Skip to main content

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 19

 அகரமுதல




(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 18. தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்
அத்தியாயம்  7 தொடர்ச்சி


தூங்கிக் கொண்டிருந்த கமலாவுக்கு இடையூறில்லாமல் மேசை விளக்கைப் போட்டுக் கொண்டு அரவிந்தனின் ஏட்டுப் புத்தகத்தைப் பிரித்தாள் பூரணி. கடிகாரத்தின் டிக் டிக் ஒலியும், ‘ஙொய்’ என்று சுவர்க்கோழிக் குரலுமாகக் கமலாவின் வீட்டுக் கூடத்தில் இருள் அணையிட்டுக் கொண்டு நின்றது. மேசை விளக்கைச் சுற்றி மட்டும் வெண் நில மின்னொளி, மாவைக் கொட்டின மாதிரி பரவியிருந்தது. ஏறக்குறைய இரண்டரை மணி வரையில் அந்த மேசை விளக்கு அணையவில்லை.

படிக்கப் படிக்க ஆச்சரியமாக இருந்தது பூரணிக்கு. அரவிந்தன் என்ற அறிவுத் துடிப்பு மிகுந்த இளைஞன், வாழ்க்கையில் விதவிதமான வண்ணங்களைத் தான் கண்டு கேட்டு உணர்ந்த அனுபவத்தோடு தீட்டியிருந்தான். அந்த அனுபவக் குறிப்புகளும் தோன்றிய போதெல்லாம் எழுதப்பட்ட கவிதைகளும் இடமும் நிறமும் பொருந்தும்படி நன்றாக வரையப்பட்டிருந்தன. யாருக்கும் தெரியாமல் புதையல் வைத்திருப்பவன் அதைத் தனிமையில் திறந்து பார்த்து மகிழ்கிற மாதிரி அரவிந்தனின் அனுபவங்களைப் படித்து மகிழ்ந்தாள் பூரணி. தான் மயங்கி விழுந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அவன் எழுதியிருந்த கவிதை வரிகளைப் படித்தபோது தான், மாலையில் ‘நீங்கள் தெருவில் மயங்கி விழுந்துவிட்டால் அதற்கு உலகமெல்லாம் பிணை என்று நினைத்துச் சீறவேண்டியதில்லை’ என்று அவன் கூறியதன் காரணம் அவளுக்கு விளங்கியது. ஓர் இடத்தில் மனம் கொதித்து வெறி கொண்டாற் போன்று சில வாக்கியங்கள் எழுதியிருந்தான் அரவிந்தன்.

“தமிழ்நாட்டின் இன்றைய வாழ்க்கையில் காவியம் இல்லை. வயிற்றுப் பசிதான் இருக்கிறது. ஏமாற்றங்கள் தான் இருக்கின்றன. வேதனைகள் தான் இருக்கின்றன. சிக்கல் விழுந்த நூற்சுருளில் முதல் எங்கே? முடிவு எங்கே? என்று தெரியாத மாதிரி இந்தப் பிரச்சினைகள் எதிலிருந்து தோன்றின? எதனால் தீர்க்க முடியும்? ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு காலத்தில் வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தன. இப்போது பிரச்சினைகளில் வாழ்வு இருக்கிறது. ஒரு காலத்தில் வாழ்க்கையில் எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் இருந்தன. இன்றோ அவநம்பிக்கைகளுக்கும் சந்தேகங்களுக்கும் நடுவில்தான் வாழ்க்கையே இருக்கிறது. இன்று நகரங்களில் இதயங்களும், அவற்றையுடைய மனிதர்களும் வாழவில்லை. இரும்பும் பிளாசுடிக்கும் வாழ்கின்றன. தெருவோரங்களில் குப்பைகளையும் தூசிகளையும்போல உயிருள்ள மனிதர்களும் விழுந்துகிடக்கிறார்கள். இந்த வாழ்க்கையை எப்படி மாற்றியமைப்பது? ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம்’ என்று கவி பாடலாம். ஆனால் வாழ்க்கையில் அந்த விதி இன்னும் வரவில்லையே! மூட்டைப் பூச்சி மருந்தையும், மயில் துக்கத்தையும் தின்று மனிதர்கள் அல்லவா புழுப்பூச்சிகள் போல் அழிந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.”

