Skip to main content

ஈழத்துச் சிறுகதை இலக்கியம் – தொடர்ச்சி: மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

 அகரமுதல




(முன்னிதழ்த் தொடர்ச்சி)

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 14

 

4


1950 ஆம் ஆண்டுகளின் சிறுகதைப் போக்குகள் 60 ஆம் ஆண்டுகளிலும் தொடர்ந்து வளர்ச்சி அடைவதைக் காணலாம். உண்மையில் 50 களில் அரும்பிய போக்குகள் 60 களில் முதிர்ச்சி அடைந்தன என்று கொள்வதே பொருத்தம். 50 களில் தோன்றிய எழுத்தாளர்கள் பலர் 60 களிலேயே அதிக ஆற்றலுடன் எழுதத் தொடங்கினர். புதிய எழுத்தாளர்கள் பலர் எழுத்துலகில் புகுந்தனர்.

1956இல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து இடதுசாாிச் சிந்தனைப் போக்கின் செல்வாக்கு 60 ஆம் ஆண்டுகளில் ஆழமாகவும் பரவலாகவும் ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் இடம் பெறத் தொடங்கிற்று. இதேகாலப் பகுதியில் பன்னாட்டு வழி முறையில் பொதுவுடைமைக்  கட்சிகளில் ஏற்பட்ட சித்தாந்தப் பிளவு இலங்கையையும் பாதித்தது. ‘சமாதானம் மூலம் சமூகமாற்றம்’ என்ற திாிபுவாதக் கருத்தை எதிர்த்து ‘புரட்சியின் மூலம் சமூகமாற்றம்’ என்ற புரட்சிகரக் கருத்தை முன்வைத்தவர்கள் இலங்கைப் பொதுவுடைமைக் கட்சியில் இருந்து தனியாகப் பிாிந்து சென்றனர். முற்போக்கு எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் அவர்களுடன் சேர்ந்தனர். பல்கலைக் கழகங்களில் சமவுடைமை(சோசலிச)ப் படிப்பு வட்டங்கள் உருவாகின. 1956க்குப் பின் நடைமுறைக்கு வந்த சுயமொழிக் கல்வியினால் உருவாகிய பட்டதாரி மாணவர்கள் பலர் இவ்வியக்கங்களால் ஈர்க்கப்பட்டனர். அவர்களுள் சிலர் சிறுகதை ஆசிாியர்களாகவும் உருவாகினர். செ. யோகநாதன், யோ.பெனடிக்குபாலன், செ.கதிர்காமநாதன், முத்து சிவஞானம் போன்றோர் இவ்வாறு பல்கலைக் கழகத்தில் இருந்து புரட்சிகர இடதுசாாிச் சிந்தனைப்போக்கின் செல்வாக்குடன் வளர்ச்சியடைந்த சிறுகதையாசிாியர்களாவர். செம்பியன் செல்வன், செங்கையாழியான் பவானி ஆழ்வாப்பிள்ளை முதலியோரும் பல்கலைக்கழகத்தில் இருந்து இக்காலப் பகுதியில் உருவாகியவர்களே.மருதூர்க் கொத்தன், மருதூர்க் கனி, சண்முகம் சிவலிங்கம், புலோலியூர் சதாசிவம் போன்ற வேறு சிலரும் 60 களில் சிறுகதைத் துறையை வளப்படுத்தினர்.

ஆரம்பத்தில் சிறுகதைகளே எழுதிய யோகநாதன் பிற்காலத்தில் குறுநாவல்களில் அதிக அக்கறை காட்டியுள்ளார். இவரது யோகநாதன் கதைகள் என்ற நூல் குறிப்பிடத் தகுந்த சிறுகதைத் தொகுப்பு ஆகும். காவியத்தின் மறுபக்கம், ஒளி நமக்கு வேண்டும் ஆகிய குறும்புதினத் தொகுப்புகளும் வௌியிட்டுள்ளார். உண்மையில் இவற்றுள் சில சிறுகதைகளாகவே கருதப்பட வேண்டியன. அண்மையில் கண்ணீர் விட்டே வளர்த்தோம் என்ற இவரது சிறுகதைத் தொகுப்பும் வௌிவந்துள்ளது. யோ.பெனடிக்கு பாலனின் சிறுகதைகள் நூல் உருவம் பெறவில்லை. ஓரே லயக் காம்பராவில் என்ற இவரது கதை மலையகத் தோட்டத் தொழிலாளாின் வாழ்க்கை நொிசலைத் தாக்கமான முறையில் சித்திாிக்கின்றது. இக் கதையே இவரது சொந்தக்காரன் புதினத்தின் வித்து எனலாம். கருத்துகளை அழுத்திச் சொல்வதற்குச் சிறுகதையை விட குட்டிக்கதை சிறந்த வடிவம் என்று கருதுவதால் போலும் இவர் பிற்காலத்தில் அதிகமாகக் குட்டிக் கதைகளே எழுதியுள்ளார். இவரது குட்டிக் கதைகள் தனிச்சொத்து என்ற தொகுப்பாக வௌிவந்துள்ளன.

