ஈழத்துச் சிறுகதை இலக்கியம் – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
(முன்னிதழ்த் தொடர்ச்சி)
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 11
அத்தியாயம் 5. சிறுகதை
சிறுகதை, கைத்தொழில் நாகரிகத்தில் நவீனப்பட்டுவரும் சமூகத்துக்குாிய ஒரு புதிய இலக்கிய வடிவமாகும். 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் மேலைத் தேசங்களில் தோன்றி வளர்ந்த இவ்விலக்கிய வடிவம், ஆங்கிலேயர்களின் தொடர்பினாலும் அவர்களின் ஆதிக்கத்தினாலும் நவீன மாற்றங்களுக்குள்ளாகி வந்த தமிழர் சமூகத்தில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தோன்றியது. 1920ஆம் ஆண்டுகளில் பாரதியார் மொழிபெயர்த்த தாகூாின் சிறுகதைகளும், மாதவையா, வா.வே.சு.ஐயர் ஆகியோாின் சிறுகதைகளுமே தமிழில் இவ்விலக்கிய வடிவத்தை அறிமுகம் செய்தன. 1930 ஆம் ஆண்டுகளில் புதுமைப்பித்தன், கு.ப. இராககோபாலன். பிச்சமூர்த்தி, பி.எசு. இராமையா, மௌனி முதலிய எழுத்தாளர்கள் தமிழில் சிறுகதைக்கு ஒரு பூரண வடிவத்தைக் கொடுத்தனர்.
இலங்கையைப் பொறுத்தவரை 1930 ஆம் ஆண்டுகளின் பின் அரைவாசியிலேயே சிறுகதை தோன்றி வளரத் தொடங்கியது. ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகால ஆங்கில ஆட்சியின் பயனாக நமது சமூகத்தில் எற்பட்டுவந்த மாற்றங்களின் விளைவே இது எனலாம்.
“பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பண்பாட்டுத்துறை விழிப்பின் காரணமாக, மதத்துறை இலக்கியமே தமிழ், சிங்கள மொழிகளில் முக்கிய இடத்தைப் பெற்றுவந்தது. ஆனால், குடியேற்ற நாட்டாட்சி இலங்கையின் அரசியல், பொருளியல் வாழ்க்கையை நன்கு பீடித்திருந்தமையால், ஆங்கில மொழி மூலம் மேனாட்டு நாகரிகம் பரவிக்கொண்டே வந்தது. விவசாயப் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்பட்டு, ஆங்கிலக் கல்வியே ஊதியமூலமாக அமைந்த யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட இம்மாற்றம் மற்றத் தமிழ்ப் பகுதியாம் மட்டக்களப்பிலும் பார்க்க வேகமாகப் பரவிற்று. ஆங்கிலக் கல்வியுடன் புனைகதையும் பரவிற்று” என, கலாநிதி கா. சிவத்தம்பி இது தொடர்பாகத் “தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூலில் கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது.
புதிய சமுதாய மாற்றமும் ஆங்கிலக் கல்வியும் மட்டுமன்றி, தமிழக சஞ்சிகைகளினதும் சிறுகதை எழுத்தாளர்களினதும் செல்வாக்கும் இலங்கையில் சிறுகதை தோன்றுவதற்கான முக்கிய காரணியாக இருந்துள்ளது. ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவரான சி. வைத்தியலிங்கம் தனது சகாவான இலங்கையர்கோனை நினைவுகூர்ந்து எழுதிய, “இலங்கையர்கோனும் நானும்” என்னும் கட்டுரையில் குறிப்பிடும் பின்வரும் செய்திகள் இவ்வுண்மையை நன்கு தௌிவு படுத்துகின்றன.