இந்தச் சில வாக்கியங்களில் அரவிந்தனின் உள்ளம் அவளுக்குப் புரிந்தது. தன்னைப் போலவே தனக்கு மிக அருகில் இந்த நாட்டு வாழ்க்கைப் பிரச்சினைகளை எண்ணி ஓர் ஆண் உள்ளமும் துடித்துக் கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள். அரவிந்தனின் அழகும், அறிவும், குணமும், குறிக்கோளும் அவளைக் கவர்ந்தன. இப்படிப்பட்ட இலட்சியவாதியிடமா அந்த மாதிரிச் சீறி விழுந்து துரத்தினேன்? என்று நினைத்துத் தன்னைத் தானே நொந்து கொண்டாள் அவள். காலடியிலே மென்மையும், மணமும் மிக்க பூ ஒன்றை மிதித்து நசுக்கி விட்டாற் போல் வேதனையாக இருந்தது அவளுக்கு. அரவிந்தனுடைய கொள்கைகளின் கம்பீரம் மதுரைக் கோபுரங்களைப் போல் பெரிதாய், உயரமாய் அவள் மனத்தில் கால் ஊன்றி நின்று கொண்டன.

அந்த ஏட்டுப் புத்தகத்தைக் கண்களில் ஒற்றிக்கொண்டு மேசைமேல் வைத்துவிட்டு விளக்கை அணைத்தாள். பூரணியின் உடலில் உறக்கமும் உள்ளத்தில் அரவிந்தனும் குடிகொண்டு ஆளத் தொடங்கினர். இருட்டில் நீண்ட நேரமாகக் கைகளால் துழாவித் தேடிக்கொண்டிருந்த பொருள் கிடைத்துவிட்டது போல் அரவிந்தன் என்னும் இனிய தத்துவத்தைப் புரிந்து கொண்டு விட்ட மகிழ்ச்சி அவளுக்கு.

தூக்கத்தில் இதழ்கள் நெகிழ சிரித்தது அவள் முகம். இனிமையான கனவு ஒன்று கண்டாள் அவள். அரவிந்தன் அவளுடைய கையைப் பற்றி அழைத்துக் கொண்டு போகிறான். இரண்டு பேரும் திருப்பரங்குன்றம் மலை மேல் ஏறுகிறார்கள். வெள்ளி நெகிழ்ந்து உருகிய குளம்போல் வானில் முழுநிலவு உலா வருகிறது. நல்ல காற்று வீசுகிறது. இந்த மாதிரி ஒரு காதல் சோடியைக் காண்பதற்கென்றே ஊழி ஊழியாகத் தவம் செய்து வானில் காத்துக் கொண்டிருந்தவை போல் நட்சத்திரங்கள் கண் நிறையக் குறும்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன. கந்தர்வப் பெண்கள் தத்தம் காதலனைச் சந்திக்கப் போகிற விரைவில் நழுவவிட்ட வெள்ளைச் சல்லாத் துணிகளைப் போல் அங்கங்கே நிலவொளிரும் நீலவானிடையே வெண் மேகங்கள் தெரிகின்றன.

“பூரணி! இந்த வானிலும், நிலவிலும் மென் சீதக் காற்றிலும் காவியம் இருக்கிறது. அழகு இருக்கிறது. இவையெல்லாம் உனக்காகவும் எனக்காகவும் இருக்கின்றன” என்று அவள் காதருகில் புன்னகையோடு சொல்கிறான் அரவிந்தன். அந்தப் புன்னகையில் நயங்கள் பொலிகின்றன.

“இல்லை, அரவிந்தன். நீங்கள். . . பொய் சொல்கிறீர்கள். உலகத்தில் காவியம் இல்லை; வயிற்றுப் பசிதான் இருக்கிறது. பூரிப்பு இல்லை; பெருமூச்சுக்கள்தான் இருக்கின்றன.” பூரணி அரவிந்தனை மறுக்கிறாள்.

