Skip to main content

தந்தை பெரியாரின் தலைவர்கள் குறித்த சிந்தனைகள் : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

 

அகரமுதல


 



(தந்தை பெரியார் சிந்தனைகள் 26 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 27

 

 5. தலைவர்கள் 

தலைவர்களின் தகுதிகளைப் பற்றி ஐயா அவர்கள் சிந்தித்துள்ளார்கள். அவர்தம் சிந்தனைகள்.

(1) ஒருதலைவன் வேண்டும், அவன் நடத்துபவனாய் இருக்கவேண்டுமேயொழிய நடத்தப்படுபவனாய் இருக்கக்கூடாது. அடுத்தாற்போல பின்பற்றுபவர்கள் இருக்கவேண்டும். அவர்கள் தலைவர் அபிப்பிராயத்துக்கு உழைக்கிறவர்களாக இருக்கவேண்டும். அதற்குத்தான் ஒத்துழைப்பு என்று பெயர்.

(2) மக்களை நடத்துகிறவன் தலைவனேயொழிய மக்களின் பின்னால் செல்லுகிறவன், மக்களை அடக்க முடியாதவன் தலைவன் அல்லன் தலைவன் ஆகவும் மாட்டான். (குறிப்பு 1)            

(3) தலைவனாக வருபவன் பொதுமக்கள் அத்தனை பேர்களின் விருப்பத்தையும் சம்பாதிக்கவேண்டும் என்று ஆசைப்படக்கூடாது. அது முடியாதகாரியம் என்பதோடு அது தேவையற்றதும் ஆகும். மற்றவர்கள் குறைகூறுகிறார்கள் என்பதற்காக இலட்சியம் செய்யவேண்டியதில்லை. தனக்குச் சரியென்று பட்டதைத் துணிவுடன் செய்ய வேண்டியதே முறையாகும்.

(4) தற்சமயம் நாட்டில் நல்ல தலைவர் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது. மக்களிடம் நன்மதிப்புப் பெற்ற எந்தத் தலைவனும் இப்பொழுது நாட்டில் இல்லை.

சில தலைவர்களைப்பற்றி ஐயா அவர்கள் கருத்து தெரிவித் துள்ளார்கள். அத்தகைவர்களுள் சிலரை ஈண்டுக்குறிப்பிடுகிறேன்.

(1) அறிஞர் அண்ணா: அறிஞர் அண்ணாவைப் போன்று இது வரையில் நாம் கண்டதில்லை. தூய்மையான நெஞ்சம் கொண்டவர்; ஏழைகள்மீது இரக்கத்துடன் நெஞ்சு நெகிழ்பவர். இவரைப் பற்றிப் பெரியாரின் சிந்தனைகளில் சில.

(1) சுமார் 40 ஆண்டுக்காலமாகத் தந்தை பெரியார் நடத்திவைத்த ஆயிரக்கணக்கான திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியற்ற திருமணமாக இருந்தது. அவற்றை எல்லாம் செல்லுபடியாகும்படி சட்டம் நிறைவேற்றிவிட்டார் தம் ஆட்சிக்காலத்தில்.

(2) வரலாற்றில் சமுதாய சீர்திருத்த வீரர் என்று பொறிக்கப்படுவார் என்பது உறுதி.

(3) அண்ணா நம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்றதும் பகுத்தறிவுக் கொள்கைப்படித் துணிந்து ஆட்சி செய்து வருகின்றார். ஒவ்வொரு மன்றங்களிலும் இல்லத்திலும் அண்ணாபடம் இருக்கவேண்டும்.

(4) தமிழர் சமுதாயத்தினரின் அன்பை இதுகாறும் எவரும் பெறாதவரை பெற்றுவிட்டார். எப்பக்கம் திரும்பினாலும் ‘அண்ணா வாழ்க! அண்ணா வாழ்க!’ என்ற ஒலிதான்.

(5) அண்ணாவின் பகுத்தறிவு ஆட்சியைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. இவரைப்போல் இன்னொருவர் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர்தம் புகழேணி உயர்ந்து விட்டது.

