Skip to main content

பெரியார் குறித்துப் பெரியார்: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

 அகரமுதல




(தந்தை பெரியார் சிந்தனைகள் 27 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 28

6. பெரியார்

பெரியார்: இதுகாறும் நான் கூறிவந்த பெரியார் யார்? அவரே கூறுகிறார்.

(1) நான் பகுத்தறிவுவாதி எனக்கு மதம் – கடவுள் – மொழி – நாடு-அரசு இவைபற்றியெல்லாம் கவலை இல்லை. யார் ஆட்சி புரிகின்றனர் என்பது பற்றியும் கவலை இல்லை. பகுத்தறிவோடு ஆட்சி செய்கிறார்களா என்பதுதான் முக்கியம் ஆகும்.

(2) பகுத்தறிவு ஆட்சி என்பது வேறு எந்தக் காரியங்களில் தங்கள் பகுத்தறிவைக் காட்டத் தவறினாலும் இளம் உள்ளங்களில் இம்மாதிரி கீழ்த்தரக் கருத்துகளை (புராண இதிகாசத்தில் உள்ள ஒழுக்கக் கேடான கருத்துகளை) எந்தக் காரணம் கொண்டும் புகுத்தாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது முக்கியக் காரியமல்லவா?

(3) எனக்குக் கடவுள் பற்று, மதப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சாத்திரப்பற்று ஆகிய எதுவொன்றும் இல்லை. ஆனால் மக்களின் வளர்ச்சிப்பற்று ஒன்றுதான் உண்டு-அதுவும் அறிவுக்கும் ஏற்றவகையில்.

மானசீகமாக: தந்தை பெரியார் படத்தைப் பார்த்திருப்பீர்கள். அதனை மனத்தில் நிறுத்திக் கொண்டு நான் கூறுவதை அதனுடன் பொருத்திக் காணுங்கள்.

சிவந்தமேனி; தடித்த உடல்; பெருத்த தொந்தி; நல்ல உயரம்; வெளுத்த தலைமயிர்; நரைத்தமீசை; தாடி; நீண்டமூக்கு; அகன்ற நெற்றி; உயர்ந்த மயிரடர்ந்த புருவங்கள்; ஆழமான கண்கள்; மெதுவான உதடுகள்; செயற்கைப் பற்கள்; ஒருசாதாரண மூக்குக் கண்ணாடி. இவை அனைத்தும் கலந்த உருண்டையான முகம்; ஒரு தனியான முகவெட்டு; என்னமோ ஒருவிதமான கவர்ச்சி.

இடுப்பில் எப்போதும் ஒரு நான்கு முழத்துணி. காலில் செருப்பு. முக்கால்கையுடன் ஒருமாதிரியான வெள்ளைச்சட்டை. அதில் வரிசையாக நூல் பொத்தான்கள். பழங்காலத்து முழுகோட்டுக்கும் இக்காலத்து ‘ஷர்ட்’டுக்கும் நடுவில் ஒரு நூதனமான உடுப்பு. வெளிப்புறத்தில் மூன்று பாக்கெட்டுகள், உட்புறத்தில் (பணப்பை வைத்துக் கொள்வதற்காக) கட்டாயம் ஒருபாக்கெட்டு. வெளிப்பைகளில் செய்தித்தாள்கள், சில கடிதங்கள், பொதுக்கூட்டத்தில் கேட்கப்பெற்ற கேள்வித்தாள்கள், இரண்டொரு சிறு புத்தகங்கள், துண்டுப்பிரசுரங்கள், நாட்குறிப்பு, ஒருசிறு கத்தி-ஆகிய சகலசாமான்களும் நிறைந்து எப்போதும் உப்பிய வண்ணம் இருக்கும். இவற்றில் பல வெகு மாதங்களுக்கு முந்தியவையாகவும், குப்பைத் தொட்டிக்குப் போயிருக்கவேண்டியவையாகவும் இருக்கும். வெளிப்புறத்துக்கு மேல் ஒரு ‘ஃபவுண்டன் பேனா’ செருகப்பெற்றிருக்கும். உட்புறப்பையில் ஒரு ‘மணிபர்சு’. அதன் அறையொன்றில் கடிகாரம்.

