாலையின் திருப்பம்; கே. டானியலின் டானியல் கதைகள், உலகங்கள் வெல்லப்படுகின்றன; ரகுநாதனின் நிலவிலே பேசுவோம்; நீர்வை பொன்னையனின் மேடும் பள்ளமும், உதயம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளிலே உள்ள பெரும்பாலான கதைகள் இதற்கு உதாரணங்களாகும். ஆயினும் சில வேளைகளில் இவர்களது அரசியல் உணர்வு கலாபூர்வமான வடிவ அமைதி பெறத் தவறி விடுவதையும் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாகக் கணேசலிங்கனின் பிற்காலக் கதைகளிலே இதை வௌிப்படையாகக் காணலாம். அவரது கொடுமைகள் தாமே அழிவதில்லை என்ற தொகுப்பில் உள்ள கதைகள் உருவச் சிதைவு அடைந்த பிரச்சாரமாகவே அமைந்துள்ளன.

காவலூர் இராசதுரை முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்தவர் எனினும் அவரது கதைகள் ஏனைய முற்போக்கு எழுத்தாளர்களின் கதைகளில் இருந்து ஒரு வகையில் வேறுபட்டவை எனலாம். இவரது பெரும்பாலான கதைகள் நகர்ப்புற மத்தியதர வருக்கத்தின் வாழ்க்கை அம்சங்களை உள்ளடக்கமாகக் கொண்டவை. அவர்களது மனப் போக்குகளையும் நடத்தைகளையும் துல்லியமாகச் சித்திாிப்பவை. இரு கூறுபட்ட வருக்க முரண்பாடுகள் இவரது கதைகளில் அதிகம் இடம் பெறுவதில்லை. அந்த வகையில் ஏனையோர் கதைகளில் காணப்படுவது போல் இவரது கதைகளில் அரசியல் அம்சம் வௌிப்படையாகத் தொிவதில்லை. இவருடைய குழந்தை ஒரு தெய்வம், ஒருவகை உறவு ஆகிய தொகுதிகளில் குறிப்பிடத் தகுந்த பல கதைகள் உள்ளன.

இரண்டாவது பிாிவைச் சேர்ந்த எழுத்தாளர்களுள் பல்வேறு சிந்தனைப்போக்கு உடையவர்கள் உள்ளனர். வ.அ. இராசரத்தினம், நந்தி, முத்துலிங்கம், கே. வி. நடராசன் முதலியோர் திட்டவட்டமான அரசியல் சிந்தனைப் போக்குகளைத் தங்கள் சிறுகதைகளில் வௌிக்காட்டாத போதிலும் சமுதாயவாழ்வின் பல்வேறு உள் முரண்பாடுகளையும் கலாசார அம்சங்களையும் மனிதாபிமான உணர்வுடன் அவற்றில் பிரதிபலித்துள்ளனர்வ.அ.வின் தோணி, நந்தியின் ஊர் நம்புமா, முத்துலிங்கத்தின் அக்கா, கே.வி. நடராசனின் யாழ்ப்பாணக் கதைகள் முதலிய சிறுகதைத் தொகுதிகள் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

50ஆம் ஆண்டுகளில் எழுதத் தொடங்கிய எசு.பொன்னுத்துரை, மு. தளையசிங்கம் ஆகியோர் 60, 70களில் முற்போக்கு இலக்கியத்தின் பிரதான எதிர் விமர்சகர்களாகவும் வளர்ச்சியடைந்தனர். எசு.பொ. ஈழத்துச் சிறந்த சிறுகதையாசிாியர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். உள்ளடக்கத்தைவிட உருவ பாிசோதனைக்கே இவர் முதல் இடம் கொடுப்பவர். பால் உணர்வின் வக்காிப்பினையே (Sexual Perversion) இவர் தன் கதைகளில் அதிகம் சித்திாித்துள்ளார். வீ என்ற பெயாில் வௌிவந்துள்ள இவரது சிறுகதைத் தொகுப்பில் புனைகதை எழுதுவதில் இவரது பல்வேறுவகையான ஆற்றல்களை வௌிக்காட்டும் நோக்கில் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தளையசிங்கத்தின் கதைகளில் பால் உணர்வும் ஆன்மீகத் தேடலும் பிரதான இடம் பெறுகின்றன. உருவச் செழுமை மிகுந்த பல கதைகளை இவர் படைத்துள்ளார். கஃப்கா, எமிங்குவே போன்ற மேலைத்தேச எழுத்தாளர்களின் செல்வாக்கு இவாிடம் உண்டு என இவரே குறிப்பிட்டுள்ளார். இவரது புதுயுகம் பிறக்கிறது ஈழத்தில் வௌிவந்த நல்ல சிறுகதைத் தொகுதிகளுள் ஒன்றாகும். 1960-65 காலப்பகுதிகளில் இவர் எழுதிய கதைகளே இத்தொகுதியில் உள்ளன.