(6)அண்ணாவைப்போல் ஒருவரைச்சொல்ல வேண்டுமானால் இரசிய நாட்டு இலெனினைத்தான் சொல்லலாம்.

ஒன்று நினைவிற்கு வருகிறது. சிறிது கருத்து மாறுபாடு இருப்பதாகத் தெரிந்தாலும் அண்ணா அவர்கள் இராசாசியையும் பெரியாரையும் ஒப்ப மதித்தவர். பெரியாரும் இராசாசியும் கருத்து மாறுபட்டவர்களாக இருப்பினும் இரட்டையர்கள் போல் அன்புடன் வாழ்ந்தவர்கள். இருவர் அறிவுரைகளையும் கேட்டவர் அண்ணா.

நான் திருப்பதியில் பணியாற்றி வந்த காலத்தில் ஏதோ ஓர் அலுவல்நிமித்தம் சென்னை வந்திருந்தேன். பாரிமுனை பக்கம் இருந்த இராசா அண்ணாமலை மன்றத்தில் ஒரு கூட்டம். அண்ணா அதில் பேசுகிறார். திரளான கூட்டம். முன்வரிசையில் பெரியாரும் இராசாசியும் வீற்றிருக்கின்றனர். கூட்டத்திற்கு வருகை புரிந்த அண்ணா இருவரையும் கண்டு அவர்களிடம் சென்று அவர்கள் காலைத் தொட்டு வணங்கிவிட்டு மேடைக்குச் சென்றார். மக்களின் கையொலி கட்டடத்தை அதிரவைத்தது.

மேடைக்குச் சென்ற அண்ணா சொன்னார்: “நான் ஏன் இவர்களை வணங்கினேன் என்றால் இருவரும் என் அரசியல் குருநாதர்கள். என் காலில் முள் தைத்துச் சீழ்பிடித்து சிரமப்படும் போது என்ன செய்யலாம் என்று தாடியில்லாத பெருமகனைக் கேட்டால், “மெதுவாக முள்ளை நீக்கி சீழைவடியச் செய்து மருந்து போட்டு ஆற்றினால் சரியாகிவிடும்” என்று சொல்வார். தாடியுள்ள பெருமகனைக் கேட்டால், “நல்ல மருத்துவரிடம் சென்று காலையே எடுத்துவிடு; புதிய செயற்கைக் காலைப் பொருத்திக் கொள்ளலாம்” என்று சொல்வார். இவ்வாறு சொன்னதும் மீண்டும் மக்களின் கையொலி ஒருமணித்துளி கட்டடத்தை அதிரவைத்தது.

(2) அம்பேத்துகார்: இவரைப்பற்றியும் தந்தை பெரியாரின் சிந்தனைகள் உள்ளன. இருவரும் புத்தரையும் புத்த மதத்தையும் போற்றுபவர்கள், ஐயா அவர்களின் சிந்தனைகள்.

(1) இந்தியாவிலேயே அம்பேத்துகார் தனியான கருத்துடைய ஓர் ஒப்பற்ற மாமனிதர். மனிதர்களிலேயே அறிவாக்கத்தால் மேம்பட்ட நிலையில் விளங்கியவர். சுதந்திரமாகச் சிந்திக்கும் அறிவும் ஆற்றலும் உடையவர்.

(2) முனைவர் அம்பேத்துகார் ஒருவரே பொதுவாழ்வில் சமுதாயத்துறையில் முயற்சி செய்து வெற்றி பெற்றவர்.

(3) காமராசர்: இவரைப்பற்றியும் ஐயா அவர்கள் சிந்தித்துள்ளார். காமராசரும் ஓரளவு பெரியார் கருத்துகளைத் தழுவி வந்தவர். ஐயா அவர்களின் சிந்தனைகள்:

(1) தமிழர் சமுதாயத்திற்காக உழைத்து வரும் நான் (பெரியார்) பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டு முதல்மந்திரி காமராசரைப் பாதுகாக்கத்தானே வேண்டும்.