“உன்னதமான இலட்சியங்களும் கனவுகளும் எங்கள் வாழ்க்கையில் நிரம்பி இருந்த நாட்கள் இவை. இலக்கியத்தைப் படிப்பதிலும், நாடகங்களைப் பார்ப்பதிலும், சங்கீத இரசனையிலும் எங்கள் இருவருக்கும் எப்பொழுதுமே பொிய ஆர்வம். எழுதவேண்டும் ஏதாவது சிருட்டிக்க வேண்டும் என்ற உணர்ச்சி என்றும் சிறகடித்துக்கொண்டிருக்கும் சோ. சிவபாதசுந்தரம், சோ. நடராசா, திருநீலகண்டன், இலங்கையர்கோன், நான் எல்லோருமே சேர்ந்து இலக்கியங்களை விமர்சனம் செய்வதிலும் அக்காலத்தில் எழுத்துலகில் பிரபலமாகி இருந்த சிறுகதையாசிாியர்களின் சிருட்டிகளைப் பற்றி ஆராய்வதிலும் கவனம் செலுத்தி வந்தோம். மணிக்கொடி பத்திாிகையின் புதிய பாணி இலங்கையர்கோனை முழுக்க முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டது. திரைப்படத்துக்கு வசனம் எழுதி இப்போது பிரபலியம் அடைந்திருக்கும் இளங்கோவனின் எழுத்துகளை அவர் எப்பொழுதும் புகழ்ந்து கொண்டே இருப்பார். அவருடைய வசனங்களையும் வருணனைகளையும் மனனம் செய்து எங்களுக்கு ஆவேசத்துடன் அடிக்கடி சொல்லி வருவார். அவ்வளவு தூரம் இளங்கோவனின் எழுத்து அவரைக் கவர்ந்திருந்தது. இந்த வெறியுடன் தான் இலங்கையர் கோன் எழுத்தில் மும்முரமாக ஈடுபட்டார் என்று நினைக்கின்றேன்.” இலங்கையர்கோன் மட்டுமன்றி அவரது சமகாலத்தவர் எல்லாரும் ஏதோ ஒரு வகையில் தமிழகப் பத்திாிகைகளாலும் எழுத்தாளர்களாலும் தூண்டுதல் பெற்றவர்களே எனலாம்.
இத்தகைய பின்னணியிலே 1930களின் பிற்பாதியில், சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், க.தி. சம்பந்தர், சோ. சிவபாதசுந்தரம் முதலியோர் இலங்கையில் பிரக்ஞை பூர்வமாக சிறுகதைத்துறையில் ஈடுபட்டார்கள். இவர்களுள் முதல் மூவரும் முக்கியமாகக் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்களே ஈழத்துச் சிறுகதையின் முன்னோடிகள், அல்லது முதல்வர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர். ‘இலட்சியக் கனவுகளும் எதையாவது எழுத வேண்டும் என்ற ஆர்வமும்’ இவர்களது படைப்பு முயற்சிகளுக்கு உட்தூண்டுதலாக அமைந்தன. கலைமகள், கிராம ஊழியன், சூறாவளி, மணிக்கொடி, ஆனந்த விகடன் முதலிய தென் இந்தியச் சஞ்சிகளில் இவர்களது சிறுகதைகள் வௌிவந்தன. ஈழகேசாியும் இவர்களது எழுத்து முயற்சிக்குக் களமாக அமைந்தது.
வைத்தியலிங்கம், சம்பந்தர், இலங்கையர்கோன் ஆகியோர் சமகாலத்தவர்கள் எனினும் முதல் இருவரும் 1940ம் ஆண்டுகளுக்குப் பின்னர் அதிகம் எழுதியதாகத் தொிய வில்லை. இலங்கையர்கோன் சிறுகதைத்துறையை விட்டு விலகி இருந்தாலும் தனது மரணத்துக்கு முந்திய சில ஆண்டுகளில் குறிப்பாக 1960-1961ஆம் ஆண்டுகளில் சிறுகதைப் படைப்பில் முழுமூச்சாக ஈடுபட்டவர். அந்த வகையில் ஏறத்தாழ முப்பது ஆண்டு கால இலங்கைச் சிறுகதை வரலாற்றோடு அவருக்கு உறவு உண்டு என்பதையும் நாம் மனம் கொள்ள வேண்டும்.
சி. வைத்தியலிங்கம் சுமார் இருபத்தைந்து கதைகள் வரை எழுதினார் என்று தொிய வருகின்றது, அவரது தொகுப்பு நூல்கள் எவையும் இதுவரை வௌிவராதிருப்பது ஈழத்து இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரை துரதிட்ட வசமானதே. ஆயினும் மூன்றாம் பிறை, கங்கா கீதம், பாற் கஞ்சி ஆகிய கதைகள் சில தொகுப்பு நூல்களில் வௌிவந்துள்ளன. நெடுவழி, பிச்சைக்காரர், அழியாப் பொருள், உள்ளப் பெருக்கு, இப்படிப் பல நாள், விதவையின் இருதயம், தியாகம், பைத்தியக்காாி, களனி கங்கைக் கரையில், மின்னி மறைந்த வாழ்வு, என் காதலி, நந்த குமாரன், டிங்கிாி மெனிக்கா, பூதத்தம்பி கோட்டை முதலியன அவர் எழுதிய வேறு சில கதைகள்.
