மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 21
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 01 January 2022 No Comment (மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 20 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 8 தொடர்ச்சி “செல்லம், அந்த அக்காவை விட்டுவிடாதே. அடுத்த மாதம் முதல் மாதர் சங்கத்திலே தினம் சாயங்காலம் இவங்க தமிழ்ப் பாடமெல்லாம் சொல்லிக் கொடுக்கப் போறாங்க. நீயும் தவறாமப் போகணும்” என்று சிரித்துக் கொண்டே பெண்ணுக்குச் சொன்னாள் மங்களேசுவரி அம்மாள். “இந்த அக்கா சொல்லிக் கொடுப்பதாக இருந்தால் நான் இருபத்து நாலுமணி நேரமும் மாதர் சங்கத்திலே இருக்கத் தயார் அம்மா” என்றவாறே புள்ளிமான் போல துள்ளிக் குதித்து ஓடிவந்து பூரணியின் கையோடு தன் கைகளைக் கோர்த்துக் கொண்டு நகைத்தாள் செல்லம். நேரமாயிற்று. பூரணி புறப்பட்டாள். “வண்டிஓட்டியை வண்டி எடுக்கச் சொல்கிறேன். திருப்பரங்குன்றத்தில் போய் இறங்கிக் கொண்டு வண்டியைத் திருப்பி அனுப்பி விடு” என்று அந்த அம்மாள் கூறியதை மறுத்துவிட்டாள் பூரணி. “என்னை நடந்து போகவிடுங்கள் அம்மா! அதிகப்படியான பெருமைகளைக் கொடுத்து வேதனைப் படுத்தாதீர்...