Skip to main content

தந்தை பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

 அகரமுதல




(தந்தை பெரியார் சிந்தனைகள் 29 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 30

3. மொழிபற்றிய சிந்தனைகள்

2. மொழியின் தோற்றம்


‘மொழி’ என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலையாகும். மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்றதாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல்; அவள் முதலில் அடையும் பெருமகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதிலேயே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு ஒத்துவளர்ந்து வருவது மொழிவளர்ச்சியேயாகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது; மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் உள்ளனர்; மாணாக்கராகவும் உள்ளனர்; மொழியை வளர்ப்பவரும் மக்களே; மொழியால் வளர்பவரும் மக்களே.

பலர் சேர்ந்து ஒரு சமுதாயமாய் ஓர் இனமாய்ப் பழகி வாழ்வதற்குத் துணையாகவுள்ள சிறந்த கருவி மொழியேயாகும். பலர் ஓர் இனமாய் வாழ்கின்றனர் என்பதற்கு உண்மையான அறிகுறி அவர்களின் நிறம் முதலிய எவையும் அல்ல; அவர்கள் பேசும் மொழியே உண்மையான அறிகுறி எனலாம். சமுதாய வாழ்வுக்கு அறிகுறியாகவுள்ள மொழியே, அந்தச் சமுதாய வளர்ச்சிக்கும் காரணமாக உள்ளது. சமுதாயத்தால் வளர்ந்து சமுதாயத்தை வளர்த்து வருவது மொழி எனலாம் என்று சே.வென்றிசு என்ற மொழியியல் அறிஞர் மொழிவர்.

மனிதனது மனத்தை விடுத்து ஆராய்ந்தால், மொழியைப்பற்றி அறியத்தக்கதாக ஒன்றும் இல்லை. மொழியை வளர்த்தது மனமே; மனத்தின் இயல்பைக் காட்ட வல்லதாக, மனத்தின் எதிரொளியாக (பிரதிபலிப்பாக-Reflection) உள்ளது மொழியே. மனிதரின் தொடர்பு இல்லாமல் தனியே வளர்ந்து வாழவல்லது என மொழியைப்பற்றிக் கருதுதல் பொருந்தாது. பேசும் மக்களை விட்டுத் தனியே மொழி என்பது இல்லை. மனிதரின் ஒவ்வொருவரின் ஆழத்திலும் மொழி வேர் கொண்டுள்ளது; அங்கிருந்தே மொழி வளர்ச்சி பெற்று விளங்குகிறது.

பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; ஆயினும் எழுதப்படுவதும் படிக்கப்பெறுவதும் அடுத்த நிலையில் வைத்துக்கருதப்பெறும் மொழியாகும். இவையேயன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவுகாணப்படுவது ஆகியவைகளும் மொழியேயாகும்.

பொருள்களை மட்டிலும் அறியும் அறிவு ஊமைக்கு உள்ளது; மொழிவளர்ச்சி இல்லாமையால் மேலும் அறிவை வளர்க்க வாய்ப்பு அவனுக்கு இல்லை. நாகரிகம் தொடங்கும் முன்பு, மக்களுக்குப் புலன்கள் வளர்ந்திருந்தன; இயற்கையும் வளம் மிக்குக் காத்து வந்தது; ஆயின் அக்காலத்து மக்கள் அறிவு வளர்ச்சி பெறவில்லை. பேசக் கற்றுச் சொற்களைப் படைத்துக் கொண்டபிறகே அறிவுவளரத் தொடங்கியது. பேச்சுடன் நிற்காமல் எழுத்துமுறை கற்றுச் சொற்களை மிகப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகே அறிவு விரைவாக வளரத் தொடங்கிற்று.

பேச்சுமொழி உள்ளத்து உணர்ச்சியின் தூண்டுதலால் இயல்பாகத் தானே வளரும் மொழி. எழுத்து மொழி. அறிவின் முயற்சியால் ஒழுங்கு செய்து அமைக்கப்பெறும் மொழி. முன்னது, மழைநீர் திரண்டு வரும் வெள்ளம் போன்றது. பின்னது, அணைகட்டித்தேக்கிய நீர் வாய்க்கால்களில் வருவது போன்றது. ஆதலால் எழுத்து மொழியில் எழுவாய், பயனிலை செயப்படுபொருள் முதலியன அமைவதில் ஒழுங்குமுறை காணப்பெறுகின்றது. பேச்சுமொழியிலோ உணர்ச்சிவசமாய்ப் பேசுவோரின் உள்ளத்தில் எது முதலில் தோன்றகிறதோ, அதற்கு உரிய சொல்லே முதலில் வெளிப்படுகிறது. ஆகவே பேச்சு மொழியில் சொற்கள் மனம்போன போக்கில் அமைகின்றன எனலாம்- என்று கருதுவர் சே.வென்றிசு என்ற மொழி இயல் வல்லுநர்.

