மாமூலனார் பாடல்கள் – 12 : சி.இலக்குவனார்

மாமூலனார் பாடல்கள் – 12 : சி.இலக்குவனார்

     கஉ. “ஆண்டு அமைதியாகத் தங்கி இரார்”
 – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
பேராசிரியர் இலக்குவனார்
(மார்ச்சு, 16, 2014 இதழ்த் தொடர்ச்சி)
அகநானூறு  201  -  பாலை
 அம்ம! வாழி தோழி! பொன்னின்
 அவிர் எழில் நுடங்கும் அணிகிளர் ஓடை
 வினை நவில் யானை விறல் போர்ப்பாண்டியன்
 புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை
 அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து
 தழையணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல்
 பழையர் மகளிர் பனித்துறை பரவப்
 பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை
 உரு கெழு பெருங் கடல் உவவக் கிளர்ந்தாங்கு
 அலரும் மன்று பட்டன்றே.
 அன்னையும்
 பொருந்தாக் கண்ணள் வெய்ய உயிர்க்கும் என்று எவன் கையற்றனை இகுளை! சோழர்
 வெண் நெய் வைப்பின் நல் நாடு பெறினும்
 ஆண்டு அமைந்து உறைநர் அல்லர்; முரைஅது
 கருவான் புகு தலைய குன்றத்துக் கவா அன்
 பெருங்கை எண்கின் பேழ்வாய் ஏற்றை
 இருள் துணிந் தன்ன குவவு மயிர்க்குருளை
 தோல் முலைப் பிணவொடு திளைக்கும்
 வேனில் நீடிய சுரன் இறந்தோரே,
 thalaivi thozhi 1
 ஆராய்ச்சி விளக்கம்:-
   “நம்மை மறந்து, அமைதியாகத் தங்கி இரார்; வருந்தாதே” என்று தோழியானவள் தலைவியை நோக்கி ஆறுதல் கூறுவதுதான் இப்பாட்டின் உயிர்நிலை. ஆயினும் அதைத் தலைமையாகக் கொண்டு பல செய்திகள் அறிவிக்கப்படுகின்றன. ஒரு வட்டத்தின் நடுப்புள்ளியிலிருந்து பல வட்டக் கோடுகள் சுற்றிச் செல்வதுபோல் பல செய்திகள் ஒழுங்காக ஓடும் ஆறுபோல் கூறப்படுகின்றன. தலைவி பிரிவுக்காக மட்டுமன்று; வாழ்க்கைக் கடலைக் கடப்பதற்கு, ஒருவர்க் கொருவர் துணைவராக இருப்பதற்குக் கருத்து ஒருமித்து முடிவு செய்துவிட்டர். ஆயினும்  பலர் அறிய இன்னும் திருமணம் நடைபெறவில்லை. திருமணம் நடைபெற்றால்தானே உறுதிப்படும். அதற்குள் தலைவன் வேற்றூர் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. எப்படியோ இவர்கள் காதல் செய்தியும் வெளிப்பட்டுவிட்டது. வெறும் வாயை மெல்லுகிறவர்கட்கு அவலும் கிடைத்துவிட்டால் பிறகு கேட்பானேன்? இருவர் இருவர் ஆகக்கூடி மறைவாகத் தமக்குள்ளே பேசிக்கொண்டனர். பின்னர் பலருமறியக் கண்ட கண்ட இடங்களில் பேசத் தொடங்கிவிட்டனர். அந்த நாள் காதல் மொழியில் (Love-Language) கூறினால் அலர் தோன்றி விட்டது என்று கூறுதல் வேண்டும். புலவரும் அதைத்தான் கூறுகின்றார். “அலரும் மன்று பட்டன்றே” என்கின்றார். ‘மன்று’ பலர் கூடும் அவையையும்(சபையையும்) ஊர் பொதுக் கூட்டத்தையும் குறிக்கும். ஆகவே பெண்களிடையே மட்டும் பேசப்பட்ட பொருள் ஆடவர் கூடிய சபைக்கும் எட்டும் அளவு பெருகிவிட்டது என்று தானே பொருள். அவ்விதம் எங்கும் பெரு முழக்கமாகப் பேசப்படுகின்ற தன்மைக்கு ஓர் உவமை வேண்டுமே. மாமூலனார் பல நூலறிவோடு இயற்கையைப் பற்றிய அறிவும் மிக்கவர், நிறைமதி நாளில் கடல் பெருமுழக்கமிடுவதை நன்கு அறிந்தவர். ஆகவே காதலரைப்பற்றிய ஊர்ப்பேச்சுக்கு நிறைமதி நாளில் கடல் பொங்குவதை ஒப்பிடுகின்றார். கடல் என்றவுடன் அக்கடலைப்பற்றிய தன்மையைக் கூறாமலிருக்க முடியவில்லை. அச்சமிக்க (உருகெழு) கடல் என்றார். அதிலும் பெருங்கடல்! நாட்டைச் சுற்றி வளைந்துள்ள நீண்ட கடல் பகுதியிலே ஓரிடத்தைத்தானே சுட்ட முடியும். கொற்கைத் துறைமுகம் நினைவுக்கு வருகின்றது. அந்நாளில் தமிழ்நாட்டில் பலதுறை  முகங்கள் கலங்கள் வந்து நிற்கக் கண்கொள்ளாக் காட்சியையளித்தன. அவற்றுள் கொற்கையும் ஒன்று. கொற்கையைப் பற்றி மேலைநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் சிறப்பித்துக் கூறுகின்றனர். உரோம் முதலிய மேலை நாட்டுக்கப்பல்கள் கொற்கைக்கு வந்து தமிழ்நாட்டுப் பொருள்களைக் கொண்டு சென்றதும், தமிழ்நாட்டுக் கப்பல்கள் கொற்கைத் துறையினின்றும் மேல் நாட்டுக்கு முத்து முதலிய பொருள்களை ஏற்றிச் சென்றதும் வரலாறுகளிலும் சங்க இலக்கியங்களிலும் காணலாம். அன்று கப்பல் கட்டிய தமிழர் வழியில் வந்தவர்தாம் இன்று திருவிழாக் காலங்களிலே தெப்பம் கட்டுவதோடு நிற்கின்றனர். கடல் அரசர்களாய்க் கலங்கள் (கப்பல்கள்) செலுத்திய தமிழ்கள் இன்று மிடல் (வலிமை) ஒடுங்கி மீன் பிடிக்கும் அளவில் நிற்கின்றனர். ஆழமான இடங்களில் கப்பலைச் செலுத்துவோர்க்குப் பெருநீர் ஒச்சுநர்’ என்ற பட்டமும் உண்டு. ‘நாவாய்’ என்ற தமிழ்ச் சொல்லிலிருந்துதான் ‘Navy’ என்ற சொல் தோன்றியது என்று கூறுவர்.
 ship02
   ஆகவே அன்று கொற்கை பெருந் துறைமுகமாக விளங்கியதில் வியப்பு ஒன்றுமில்லை. கொற்கை என்றவுடன் அங்குச் சிறு பெண்கள் விளையாடுகின்றமையும் நினைவுக்கு வந்துவிடுகின்றது. இடுப்பிலே தழையை உடுத்தியுள்ளார்களாம். ஏன் இன்றுபோல ஆடையற்றா? அன்று. நம் நாட்டுப் பாலாவியன்ன மெல்லிய ஆடைகளுக்கு மேல் நாட்டினர் தவங்கிடந்தனராம். உரோமபுரிப் பெண்கள் நம் நாட்டு ஆடைகட்காகப் பெரும் பொருள் செலவிட்டனராம். “உரோம் நாட்டுச் செல்வம், தமிழ் நாட்டு முத்துக்கள், மெல்லிய ஆடைகள் நறுமணப் பொருட்கள், எண்ணெய்கள் முதலியவற்றிற்காகப் பாழாகி, நாடு வறுமையடைகின்றதே” என்று