நாயன்மார்கள் – அறுபத்து நால்வர் : -முனைவர். ப. பானுமதி
நாயன்மார்கள் அறுபத்து மூவர்
என்பது பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் உருவாக்கியுள்ள
நெடுங்கணக்கு. அவர்களுள் பெண் நாயன்மார்கள் மூவர். சைவம் தழைக்க உதவிய
மகளிர் தொண்டர்கள் என்று காரைக்காலமையார், இசை ஞானியார்,
மங்கையர்க்கரசியார் ஆகிய மூவரைச் சுட்டுகிறது பெரிய புராணம்.
நாயன்மார்களின் பட்டியலில் பெண் நாயன்மார்கள் ஐந்து விழுக்காட்டுக்கும்
குறைவாகவே உள்ளனர்.
பெரிய புராணத்தில் சுந்தரரை ஈன்றெடுத்த அளவில் இசைஞானியாரின் பெருமை ஒர் பாடலில் (1282) பாடி முடிந்துள்ளது,.
மங்கையர்க்கரசியாரின் பெருமை
பாண்டிய மன்னன் நின்ற சீர் நெடுமாறனின் துணைவியாக வாழ்ந்து அவருடன்
சேர்ந்து ஈசன் அடியின்கீழ் அமரும் பேறு பெற்றதாக மூன்று பாக்களில் (4194,
4195, 4196) சுருக்கமாகப் பாடப் பெற்றுள்ளது.
தலங்கள் தோறும் யாத்திரை
மேற்கொண்டு சைவப் பெருமை பாடிய காரைக்காலம்மையாரின் வரலாறு 66 பாடல்களில்
விரித்து உரைக்கப் பெற்றுள்ளது. இந்த மூவர் மட்டுமே பெரிய புராணத்தால்
அறியப் படும் நாயன்மார்களுள் பெண்பாலர்.
இவர்களேயன்றி சைவ அடியார்களுடன்
தொடர்புடைய மகளிருள் இன்னும் சிலர் மனத்தாலும் எண்ணிப் பார்க்க முடியாத
அளவில் இயல்பிற்பரிய ஈகத்தைச் செய்துள்ளனர். தெரிந்தோ தெரியாமலோ,
காலச்சூழல் இடம் கொடுக்காமையினாலோ அவர்களின் அருந்தொண்டுகள் மறைக்கப்
பட்டிருக்கின்றன. அப்படி மறைக்கப் பட்ட தூய தொண்டர்களுள் ஒருவர் இயற்பகை
நாயனாரின் துணைவியார்.
சீர் தூக்கிப் பார்த்தால் மறுக்கவோ
மறக்கவோ மறைக்கவோ முடியாததொரு ஈகம் இவர் செய்தது. ஆனால் இவரது பெயர் கூட
பெரிய புராணத்தின் வழி அறியக் கிடைக்கவில்லை என்பதுதான் வருத்தத்திற்
குரியது. பெயரும் அறியமுடியாத இவரின் தூய தொண்டு பற்றி இக்கட்டுரை விரிவாக
ஆராய்கிறது..
சோழ நாட்டுப் பூம்புகார் நகரில்
வணிகர் குடியில் தோன்றியவர் இயற்பகை நாயனார். வளமெல்லாம் நிறையப் பெற்ற
இவர் சிவ பெருமான் மீது மாளாத பற்று கொண்டவர். சிவனடியார்கள் வேண்டியதை
மட்டுமன்றி மனத்தில் நினைத்ததையும் அவர்கள் மனம் மகிழும் வண்ணம் கொடுக்கக்
கூடிய அளவில் அளவில்லாத பக்தி உடையவர்.
இப்படி இயற்பகையார் அடியார் பணி
செய்து கொண்டு இருக்கும் காலத்தில் தூய வெண்ணீறு அணிந்த மேனியுடன்
புறத்தில் காவி அணிந்து அகத்தில் காமம் அணிந்தவராகத் தம் இல்லம் வந்த
அடியாரை வரவேற்று வணங்கி ஆசி பெறுகிறார்.
அப்போது வந்த அடியவர் இயற்பகையாரிடம்
“அடியார் வேண்டுபவர் வேண்டுவதை நீ தருவாய் என்று கேள்விப்பட்டு இங்கு
வந்துள்ளேன். நீ இசைவாயானால் எனக்கு வேண்டியதைக் கூறுவேன்” என்கிறார்.
