குறள் நெறி பரப்புக ! – புலவர் இரா. இளங்குமரன்
1. தமிழன் பெருமை உரைத்ததற்குத்
தக்க தேதும் உண்டேயோ?
அமுதும் எந்தம் மொழி என்றால்
‘‘ஆ ஆ’’ உலகில் எத்துணைப் பேர்
அமுத மொழியின் திளைக்கின்றார்?
அளக்க வேண்டாம்’’ எனச் சொல்லி
உமிழாக் குறையாய்ப் பழிக்கின்றார்.
உள்ளம் நைய அம்மம்மா!
2. ‘‘ஆண்ட மொழியெம் மொழி’ என்றால்
அழகாம் உங்கள் மொழி’யென்று
மாண்ட மொழிக்காய் வாழ்வாரும்
மட்டம் தட்டப் பார்க்கின்றார்;
ஆண்டு வந்த அன்னியரோ
‘‘அடிமை ஆகிக் கிடந்தீரே!
வேண்டும் இந்தப் புக’’ ழென்று
விரைவாய் வாயை அடைக்கின்றார்.
3. ‘பழமை மொழியெம் தமி’ழென்றால்,
பழமைக் கொன்றோர் புகழுண்டோ?
மொழியில் இளமை முதுமையெனும்
முரட்டுப் பேச்சால் பயனுண்டோ?
விழுப்ப மான அறியல்கள்
விரிந்த ஆய்வுப் பெருநூல்கள்
எழுந்த துண்டோ உம்மொழியில்’’
என்றே சூடு வைக்கின்றனர்.
4. ‘‘உலகம் வியக்கும் இலக்கண நூல்
உடையோம் உணர்வின்’’ என்றாலோ,
‘‘புலம்ப வேண்டாம் புகழுடையீர்!
புதையலாக இருந்தாலும்
பலவாய்க் கட்டுப் பாடுகளைப்
படைத்து மொழியைச் சிறையிட்டீர்!
இலகும் பெருமை இதுதானோ?’’
என்றும் புலம்ப ஆளுண்டே!
5. மொழியைத் தவிர்த்து வளத்தாலோ
முயற்சி ஊக்கம் இவற்றாலோ
கொழிக்கும் செல்வம் கொடைவண்மை
கூர்த்த மூளை இவற்றாலோ
எழுச்சி கிளர்ச்சி இவற்றாலோ
ஏதும் போட்டி போடற்கு
வழியே இல்லை உலகோடு!
வாய்த்த தேதும் உண்டேயோ?
6. ‘‘உலகக் குன்றில் ஒருதாமாய்
உயரத் துயரே நின்றிருந்து
புலமைத் தலைக்கோல் தன்னைப் பெற்றுப்
பொருந்தும் அறத்தைப் புகன்றுள்ள
தலைவர் பெருமான் வள்ளுவனார்
தனிநூல் உடையோம்’’ எனச் சொன்னால்
தலையைத் தாழ்த்தி நிற்கின்றார்,
தடையொன் றுரைக்க வழியற்றே.
7. திருவள்ளுவத்தின் சிறப்பாலே
திகழுந் தமிழன் நன்றியுடன்
பெருகுஞ் செல்வம் எனப்பேணிப்
பெரிதும் அதனைப் பரப்புதலே
உரிய கடனாம்; இதைவிட்டால்
உலகப் புகழை அடைதற்காம்
அரிய வழியை இழந்தவனே;
ஆய்வுப் பேறும் இழந்தவனே!
Comments
Post a Comment