(2) மானமும் நாதியும் இனஉணர்ச்சியும் அற்ற நம் சமுதாயத்துக்குக் காமராசர் ஆட்சி ஏற்பட்டது எதிர்ப்பாராத சம்பவமாகும். இந்த ஆட்சி மீண்டும் அமையும் என்று எதிர்பார்க்க முடியாது.

(3) நான் கொள்கைகளை விட்டுப் பேசுபவன் அல்லன். காங்கிரசைத் தாக்கிப் பேசுபவன். நான் காமராசரை ஆதரிக்கிறேன் என்றால் அவரது எல்லாக் கொள்கைகளையும் ஆதரிக்கிறேன் என்பதல்ல.

(4) என்னுடைய வீடு நெருப்பு பற்றி எரிகிறது. அணைக்கத் தண்ணீர் இல்லை. அணைக்கக்கூடிய ஊர் மக்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் என் எதிரிக்கு உரிமையான கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அணைக்கவந்தால்-எதிரி வீட்டுத் தண்ணீரால் எரியும் என் வீட்டை அணைக்காதே என்று நான் சொன்னேனானால், அஃது அறிவுள்ளவன் செய்கிறவேலையா? காமராசர் நமக்கும் நம் மக்களுக்கும் நன்மை செய்யும்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமா?

(5) மக்கள் எல்லாரும் படிக்கும்படியான பெருமை காமராசரால் வந்தது என்று கூறுவேனேயொழிய காங்கிரசினால் வந்தது என்று நான் ஒத்துக் கொள்ளமாட்டேன். காமராசருக்கு முன் இருந்த காங்கிரசு ஆட்சியில் இவை எல்லாம் ஏன் நடக்கவில்லை? கேடுகள் தாமே நடந்துள்ளன? காமராசர் தோற்று அவருடைய இடத்துக்குப் பார்ப்பானோ, பார்ப்பானுடைய அடிமைகளோ வந்து உட்கார்ந்தால் இவை எல்லாம் செய்வார்களா? தோசையைத் திருப்பிப்போடுவதுபோல் காமராசர் செய்த நன்மைகளை எல்லாம் மாற்றிவிடுவார்கள்.

(6) இன்று மந்திரிசபை ஒரு தமிழன் கையில் இருக்கின்றது. அதுவும் தமிழன் நலனில் அக்கறை கொண்ட கீழ்ச்சாதி ஆள் கையில் இருக்கின்றது. அதன் காரணமாக ஆதரிக்கின்றேன். இது போய்விடாமல் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

(7) எங்கள் கொள்கையை நிறைவேற்றிக் கொள்ளக் காமராசரை ஆதரிப்பதும் பல திட்டங்களில் ஒன்றேயாகும்.

(8) 100க்குப் 15 பேர் படித்தவர்கள் உள்ள நிலையில் ஆச்சாரியார் பதவிக்கு வந்து அதை 10ஆகக் குறைக்கப் பாடுபட்டார். (குறிப்பு 2).   பல பள்ளிகளை மூடினார். காமராசர் பதவிக்கு வந்த 7 ஆண்டுக்காலத்தில் ஆசாரியர் மூடியபள்ளிகளை எல்லாம் திறந்ததோடு அதற்கு மேலும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை ஏற்படுத்தி நிலையை மாற்றி இப்பொழுது 100க்கு 35 பேர் படிக்கும் நிலையை உண்டாக்கினார்.

(9) நேருவின் தொண்டைத்தொடர்ந்து செய்யக் காமராசர் இருக்கிறார். நேரு அவர்கள் விட்டுச் சென்ற காரிய்ததைக் காமராசர் எடுத்துச் செய்வார். அவரும் நேருவைப் போன்று அவ்வளவு விளம்பரம் இல்லாவிட்டாலும் நமது நாட்டைப் பொறுத்தவரையில் அவர் ஒரு பெரிய தியாகி ஆவார்.

