பட்டம் உறுதியாயிற்று -முனைவர் கண சிற்சபேசன்
அப்பகுதி மக்கள் அவனைப் பொதுவாகப் பைத்தியம் என அழைப்பார்கள். கல்வியறிவுடையோர் சிலர் விஞ்ஞானி
என்பார்கள். அறிவோர் சிலர் ‘‘அவன் தான் சிறந்த மனிதன்; தானுண்டு தன்
வேலையுண்டு என இருப்பவன்’’ என்பார்கள். ‘‘உள்ளே உள்ளதை மறைக்க நடிக்கும்
இவன் காரியக் கிறுக்கு’’ என்பார்கள். கற்றறிந்த சில இளைஞர்கள், இவை எல்லாம்
அவனுக்குத் தெரியும். ஆனால் இதைப்பற்றி, அவன் கவலைப்படுவதுமில்லை.
அவர்களைத் திருத்த முனைவதுமில்லை. தனியே வாழும் அவனது அறையில் காலை 6
மணிக்குத் தட்டுப் பொறி இயங்கத் தொடங்கும். ஒரு மணி நேரத்திற்குப் மின்சார
அடுப்பு இயங்கும். அரிசியைக் களைந்து ஒரு பாத்திரத்திலிட்டு அதை
அடுப்பிலேற்றி அது கொஞ்சம் வெந்ததும் பிற காய்கறித் துண்டுகளை நறுக்கி
அதனோடு சேர்த்து வேகவைத்த பொங்கலே நாள்தோறும் அவனுடைய உணவு.
காலை 8 மணிக்கு அவன் வீட்டுச் சிறு
தோட்டத்திற்குச் செல்வான். முயல்கள் தாவி தவி ஓடிவந்து அவன் கால்களை
மெல்லக் கடிக்கும். பின்னர் அவன் மேற்கொள்ளும் செயல்கள்தான் அவனை உலகம்
பைத்தியம் எனப் பழிக்கக் காரணமானவை. மெல்லச் செல்வான். வலைகளாலான கூட்டின்
சிறு கதவைத் திறப்பான்; கூர்ந்து நோக்குவான். அவ்வளவே திடுமென இடக்கை
விரல்களிரண்டால் கூண்டிலிருந்த பாம்புகளில் ஒன்றன் தலையை இடுக்கி போலப்
பற்றிக் கொள்வான். மற்ற பாம்புகள் அஞ்சியோடி மூலையில் சுருட்டிக் கொள்ளும்
பிடிபட்ட பாம்பு தன் உடலையும் வாலையும் இவனது கையைச் சுற்றி சுற்றிக்
கொள்ளும். அதைப் பிடித்தவாறே தன் ஆய்வறையில் புகுவான். வண்ணக்
கண்ணாடிக்குப்பியில் அதை விடுவான். பிறகு ஆராய்ச்சி தொடங்கும்.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு வெளியே
வருவான் ஏழைக் குறவர் கூட்டமே அவனைக் காணக்காத்து நிற்கும். அவரவர்
தமக்குக் கிடைத்த ஊர்வன, பறப்பன முதலியவற்றைச் சுமந்தவாறு, மலைவளங்காணச்
சென்ற சேரனின் செவ்விகாணக் காத்து நின்ற குறவர்போல, நிற்பர். அவ்வளவையும்
விலை கொடுத்து வாங்கிக் கொள்வான்.
இன்றைக்கும் அவ்வாறுதான் ஒரு குறவன்
வந்தான். பாம்பைக் கொடுத்துவிட்டுப் பலகாலும் பழகிய அன்புடைய அவன் ‘‘சாமி!
இது மிகவும் பொல்லாததுங்க. குறளியுங்கூட பார்த்தால் சும்மா கிடக்கும்.
தொட்டாலும் சும்மா கிடக்கும். ஆனால் டபார்ன்னு போட்டுவிடும்… கவனமாக இருங்கள்… கருப்பணசாமி துணை இருக்கார்’’ எனக் கூறிவிட்டுச் சென்றான். விஞ்ஞானியின்
பட்டறிவையே ஏளனம் செய்வது போலிருந்த சொற்கள் அந்த ஏழைக் குறவனின்
அன்பையும் அருளையும் கொட்டி நின்றன. புதிய விரியன் புத்தறை புகுந்தான்.
அவுனுக்குப் பாலும் உணவும் கிடைத்தன. உண்டு கொழுத்திருந்த அவன்
இறந்ததுபோலவே கூட்டிற்குள் கிடந்தான். விஞ்ஞானி கவனக் குறைவாகப் பிடிக்கவே
கைகளில் கடித்துவிட்டான். ஆனால் அவனோ கைப்பிடியைத் தளர்த்தாமல் மீண்டும்
அதைக் கூண்டிற்குள் அடைத்து விட்டு வேகமாக வீதியை நோக்கி ஓடினான்;
வாயிற்படியில் விழுந்துவிட்டான்.
பைத்தியத்தைப் பாம்பு கடித்தது
என்பாரும், இதில் வியப்பென்ன என்பாரும், பைத்தியம் பாம்பைக் கடித்துவிட்டது
என்பாரும் எதற்கும் முடிவுண்டு என்பாரும், பாவம் என்றுணர்வாரும்,
வருந்திக் கண்ணீர் வடித்த ஏழைக்குறவரும் மலிந்தனர்.
மருத்துவ மனையில் தேறித் தெளிந்த விஞ்ஞானி நடக்கும் உரன்பெற்ற உடனேயே பணிப்பெண்ணை
ஏமாற்றிவிட்டு எழுந்து ஓடினான். சிறிது நேரத்திற்குள் மருத்துவ உதவி ஊர்தி
பின் தொடர்ந்தது. அவன் வீட்டிற்கு முன் பெருங்கூட்டம். உள்ளே சென்ற பலரும்
அவனது செய்கைகளைக் கண்டு வியந்து நின்றனர். விஞ்ஞானி பாம்பு
அறைக்கு வெளியே நின்றவாறு பலமணித்துளிகள் இமைக்காமல் பார்த்துக்
கொண்டிருந்தான்’ மெல்ல அக்கூண்டின் கதவைத் திறந்தான். அவன் அந்த விரியனைப்
பிடிக்க முயல்வதும் அது அகப்படாதவாறு ஓடுவதும் நிகழ்ந்தவண்ணம் இருந்தன.
வேகமாக ஓடி வந்த பணிப்பெண் தடாலென பாம்பறைக் கதவைச் சாற்றிவிட்டு அவனை
அழைத்துவந்தாள். அவளைப் பார்த்து அவன் கேட்டான். ‘‘நீ பார்த்தாயா அது
எவ்வளவு அழகாக இருக்கிறதென்று…’’ ‘’அழகாயிருப்பதில் எல்லாம் ஆபத்தும்
இருக்கும். அழகாகவும் ஆபத்தாகவும் இருப்பதுதானே தெய்வம்’’ என்றாள்
கூட்டத்தினரை நோக்கி. அவன் மரு்த்துவ ஊர்தியில் நுழைந்த போது, சுற்றிநின்ற
உலகம் அவன் பட்டத்தை உறுதிப்படுத்த ‘’பைத்தியம், பைத்தியம்’’ என இருமுறை
ஒலித்தது. ‘‘பைத்தியம் வாழ்க’’ என வாழ்த்தும் பாடிற்று.
- குறள்நெறி: மாசி 3, தி.ஆ.1995, பிப்.15, கி.ஆ.1964
- அகரமுதல இணைய இதழ் 17
Comments
Post a Comment