செ. கதிர்காமநாதன் சுயமாக எழுதியது மட்டுமன்றி பிரபல இந்திய முற்போக்கு எழுத்தாளர் கிசன்-சந்தாின் சில சிறுகதைகளை மொழி பெயர்த்தும் உள்ளார். ஆற்றல் உள்ள சிறுகதைப் படைப்பாளியான இவர் இளம் வயதிலேயே இறந்து போனது இலங்கைச் சிறுகதைத் துறைக்கு  ஓர் இழப்பேயாகும். இவரது கொட்டும் பனி சிறந்த சிறுகதைத் தொகுப்பு. கிசன்-சந்தாின் மொழி பெயர்ப்புக் கதையை உள்ளடக்கிய நான் சாக மாட்டேன் என்பதும் குறிப்பிடத் தகுந்த ஒரு நூல் ஆகும்.

செம்பியன் செல்வன், செங்கையாழியான், புலோலியூர் சதாசிவம் ஆகியோர் யாழ்ப்பாணக் கிராமிய மக்களின் வாழ்க்கையை உள்ளடக்கமாகக் கொண்ட பல கதைகளைப் படைத்துள்ளனர். செங்கையாழியான் பிற்காலத்தில் புதினங்களிலேயே அதிகக் கவனம் செலுத்தியுள்ளார். இவரது கதைகள் செங்கையாழியான் கதைகள் என்ற பெயாில் நூல் உருப் பெற்றுள்ளன. செம்பியன் செல்வனின் அமைதியின் இறகுகள், சதாசிவத்தின் யுகப்பிரவேசம், பவானியின் கடவுளருளும் மனிதரும் ஆகிய நூல்களும் வௌிவந்துள்ளன. மருதூர்க் கொத்தன், மருதூர்க்கனி ஆகியோர் மருதமுனைக் கிராமத்து முசுலீம்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதைகள் படைத்துள்ளனர். மருதூர்க் கொத்தன் இக்காலப்பகுதியில் தோன்றிய சிறந்த சிறுகதையாசிாியர்களுள் ஒருவராவர். இவரது கதைகள் இன்னும் நூல்உருப் பெறவில்லை. சண்முகம் சிவலிங்கம் மிகக் குறைவாக எழுதி அதிக கவனத்தைக் கவர்ந்த ஒரு படைப்பாளி. இவரது கதைகள் பெரும்பாலும் சுயதாிசன வௌிப்பாடாக உள்ளன. ஈழத்துச் சிறுகதையுலகில் இத்தகைய படைப்புக்கள் மிக அபூர்வமாகும். இவ்வகையில் இவரது மழை, நீக்கம் முதலிய கதைகள் குறிப்பிடத் தக்கன.

5


1970 ஆம் ஆண்டுகளில் மேலும் ஒரு புதிய இளம் தலைமுறையினர் சிறுகதை உலகில் புகுந்தனர். அ. யேசுராசா, குப்பளான் சண்முகம், ஐ.சாந்தன், அ.லெ.முருகபூபதி, திக்வல்லை கமால், எம்.எல்.எம். மன்சூர், டானியல் அன்ரனி, நந்தினி சேவியர், முத்துராசரத்தினம், எசு.எல்.எம். அனிபா, மண்டூர் அசோகா, சிறிதரன், சட்டநாதன் தெணியான், உமா வரதராசன் முதலியோர் குறிப்பிடத்தகுந்த சமகாலச் சிறுகதையாசிாியர்களாவர். இவர்களிற் சிலாின் படைப்புகள் மூலம் இலங்கைத் தமிழ்ச் சிறுகதையின் உருவம், உள்ளடக்கம், மொழி நடை ஆகியவற்றில் சில புதிய போக்குகள் வௌிப்படத் தொடங்கியுள்ளன.

