Skip to main content

திருக்குறளில் உருவகம் – 1 : வீ.ஒப்பிலி

திருக்குறளில் உருவகம் – 1

thirukkural02
தலைப்புக் குறிப்பு.
  உருவகம் என்ற சொல்லைப் பொதுவாக ஆங்கிலத்தில் Metaphor என்ற சொல்லின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் பயன்படுத்துதல் வழக்கம். ஆயினும் இக்கட்டுரை முழுவதிலும் இச்சொல் Image என்ற சொல்லிற்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் ‘‘காட்சி’’யென்று சொல்லலாம். ஆனால் ‘காட்சி’ யென்றசொல் அகத்தே தோன்றும் உணர்ச்சிக்கு உருக்கொடுக்கும் ஆற்றலை மட்டுமின்றிக் காணப்படும் பொருள் யாவிற்கும் பொதுவான சொல்லாக இருப்பதால், அதை நீக்கி ‘உருவகம்’ என்ற சொல்லையே Image என்பதன் மொழி பெயர்ப்பாகப் பயன்படுத்தியுள்ளேன்.
முன்னுரை
  திருவள்ளுவர் இயற்றிய குறள் ஒவ்வொன்றிலும் 18ஆம் நூற்றாண்டில் ஆங்கில நாட்டில் புகழ்பெற்ற கவிஞனான அலக்சாந்தர் போப்பென்பாரின் ஈரடிகளிலுள்ள (Heroic Couplets) திண்மையையும், கலை நுணுக்கத்தையும், பொருளடர்த்தியையும் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருங்கவிஞரான சேக்சுபியரின் நாடகங்களில் பொதிந்துள்ள ஆழத்தையும், கற்பனையையும் உணர்ச்சியையும் ஒருங்கே மிளிரக்கண்டு மகிழலாம். திருக்குறள் வாழ்வியலுக்கு இன்றியமையாத நற்பண்புகள் அனைத்தையும் எடுத்துச் சொல்லும் நூல். இவ்வாறாகப் படைக்கப்பெறும் இலக்கியம் வெறும் அறநூலாக மட்டுமின்றி கவிதை நலம் மிக்க படைப்பாகப் பொலிகிறது. அறப் பண்களை மட்டே கூறும் குறட்பாக்கள் பொருட்செறிவோடு, அமைப்பில் நாம் என்றும் மறக்க முடியாத தன்மை பெற்று நிலவுகின்றன. இத்தன்மை ஒலிநயத்தாலும், இரு மாறுபட்ட பொருளுள்ள குறுஞ்சொற்கள் இணைப்பாலும், அங்கதத்தாலும் தோன்றுகிறது.
‘‘இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு’’
‘‘வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.’’
‘‘சாதலில் இன்னாத தில்லை இனித தூஉம்
ஈதன் இயையாக் கடை.’’
‘‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
பற்றுக பற்றுவிடற்கு’’.
இவ்வமைப்புக் கொண்ட குறட்பாக்கள் மிகப்பலவாம்.
  அமைப்பு நலத்தோடு உவமம் போன்ற அணி நலன்களையும், பல குறள்களில் நாம் காணலாம். இவ்வணிகள் யாவும், பாடப்பெறும் பொருளிற்கேற்ப அமைந்த உருவகங்கள் கொண்டு மனத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்தனவையாய் உள்ளன கவிஞன் ஒரு பொருளைப் பற்றி எண்ணுகையில், அதைத் தெளிவாக்கவல்ல வேறுபொருளை நயத்தோடு எடுத்துச் சொல்வது மரபு. இவ்வேறு பொருளை உவமையாகவும், மற்ற அணிகளாகவும் உருவெடுக்கிறது. அணியில் காணப்படும் பொருள் வாழ்க்கையில் நாம் காணும் நிகழ்ச்சிகளைப் படம் பிடித்தாற்போல் காட்டும்; அல்லது கற்பனையில் தோன்றிய ஒரு நிகழ்ச்சியாகவும் அணியில் உருவகம் அமையலாம். ஐம்புலன்களினாலும் உணர வல்லாத உணர்ச்சியையும் அணியில் தோன்றும் உருவகம் தெள்ளத்தெளிய பளிங்குபோல் நம் கண்முன்னே நிறுத்துகிறது. இவ்வாறு சேக்சுபியரின் நாடகங்களில் விளங்கும் உருவகங்கள் அனைத்தையும் தொகுத்து அவரது கற்பனைத் திறத்தையும் வாழ்க்கை நுகர்ச்சியையும் எண்ணப் போக்கையும் தெளியக் காட்டும் முறை தற்கால இலக்கிய ஆராய்ச்சி முறையாம். முதன்முதலாக சேக்சுபியர் நாடகங்களுள் தோன்றும் உருவகங்களை