க.தி. சம்பந்தரும் சுமார் இருபது கதைகள் வரை எழுதியுள்ளார் என்று தொிய வருகின்றது. அவரது கதைகள் எதுவும் தொகுப்பு நூலாக இதுவரை வௌிவரவில்லை. எனினும் 1967இல் இவரது ஐந்து சிறுகதைகள் விவேகி சஞ்சிகையில் ஒன்றாக வௌியிடப்பட்டன. விதி, மனிதன், புத்தாின் கண்கள், தாராபாய், துறவு, கூண்டுக்கிளி, தூமகேது, மனித வாழ்க்கை, சபலம், சலனம், அவள், இரண்டு ஊர்வலங்கள், கலாஷேத்திரம், மகாலட்சுமி முதலியன இவர் எழுதிய சில கதைகள்.
இலங்கையர்கோனின் பதினைந்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல் ஒன்று வெள்ளிப்பாதசரம் என்ற பெயாில் 1962ஆம் ஆண்டு அவாின் மனைவியின் முயற்சியால் வௌியிடப்பட்டது. ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவாின் படைப்புகளை மொத்தமாகத் திரட்டித்தரும் ஒரே நூல் இதுவே. இத் தொகுப்பில் இடம்பெறாத இவாின் வேறு சில கதைகளும் உள்ளன. வஞ்சம், சமாதானம், கடற்கரைக் கிளிஞ்சல், தேவலோகக் காதல், கடலிலே ஒரு மீன், அந்தத் தந்தி, தேவியும் தவமிருந்து, செங்காந்தள் முதலியன அவற்றுள் சில.
ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளான இம் மூவாின் கதைகளிலே அவர்களுக்கே உாிய தனித் தன்மைகளும், வேறுபாடுகளும் காணப்படுகின்றன எனினும் சில பொதுப் பண்புகளும் உள்ளன.
வரலாற்று இதிகாச நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு கதைகள் புனைதல் இக்காலப் பகுதிக்குரிய ஒரு பொதுப்போக்காகக் காணப்படுகின்றது. இலங்கையர்கோனே இத்தகைய கதைகளில் அதிக ஈடுபாடு காட்டினார் எனினும் ஏனையவர்களும் இதற்குப் புறம்பானவர்களல்லர். இலங்கையர்கோனின் அனுலா, மரியா மதலேனா, மேனகை, தாய், யாழ்பாடி, சிகிரியா, தேவலோகக் காதல், மணப்பரிசு, கடற்கோட்டை முதலிய கதைகள் வரலாற்று, இதிகாச நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவையே. வைத்தியலிங்கத்தின் நந்தகுமாரன், தியாகம், பூதத்தம்பி கோட்டை, சம்பந்தரின் புத்தரின் கண்கள் முதலியனவும் இத்தகைய படைப்புகளே, சில வேளைகளில் இவர்களது வரலாற்றுக்கதைகள் சிறுகதை உருவத்துக்குள் பிடிபடாத வரலாற்றுச் செய்திகளாகவே அமைந்து விடுகின்றன. இலங்கையர்கோனின் சிகிரியா, அனுலா, மரியா மதலேனா முதலியவை இவ்வாறு சிறுகதை வடிவ அமைப்புக்குப் புறம்பானவை.
தனி மனித இன்னல்களை அல்லது உணர்வு நிலைகளை சமுதாயப் பின்னணியில் வைத்து நோக்கும் யதார்த்தப் பண்பு பொதுவாக இவர்களது கதைகளில் காணப்படுவதில்லை. இலங்கையர்கோன், வைத்தியலிங்கம் ஆகியோாின் சில கதைகளிலே நடப்பியல் வாழ்வுடன் ஒட்டிய யதார்த்தப் பண்பு ஓரளவு காணப்படுகின்றது எனினும் பொதுவாக இவர்கள் ஒரு கற்பனையான கனவுச் சூழலிலேயே தங்கள் பாத்திரங்களை உலாவ விடுகின்றனர். சம்பந்தர் யதார்த்தப் பண்பை கொள்கைைரீதியாகவே நிராகாிப்பவராகவும் காணப்படுகின்றார்.