அன்று உரோம் நாட்டுச் சட்ட மன்றில் முறையிட்டு ஓலமிட்டனராம். ஆகவே பெண்கள் தழையுடுத்தியிருந்தனர் என்றவுடன் ஆடையற்று என்று கருதி விடுதல் ஆகாது. விளையாட்டுச் சிறுமிகள் வேடிக்கையாகத் தழை புனைந்து விளையாடுவது இயல்புதானே. ஆகவே, கடற்கரையில் வாழும் பரதவர் மகளிர் தழையை உடுத்திக்கொண்டு, முத்துக்களையும், சங்குகளையும் அள்ளி வீசிக்கொண்டு விளையாடுகின்றனராம். இன்று குழந்தைகள் கற்களை வீசி விளையாடுவதைக் காண்கின்றோம். அன்று அக்குழந்தைகளுக்கு முத்துக்கள் விளையும் கடற்கரையில் முத்துக்கள் தாம் கற்கள். கொற்கை நகர் மாமூலனார் காலத்திலும் சிறப்புற்று இருந்தது ஆதலின்  புகழ்மலி சிறப்பின் கொற்கை என்று பாராட்டுகின்றார். அது யாருக்கு உரியது? என்ற ஆராய்ச்சிக்கு இடமில்லாமல் பாண்டியனுக்கு உரியது என்கின்றார். ‘பாண்டியன்’ என்றதும் அவன் சிறப்பைச் சொல்லாமல் விட முடியவில்லை. அதனால் விறல் போர்ப் பாண்டியன்; போர் செய்வதில் இணையற்ற பாண்டியன் என்கின்றார். இன்று இருக்கிறார்களே நம் நாட்டிலே சில அரசர்கள்! வெறொருவர் கொன்ற புலிக்குப் பக்கத்தில் நடு நடுங்கிக் கொண்டு துப்பாக்கியும் கையுமாய் நின்று படம் பிடித்து வெளிப்படுத்துகின்றார்களே! அவ்வினத்தை சேர்ந்தவர்களல்லர் அவர்கள். ஆகவே, விறல் போர்ப் பாண்டியன் என்றது வெற்றுரையன்று. அவன் படைச்சிறப்பு என்ன?  யானைப் படையையுடையவன். யானைகள் மக்கட்குப் பெரிதும் உதவக் கூடியன அல்லவா? கடந்த போரில் சப்பானியர்கட்கு  யானைகள் பெரிதும் உதவின என்று செய்தித் தாட்களில் படித்தோமே! சப்பானியர்கட்கு உதவிய யானைகள் பிடித்த உடனே பழக்கப்பட்டன. ஆனால் பாண்டியன் படையில் நன்றாகப் பயிற்சி பெற்ற யானைகள் மிகுந்திருந்தன. அதனால் “வினைநவில்” யானை என்றார். பாண்டி நாடு செல்வ மிக்கது, மக்களேயன்றி விலங்குகளும் நன்றாக அணி செய்யப்பட்டன என்பதற்குச் சான்று  தருகின்றார் பாருங்கள். யானைகள் நெற்றிப்பட்டம் பெற்றிருந்தனவாம். அந்த நெற்றிப்பட்டங்கள் சரிகை வேலைப்பாடுகள் அமைந்து அழகு விளங்கினவாம் அதனால் பொன் அவிர் எழில் நுடங்கும் அணிகிளர் ஓடை என்கின்றார்.
 pandiyan01
  இனி, தலைவனைப் பற்றிக் கூறுவதை ஆராய்வோம். தலைவன் நெல்வளம் மிக்க சோழ நாட்டையே கொடுத்தாலும் தங்கமாட்டான் என்கின்றார். “சோழ வளநாடு சோறுடைத்து” என்பது தொன்று தொட்டுவரும் பழமொழி போலும். தலைவன் சென்ற வழியிலே மலைப்பக்கங்களில் கரடிகளைக் காண்பான் என்றார். கரடியும் இல்லறவாழ்வு நடத்துவதை எடுத்துக் காட்டாமல் விடவில்லை. ஏறு- ஆண்டி கரடி, பிணவு – பெண்கரடி, குருளை – குட்டி.