“நீ மண்ணைப் பற்றிப் பேசுகிறாய்! நாம் இப்போது மலை மேல் இருக்கிறோம். உயரத்தில் இருக்கும் போது மனத்தைக் கீழே போகவிடாதே.”

“அழகு மேலே இருக்கலாம்; ஆனால் வாழ்க்கை கீழேதான் இருக்கிறது அரவிந்தன்!”

இப்படி இன்னும் என்னென்னவோ பேசிக்கொள்கிறார்கள் இருவரும். மலைமேல் ஏற ஏறப் பூரணிக்குக் கால் வலிக்கிறது. அரவிந்தனின் சுந்தரமணித் தோள் மீது கையை வைத்துக் கொண்டு தடுமாறி விழாமல் நடக்கிறாள் அவள்.

“அதோ எதிரே தொலைவில் பல நிறத்து வைரக் கற்களை அள்ளி இறைத்த மாதிரி விளக்குகள் தெரிகின்றனவே. அதுதான் மதுரை” என்று அரவிந்தன் சொல்கிறான். அவள் பார்ப்பதற்காக நிமிர்ந்து திரும்புகிறாள். கீழே கால்கட்டை விரல் மலைப்பாறையில் எற்றிவிடுகிறது. இரத்தம் கசிந்து விரல் மாதுளைப் பூவாக மாறுகிறது. அரவிந்தன் குனிந்து அந்த விரலைப் பற்றுகிறான். அவன் கையெல்லாம் சிவப்பாகின்றது. துணியைக் கிழித்துச் சுனை நீரில் நனைத்துக் கட்டுப் போடுகிறாள்.

“உங்கள் கையெல்லாம் இரத்தமாகிவிட்டதே! கழுவிக் கொள்ளுங்கள்.”

“எதற்காகக் கழுவவேண்டும்? இந்த இரத்தத்தால் உலகத்துப் பெண் குலத்தின் துன்பக் காவியத்தை எழுதிவிடப் போகிறேன் பூரணி” என்று சிரித்துக் கொண்டே சொல்கிறான் அரவிந்தன்.

பூரணி கனவிலிருந்து விழித்துக் கொள்கிறாள். கால் கட்டை விரலில் உண்மையாகவே வலித்தது. ஈரம் கசிவதுபோல் ஒரு பிரமையும் உணர்வில் ஏற்பட்டது. எழுந்திருந்து விளக்கைப் போட்டுப் பார்த்தாள். சுவரோரமாக இருந்த காய்கறி நறுக்கும் அரிவாள் மணையில் கட்டைவிரல் உரசியிருந்தது. விளக்கைப் போட்ட ஓசையில் கமலாவும் விழித்துக் கொண்டாள்.

“என்னடி பூரணி?”

“தூக்கத்தில் அரிவாள்மணை இருந்த பக்கம் காலைப் போட்டுவிட்டேன் போலிருக்கிறது.”

“அடிபாவி! பார்த்து படுத்துக் கொள்ளக்கூடாதோ? இன்னும் கொஞ்ச நேரம் விழித்துக் கொள்ளாமலிருந்திருந்தால் கட்டை விரலே போயிருக்குமே?” என்று சினந்து கூறிக்கொண்டே எழுந்து ஓடி வந்தாள் கமலா. வெட்டுப்பட்ட இடத்தில் சிறிது ஈரச் சுண்ணாம்பு தடவித் துணியைச் சுற்றினாள்.

விட்ட கனவு மறுபடியும் தொடராதா என்ற ஏக்கத்தோடு படுத்துக் கொண்டாள் பூரணி.