இவ்விதமான ஒரு சட்டைப்பைக்குமேல் ஓர் ஐந்து முழப்போர்வை. அநேகமாக ‘ஆரஞ்சு’ அல்லது ‘காப்பி’ நிறத்தில். இந்த உடைகள் பெரும்பாலும் அழுக்காகவே இருக்கும். (குறிப்பு 1) சட்டைப்பைகளின் ஓரங்கள் அடிக்கடிக் கிழிந்து தொங்கிக் கொண்டே இருக்கும். கையில் எப்போதும் ஒரு மொத்தமானதடி பிடிக்கும் பக்கம் வளைந்திருக்கும்.

கையில் ஒரு தோற்பெட்டி அதற்குப் பூட்டுமில்லை; சாவியும் இல்லை. மிக அந்தரங்கமான சொந்தக் கடிதங்கள் முதல் பழைய செய்தித்தாள்கள், பட்டையாக நசுக்கப் பெற்ற பற்பசைக்குழல், பழையபல் (பிரசு) மைப்பெட்டி, சோப், கடிதத்தாள், உறைகள் வரையில் எல்லாம் இந்தப் பெட்டிக்குள்தான். சட்டைப்பையிலுள்ள குப்பைகள் அதாவது ‘ரிக்கார்டுகள்’ மிகுந்து விட்டால் அவற்றில் சில இப்பெட்டிக்குள் புகலிடம் பெறும். இரண்டு மூன்று மாதங்கட்கு ஒருமுறை பெட்டி மூட முடியாமலே முட்டிக்கொண்டால் இப்பெட்டி காலி செய்யப்பெறுவதுண்டு.

இம்மாதிரி உருவத்தோடும் உடையோடும் வாலிபநடையோடும் கையில் பிடித்த தடியுடனும் காணப்பெறுபவரே தந்தை பெரியார். இவருடைய பொறுமை யாவராலும் போற்றக் கூடியது. எவ்வளவு கிளர்ச்சியான நிகழ்ச்சிகளிலும் சரி, பொறுமையை இழக்கமாட்டார். கடுஞ்சொற்களைப் பயன் படுத்தமாட்டார். இவர் பகைமை என்பதைப் பொருட்படுத்தவே மாட்டார். நீண்டகாலப் பகைவர்களோடும்கூட விரைவில் தாமாகவே வலிந்து நட்புக் கொண்டு விடுவார். இப்பெருந் தகையை,

வயதில் அறிவில் முதியோர்-நாட்டின்
வாய்மை போருக் கென்றாம் இறையாய்!
உயர் எண்ணங்கள் மலரும் சோலை.

என்று சித்திரித்துக் காட்டுவார் பாவேந்தர் பாரதிதாசன். முனைவர் பழநி. அரங்கசாமியார்,

சாதியும் மதவெறியும் சாய்ந்திருந்த கழகத்தைத்
தடிகொண்டு நிமிர்த்திட்ட தனிப்பெருந் தலைவா!
தமிழகத்தின் சுமைதன்னைத் தன்முதுகில் தாங்கிஇங்குத்
தொண்ணூற்று நான்கிலும் தொண்டுசெய்த பழுத்தபழம்
துணிச்சலும் ஆற்றலும் சுயமான சிந்தனையும்
தொலைதூர நோக்கும் அயராத உழைப்பும்
அன்புக்குப் பணிவையும்வன்புக்குத் துணிச்சலையும்
காலமெல்லாம் காட்டிவந்த கருஞ்சட்டைப் பெருந்தலைவர்!(குறிப்பு 2)

என்று ஒரு சொல்லோவியமாகக் காட்டுவார்.

“பெரியார் உயிருடன் வாழ்ந்த மொத்த நாட்கள் 34,433 ஆகும. இந்த நாட்களில் அவர் பெரும்பாலான நேரத்தைப் பேசவும் எழுந்தவும் பயன்படுத்தினார். அவர் செய்த மொத்தப் பயணதூரம் 15,12,000 கிலோமீட்டர். இந்தத் தூரம் பூமியை 33 முறை சுற்றி வந்ததற்குச் சமமாகும். அவர் சொற்பொழிவாற்றிய மொத்தநேரம் 21,400 மணி. இந்தப்பேச்சை ஒலிப்பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதம் 11 நாட்கள் வரை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கலாம்” (மின்மினி)  (குறிப்பு 3)