 bears04
   மனைவி – குழந்தை இவற்றுடன் ஆண் கரடி மகிழ்ந்திருப்பதைக் காணும் ஆண் மகன் உள்ளத்தில் தோன்றக்கூடிய எண்ணத்தைக் கற்பனைக்கு விட்டுவிட்டார். அவன் என்னதான் நினைப்பான். “கரடி, ஐயறியுள்ள விலங்கு, அதுகூட மனைவிமகவுடன் மகிழ்ந்திருக்கிறது. நாம் ஆறறிவு பெற்ற மனிதன்” என்ற எண்ணம் எழுவது இயல்புதானே. அந்தக் கரடிக்குட்டி  மணலில் படுத்திருப்பதற்குக் கூறும் அழகிய உவமையைக் கவனியுங்கள்.
இருட்டை நறுக்கித் துண்டாகப் போட்டால் எப்படியிருக்குமோ அப்படிப்பட்ட கரிய நிறமான கரடிக்குட்டி என்பதுbears05 எவ்வளவு இன்பத்தைத் தருகின்றது. மாமூலனார் இயற்கைப் புலவர் அல்லவா?
  தலைவியின் நிலை என்ன? ஊரில் அலர் தோன்றிவிட்டது காதலன் வரவில்லை. பெற்ற தாயோ மகள் நலனைக்குறித்து பெருமூச்சு விட்டு வருந்துகின்றாள், வெளியில் சொல்லவும் முடியவில்லை. தாயின் நிலையை மகள் உணர்ந்துவிட்டாள். உணர்ந்தவள் வருந்திருக்க முடியுமா? வருந்துகின்றாள். தலைவி வருந்தினால், ஆறுதல் கூறவேண்டியது தோழிதானே ஆகவே, “தலைவர் அங்கேயே தங்கிவிடமாட்டார் வருந்தாதே” என்று கூறுகின்றாள்.
 வினைமுடிபு: இப்பாட்டில் பின்வருமாறு வினையும் கருத்தும் முடிவுறுவதைக் காணலாம்.
க. அம்ம! வாழி தோழி  (அடி.க.)
 பொன்னின் (அடி க)……….அலரும் மன்றுபட்டன்றே. (அடிக0)
 உ. அன்னையும் (அடி க0) …எவன் கையற்றனை இகுளை (அடி கஉ)
 ங. சுரனிறந்தோர் (அடி ககூ)……….. உறைநர் அல்லர் (அடி கச)
******
 சொற்பொருள்:
 அம்ம, வாழி – வாழ்வாயாக, தோழி – தோழியே, பொன்னின்- பொன்னினது, அவிர் – விட்டுவிட்டு ஒளியைத்தரும், எழில் – அழகுமிக்க, நுடங்கும் – அசைகின்ற, அணிகிளர் – அலங்காரத்தால் விளங்கும், ஓடை – நெற்றிப்பட்டத்தினையுடைய, வினைநவில்- செய்யும் தொழில் பயிற்சியுள்ள, யானை – யானைப் படையால் சிறந்த விறல்போர் பாண்டியன் – வலிமை மிகுந்த, போர் செய்வதில் சிறந்த பாண்டியனின், புகழ்மலி – புகழ் நிறையும், சிறப்பின் சிறப்புகள் மிக்க, கொற்கை- கொற்கை என்ற, முன்துறை முற்பட்ட கடல்துறையில், அவிர்கதிர் – விளங்கும் ஒளியினையுடைய, முத்தமொடு வலம்புரி – முத்துக்களையும் சங்குகளையும், சொரிந்து – வீசி, தழையணி – தழைகளை ஆடையாக (விளையாட்டு விருப்பால்) அணிவதால், பொலிந்த -அழகுபெற்ற, கோடேந்து பக்கம் உயர்ந்த, அல்குல் – இடையினையுடைய, பழையர் மகளிர் பரதவர்களின் பெண்கள், பனித்துறை – குளிர்ந்த துறையில், பரவ கடவுளை வணங்க, பகலோன் – பகலைச்செய்யும் ஞாயிறு, மறைந்த – உலகத்தார் பார்வையினின்றும் மறைந்த, அந்தி ஆர் இடை – அந்தி ஆகிய அரிய பொழுதில், உருகெழு கண்டார்க்கு அச்சம் விளைக்கும். பெருங்கடல் – பெரிய கடலானது, உவவு நிறைமதி நாளில், கிளர்ந்தாங்கு – மூழ்கினாற் போல, அலரும் பலர் கூறும் பழியும், மன்று – ஊர்ப்பொதுச்சபையில், பட்டன்றே பேசுமாறு பொருந்தியதே.