காலையில் பூரணியும் கமலாவும் சரவணப் பொய்கைக்குக் குளிக்கச் சென்றார்கள். போகும்போது பூரணிக்குக் குடியிருக்க இடம் பார்ப்பதற்காக இரண்டு மூன்று பெரிய ஃச்டோர்களுக்குப் போய் விசாரித்தாள் கமலா. பெரிய இரத வீதியில் மூன்று அறைகளும் கிணறும் வசதியாக அமைந்து தெற்கு நோக்கி வாசலுள்ள சிறிய வீடு ஒன்று கிடைத்து விட்டது. மாதம் பதினெட்டு ரூபாய் வாடகை. பூரணிக்காக தன் கையிலிருந்து வீட்டுக்கு முன்பணம் கொடுத்தாள் கமலா. பத்து இருபது குடிகளுக்கு நடுவே மாட்டிக் கொள்ளாமல் சிறிதாக இருந்தாலும் தனி இடமாகக் கிடைத்ததே என்று பூரணி மன நிறைவு பெற்றாள். இடம் கமலாவின் வீட்டிற்கு அருகிலும் இருந்தது. அவர்கள் இருவரும் குளித்துவிட்டு ஈரப்புடவையோடு திரும்பினார்கள். கமலாவின் வீட்டு வாசல் திண்ணையில் ஓதுவார்க்கிழவர் காத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அரவிந்தனைக் கண்டதும் பூரணி தலைகுனிந்து கொண்டே ஒதுங்கி நடந்து உள்ளே சென்றாள்.

“பூரணி! இவர் உன்னைப் பார்க்க வேண்டுமென்று அங்கே வீட்டுக்குத் தேடிக் கொண்டு வந்தார். நீயும் குழந்தைகளும் இங்கே வந்திருப்பதாகக் காமு சொன்னாள். அதுதான் இவரை இங்கே அழைத்துக் கொண்டு வந்தேன் அம்மா.”

“கொஞ்சம் இருக்கச் சொல்லுங்கள் தாத்தா! இதோ வந்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு விரைந்து உள்ளே மறைந்தாள் பூரணி.

“நேற்று வந்தபோது அந்த வீட்டு வாசல் திண்ணையில் என்னுடைய ஏட்டுப் புத்தகம் ஒன்றை மறந்து போய் வைத்துச் சென்றுவிட்டேன். அதை வாங்கிக் கொண்டு போகலாமென்று தான்” என்று அரவிந்தன் எழுந்து நின்று கொண்டு சொன்னதும் உள்ளே போகிற வேகத்தில் அவளுக்குக் கேட்டது. இரவில் கண்ட கனவை நினைத்துக் கொண்டாள். உடைமாற்றிக் கொண்டு அவ்வேட்டுப் புத்தகத்தோடு அவள் வெளியே வந்தாள்.

அவள் வெளியே வந்த போது, ஓதுவார்க்கிழவர் கோயிலுக்குப் போயிருந்தார். அவருக்குக் கோயிலில் தேவாரம் பாடுவதற்குப் போக வேண்டிய நேரம். தனியாக உட்கார்ந்திருந்த அரவிந்தன், ஏட்டுப் புத்தகமும் கையுமாக அவளைப் பார்த்ததும் வாங்கிக் கொள்வதற்காகக் கை நீட்டிக் கொண்டு எழுந்திருந்தான். பூரணி அதை அவன் கையில் கொடுத்துவிட்டு, “உட்காருங்கள், எனக்கு உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். உங்களுக்கு அவசரம் ஒன்றுமில்லையே” என்று கேட்டாள்.

‘இந்த ஏட்டுப் புத்தகத்தை இவள் படித்திருப்பாளோ?’ என்று கூசித் தயங்கிக் கொண்டே கையில் வாங்கிய அரவிந்தன், அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு இன்னும் கூச்சம் அடைந்தான். ‘இவள் மயங்கி விழுந்தது பற்றி நான் இதில் எழுதியிருப்பதையெல்லாம் படித்திருப்பாள் போலிருக்கிறது. அது சம்பந்தமாகத்தான் தன்னை ஏதாவது கேட்பாள்’ என்று எண்ணி வெட்கமும் தயக்கமுமாக மீண்டும் திண்ணையில் உட்கார்ந்தான். பனித்துளி நீங்காத செந்தாமரைப் பூப்போல் குளித்த ஈரம் புலராமல் தென்படும் அந்த முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தான் அரவிந்தன். அந்த முகத்தில் தான் அவனுடைய கவிதைகள் பிறந்தன. அந்த முகத்துக்குத்தான் இலட்சிய வெறியும், கவிப்பித்தும் கொண்ட அவள் மனம் இளகி நெகிழ்ந்தது. அந்த முகத்தில் அப்படி என்னதான் இருக்குமோ?