எது தமிழ்? மேற்கூறிய அடிப்படையில் தமிழ்மொழியை நோக்குவோம். தமிழ்மொழியை ஆறு கோடி (2001 கணக்குப்படி) மக்களுக்கு மேல் பேசுகிறார்கள். தமிழ் என்பது அந்த ஆறுகோடி மக்களின் பேச்சும் சேர்ந்த ஒன்றா? அன்று. ஆறு கோடி மக்களின் பேச்சில் சராசரியான ஒன்று எனலாம்; அல்லது, ஆறு கோடி மக்களில் ஏறக்குறைய ஒரே வகையாகப் பேசும் பெரும்பாலோரின் பேச்சே தமிழ் எனலாம்.

பேசும் மக்களுக்குள் பலவகை வேறுபாடுகள் இருக்கின்றமையால் ஒருசாரார் பேசும் பேச்சையே அந்த மொழி என்று கூறிவிட முடியாது. பேசுவோர் ஒவ்வொருவரின் பேச்சிலும் சிறிது சிறிது வேறுபாடு இருத்தலால், ஒவ்வொருவரும் ஒவ்வொருவகைத் தமிழ் பேசுகின்றனர் எனலாம். பேசும் இனத்தார் அல்லது வகுப்பார்க்குள் வேறுபாடு இருந்தால், ஒவ்வொரு வகுப்பு, அல்லது இனமும் ஒவ்வொருவகைத் தமிழ் பேசுவதாகக் கூறலாம். திருநெல்வேலித்தமிழ், தஞ்சைத் தமிழ், செட்டிநாட்டுத் தமிழ், வைணவ பார்ப்பனர்த் தமிழ், சுமார்த்தப் பார்ப்பனர் தமிழ், ஆதிதிராவிடர் சேரித்தமிழ், சென்னைத்தமிழ்- இவற்றில் வேறுபாடுகளின் குறிப்புகள் நமக்குப் புலனாகும்.

பலகால உழைப்பு: இன்னும் ஆராய்ந்து நோக்கினால், மொழி என்பது ஒரு தலைமுறையினர் மட்டும் பேசும் கருவி அன்று என்பது விளங்கும்; நூற்றுக்கணக்கான தலைமுறையினர், கணக்கற்ற மக்கள் வழிவழியாக வளர்த்துப் போற்றிவரும் கருவி எனத்தக்கது இது. ஓர் எடுத்துக்காட்டால் இதனை விளக்க முயல்வேன்.

தஞ்சைப் பெருங்கோயில், கங்கை கொண்ட சோழபுரத்துக் கோயில் போன்ற கட்டடம் ஒரு குறிப்பிட்ட காலத்து மக்கள் பாடுபட்டுக் கட்டிய பெருங்கட்டடம் ஆகும். ஆனால், தஞ்சை மக்கள் பேசும் மொழியாகிய தமிழ், கணக்கற்ற தலைமுறைகளாக கணக்கற்ற மக்கள் ஓயாமல் உழைத்துத் தந்தது, இன்னும் விடாமல் உழைத்துப்போற்றி வருவது என்று கூறவேண்டும்.

தொல்காப்பியனாரின் உழைப்பும் இதில் கலந்திருக்கிறது; தொல்காப்பியனார் வேற்றுமைகளைப்பற்றியும், சாரியை முதலியவற்றைப்பற்றியும் ஆராய்ந்து எழுதுவதற்குக் காரணமாக இருந்த அக்காலத்துத் தமிழைப் பேசியும் எழுதியும் வளர்த்த மக்களின் உழைப்பும் இதில் கலந்துள்ளது. தொல்காப்பியனாருக்கு முன் எத்தனையோ தலைமுறையினர் இவ்வாறு உழைத்த உழைப்பும் இதில் கலந்துள்ளது. அவர்களின் உழைப்பு முதல், இன்றை கவிஞர்கள், கட்டுரையாசிரியர்கள், கதையாசிரியர்கள் முதலியவர்களின் உழைப்புவரையில் அவற்றோடு எழுதக்காரணமாக இக்காலத்துத் தமிழ்பேசும் மக்களின் உழைப்பும் ஆகிய எல்லாம் இந்த ஒரு மொழியின் வளர்ச்சியில் கலந்திருக்கிறது. தமிழைப் போலவே, உலகத்து மொழிகளுள் ஒவ்வொன்றும் இவ்வாறு பல தலைமுறையினரின் உழைப்பால் வளர்ந்து விளங்கும் பெரிய அமைப்பாக உள்ளது எனலாம்.

