இந்த வார கலாரசிகன்


செம்மொழி மாநாட்டுப் புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தபோது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக அரங்கில் பல அரிய நூல்கள் இருந்தது பார்வையில் பட்டது. வேறு பல அரங்குகளில் கையில் இருந்த பணத்துக்கெல்லாம் புத்தகங்களை வாங்கிவிட்டிருந்ததால், புரட்டிப் பார்த்து மகிழ்ந்தபடி நகர்ந்துவிட்டேன். அங்கிருந்த ஒரு புத்தகம், "என்னை இன்னும் படிக்காமல் இருக்கிறாயே' என்று தூக்கத்தில் அடிக்கடி வந்து இம்சிக்கத் தொடங்கிவிட்டது.அந்தப் புத்தகத்தின் தலைப்பு "சேதுபதி செப்பேடுகள்'. அதைத் தொகுத்திருப்பவர் சாதாரண மனிதரல்ல. தமிழ்மண் போற்றித் துதிக்கத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழ்ச் சமுதாயத்தின் சிறப்புகளைப் பதிவுசெய்ய உதவியிருக்கும் மாபெரும் ஆய்வாளர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் துறையின் தலைவராக இருந்து, அரிய பல ஆய்வுகளை மேற்கொண்டு மொழி ஆராய்ச்சிக்கு வளம் சேர்த்தவர். பெயர் புலவர் செ.இராசு!எங்கள் நிருபர் கதிரவனின் உதவியால், தஞ்சையிலிருந்து "சேதுபதி செப்பேடுகள்' நூலை வாங்கிப் படித்து விட்டேன். ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுடன் தொடர்புடைய செப்பேடுகள், அவர்களது பின்னணி என்று ஒன்றைக்கூட விடாமல் பதிவுசெய்ய இந்த நூல் முயன்றிருக்கிறது."வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்' என்று அகநானூறும், "போரெனில் புகலும் புனைகழல் மறவர்' என்று புறநானூறும் போற்றும் தமிழகத்தின் தொன்மைச் சிறப்பு வாய்ந்த மறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் சேதுபதிகள் என்பதும் செம்பிநாடு என்னும் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்கள் செம்பிநாட்டு மறவர் என்று வழங்கப்பட்டதாகவும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. "செம்பியன்' என்பது சோழர்களின் பெயர் என்பதால் இவர்கள் சோழர்களோடு தொடர்புடையவர்களாக இருக்கக்கூடும்.கி.பி.1059-இல் சோழர்கள் இலங்கை மீது படையெடுத்தபோது, பாதுகாப்புக்காக ராமநாதபுரம் கடற்கரை ஓரமாக ஒரு படையை நிறுத்தினர் என்றும், அந்தப் படைத்தலைவனின் வழி வந்தவர்கள்தான் பின்னாளில் சேதுபதிகள் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார்கள் என்றும், 1972-ஆம் ஆண்டு ராமநாதபுரம் கெஜட்டியர் கூறுகிறது. இன்றைய சேதுபதி அரசு மரபு 1604-1605-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.சேதுபதி மன்னர்கள் தொடர்புடைய செப்பேடுகள், தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் முதலிய சைவ மடங்களிலும், திருப்பெருந்துறை, அழகர்கோயில், கீழக்கரை, ராமநாதபுரம், திருவாரூர், திருப்புல்லாணி, பெருவயல் முதலிய ஊர்க்கோயில்களிலும். சில கோயில் அர்ச்சகர்களிடமும், தனியார் வசமும், அருங்காட்சியங்கள், பள்ளிவாசல்கள் என்று பல்வேறு இடங்களிலும் காணப்பட்டன.இந்தச் செப்பேடுகளைத் திரட்டும் முயற்சியில் முதன் முதலில் ஈடுபட்டவர்கள், ஜேம்ஸ் பர்கஸ், எஸ்.எம்.நடேச சாஸ்திரியார் என்கிற இரட்டை ஆய்வாளர்கள். அவர்கள் 1886-இல் வெளியிட்ட நூலில் 16 செப்பேடுகள் இடம்பெற்றன. 1975-இல் வெளியான ராமேஸ்வரம் குடமுழுக்கு விழா மலரில் 23 செப்பேடுகள் வெளிவந்தன. ராமநாதபுரம் டாக்டர் எஸ்.எம்.கமால் பல்வேறு இடங்களில் களஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, சேதுபதி மன்னர்கள் தொடர்பான அரிய பல செப்பேடுகளைத் தொகுத்து அளித்திருக்கிறார். கோவை கருணானந்தம், மேலப்பனையூர் ராசேந்திரன், காரைக்குடி பேராசிரியை நா.