இயற்பகையார் “தாங்கள் கேட்பது
எதுவாயினும் என்னிடம் உளது எனின் அது எம்பெருமானின் உடைமையாகும். எனவே
நீவிர் விரும்பிய பொருளைக் கேட்டு அருள்க” என்கிறார்.
“உன் மனைவியின் மீது பெருகிய
காதலினால் அவளைக் கேட்டுப் பெற வந்துள்ளேன்” என்கிறார் அந்தக் காமத் துறவி.
“காட்டுக்குப் போ” என்று கைகேயி கூறியவுடன் கம்ப நாடனின் காப்பியத் தலைவன்
முகம் மலர்ந்ததைப் போல இயற்பகையார் முகம் மலர்ந்தது. “என்னிடம் உள்ளதொரு
பொருளைக் கேட்டுள்ளீர்கள்” என்று உவகையுடன் கூறிக்கொண்டே வீட்டிற்குள்
சென்றார். தம் மனையாளைக் கரம் பிடித்து அடியார் முன்பு அழைத்து வந்து
“முறைப்படி மணம் செய்து கொண்ட என் மனையின் விளக்கே! இந்தத் துறவியாருக்கு
உன்னை நான் கொடுத்து விட்டேன்” என்று கூறிவிடுகிறார். மனையாளும் ஒப்பி
விடுகிறார்.
மனைவியைக் கொடுத்த மகிழ்வுடன்
இயற்பகையார் அடியாரைப் பார்த்து “வேறு நான் செய்ய வேண்டுவது யாது?” என்று
வினவுகிறார். “நான் உன் மனையாளுடன் இவ்வூரைக் கடந்து செல்லும் வரை நீ
வழித்துணையாக உடன் வர வேண்டும்” என்கிறார் அடியார். இயற்பகையாரும் பொன்போல
ஒளிரும் ஆடையையும் கச்சையையும் அணிந்து கையில் வாளையும் ஏந்திக் கொண்டு
அம்மையாரையும் அடியவரையும் முன்னே போக விட்டு இவர் பின்னே காவலாகச்
செல்கிறார்.
உற்றார் உறவினர்கள் எல்லோரும்
எதிர்வந்து தடுக்கின்றனர். தடுத்த அவர்களையெல்லாம் வெட்டி வீழ்த்துகிறார்
இயற்பகையார். அடியவர் கூறிய இடம் வந்ததும் “சென்று வருகிறேன்” என்று கூறித்
திரும்பியும் பார்க்காமல் வந்து விடுகிறார். அடியாராய் வந்த ஈசன் மனம்
மகிழ்ந்து “இயற்பகையானே ஓலம்” என்று ஓலமிட்டு அழைக்கிறார். அப்போதும்
இயற்பகையார் “இன்னும் உம்மைத் தடுப்பவர் உளர் எனின் அவரையும் என் வாளால்
வெட்டுவேன்” என்று கூறிக்கொண்டே வருகிறார். அங்கு அடியவரைக் காண வில்லை.
மறைந்து விடுகிறார். வானத்தில் இறைவன் உமையாளுடன் காட்சி அளிக்கிறார்.
இப்படித் தம் உரிமை மனையாளையும் சிறிதும் வருத்தமின்றி ஆண்டவனின் அடியாருக்குக் கொடுத்த இயற்பகை நாயனாரை,
இன்புறு தாரந் தன்னை ஈசனுக் கன்பர் என்றே
துன்புறா துதவும் தொண்டர் பெருமையைத் தொழுது வாழ்த்தி”
(பெரியபுராணம்: 439)
என்று போற்றுகிறார் சேக்கிழார்.
சேக்கிழாருக்குத் தொண்டர்தம் பெருமையை எழுத துணையாய் நின்ற திருத்தொண்டத்
தொகையை இயற்றிய சுந்தரமூர்த்தி நயனார்
“இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்” (திருத்தொண்டத் தொகை)
என்று போற்றுகிறார்.
“கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந்(து)
எய்திய காவிரிப் பூம்பட்டி னத்துள் இயற்பகையே. (திருத்தொண்டர் திருவந்தாதி: 4)
என்று நம்பியாண்டார் நம்பி போற்றுகிறார்.
ஆனால் இந்த மூவரின் நூல்களில் எங்கும் இயற்பகையாரின் துணைவியார் எள்
நுணியளவேனும் போற்றப் படவில்லை.
இயற்பகையார் தம் துணைவியாரைச் சற்றேறக் குறைய ஒரு சடப் பொருளாகக் கையாண்டுள்ளார்.