உ (அடிகள் க – கஉ)
 அன்னையும் – தாயும், பொருந்தாக் கண்ணள் – கவலையால் உறங்காத கண்களை உடையவனாய், வெய்ய – கொடிதாக உயிர்க்கும் – பெருமூச்சுவிட்டு வருந்துகின்றாள், என்று – என்று நினைத்து, எவன்கையற்றனை – என்செயல் அற்று இரங்குகின்றனை, இகுளை – தோழியே.
ங (அடிகள் கஉ-ககூ)
 முனாது – முன்பு, வான்புகு – ஆகாயம் அளவு உயர்ந்துள்ள, தலைய உச்சிகளையுடைய, குன்றத்து – மலைகளின், கவான் – பக்கங்களில், பெருங்கை – பெரிய கைகளையுடைய, எண்கின் பேழ்வாய் ஏற்றை – திறந்த வாயினையுடைய ஆண்கரடி, இருள்துணிந்தன்ன -  இருளினைத் துண்டித்துப் போட்டால் ஒத்த, குவவுமயிர் – நிறைந்த மயிரினைடைய, குருளை – கரிய நிறமானகுட்டியினையுடைய, தோல் முலை – தோல்திரங்கிய மடியினையுடைய, பிணவொடும் பெண்கரடியுடன், திளைக்கும் – மகிழ்ந்திருக்கும், வேனில் நீடிய கோடைக்காலம் மிகுந்த, சுரன் இறந்தோர் – பாலைநிலவழியைக் கடந்துசென்றோர் மிகுந்த, சோழர் – சோழர்கட்குரிய, வெண்நெல் – வெண்மையான உயர்ந்த நெல்விளையும், நன்நாடு – நல்ல மருதநிலம் மிக்க, நாடுகளை, பெறினும் பெற்றாலும் ஆண்டு – அங்கே, அமைந்து – மனம் நிலையாகப் பொருந்தி, உறைநர் அல்லர் – தங்கமாட்டார்.
 ஆராய்ச்சிக் குறிப்பு:
இப்பாட்டில் பாண்டியனையும் சோழரையும் குறிப்பிடுகின்றார்.
விறல் போர்ப்பாண்டியன்’ என ஒருமையிலும் ‘சோழர்’ எனப் பன்மையிலும் கூறுகின்றார். அகவே முன்னது சிறப்புத் தன்மையினும் பின்னது பொதுத் தன்மையிலும் கூறப்பட்டுள்ளது. “விறல்போர்ப்பாண்டியன்” என்ற சிறப்புப் பெயரைப்பெற்ற பாண்டியன் இவர்காலத்து ஆண்டிருத்தல் வேண்டும். இவர் கூறும் முறையை நோக்கினால் இவர் சோழநாட்டையும் பாண்டிய நாட்டையும் சேர்ந்தவரல்லர் என்ற குறிப்பும் வெளிப்படுகின்றது. ஆயினும் இரண்டு நாடுகளிலும் நல்ல பழக்கம் உடையவர் என்பது புலப்படுகின்றது.
அல்குல்: சங்க இலக்கியப் பாக்களில் இச்சொல் இடுப்பைத் தான் குறித்தது. பிற்காலத்தில் தோன்றிய புலவர்களோ வேறு பொருளில் வழங்கிவிட்டனர். (வேறு பொருள் இன்னது என்பது தமிழ் அகராதியைக் கொண்டேனும் இராமாயணம் திருவிளையாடல்புராணம் திருக்கோவையார் முதலியவற்றை நோக்கியேனும் அறிந்து கொள்வீர்களாக)!

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்