வள்ளி ஆகியோரும் பங்களிப்பு நல்கி இருக்கிறார்கள்.பெரும்பான்மையான செப்பேடுகள் நீள் சதுர வடிவிலானவை (20ஷ்32 செ.மீ.) பெரும்பாலான செப்பேடுகளில் தமிழுடன் கிரந்த எழுத்துகள் கலந்துள்ளன. திருமலை சேதுபதியின் காலத்துக்கு முற்பட்ட செப்பேடுகள் தமிழிலும், அவருக்குப் பிற்பட்ட செப்பேடுகள் தெலுங்கிலும், கையெழுத்தும், இறைவணக்கத் தொடரும் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பல செப்பேடுகளில் அழகிய வரைகோட்டு ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.பல செப்பேடுகள் அரச குடும்பத்தினர் அந்தணர்களுக்கும், கோயில் அர்ச்சகர்களுக்கும் கொடுத்த கொடைகள் பற்றிக் கூறுகின்றன. சில செப்பேடுகள் நில விற்பனை, மக்கள் குடியேற்றம், காணியாட்சி பெறுதல், கொலைவழக்கு போன்ற செய்திகளையும், மூன்று செப்பேடுகள் பெண்களைச் சிறையெடுத்தது தொடர்பானவையும், சில முத்துக் குளித்தல், வணிகம் தொடர்பானவையுமாகக் காணப்படுகின்றன.இந்தச் செப்பேடுகளின் மூலம் சேதுபதிகள் காலச் சமயம், சமூகம், வணிகம், பொருளாதார நிலை, வேளாண்மை, குற்றங்கள், தண்டனை, நாணயமுறை, அளவுமுறை, நீர்நிலைகள், நாட்டுப்பிரிவுகள், சேதுபதிகள் குடும்பம், திருமண உறவுகள், காடழித்து நாடாக்குதல் போன்ற பல்வேறு செய்திகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது.ஆணைகளை முதலில் ஓலையில் எழுதிப் பிறகுதான் செப்பேட்டில் பொறித்தனர் என்பதை ஓலையில் எழுதியவர் பெயரும் செப்பேட்டில் எழுத்துகளைப் பொறித்தவர் பெயரும் எழுதப்பட்டிருப்பதால் அறிகிறோம். பெரும்பான்மையான செப்பேடுகளில் இருபுறமும் எழுதப்பட்டுள்ளன.தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 172-வது வெளியீடான இந்தப் புத்தகம், 8-ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டது என்று தெரிகிறது. அதுசரி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் வெளியீடே புலவர் செ.இராசுவுடையதுதான் என்பது தெரியுமா? அந்தப்புத்தகம் - தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்!
********
ஏறத்தாழ ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் "கதைசொல்லி' வெளிவந்திருக்கிறது. காலாண்டிதழ் ஓராண்டு கால தாமதமாக வெளிவந்தாலும், கி.ரா.வை ஆசிரியராகக் கொண்ட இதழாயிற்றே, அதனால், ஈர்ப்பும், வீரியமும் குறைந்துவிடாதே...வழக்கம்போல "கி.ரா.' பக்கங்களில் தொடங்கி மேலாண்மை பொன்னுசாமி, கலாப்ரியா, தோப்பில் முஹம்மது மீரான் என்று சுவாரஸ்யமாக படித்துக்கொண்டே போய்..."மழை வரும் பாதை' என்றொரு கவிதை. எழுதியவர் நெல்லைக் கவிஞர் கிருஷி. மனது குளிர்ந்தது.பொழுதடைந்த பின்கரிசல் காட்டிலிருந்து திரும்பியஎங்கம்மாபாம்படம் அசையச் சொன்னாள்இன்னும் ஒரு மழைபெஞ்சா போதும்மொளச்ச பயிர்பிழைச்சுரும்ஒரு புல், ஒரு கல்ஒரு கம்மாய் ஒரு வாய்க்கால்என்பதுபோல் சொல்லமுடியுமாமழையைஒரு மழை என்று?கணினியின் மென் விரலால்எண்ண முடியுமா உன்னால்பெய்யும் - மழைத்தாரையில்எத்தனை துளிகள் என்றுவாழ்வையே தழுவிக்கொள்ளும்தாய்மையே நீர்மை.மண்ணில் - மனசில்ஈரம் இருக்கும் வரைதான் எல்லாம்.நெல்வாசம் வரப்பு வாய்க்கால்நீர் தளும்பும் ஓசை எல்லாம்மறந்து வருகிறோம் - மனதால்பிரிந்து வருகிறோம்.சாதாரண குப்பைகளால் அல்லஅணுக்கழிவுகளால்நிரப்பத் துவங்கிவிட்டோம்பூமியை.எத்தனை அறிவியல் புரட்சிநிகழ்ந்தாலும்சூரியனின் உக்ரத்தைத் தணிக்கஒரு மேகம் போல்யாரால் இயலும்.மழைபெய்து கெட்டவரும் இல்லை,மக்களைப் பெற்றுக் கெட்டவரும் இல்லை,என்றாள் எங்கம்மா மீண்டும்பாம்படம் அசைய...

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்