“யதார்த்தச் சித்திாிப்பால் நமது மனம் தூய்மையடைவதற்குப் பதிலாக மேலும் மோசம் அடைகின்றது. யதார்த்தம் என்பது பைத்தியக்காரத்தனம். இத்தகைய யதார்த்தப் பண்பில் எழும் தேசிய இலக்கியங்கள் சருவதேசிய இலக்கியங்களுக்கு ஒவ்வாதது-தேவை இல்லாதது.” என்ற சம்பந்தாின் கூற்றுக்கு ஏற்பவே
அவரது கதைகளும் யதார்த்தத்துக்குப் புறம்பான அழகிய கற்பனைச் சித்திரங்களாக உள்ளன. வைத்தியலிங்கத்தின் மூன்றாம் பிறை, உள்ளப் பெருக்கு, புல்லுமலையில் முதலிய கதைகளும் கற்பனையான உணர்வுப் பின்னல்களே. இலங்கையர்கோனின் வரலாற்று இதிகாசக் கதைகளும், நாடோடி, சக்கரவாகம், கடற்கரைக் கிளிஞ்சல் போன்றவையும் இத்தகையனவேயாகும். ஆயினும் மற்ற இவருடனும் ஒப்பு நோக்குகையில் நடப்பியலோடு ஒட்டிய யதார்த்தப் பண்பு, இலங்கையர்கோனிடம் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது எனலாம். ஆரம்பகாலக் கதைகளான முதற்சம்பளம்,வெள்ளிப்பாதரசம், தந்தைமனம் முதலியவையும் பிற்காலத் கதைகளான மச்சாள், அனாதை, தாழைநிழலிலே போன்றவையும் இத்தகையன. இவற்றுள் பிந்திய மூன்றும் 1960ஆம் ஆண்டில் எழுதப்பட்டவை என்பதையும் மனம்கொள்ள வேண்டும்.
ஆண்பெண் உறவு அல்லது பால் உறவையே இவர்கள் பொிதும் தங்களின் கதைப்பெருளாகக் கொண்டனர். சம்பவங்களை அல்லது பாத்திரங்களின் இயக்கங்களை விபாிப்பதைவிட உணர்வுநிலைக்கே அதிக அழுத்தம் கொடுத்தனர். அந்த வகையில் உணர்ச்சி மிகைப்பு இக்காலக் கதைகளில் ஒரு பொதுப் பண்பாகவும் உள்ளது. உணர்ச்சி மிகைப்பை வௌிப்படுத்துவதற்கு காவியப்பாங்கான அலங்கார மொழி நடை அவசியமாகும். இக்காலக் கதைகள் பொிதும் இத்தகைய மொழி நடையிலேயே அமைந்துள்ளன. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் ஆகியோாின் சில கதைகளிலே வழக்குத்தமிழ் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது எனினும் அது அவர்களின் பிரக்ஞைபூர்வமான இலக்கியக் கொள்கையின் வௌிப்பாடு என்று கருதுவதற்கில்லை. இக்காலத்தில் எழுந்த பெரும்பாலான கதைகளில் விபரணத்திலும் உரையாடலிலும் காவியப்பாங்கான மொழிநடையே பயன்படுத்தப்பட்டுள்ளது. வைத்தியலிங்கத்தின் புல்லுமலையில் என்ற கதையில் வரும் பின்வரும் உரையாடலை இதற்கு ஒரு உதாரணமாகத் தரலாம்.
“குமு, அதோபார்! முழுநிலா, புல்லுமலையைத் தழுவி முத்தமிட வந்தது. எங்களைக் கண்டதும் நாணத்தால் முகம் சிவந்து தயங்கிநிற்கிறது. . . . .”
“என்ன, நீங்கள் என்னைப் பார்க்க வந்தீர்களா அல்லது புல்லுமலையையும் சந்திரனையும் பார்க்க வந்தீர்களா?”
“குமு இந்த நிலாவும், புல்லுமலையும், இளந் தென்றலும் இல்லாவிடில் நீ ஏது? நான் எப்படி இங்கு வந்திருப்பேன்? இந்தப் புல்லுமலையல்லவா உன்னைப் பெற்று வளர்த்த தாய்?”
இந்த உரையாடல் பகுதியிலே உணர்ச்சி மிகைப்பும். அலங்கார நடையும் ஒன்றிணைந்து இருப்பதை நாம் காணலாம்.
Comments
Post a Comment