மொழிக்கலப்பு: சமயம், வாணிகம் முதலிய காரணங்களால் பிறமொழிச்சொற்கள் தமிழில் அதிகமாகக் கலந்துள்ளன. பெரும்பாலும் இவை பேச்சு வழக்கில்தான் அதிகமாக அடிபட்டு வந்தன. வடமொழி வெறியாளர்கள் வேண்டுமென்றே வடசொற்களைக் கலக்கத் தொடங்கினர். தொல்காப்பியர் வடசொல், திசைச்சொல் இவற்றிற்கு இலக்கணத்திலும் இடம் வைத்து அவை வழங்கப்பெறும் முறைகளையும் வகுத்துக் காட்டியுள்ளார். தனித்தமிழ் இயக்கம் தோன்றி அவற்றிற்கு எதிர்ப்பும் தோன்றியுள்ளது. செந்தமிழ், கொடுந்தமிழ் என்ற கருத்துகளும் தோன்றியுள்ளன. கிளைமொழிகள் பற்றிய கருத்தும் இடம் பெற்றுள்ளது.

மேல்நாட்டு அறிஞர்களான கிட்டல் (கன்னடம்), குண்டெர்ட்டு (மலையாளம்), சிபிபிளெளன் (தெலுங்கு), காலுடுவெல்(தமிழ்) போன்ற அறிஞர்கள் மொழிகளைச் சித்தியமொழி இனம், ஆரிய மொழி இனம், திராவிட மொழியினம் என வகுத்துக் காட்டித் திராவிடமொழியினத்தில் தமிழ்தான் தலைமொழி என்ற கருத்தையும் நிலைநாட்டினர். திராவிட மொழியினத்தில் திருந்திய மொழிகள், திருந்தாத மொழிகள் இன்னவை இன்னவை என்று வகைப்படுத்தியும் மொழி ஆய்வில் புதுத்துறையையும் காட்டியுள்ளனர்.

மொழி ஆராய்ச்சி: பழங்காலத்தில் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டோர் மேற்கொண்ட முயற்சி விநோதமானது. மனித வர்க்கம் முற்றிலும் ஒன்று சேர்ந்து தேவனை எதிர்த்தார்கள் என்றும், தேவன் அவர்கள்மீது சினங்கொண்டு “நீங்கள் பேசும் மொழிகள் பல்வேறு மொழிகளாக மாறக்கடவதென்றும், ஒரு பகுதியினர் பேசும் மொழி ஏனைய பகுதியினருக்கு விளங்கக் கூடாதென்றும் சாபம் இட்டார் எனவும்” நம்பினர், இச்சாபமே பல்வேறு மொழிகளைத் தோற்றுவித்தது என்று நம்பினர். எனவே மொழிகள் கடவுளால் தோற்றுவிக்கப்பெற்றன என்ற கருத்துடையராயினர் நம் நாட்டு மக்கள். தமிழ் மொழி சிவபெருமான் டமாரத்திலிருந்து பிறந்ததாக நம்புகின்றனர். பிறிதொரு சாரார் வடமொழியும் தென்மொழியும் சிவபிரானின் இருகண்கள் எனக்கொள்வர்.

கண்ணுதற்பெருங் கடவுளும் கழகமோடு அமர்ந்து
பண்ணுறத்தெரிந்து ஆய்ந்தஇப் பசுந்தமிழ்[1]

என்று தமிழ்மொழி போற்றப் பெறுகின்றது.