நகரமயமாதலின் அல்லது முதலாளித்துவ சமுதாய முதிர்ச்சியின் அடிப்படையில் ஏற்படும் தனிமனித அக உளைச்சல்களும், அன்னிய மாதலும் (alienation) இக்காலப் பகுதியில் தோன்றிய சில சிறுகதைகளில் சிறப்பாக வௌிப்பாடு பெற்றுள்ளன. யேசுராசாவின் ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது. குப்புளான் சண்முகனின் எல்லைகள், இலுப்பமரமும் இளம்சந்ததியும்; மன்சூாின் முரண்பாடுகள், சிறிதரனின் நிருவாணம் முதலிய கதைகள் இப்பண்புக்குச் சிறந்த உதாரணங்களாகும். இக்கதைகளில் சமூகத்தோடு, அல்லது வீட்டோடு ஒட்டமுடியாது அன்னியப்பட்டுச் செல்லும் இளைஞர்களைக் காண்கிறோம். இது ஈழத்துச் சிறுகதையின் ஒரு புதிய பாிமாணம் எனலாம்.

மரபு ரீதியான சிறுகதை வடிவத்தில் இருந்து வேறுபட்ட கதைகளையும் இவர்களில் சிலர் புனைந்துள்ளனர். சாந்தன் யேசுராசா ஆகியோாின் பல கதைகள் இத்தகையன. அவை பெரும்பாலும் அளவில் சிறிய நினைவுச் சித்திரங்களாக அல்லது அனுபவ வௌிப்பாடாக அமைந்துவிடுகின்றன. தென் இலங்கை முசுலீம்களின் வாழ்வும் பேச்சு வழக்கும் இக்காலப் பகுதியிலேயே சிறுகதைகயில் இடம் பெறத் தொடங்கின. திக்வல்லைக் கமால் போன்றோாின் சிறுகதைகள் மூலம் ஒரு புதிய வாழ்க்கைப்புலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமாகியது. இக்கால எழுத்தாளர்களின் படைப்புகள் சில தொகுப்புக்களாகவும் வௌிவந்துள்ளன. யேசுராசாவின் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும், சாந்தனின் ஓரே ஒரு ஊாிலே, சண்முகனின் கோடுகளும் கோலங்களும், முருகபூபதியின் சுமையின் பங்காளிகள், மண்டூர் அசோகாவின் கொன்றைப் பூக்கள் முத்துஇராசரத்தினத்தின் சிலந்தி வயல் என்பன அவற்றுட் சில.

1930 ஆண்டுகளில் தோன்றிய ஈழத்து சிறுகதை சுமார் ஐம்பது ஆண்டுகளாக இங்கு பன்முகப்பட்ட வளர்ச்சி பெற்று வந்திருப்பதை இதுவரை பார்த்தோம். ஆரம்ப காலத்தில் ஈழத்து உணர்வு குறைவாகக் காணப்படினும் 1950 க்குப் பின் பூரணமான தேசியப் பண்பைப் பெற்று இங்கு சிறுகதை இலக்கியம் வளர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான சிறுகதைத் தொகுதிகள் வௌிவந்துள்ளன. அவற்றுள் பதினைந்து இருபது நல்ல தொகுதிகளையேனும் நாம் இனம்காண முடியும். சனரஞ்சகமான வியாபாரப் பத்திாிகைகள் இங்கு தோன்றாததாலும், சமூகப்பிரக்ஞை இங்கு ஓர் இலக்கிய இயக்கமாகவே வலுப்பெற்றதனாலும் மலினமான பத்திாிகைக் கதைகளுக்குப் பதிலாக, காத்திரமான விசய கனமுள்ள கதைகள் இங்கு அதிகம் எழுதப்பட்டன. இது ஈழத்துச் சிறுகதையின் ஒரு சிறப்பம்சம் எனலாம்.

 

(தொடரும்)


சிமௌனகுருமௌசித்திரலேகா & எம்நுஃமான்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue