தமிழே! – கவிஞர் தே.ப.பெருமாள்
நிறைவினில் மலர்ந்தொளிரும் தமிழே – என்
நெஞ்சத்தில் அமுதாகும் தமிழே!
உறவினில் உயிரான தமிழே – என்
உணர்வினில் கவிபேசும் தமிழே!
ஒழுக்கத்தின் மணம்வீசும் தமிழே – வீர
உருவத்தில் கூத்தாடும் தமிழே!
விழுப்பத்தின் நலமுரைக்கும் தமிழே – நீதி
மேவியே கோலோச்சும் தமிழே!
நிலவின் குளிர்பெற்ற தமிழே – கதிர்
நிரப்பும் ஒளிபெற்ற தமிழே!
மலரின் மெதுவேற்ற தமிழே – தேன்
வழங்கும் சுவை கொண்ட தமிழே!
மின்னின் விசைகொண்ட தமிழே – கடல்
விரிக்கும் திரைமுழக்கத் தமிழே!
கன்னி நிறைபொலியுந் தமிழே – எங்கள்
கவிஞர் நிதியான தமிழே!
சங்கப் புலவர்களின் தமிழே – வையம்
தழைக்கக் குறள் தந்த தமிழே!
துங்க மணிச்சிலம்பின் தமிழே – கம்பன்
சோதி மகுடமொளிர் தமிழே!
நான்பேச மெய்குளிரும் தமிழே – என்
நாவெல்லாம் தித்திக்கும் தமிழே!
வான்தேசு கொட்டுகின்ற தமிழே – தென்றல்
வாசம் அளைந்துவருந் தமிழே!
அன்புக்கு வித்தூன்றும் தமிழே – தெய்வ
அருளுக்கு வழிகாட்டுந் தமிழே!
துன்பமாம் முகிலொழிக்கும் தமிழே – வாழ்வைச்
சுவையாக்கும் தெய்வீகத் தமிழே!
அகிலமெல்லாம் ஒன்றென்னும் தமிழே – வாழ்வில்
அனைவர் நலம் விழைகின்ற தமிழே!
பகையொழித்தே யமைதிதரும் தமிழே – இந்தப்
பாரெல்லாம் போற்றுகின்ற தமிழே!
- குறள்நெறி: மாசி 3, தி.ஆ.1995, பிப்.15, கி.ஆ
Comments
Post a Comment