இம்முறையில் விரிவாகத் தொகுத்துத் தந்தவர் கரோலின் எஃப் சுபர்சன் என்ற ஆசிரியர் ஆவார். உருவகங்களைத் தொகுத்துப் பார்க்கையில், அவை சேக்சுபியரின் அகத்தே தோன்றும் உணர்ச்சியிலும், எண்ணத்திலும் நம்மை ஆழச் செய்கின்றன. பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படும் உருவக அணிகள் குறிப்பிட்ட சில எண்ணங்களையோ, உணர்ச்சிகளையோடு எடுத்துக்காட்டும் சாதனங்களாகத் தோன்றுகின்றன. இவ்வாறாக, அரசு கெடும்போது நாட்டைப்பற்றி எண்ணுகையில், சேக்சுபியர் நன்றாகப் பாதுகாக்கப்படாத தோட்டத்தை எண்ணுகிறார். அங்கு களைமலிகிறது. பயன்தரு செடி வாடியழிகிறது; தோட்டக்காரன் வாளாவிருக்கிறான். இவ்வுருவகம் பல்வேறு இடங்களில் சிறப்பாக அமைதிக் குலவைக்காட்டும் வரலாற்று நாடகங்களில் காணப்படுகிறது மற்றும் தீமையைப் பற்றி எண்ணும்போதெல்லாம், அவர் இருளையும், இருளடைந்த கெட்ட நாற்றத்தையும், தாங்கவியாத கெட்ட நாற்றத்தையும் எடுத்துரைக்கிறார். ஓதெல்லோ தனது மனைவியை நடத்தை கெட்டவள் என்று நம்பி அவளைப் பின்வருமாறு ஏசுகின்றான்; ‘‘என்ன செய்து விட்டேனென்று கேட்கிறாய்? சீ! உனது செய்கையின் பயனாய் வானோர் தமது நாசிகளையெல்லாம் அடைத்துக் கொள்கின்றனர்’’. தீய செய்கையின் கெட்ட நாற்றம் வானையும் முட்டுவதாகக் கற்பனை!
  இம்முறையே, உருவகங்களைத் துணையாகக் கொண்டு ஆராயின் நாம் கவிஞரின் அகத்தே நிகழும் உணர்ச்சி நாடகத்தில் ஒன்றிவிடுவோம். இக்கட்டுரையில் திருக்குறளில் நாம் காணும் உருவக அணிகளை ஆராய முற்படுவோம்.
  இயற்கையினின்றும் எழுந்த உருவகங்களை முதலில் எடுத்துக் கொள்வோம்.
  கடல்: அளவற்று, மிகப்பெரியதாகவும், சிறியதாகவும் விளங்கும் பொருளைக் கூறுமிடத்து கடல் உருவகம் பொருத்தமாகப் பல குறட்பாக்களில் தோன்றுகிறது. கடவுள் அறவாழி. பயன் பாராது செய்த உதவி கடலிற்பெரிது. கடலலைகள் பேராரவாரத்துடன் கணத்திற்குக் கணம் மாறி மாறி வருகின்றன. ஊழிக்காலத்தில் அக்கடல் பொங்கியெழுந்து உலகனைத்தையும் அழித்து விடுமென்றும் சொல்வது மரபு. பெருமை தரும் அளவற்ற தன்மையோடு, ஆரவாரமும் சேர்ந்து கடலின் தூய பெருமையைத் தாழ்த்துகிறது. இதை மனத்திற்கொண்ட திருவள்ளுவர்,
‘ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்’’ (989)
என்கிறார்.
  இங்கு நற்குணம், அளவற்றுப் பெருகி ஆரவாரமற்று, ஊழிக்காலத்திலும் தன்னிலை மாறாது நிற்கும் கற்பனைக் கடலை, உருவகத்தின் மூலம் நம் கண்முன்னே நிறுத்துகிறார் கவிஞர். தாங்கவியலாத உணர்ச்சிப் பெருக்கும், அதனால் எழும் இன்ப துன்பங்களும் கடலுருக்கொள்கின்றன காமநோய் கடலாகிறது. காமக்கடல் கடக்க தோணியில்லையென தலைவி வருந்துகிறாள். தோணியும், கப்பலும் பேரிடனின்று காக்கும் உருவகங்களாகின்றன. கடலையும் தூர்க்கலாம், ஆனால் அன்பற்றவரிடம் துன்பத்தைச் சொல்லிப் பயனில்லை என்று எண்ணுகிறாள். இங்குக் கடலின் வரம்பற்ற ஆழம் சொல்லப்படுகிறது. காமத்தில் மகிழும் இன்பம் கடலாகவும், அது வருத்தும் போது எழும் துன்பம் கடலைவிடப் பெரிதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு கடல் நன்மைக்கும் தீமைக்கும் உருவகமாகிறது.
