வெல்க குறள் நெறி – புலவர் வேலவன்
1. கூடல் நகரில் குறள்நெறித் தென்பெருகி
ஓடல் இனிதே உவந்தது.
2. குறள் நெறிப் பூங்குயிலே கொள்கைப் புரட்டர்
குரல்நெறிக்க வந்தாயோ கூறு.
3. எழுதத் தெரிந்தோர் எழுத்தாள ராகுந்
தொழுநோய் துடைப்பாய் துணிந்து.
4. பிறழ்நெறியே பேசுகின்ற பித்தருளும் மாற
குறள்நெறியே கூவு குழைந்து.
5. அருள்நெறி பேச அவம் செய்து வாழும்
இருள்நெறி யாளரை எற்று.
6. பாலில் நீர் பெய்துவிற்கும் பாவியரைப் போலெழுது
நூலில்தீச் சொற்கலப்பின் நூறு.
7. குறுக்குவழி யோடுங் குறுமதியைக் கொட்டிப்
பொறுப்பு வழிகாட்டிப் போற்று,
8. விட்டு விளக்காய் விறற்கவிஞர் தம்குரலாய்ப்
பாட்டுத் துறைசிறக்கப் பாடு.
9. தமிழ்தாக்கச் சூழுந் தமிழ்ப் பகைவர் தோற்க
தமிழா குறள்நெறியைத் தாங்கு
10. குறள்போலத் தோன்றுங் குறள் நெறியே சங்க
நிரல்போல வெல்க நிலைத்து.
- குறள்நெறி தை 19, 1995 /01.02.1964
Comments
Post a Comment