வள்ளுவரும் அரசியலும் 2 -முனைவர் பா.நடராசன், ச.ம.உ.,
ஏனெனில் குடியாட்சி அமையலாம்; ஆனால் அந்தக் குடியாட்சியில் முறைமை செய்யப்படாத முற்போக்கான பொருளாதாரக் கொள்கைகள் நிலை நாட்டப் படாது இருந்தால், நாட்டிலே பொருள் வளம் மிகுதலில்லாது போய்விடும்; அப்போது குறிக்கோளாகிய இன்பம் எய்துவது எவ்வாறு?
நேர்மாறாக முடியாட்சி இருக்கலாம்; ஆனால் அவ்வாட்சியில் நாட்டில் நல்லமைதி நிலவி மக்கள் பொருள் வளம் சிறக்குமானால் அதனால் இழிவென்ன? என்று கேட்பது போலிருக்கிறது வள்ளுவர் அரசியல் கோட்பாடு.
குடியரசுக் கொள்கை தலைசிறந்து நிற்கும் இது காலையில் நல்லாட்சியானாலும் தன்னாட்சிக்கு நிகரில்லை. (A good government is no substitute for Self-government) என்ற கோட்பாடு நிலைபெற்றுள்ளது. தன்னாட்சி என்பது மக்களில் ஒவ்வொருவருக்கும் இயல்பிலே வரும் பிறப்புரிமை என்றும், எனவே ஒவ்வொருவரும் வாக்குரிமை பெற்றுத் தாமாகவே அமைத்துக் கொள்ளும் ஆட்சியே உயர்ந்ததென்றும், அதனால் வரும் இன்பமே மன எழுச்சியை அளிப்பதென்றும், குடியரசுக் கொள்கையில் நம்பிக்கையுடையோர் கருதுகின்றனர்.
இவ்வாறாக
இயல்பாயமைந்ததென்றும் பிறப்பாலே உரியதென்றும் கொள்ளப்படும் தனி மனித
அரசியல் உரிமை பற்றி வள்ளுவர் ஏதும் கருதவே இல்லை. வள்ளுவர்க்கு அரசியல்
என்பதுஓர் உரிமைச் சிக்கலாக எழவில்லை. அஃது ஒரு சூழ்நிலைச் சிக்கல்தான். அஃது இலட்சியக் கருத்தன்று; காரணம் அதுவும் துணைக் காரணக் கருவியேதான். இன்பம் பெறுவதற்குக் துணையான, பொருள் பெறுதற்கு இரண்டாம் துணையான கருவியே அரசியல். காரணத்தை அவர் காரியமாகக் கொண்டாரில்லை. கருவி நன்றாக அமைய வேண்டும் என்பதே அவர் கவலை.
இன்பம் என்பது உள்ளத்தால் உரிமையை உள்ளுவதால் மட்டும் வருவதன்று; சூழ்ந்துள்ள நிலைமையாலும் வருவதே. ஏன்? சூழ்ந்துள்ள நிலைமைகளே பொருள். செயல் வகையில் சிறப்பானவை.
மனித உரிமை
வள்ளுவர்
தனி மனித ஆட்சி உரிமையை மறுத்தார் என்பது இதனால் பெறப்படாது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ நெறியை இரண்டாயிரம்
ஆண்டுகட்கு முன்னே முழங்கிய பெரியார் மனிதனுக்கு ஆட்சி உரிமையை மட்டும்
மறுத்தார் என்று எண்ணுவதற்கில்லை. ஆனால் அவ்வகையான உரிமையை வழங்கிவிட்டதால்
மட்டும் வாழ்வில் இன்பம் எய்துவதற்கு ஏதுவான சூழ்நிலைதானே வந்து விடுமா
என்பதைக் கருதியிருக்கலாம். மெக்காலே பிரபுகூறியதுண்டு, ‘‘எந்த ஆட்சி, மக்கள் இன்பமாக வாழ வேண்டுமென்று விழைகிறதோ, எந்த ஆட்சி மக்கள் அவ்வாறு இன்ப வாழ்வு வாழும் நெறியை அறிந்துள்ளதோ, அதுவே மேலான ஆட்சி’’ என்று அது குடியாட்சியாக இருக்கலாம்; முடியாட்சியாக இருக்கலாம்; பலர் ஆட்சியாக இருக்கலாம்; சிலர் ஆட்சியாகவும் இருக்கலாம்.
கிரேக்க அறிஞர்கள்
வரலாற்றுக்
கண்ணோடு நோக்கினால் குடியாட்சியே இன்பம் பயக்கும் ஆட்சியென்று சொல்லிவிட
முடியாது. வள்ளுவர்க்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த கிரேக்க
அறிஞர்களான பிளேட்டோவும், அவர்
சீடரான அரித்தாடிலும் நல்லாட்சி எது என்பது பற்றி நன்காய்ந்து வெவ்வேறு
முடிவுகளுக்கு வந்தனரேனும் இருவருள் ஒருவராவது குடியாட்சிக்கு முற்றும்
பரிந்துரை செய்தாரிலர்.