மொழியின் தோற்றத்தைப்பற்றி இன்னொரு விதமான நம்பிக்கையும் இருந்து வந்தது. வடமொழியை பாணிணி ஆக்கி வளர்த்தார் என்றும், தென்மொழியாகிய தமிழை அகத்தியர் கொணர்ந்து வளர்த்தார் என்றும் ஆகிய கொள்கை நம் நாட்டில் உண்டு; அதுபோலவே ஐரோப்பாவிலும் நம்பிக்கைகள் இருந்து வந்தன. இத்தாலி மொழி தாந்தே என்ற கவிஞராலும், ஆங்கிலம் சாசர் என்னும் புலவராலும், செருமன் மொழி (உ)லூதர் என்னும் அறிஞராலும், இடச்சுமொழி கிறித்தியெருன்பெடர்சன் என்பவராலும் ஆக்கி வளர்க்கப்பெற்றன என்று ஐரோப்பியர்கள் நம்பினர் என்பதாக ஆட்டோயெசுபர்சன் எடுத்துக் காட்டுவார். ஆய்வு முறை தலையெடுத்த பின்னர் இக்கருத்து “பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்ல மெல்ல” போய்விட்டது. மொழிகளின் தோற்றத்திற்கு இவர்கள் காரணர் அல்லர் என்றும், மற்றப்புலவர்களுக்கு முன்தோன்றிய இம்மொழிகளை வளர்த்தபெருமையே இவர்களுக்கு உரியது என்றும் உண்மையை உணர்ந்தனர்.

மூளைவளர்ச்சி: ஒலிக்கும் முயற்சிக்கும் உரிய உறுப்புகளைப் பொறுத்தவரையில் மனிதனுக்குச் சிறப்பாக அமைந்தவை ஒன்றும் இல்லை. மூளையின் சிறப்பான ஆற்றலே இவன் பெற்றுள்ள தனிச் செல்வமாகும். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அது இல்லாமையே ஒரு குறை. மனிதன் ஒலிக்கும் எல்லா ஒலிகளையும் கிளியால் ஒலிக்க முடிகிறது. ஆனால், ஒலிக்கும் பொருளுக்கும் கருத்துக்கும் மனித மூளையில் ஏற்படும் தொடர்புபோல் கிளியின் மூளையில் தொடர்பு ஏற்படுவதில்லை; வேறு பறவை விலங்குகள் மூளையிலும் இத்தகைய தொடர்பு ஏற்படுவதில்லை. அதனால்தான், மனிதன், மட்டும் மொழியை வளர்க்க முடிந்தது; முடிகின்றது.

கிளிபேசுவதாகக் கூறப்படும். ஆயினும், அது பேச்சு அன்று; பேச்சு என்பது கருத்தை உணர்த்துவது. திருவரங்கத்திலுள்ள கிளி ‘இரங்கா, இரங்கா என்று பேசும், பேசப்படும் ஒலிகள் சில பொருள்களையும் அவற்றின் தன்மைகளையும் செயல்களையும் உணர்த்துகின்றன. ஒலிகள் பயனின்றித் தனித்து நிற்காமல் இவ்வாறு பொருளுடையனவாய் நிற்கின்றன. இத்தகைய ஒலிகளால் அமைந்ததுதான் பேச்சு. கிளியின் ஒலிகள் கருத்துகளை உணர்த்த ஒலிக்கப் படுவதில்லை. ‘இரங்கா, இரங்கா என்பதன் பொருள்- அது திருவரங்கத்தில் அறிதுயில் கொள்ளும் அரங்காதன்- என்பது அதற்குத் தெரியாது. ஒலிக்கும் கிளிக்கு அவை பொருளற்ற ஒலிகளே. பொருளுணர்ச்சி இல்லாமல் கிளி பேசுவதால் அதன் வாயில் பிறக்கும் ஒலிகள் வெற்றொலிகள் ஆகும்; பேச்சு ஆகா. மனிதன் வாயில் ஒலி பிறக்குமுன், அவற்றின் தொடர்பான கருத்துகள் அவனுடைய மூளையில் தோன்றுகின்றன. கிளியின் வாயில் பிறக்கும் ஒலிகளுக்கு ஏற்ற கருத்துகள் அதன் மூளையில் பிறப்பதில்லை. பிறக்குமாயின், கிளிகளின் வாழ்வில் வளர்ச்சி ஏற்படும்; அவையும் மனிதரைப் போல் நாகரிக அமைப்புகளான அரசு முதலியவற்றை அமைக்க இயலும்.

இத்தகைய கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு தந்தை பெரியாரின் மொழிபற்றிய சிந்தனைகளைக் காண்போம்.

(தொடரும்)

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.பெருமாள்அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  

பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், 

சென்னைப் பல்கலைக் கழகம்

 

குறிப்பு . 1. பரஞ்சோதியார் – திருவிளையாடல்-நாட்டுச் சிறப்பு-57

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்