பெரியாரின் பேச்சுத்திறன்: பெரியாரின் பேச்சு மக்களைக் கவர்வதற்குக் காரணமாக இருந்தவை அவர் கையாண்ட பழமொழிகள், குட்டிக் கதைகள், உவமைகள் முதலியவை. தோழர் மா. நன்னன் அவர்கள் இவற்றைத் தொகுத்து சிறுசிறுநூல்களாக வெளியிட்டுள்ளார்கள். (குறிப்பு 4) எடுத்துக்காட்டுகள் தந்து விளக்கினால் பேச்சு நீளும். ஆகவே தவிர்க்கப் பெற்றன. ஆயினும் கவிஞர் நாரா. நாச்சியப்பன் (குறிப்பு 5) கவிதையில் தந்தால் சுவை பயக்கும் என்பதால் அவற்றை ஈண்டுத் தருகின்றேன்.


பெரியார்தம் சொற்பொழிவைக் கேட்டவர்கள்
வெறுப்பகற்றிப் பெரியார் கொள்கைக்
குரியாராய் மாறுவதாம் விந்தையிதன்
உட்பொருளைச் சொல்வேன்கல்வி
தெரியாத மக்களையும் வசப்படுத்தும்
முறைமைதனில் திறமை யாக
உரைபகர்வார்! தன்னுளத்துப் பட்டதெல்லாம்
ஒளியாமல் உரைப்பார் கண்டீர்!

 

காற்றடிக்கும்! புயல்வீசும்! இடையின்றி
மழைபொழியும்! கருத்துவெள்ளம்
போற்பெருகும்! அருவியென ஓடிவரும்
மணிக்கணக்காய் பொழியும்! பேச்சில்
ஆர்ந்திருக்கும் நாட்டிலுள்ள வகைப்பட்ட
பழமொழிகள் அத்த னையும்!
சோற்றினுக்குக் காய்கின்ற ஏழைகட்குச்
செயல்காட்டிச் சோர்வ கற்றும்!

 

உவமைகளோ குவிந்திருக்கும்! கலைப்பேச்சுப்
பேசுங்கால் ஒன்றோ டொன்றாய்த்
தவழ்ந்துவரும் கேள்விகட்குப் பதில்சொல்லத்
தெரியாமல் தவித்த பேர்கள்
இவர்கட்குத் தொண்டர்களாய் இன்றிருக்கும்
நிலையொன்றே ஈரோட் டண்ணல்
இவர்பேச்சின் திறம்விளக்கப் போதுமெனக்
கூறிடுவேன்! எழுச்சி கொள்வேன்!

இந்த கவிஞர் 1954 முதல் பெரியாரிடம் நெருங்கிய தொடர்புடையவர் கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகட்கு முன்னர் இவர் பருமாவில் இருந்தபோது (1954இல்) பெரியாரை வரவேற்றுப் பத்து நாட்கள் அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புப் பெற்றவர். 1945-முதல் பகுத்தறிவுக் கருத்துகளை ஏற்றுக்கொண்டவர். நாடு விடுதலை அடைவதைவிட மக்கள் மூடத்தனத்திலிருந்து விடுதலை பெறுவது மிகமிகத் தேவையானது என்ற சுயமரியாதைக் கொள்கை இளைஞரான இவர்தம் எண்ணத்தில் வேர்கொண்டது.3 [7]

 7. மூன்றாம் பொழிவின் முடிப்புரை

மனிதன் ஒரு சமூகமாக-கூட்டமாக-வாழவேண்டியவன். மனித விருத்திக்குத் திருமணம்தான் அடிப்டையாக அமைவதால் இந்தப் பொழிவு மனிதனுடைய இயல்புகளாகிய திருமணத்தில் தொடங்கினேன். வழக்கமாக நடைபெறும் திருமணங்களைச் சுட்டிகாட்டி காதல் மணம், கலப்புமணம், சீர்த்திருத்த திருமணங்கள், மறுமணம்- மனைவியை இழந்தவன் செய்து கொள்வது, விதவைத்திருமணம் முதலியவற்றிற்கு முதலிடம் தரவேண்டும் என்பது பெரியாரின் அடிப்படை நோக்கம் என்பதை எடுத்துக்காட்டினேன். குழந்தை மணத்தைத் தவிர்க்கவேண்டும் என்பது அய்யா அவர்களின் அசைக்க முடியாத கொள்கை என்பதை தெளிவாக்கினேன்.