உன் மனைவியை விரும்பிப் பெற வந்தேன்
என்று அடியாராக வந்த இறை கூறியதும். “இதுஎ னக்குமுன் புள்ளதே” (பெரிய
புராணம் 411) என்று இயற்பகையார் பதில் கூறுகிறார். ‘இது’ என்று அவர் கூறும்
இச்சொல்லே தம் மனையாளை ஒரு சடப் பொருளாக இயற்பகையார் கையாண்டதற்கு வலுவான
ஆதாரமாகிறது.
அந்தப் பெண்ணிடம் அவள் விருப்பம்
கேட்கப் படவில்லை. எந்த எதிர்ப்பும் காட்டாது அடியவருடன் சென்ற அந்தப்
பேதையின் பெருமை இயற்பகையாரின் புராணத்தில் எங்கும் பேசப் படவில்லை.
‘திருவினும் பெரியாள்’ என்று ஓரிடத்தில் அவளைச் சொல்வதையன்றி அப்பெண்ணின்
பெயர் என்ன என்று கூட அறியப் படவில்லை.
அப்படி இருக்க அப்பெண் விரும்பி
அடியாருடன் செல்ல ஒப்பினாளா என்னும் வினா எழுவதைத் தடுக்க இயலாததாகிறது.
தூய நீறுபொன் மேஎனியில் விளங்கத் துர்த்த வேடமும் தோன்ற வேதியராய் வந்த
அடியவர், “மன்னுகாதல் உன்மனைவியை வேண்டி வந்த திங்கு” (பெரியபுராணம் 410) என்று சொன்னவுடன் உள்ளே சென்ற இயற்பகையார் அம்மையாரை அழைத்து வந்து “விதிமணக்குல மடந்தை! இன்றுனை இம்மெய்த் தவர்க்குநான் கொடுத்தனன்” (பெரியபுராணம் 411) என்று
அடியாரிடம் கொடுத்து விடுகிறார். முதலில் அப்பெண் மனம் கலங்கிப் பின்
தெளிவடைவதாகக் காட்டுகிறார் சேக்கிழார். முதலில் மனம் கலங்கிய அப்பெண் மனம்
தெளிவது எக்காரணத்தினால்? அவர் இத்தகு செயலுக்குத் துணிவது எப்படி? என்று
சிந்திக்க வேண்டுவது இங்கு அவசியமாகிறது.
இயற்பகையார் தொடக்கத்திலேயே “விதிமணக்குல மடந்தை” என்னும் சொல்லைப் பயன்படுத்தி அவளை எதிர்வினையாற்ற விடாது செய்து விடுகிறார்.
‘விதி மணம்’ என்பது முறைப்படி செய்து
கொள்ளும் மணந்ததைச் சுட்டுகிறது. விதியோடு மணந்த கற்பறத்தின் முறைமை என்பது
கணவனின் சொல்லைத் தட்டாது கேட்டல். இதனை இயற்பகையார் சொன்ன ‘விதிப்படி’
என்னும் இச்சொல் சொல்லாமல் சொல்லிவிடுகிறது.
அடுத்ததாகக் ‘குல மடந்தை’ என்னும் சொல்லை
இயற்பகையார் இங்கு பயன் படுத்தியதின் நோக்கத்தை ஆராய்தல் தேவையாகிறது.
குலப்பெண்கள் கணவனை அன்றி வேறு தெய்வத்தை வணங்கும் மரபு அக்காலத்தில்
இல்லை. இதனைச் சுட்டிக் காட்ட இச்சொல் பயன்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
“தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்” என்று திருவள்ளுவரும், “சோம
குண்டம், சூரிய குண்டம் என்னும் இரு பொய்கைகள் உள்ளன. அவற்றில் மூழ்கி
காமன் கோட்டம் சென்று காமனைத் தொழுதால் கணவரோடு இன்புற்று வாழ்வர்; நாமும்
தொழுவோம்” என்று கண்ணகியின் தோழி தேவந்தி கூறியவுடன் தீப்பட்டாற் போல
துடித்தெழுந்து “பீடு அன்று” என்று மறுத்த இளங்கோவடிகள் போற்றிய
கண்ணகியும், “கணவற்கை தொழுது வாழ்வார் தேமலர்த் திருவொ டொப்பார்” என்று
கூறும் சீவக சிந்தாமணி கூறுவதும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.
ஆக இந்த இரு சொற்களும் அம்மையாரை இயற்பகையாரின் கட்டளைக்கு உடன்பட வைத்ததோ என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது.