(10) தமிழ் நாட்டின் வரலாற்றில் ஏன் இந்தியாவின் வரலாற்றில் காமராசரின் காலம் ஒரு குறிப்பிடத்தக்க “சுந்தரகாண்டப்” பொற்காலம் அரசியலில் ஆகும். இன்று இந்திய அரசியலில் காமராசருக்கு நிகர், அடுத்த இரண்டாவது மூன்றாவது நபர் யார் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஓர் உச்சநிலை பெற்ற காலமாகும்.

(11) காமராசரின் சமதர்மத்திட்டத்தால் இன்று ‘கோயில் இல்லாத ஊரில் குடியிராதே’ என்னும் முட்டாள்தனமான பழமொழி மறைந்து ‘பள்ளி இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா’ என்ற புதிய நீதிமொழி ஏற்பட்டுள்ளது.

(12) கல்வி சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சி தொடங்கினாலும் ‘கடவுள் வாழ்த்துச்’ சொல்லுவதை நிறுத்திவிட்டு ‘காமராசர் வாழ்த்து’ கூறவேண்டும். அவர்காலத்தில் பள்ளிகள் நாடெங்கும் திறக்கப்பெற்றன (குறிப்பு 3).                              

இராசாசி, காந்தியடிகள், திரு.வி.க. கலைஞர் பற்றியும் கூறியுள்ளார். விரிவஞ்சிவிடப் பெற்றன.

கலைஞரைப்பற்றி: கருணாநிதி இராசதந்திரம் மிக்கவர். இந்தநாடு சிக்கல் நிறைந்த நாடு. ஒழுக்கம், நாணயம், நேர்மை ஆகியவைபற்றிக் கவலைப்படாத மக்களுள்ள நாடு. இந்த நாட்டில் மிகச்சிக்கலான பிரச்சினைகளையெல்லாம் மிக அறிவுத்திறன் காரணமாகத் தீர்த்து வருகின்றார்.

இவர் ஆட்சிமுழுமையும் பார்க்கும் முன்மறைந்து விட்டார். அதனால் இதற்குமேல் குறிப்புகள் இல்லை.

இன்னும் வள்ளுவர், புத்தர், இராமலிங்கர், பாரதிதாசன் இவர்களைப் பற்றியெல்லாம் சிறப்பாகக் கூறியுள்ளார். விரிவஞ்சி அவைவிடப் பெற்றன.

(தொடரும்)

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. .பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், 

சென்னைப் பல்கலைக் கழகம்

குறிப்பு 1. இதற்கு இன்று, பலர் எடுத்துக்காட்டுகளாக உள்ளனர். பெயர்கள் குறிப்பிட விரும்பவில்லை. சிந்தித்தால் அறிந்துகொள்ள முடியும்.
குறிப்பு 2.1952 இல் காங்கிரசு தோற்று ஆட்சி அமைக்கவில்லை. எதிர்க்கட்சிகளிலும் சரியானநிலை இல்லை. காங்கிரசு இராசாசியை அழைத்து ஏற்பாடு செய்யச் சொல்லியது. அவர் சில எதிர்க் கட்சிகளின் உறுப்பினர்களை Associate member (Congress) ஆக்கி, அவர்கட்குப் பதவிகள் கொடுத்து ஆட்சி அமைத்தார். அந்தக் காலத்தில்தான் மாணிக்கவேல் நாயக்கர் சட்டமன்றத்தலைவர் (Speaker) ஆனார்.
குறிப்பு 3. இவர்காலத்தில் திரு நெ.து. சுந்தரவடிவேலு கல்வி இயக்குநர். இவருக்கு விருப்பப்படி செயற்படும் உரிமைதரப் பெற்றதால் மதிய உணவுத்திட்டம், சீருடைத்திட்டம் ஆகியவை ஏற்படுத்தி அற்புதமாகச் செயற்பட்டன. தமிழ் நாட்டைப் பாராளும் மன்றமும் புகழ்ந்தது.


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்