பித்தன், அ.ச.அப்துசஸ்ஸமது ஆகியோர் கிழக்கிலங்கை முஸ்லீம்களின் வாழ்க்கைப் பின்னணியில் பல கதைகள் எழுதியுள்ளனர். பித்தன் குறைவாக எழுதி பிற்காலத்தில் எழுத்துலகில் இருந்து முற்றாக ஒதுங்கியபோதிலும் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் குறிப்பிடத்தகுந்த ஒருவராகக் கருதப்படுகின்றார். மதவாதிகளின் ஆசாடபூதித்தனத்தைக் குத்திக்காட்டும் இவரது பாதிக்குழந்தை ஒரு நல்ல சிறுகதையாகும். அப்துஸ்ஸமதின் எனக்கு வயது பதின்மூன்று என்ற சிறுகதைத் தொகுதி வௌிவந்துள்ளது. என்.எஸ்.எம். ராமையா, தௌிவத்தை ஜோசப் ஆகியோர் மலைநாட்டு மக்களின் வாழ்க்கையை உள்ளடக்கமாகக் கொண்டு பல நல்ல சிறுகதைகளை எழுதியுள்ளனர். 30 ஆம் 40 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பிரதேசத்தவர்களால் மட்டும் எழுதப்பட்ட சிறு கதை 50 ஆம் ஆண்டுகளில் இவ்வாறு நாடுபரந்த ஒர் இலக்கிய வடிவாக வளர்ச்சியடைந்தது.

50 ஆம் ஆண்டுகளில், இலங்கைத் தமிழர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்த இன உணர்வு கவிதைத் துறையில் செல்வாக்குச் செலுத்தியதுபோல் வசன இலக்கியத்தில் செல்வாக்குச் செலுத்தியதாகக் கூறமுடியாது. இனக்கலவரகால நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு பல சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன எனினும் அவை இன உணர்வைத் தூண்டும் விதத்தில் அன்றி மனிதாபிமான உணர்வைக் கிளறும் முறையிலேயே எழுதப்பட்டுள்ளன என்பது குடிப்பிடத்தக்கது. பொதுவாகக் கூறுவதானால் தேசியாீதியிலான சமுதாய அரசியல் இயக்கத்தின் இலக்கிய வௌிப்பாடாகவே இக்காலச் சிறுகதைகள் அமைந்தன எனலாம். தேசிய இலக்கியம் என்ற கோட்பாடு இக்காலப்பகுதியிலேயே வளர்ச்சியடைந்தது. வைத்தியலிங்கம், சம்பந்தன் முதலிய ஆரம்பகால எழுத்தாளர்கள் கால இடப் பிரக்ஞை அற்றும் இந்தியச் சூழலில் இந்தியக் கதாபாத்திரங்களைக் கொண்டும் கதைகள் எழுதியுள்ளார்கள். மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர்களும் பிரக்ஞைபூர்வமான தேசிய உணர்ச்சிகொண்டவர்கள் அல்லர். ஆனால் 50 களிலேதான் நமது மக்கள், நமது பிரச்சினைகள், நமது கலாச்சாரம், நமது மொழி என்பன இலக்கியத்தில் இடம் பெறவேண்டும் என்ற எண்ணம் கோட்பாட்டு ரீதியான வடிவம் பெற்றது. தேசிய இலக்கியம், மண்வாசனை இலக்கியம், முற்போக்கு இலக்கியம் என்ற கொள்கைகள் ஆதிக்கம் பெறத் தொடங்கின. இதுவே 50க்கு பிற்பட்ட ஈழத்து இலக்கியத்தின் பிரதான பொதுப் போக்காகவும் அமைந்தது. இவ்வாறு 1950 ஆம் ஆண்டுகளில் தோன்றிய எழுத்தாளர்களால் தான் ஈழத்துச் சிறுகதைகளில் யதார்த்தம் பூரண வடிவம் பெற்றது. பேச்சு மொழி பிரக்ஞைபூர்வமாகக் கையாளப்பட்டது. உருவஉத்திப் பாிசோதனைகள் இடம் பெற்றன. சிறுகதையின் உள்ளடக்கமும் உருவமும் வளம்பெற்றன.

(தொடரும்)

சிமௌனகுருமௌசித்திரலேகா & எம்நுஃமான்

 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்