பிளேட்டோ பலகாலம் சிந்தனை செய்து ஓரிலட்சிய சமுதாயம் எவ்வாறிருக்க வேண்டுமென்பதைக் குடியரசு (Republic) என்ற தமது நூலில் தீட்ட முயன்றார். கற்போருக்கு இவர் வரைந்தது ஒரு கற்பனைச் சமுதாயம் என்றே படும். அதாவது அதிலே கவிஞர் காணும் வகையில் எல்லோரும் எல்லாப் பொருளும் - நாடு மக்கள், பெண்டிர், உண்டி, உள்ளிட்ட
எல்லாப் பொருளும் பொதுவுடைமையாக்கி அவர்களை ஆள்வதற்கு அரசஞானி ஒருவனையும்
தலைவனாகக் கற்பித்துச் சென்றார். இத்தகைய சமூகம் மனித இயல்புகுகு
முரண்பாடானது. அதற்குரிய அரச ஞானியாம் தலைவன் வந்து வாய்ப்பதும் அரிதினும்
அரிது. பிளேட்டோவின் அரசியல் தத்துவம் வெறும் பகற்கனவே என்று அறிஞர்
எல்லோரும் கைவிட்டுச் சென்றனர்.
அவர் வழி வந்த சீடர் அரித்தாடில்; ஆனாலும் அவர் தமது குருவின் கோட்பாட்டை நகைத்து மறுக்க அஞ்சினாரில்லை. கிரேக்க மக்கள் வாழ்ந்த சின்னஞ்சிறு நாடுகளின் பல நூற்றாண்டு அரசியல் வரலாற்றையெல்லாம் ஆராய்ந்துவிட்டு, முடியாட்சி, தக்கோர் சிலர் ஆட்சி, குடியாட்சி ஆகிய மூன்றும் மாறி மாறி வரும் இயல்பினை உடையதாக உலகில் காணப்படுகின்றதென்றும், முடியாட்சி செங்கோன் முறை கோட, கொஞ்கோலன் அல்லது சர்வாதிகாரியின் ஆட்சி முளைக்கிறதென்றும், அதைக் கண்டு தாங்காது சிலகாலம் சென்றதும், தக்கார் ஒரு சிலர் கூடித் தங்கள் ஆட்சியை நிறுவுகின்றனர் என்றும் அவருள்ளும் ஒழுக்கஞ் சிதையத்தீயோர் சிலர் ஆட்சி விளைவிக்கின்றதென்றும், அந்தப் பலராட்சியும் பொறுக்க முடியாததாக மீண்டும் முடியாட்சி தோன்றுகின்றதென்றும் இவ்வாறாக நல்லாட்சி மூவகையும், அவற்றில் சிதைவுகளான தீயாட்சி மூவகையும் ஆக அறுவகை ஆட்சிகளும், ஒன்றன்பின்
ஒன்றாக மாறி மாறிச் சுழன்று வந்து கொண்டிருப்பதே வரலாறு தெரிவிக்கும்
அரசியல் நியதி என்றும் முடிவு கட்டினார். முடிவு கட்டிவிட்டு இறுதியில்
முடியாட்சியும் நன்றன்று - முற்றுந்துறந்த முனிவரே கோனாயினும், அதுபோன்றே பிறப்பொக்கும் எல்லா மகற்கும் என்பதனாலேயே மற்றெல்லாமும் ஒக்கும் என்று கருதும் குடியாட்சியும் முறையன்று என்கின்றார்.
ஏனைய அரசியல் அறிஞர்கள்:
அரித்தாடிலுக்கு
மிகப் பின்னே வந்த அரசியல் தத்துவ அறிஞருள் ஆப்சு என்பார் கோனாட்சியையும்
இலாக் என்பார் கோனைத் தலைமையாகக் கொண்ட குடியாட்சியையும், உரூசோ என்பார் முறை நிறைவு பெற்ற குடியாட்சியையும், மாக்கியவலி என்பார் வரம்பற்ற அதிகாரம் கொண்ட கோனாட்சியையும், காரல்மார்க்சு என்பார் தொழிலாளர் சர்வாதிகார ஆட்சியையும் வெவ்வேறாக ஆதரித்துப் போயினர்.
வள்ளுவர் அரசியல்:
வள்ளுவர் இந்த அரசியல் தத்துவ விசாரணைகளில் எல்லாம் தலையிடவே இல்லை. அவரை அனுபவவாதி என்று சொல்லலாம். அவர் அனுபவத்தில் கண்டதும், இன்று நாம் காண்பதும் என்னவென்றால், எந்த ஆட்சி வந்தாலும் இறுதியில் அதிகாரம் ஒரு தலைவனிடம் வெகுவாகக் குவிந்து காணப்படுகிறது. அவனை மன்னன் எனலாம். சர்வாதிகாரி எனலாம். ‘பிரசிடென்ட்’ எனலாம். பிரதமர்
எனலாம். ஆனால் ஒருவன் எவ்வாறாயினும் தலைவனாக அமைந்து விடுகிறான். அமைந்து
விட்ட பிறகு அவன் எத்தகைய குணநலன்கள் படைத்தவனாக இருக்க வேண்டும்? நல்லாட்சி நடத்துவதற்கு என்னென்ன தகுதிகள் வாய்ந்தவனாக இருக்க வேண்டும் என்பனபற்றித்தான் ஆராய்வது முதன்மை என்று கொள்ளலானார்.
- குறள்நெறி : தை 19. தி.ஆ.1995 / 1.2.1664
Comments
Post a Comment