இப்புராணத்தில் ஈரிடங்களில்
இயற்பகையாரின் துணைவியின் குரல் ஒலிக்கின்றது. முதலில் இயற்பகையார் “உன்னை
இந்த அடியாருக்குக் கொடுத்து விட்டேன்” என்று கூறியவுடன் ஒலிக்கிறது.
“இன்று நீரெனக்கருள் செய்ததிதுவேல் என்னுயிர்க் கொடுநாத!நீர் உரைத்த
தொன்றை நான்செயும் அத்தனை யல்லால் உரிமை வேறுள தோஎனக்(கு)”
(பெரியபுராணம் 412)
என்னும் இம்மொழி உரிமையற்ற ஓர் அடிமையின்
குரலாக ஒலிக்கிறது. ஏனென்றால் பெரும்பாலும் அடிமைகளே உரிமைகளைப் பற்றி
பேசக் கடமைப் பட்டவர்களாக இருப்பர். ‘கடமை வேறுளதோ’ என்று கேட்டிருந்தால்
அம்மையார் இச்செயலை மனமுவந்து செய்வதாகக் கொள்ளலாம். இங்கு அம்மையார்
பயன்படுத்தியுள்ள ‘உரிமை வேறுளதோ’ என்னும் சொல் அவர் அடிமையாக நடத்தப்
பட்டாரோ என்று சிந்திக்க வைக்கிறது.
அடியவர் கழிபெரும் காதலுடன்
அம்மையாரைத் தனியிடம் அழைத்துச் செல்கிறார். உடன் இயற்பகையார் காவலாக
வருகிறார் அப்போது “எம் குலக்கொடியை விட்டுச் செல்” என்று உற்றாரும்
உறவினரும் அடியவரை நோக்கிச் சூழ்ந்து வருகின்றனர். அடியவர் அச்சம்
கொண்டவராக அம்மையாரைப் பார்க்கின்றார். இத்தருணத்தில், “இறைவனே அஞ்ச வேண்டா; இயற்பகை வெல்லும்” (பெரியபுராணம் 419) என்று
அடியவரை நோக்கிக் கூறுவதாக அம்மையாரின் குரல் மறுமுறை ஒலிக்கின்றது.
இச்சொல்லாடல் இயற்பகையார் இறைவனால் நடத்தப்படும் நேர்வாய்வில் வெற்றி
பெறுவார் என்னும் நம்பிக்கையைக் கூறுவதாக ஒலிப்பதைக் காணலாம்.
இங்கு இறையடியாருக்கு நம்பிக்கையை
ஊட்டும் அம்மையார் மனமுவந்து இத்தொண்டினைச் செய்ததாகவே தெரிகிறது. இங்கு
எழுகின்ற வினாவெல்லாம் அம்மையார் தொண்டு செய்தாரா? உவந்து செய்தாரா?
கணவரின் கட்டளைக்காக இணங்கினாரா? என்பதையெல்லாம் கடந்தது.
கணவனின் சொல்லைத் தட்ட முடியாமையினாலோ
அல்லது உண்மையிலேயே இறைவனுக்குத் தொண்டாற்றும் நோக்கிலோ அம்மையார்
மறுப்பேதும் சொல்லாமல் அடியாருக்குத் தம்மை ஈய நினைத்தமை கற்புடைய
பெண்களால் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதது. கற்புக் கொள்கை மேலோங்கி
இருந்த அக்காலத்தில் தம்மைப் பற்றியோ, தம்மை உலகம் போற்றுமா தூற்றுமா
என்பதைப் பற்றியெல்லாம் சற்றும் சிந்திக்கவில்லை. அப்படிப் பட்ட
அம்மையாரைத் தம்பிரான் தோழரும் நம்பியாண்டார் நம்பியும் தெய்வச் சேக்கிழார்
பெருமானும் ஏன் போற்றவில்லை என்பதே இங்கு எழும் ஒரே வினா. அவரது
பெயரைக்கூட இருட்டடைப்பு செய்தது ஏன்? நின்ற சீர் நெடுமாறனின் துணைவியாக
வாழ்ந்த மங்கையர்க்கரசியாருக்குப் பாடியருளியதைப் போலவோ சுந்தரரைப் பயந்த
இசைஞானியாரைப் பாடியதைப் போலவோ ஓரிரு பாடல்களையாவது பாடி அடியார்களுள்
ஒருவராக இந்த அம்மையாரையும் சேர்த்திருக்கலாமே என்னும் வினா முறையானது
என்பதை இப்புராணத்தை நுணுகி ஆராய்பவர் உணர்வர்.