“நேற்று உங்களிடம் என்னென்னவோ சொல்லி ஆத்திரமாகப் பேசிவிட்டேன். அதற்காக முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.” மன்னிப்புக் கேட்கும் பணிவான இனிய குரலைக் கேட்டான் அரவிந்தன். அவனுடைய கூச்சம் நீங்கிச் சற்றே துணிவு வந்தது. நன்றாக நிமிர்ந்து நேராகவே அவள் முகத்தைப் பார்த்தான். பூரணியும் பார்த்தாள். கருத்தால் கவர்ந்து கண்விழிப் புகுந்து கனவெல்லாம் அளித்த குறுநகைக் கள்வனைத் தன் விழிகளால் பருகினாள். கல்பகோடி காலமாக அந்தப் பார்வைக்காகக் காத்திருந்தது போல் ஓர் அன்பின் தாகம் அந்த நான்கு கண்களிலும் தெரிந்தது.

“உங்கள் ஏட்டுப் புத்தகத்தை முழுவதும் நான் படித்தேன். அதற்காகவும் மன்னிக்க வேண்டும்!”

“பரவாயில்லை! அது ஒன்றும் அப்படி மன்னிக்க வேண்டிய பெரிய குற்றமில்லை. ஏதோ எனக்குத் தோன்றியதையெல்லாம் கிறுக்கி வைத்திருக்கிறேன்.”

“எல்லாம் நன்றாக இருந்தன. விடிய விடிய அவற்றைத் தூக்கம் விழித்துப் படித்தேன் நான்.”

“அப்படியா? உங்களைப் பற்றிக்கூட ஏதோ கிறுக்கியிருந்தேன்.”

“அதையும் பார்த்தேன்.”

“தப்பானால் நானும் உங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியவன் தான்!” அரவிந்தன் தனக்கே உரிய குறுநகையோடு பூரணியின் முகத்தை நோக்கிக்கொண்டே இப்படிச் சொன்னான். அரவிந்தனுடைய சிரிப்புக்கு, எதிரே நின்று பேசுகிறவர்களையும் சிரிக்க வைக்கும் ஆற்றல் உண்டு. பூரணியும் சிரித்தாள். சிரித்துக் கொண்டே சொன்னாள்:

“அப்பாவின் புத்தகங்களை நீங்கள் வெளியிடலாம். உங்கள் ஏட்டுப் புத்தகத்தைப் படித்த பின் இந்த முடிவுக்கு வந்து விட்டேன் நான். உங்களை நான் நம்புகிறேன். முகவரி கொடுத்து விட்டுப் போனால் நானே நாளை உங்கள் அச்சகத்துக்கு வருகிறேன்.”

“நீங்கள் இந்த நல்ல முடிவுக்கு வந்ததற்கு என் நன்றி. இதோ முகவரி” என்று முகவரி அட்டையை எடுத்துக் கொடுத்தான் அரவிந்தன். அவன் விடைபெற்றுப் போகும்போது, தன் உள்ளத்தைப் பூரணியிடம் விட்டு, அவள் உள்ளத்தைத் தன்னோடு கொண்டு போய்விட்டானா, என்ன?

அன்றைக்கு மாலையே புதிதாகப் பார்த்திருக்கும் வீட்டிற்குச் சாமான்களை மாற்றி விடுகிற திட்டத்தோடு மூன்று மணி சுமாருக்கு ஒரு வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு திருநாவுக்கரசுடனும், கமலாவுடனும் பழைய வீட்டுக்குப் போனாள் பூரணி. ஆனால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. பழைய வீட்டில் சாமான்களை ஒழிக்கத் தொடங்கிய சிறிது நேரத்துக்கெல்லாம் மங்களேசுவரி அம்மாள் அவசரமாகக் காரில் வந்து இறங்கி முக்கியமான காரியமென்று கூறி பூரணியைத் தன்னுடன் மதுரைக்கு அழைத்துப் போய்விட்டாள்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்