  மேலும், கடல் இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும் இம்மண்ணுல வாழ்க்கைக் சிக்கலில் கட்டுண்டவர், கடலின் பேரலைகளோடு போராடுபவர். பிறவியே, பெருங்கடல். ஆதலால் இக்கடல் பேரிடருக்கு உருவகமாகிறது. இதைக் கடக்க எளிதில் இயலாது. கடக்க முயல்பவருக்குக் கப்பல் தேவை. இக்கப்பல் இறைவனடி என்கிறார் திருவள்ளுவர். சான்றாண்மைக்கு மிகுந்திருந்தால் பிறவிக்கடலில் தோன்றும் ஆரவாரத்தை மட்டே அடக்கலாம். ஆனால் இக்கடலைக்கடந்து கரை சேர இறைப்பற்று வேண்டும் என்கிறார்.
  இனி, இவ்வுருவகத்தை மனத்திற் கொண்டு இடனறிதலில் சொல்லப்பட்ட குறளொன்றைக் காண்போம். (கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து) ‘‘பெருந்தேர் மண்ணின் மீது செல்லும்; கடலின் மீது பயன்படாது; அவ்வாறே கப்பல் நீர் மீது செல்லும்; மண்ணின் மீது பயன்படாது.’’ (496). உருவக முறையில் ஆராய்ந்தால் இக்குறள் உட்பொருள் கொண்டு இயங்குவதைக் காணலாம். மனித வாழ்க்கைக்குத் தேர்போன்றது மனித அறிவும்; தொழிலும் ஆகும். ஆயினும் பிறவிக் கடலைக் கடக்கக் கப்பலான இறைவன் துணை வேண்டும். இறைப்பற்று இல்லையானால் வாழ்க்கைக் கடலை அறிவாற்றல் மட்டும் கொண்டு கடக்கவியலாது. ‘‘நாவாய் ஓடா நிலத்து’’ என்ற வரிக்கு இவ்வுருக முறையில் ‘‘இறைவன் நிலத்தை ஒட்டியும் ஒட்டாது நிற்கின்றான்’’ என்ற பொருள் கொண்டால் என்ன? மண்ணுலக வாழ்க்கையையே நம்பி வாழ்வார் தேர் ஒன்றையே துணையாகக் கொண்டுள்ளதாகவும் ஆயினும், இவ்வாழ்க்கை கடலாகத் தோன்றுமிடத்து அத்தேர், பயனற்று போவதாயும் இக்குறள் எடுத்துக்காட்டுவதாகக் கொள்ளலாம் அல்லவா?
  நிலம் அல்லது பூமி:- இப்பூவலகைத் திருவள்ளுவர் உயிருள்ள தாயாக மரபிற்கேற்ப எண்ணுகிறார். அவள் அளவற்ற பொறுமைக்கு இருப்பிடமாய், எண்ணற்ற உயிர்களையும், மற்றையெல்லாவற்றையும் தோன்றிய நாள் முதல் சுமையாகத் தாங்குகிறாள். கவிஞனின் மென்மையுடைய மனம் பூமித்தாயின் பொறுமையை எண்ணிப் பல விடங்களில் உருகுகிறது. தன்னை அகழ்வாரையும் புறங்கூறுவோரையும், புகழ் அற்றவரையும், கல்லாரைத் துணை கொண்ட கொடுங்கோலரையும், கண்ணோட்டம் இல்லாதவரையும் ஈட்டிய பொருளை இறுகப்பிடிக்கும் உலோபியையும் இத்தாய் வருந்திச் சுமக்கிறாள். சான்றோர் தமது நிலையில் மாறுபட்டால், இவள் தன் சுமையைப் பொறுக்காது போவாள். பொறுமையோடு உழைக்காதவரை, நிலம் இல்லை என்று உழைக்காது சோம்பித்திரிவாரை & நிலமகள் கைகொட்டிச் சிரிப்பாள். நிலத்தைப் பயிரிடாது விடின், அவள் மனைவி போல் பிணங்குவாள். நிலமகளை மனைவிக்கு ஒப்பிட்டுச் சொன்னது ஒரு குறளில் மட்டும்தான். மற்றெல்லாவற்றிலும் அவள் தாயாக அருள் செய்கிறாள்.
  இனி இப்பூமித்தாயின் உருவகத்தை மனத்தில் கொண்டு, பின் வரும் குறளைக் காண்போம்.
‘‘சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்த றைந்தான் கைபிழையாதற்று’’. (307)
  பெருங்சினத்தால் நிலத்தை அறைந்தால், கைதான் அழியும்; தாயை அறைந்தால் தான் அழிவான் என்று உட்பொருள் இக்குறளின் தோன்றுகிறதல்லவா? நிலம் என்ற சொல்லை இக்குறளில் தாயாக உருவகப்படுத்திச் சொல்லாவிடினும், திருவள்ளுவரின் மனத்தில் இக்குறளை எழுதுங்கால், பெருஞ்சினத்தால் தாயைத் துன்புறுத்தும் பாவியின் செயலும், அதனால் அவனுக்கு நேரும் கேடும், தோன்றியிருக்க வேண்டும்.
(தொடரும்)
குறள்நெறி தை 2, 1995 / சனவரி 15, 1964

 

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்