ஆசிரியர் குறிப்புரை :
அருமையாக ஆராய்ந்து
எழுதியுள்ளார் கட்டுரையாளர். மயிலாப்பூரில் அறுபத்துமூவர் திருவிழா
நடக்கும் பொழுது தெய்வப்புலவர் திருவள்ளுவரை 64 ஆவது நாயன்மாராகச்
சிறப்பிப்பர். வேறு சிலர் தத்தம் விருப்பம்போல் இக்காலத்தவரை 64 ஆவது
நாயன்மாராகக் குறிப்பிடுவர். பொது நோக்கில் முனைவர் பானுமதி சிறப்பாக எழுதி
உள்ளார். இதன் தொடர்பில் இரு கருத்துகளைப் படிப்போர் முன் வைக்க ‘அகரமுதல’ விரும்புகிறது.
1. கற்பழிப்பு
போன்ற வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்களின் பெயர்களை
வெளிப்படுத்தக்கூடாது என்பது பல நாடுகள் சட்டத்தின் வழியாகப் பெண்களுக்குத்
தரும் பாதுகாப்பு ஆகும். இந்தியத் தண்டனைச்சட்டப்பிரிவு 228(அ) இன்படி இந்தியாவில் இது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவேதான், செய்திகள்
இடம் பெறும் பொழுது கற்பனைப் பெயர்கள் என்ற குறிப்பையும் தருகின்றனர்.
தில்லியில் கூட்டு வல்லுறவிற்கு ஆளான பெண்ணின் பெயரும்
வெளிப்படுத்தப்படாமல், மின்னல்(தாமினி), ஒளி (சோதி), கருவூலம் ( (அனாமத்து), விழிப்பு (சகுருதி) என்னும் பொருள் தரும் சொற்களால் குறிக்கப்பட்டாள். பின்னர், இந்திப்பட மொன்றில், கொடுமையாகக் கற்பழிக்கப்பட்டதற்காககப் பழிவாங்கும் ஒரு பாத்திரத்தின் பெயரான நிர்பயா (பயமின்மை, அச்சமின்மை)
என்னும் பெயரிலேயே குறிக்கப்படுகிறாள். இத்தகைய பாதிக்கப்படும்
பெண்களுக்கு அவசொற்களில் இருந்தும் இழி சொற்களில் இருந்தும் பாதுகாப்பு
கொடுக்கும் எண்ணமும் செயலும் தமிழ்நாட்டில் முன்பே இருந்துள்ளது என்பதையே
இயற்பகை நாயனாரின் மனைவியின் பெயர் குறிக்கப்படாமை காட்டுகிறது. எனவே, அம்மையாரின் பெயர் குறிக்கப் பெறவில்லை என வருந்தாமல், பெண்களைக் களங்கத்தில் இருந்து காப்பாற்றும் சட்டப் பாதுகாப்பு முன்பே தமிழ்நாட்டில் இருந்துள்ளது என்பது அறிந்து மகிழ்க!
2. வாழ்க்கைத்
துணையைக் கணவன் தன் அடிமைப் பொருளாக எண்ணுவதும் அதனை ஏற்று அவனிடும்
எக்கட்டளையையும் நிறைவேற்ற மனைவி துணியும் அடிமைத்தனமும் கூடா
ஒழுக்கத்தைக் கூட இருப்போர் தடுக்கும் பொழுது அறச் சொல் கேளாது அடியார்
மீதான அடிமைத் தனத்தால் அவர்களை அழிப்பதும் முறைதானா? அளவு கடந்த இறைப்பற்றால் பழிச் செயல்களைச் செய்வதற்கு இது போன்ற கதைகளே காரணங்கள் ஆகின்றன. போலிச்சாமியார்கள் பெருக்கத்தால், நித்யானந்தன்கள், செயேந்திரன்கள், தேவநாதன்கள்
பெருகிவிட்டனர். இறைவனின் மறுவடிவமாகக் கூறிக் கொண்டு இத்தகையோர் தங்கள்
காமப்பசிக்குப் பெண்களை இரையாக்குவது நின்றபாடில்லை. எனவே, இயற்பகை
நாயனார் போன்றவர்களையும் அவர்களின் மனைவியரையும் மனிதத்தோல் போர்த்திய
காமப்பேய்களிடமிருந்து காப்பாற்றும் வகையில் கட்டுரைகள் அமைதல் நன்று.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Comments
Post a Comment