திருமணத்தின் அடையாளமாக மனைவி கழுத்தில் அமையும் தாலியைப்போல் கணவன் கழுத்தில் ஓர் அடையாளமாக இருக்கவேண்டியது தந்தையின் விருப்பம் என்பதைச் சுட்டியுரைத்தேன், வேண்டுமானால் மோதிரங்களை அடையாளமாகக் கொள்ளலாம் என்பதை நினைவூட்டினேன்.

சமூகத்தில் தொத்து நோய் போல்அமைதிருப்பது சாதி முறை என்றும், சாதி என்ற சொல்லே சரி அல்ல என்றும் தொல்காப்பியம்மூலம் எடுத்துக்காட்டினேன். தீண்டாமை, சாதித்தொழில், சட்டத்தின்மூலம் சாதி வேற்றுமையைக் களையலாம் என்றும், ஆனால் நடைமுறை அரசியலில் அதனை நீக்குவதற்குப் பதிலாக வற்புறுத்தும் முறையே நடைமுறையில் உள்ளது என்றும், சாதிச் சங்கங்கள் பெருவாரியாகத் தோன்றி அரசாங்கத்தை ஆட்டிவைக்கின்றன என்றும், அரசு வாக்குவங்கியின் தேவையை நினைத்துக் கொண்டு அவற்றின் வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாத நிலையில் உள்ளது என்பதைச் சுட்டிஉரைத்தேன். பொதுவாக மதுவிலக்கு, புதுமை வேட்கை இவற்றில் சில பெரியார் கருத்துகளை எடுத்துக்காட்டினேன். ஆத்துமாபற்றிய கருத்து, சோதிடத்தை நம்பும் மூடத்தனம் இவற்றைத் தந்தைவழியில் நின்று விளக்கினேன். பொங்கல்விழாவைத் தவிர ஏனைய விழாக்கள் மூடத்தனத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது ஐயா அவர்களின் கருத்து என்பதைச் சுட்டிக்காட்டினேன். சிறந்த சமூகத்தலைவர்களாக நின்று தொண்டாற்றிய அறிஞர் அண்ணாத்துரை, அறிஞர் அம்பேத்துகார், காமராசர் இவர்கள் செய்த பணிகளை விளக்கினேன். சிறப்பாக காமராசர் ஆற்றிய கல்விப்பணிகளைக் விரிவாக விளக்கினேன். கலைஞரைத் தந்தையவர்கள் ஓர் இராசதந்திரியாக மதிப்பீடு செய்ததை நினைவு கூர்ந்தேன். இப்பொழிவில் நாம் பெரியாரைப் பற்றி தெரிந்து கொண்டவை: அவர்தம் ஓய்வறியாத உழைப்பு, உண்மைகளை அஞ்சாமல் வெளியிடும் நெஞ்சுரம், தன்னலம்புகாத தன்னேரில்லாத பொதுத்தொண்டு என்று இவர் தம் பேச்சுத் திறன் ஆகியவற்றைச் சுட்டியுள்ளதை காட்டி இவைதாம் பெரியார் என்பதை நினைவூட்டினேன். இதுகாறும் என் உரையைக் கேட்ட அறிஞர் பெருமக்கள் அனைவர்க்கும், மாணாக்கச்செல்வங்களுக்கும் என் நன்றி உரித்தாகின்றது.

அடுத்த மூன்றாவது பொழிவு ‘மொழிபற்றிய சிந்தனைகள்’ என்பது. இது மிகவும் சிக்கலான பிரச்சனைகளைக் கொண்டது. இதற்கும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி. .பெருமாள், அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  

பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், 

சென்னைப் பல்கலைக் கழகம்

 

குறிப்பு 1, இவர் சரியாகக் குளிப்பது இல்லை. இவரை இழுத்துப்பிடித்துக் குளிக்க வைப்பது நாகம்மையாருக்குப் பெரும்பாடாக இருக்கும்.

குறிப்பு 2. தந்தைபெரியார் 21ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்-பக் 23.

குறிப்பு 3. பெரியாரியல் (நன்னன் தொகுத்தது) பக்-73.

குறிப்பு 4. ஈரோட்டுத்தாத்தா-சொல்லின் செல்வர் (1-3).

குறிப்பு 5. நாரா. நாச்சியப்பன்-பர்மாவில் பெரியார் (1993)-முன்னுரையில்

 


Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்