பல்கலைச் செல்வர் - கொத்தமங்கலம் சுப்பு
சுப்பு பிறவிக் கவிஞன். ரச பேதமும் ரசக் குறைவும் இல்லாத ஹாஸ்ய புருஷன். வாழ்க்கையை இன்பமும், ரசமும் ததும்ப சித்திரித்துக் காண்பிக்க வேண்டும் என்ற அவரோடு கூடப்பிறந்த ஆவல், அவரை இலக்கிய உலகத்திலிருந்து அறவே விலக்கிவிட முடியவில்லை. தான் வாழ்க்கையில் கண்ட காட்சிகளை அவ்வப்போது சிறுகதைச் சித்திரங்களாக வரைந்து வந்தார். இந்தச் சிறுகதைகளை விலைமதிக்க முடியாத மாணிக்கங்கள் என்று சொன்னாலும் என் ஆவல் தணியாது. நோபல் பரிசைப் போல் தமிழ்நாட்டில் பாரதியார் பெயரால் ஒரு பரிசு இருக்குமானால் அதைத் தயங்காமல் நான் சுப்புவுக்குக் கொடுப்பேன்'' என்று மூத்த எழுத்தாளர் அறிஞர் வ.ரா., கொத்தமங்கலம் சுப்பு எழுதிய "மஞ்சுவிரட்டு' என்ற சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.""அவர் ஒரு கவிஞர், அவர் ஒரு கதாசிரியர், அவர் ஒரு இயக்குநர், அவர் ஒரு நடிகர்...அதற்கும் மேலாகச் சிறந்த மனிதர்'' என்று கவிஞர் வாலி தன் கவிமாலையில் கொத்தமங்கலம் சுப்புவைப் பாராட்டியுள்ளார்.கொத்தமங்கலம் சுப்பு, மக்களிடையே புகழ் பெற்றதோ, நடிகர், திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர் என்ற வகையில்தான்.ஆவுடையார்கோயிலுக்கு அருகேயுள்ள கன்னரியேந்தல் என்ற சிற்றூரில், மகாலிங்கம்-கங்கம்மாள் தம்பதிக்கு 1910-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சுப்பிரமணியன். சிறு வயதிலேயே அன்னையை இழந்தார். தந்தை மறுமணம் செய்து கொண்ட சிற்றன்னையின் அரவணைப்பில் வளர்ந்தார்.அத்தை மகளை மணந்து அவர்கள் வாழ்ந்த கொத்தமங்கலத்துக்கு வந்து, தனவணிகர் ஒருவர் வீட்டில் கணக்கு எழுதும் பணியில் அமர்ந்தார்.பள்ளத்தூரில் நாடகக் கம்பெனி ஒன்றில் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பல்வேறு நாடகங்களில் நடித்து கதாநாயகனாகப் புகழ்பெற்ற கொத்தமங்கலம் சுப்பு, சீனுவின் பரிந்துரையால் சென்னைக்கு வந்தார். சிவனால் பாபநாசமும், ராமலிங்கம் பிள்ளையால் நாமக்கல்லும் புகழ்பெற்றது போல் சுப்புவால் "கொத்தமங்கலம்' பிரபலமானது.சென்னையில் ஜெமினி நிறுவனம் அவர் ஆற்றலைக் கண்டுகொண்டது. தன் திறமையால் படிப்படியாகத் திரை உலகில் முன்னேறி பல துறைகளில் பிரபலமானார். செல்வமும் செல்வாக்கும் பெருகின. இயற்கையாகவே எழுத்துக் கலை அவருக்குக் கைவரப் பெற்றிருந்ததனால் காட்சிகளை அமைப்பதில் நயமிருக்கும். நகைச்சுவையும் அவருடனே ஒட்டியிருந்ததால், நகைச்சுவைக் காட்சிகளை அமைப்பதில் திறமை மிகுந்திருக்கும். கருத்தாழம் மிக்க காட்சிகளுக்கு வசனம் எழுதும்போது அவை நெஞ்சை அள்ளுவனவாக அமையும்.அவர் திறமையை, கலைஞானத்தை உணர்ந்த ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், சுப்புவுக்கு வாய்ப்புகள் பல அளித்தார். ஜெமினி கதை இலாகாவில் முக்கிய பங்கு அவருக்குக் கிடைத்தது. "மிஸ் மாலினி', "தாசி அபரஞ்சி', "கண்ணம்மா என் காதலி', "வள்ளியின் செல்வன்' ஆகிய படங்களில் இயக்குநராகப் பணியாற்றினார்.தேசப்பற்று மிக்க அவர் எப்போதும் கதரே அணிவார். காந்திமகான் மீது பக்தியும் மரியாதையும் கொண்டிருந்ததால், காந்திமகான் கதையை வில்லுப்பாட்டில் அமைத்தார். வில்லுப்பாட்டில் திறமைமிக்கவர் என்.எஸ்.கிருஷ்ணனும், சுப்பு ஆறுமுகமும். கொத்தமங்கலம் சுப்புவும் அந்த வரிசையில் சேர்ந்து புகழ் பெற்றவர்.""சுப்புவின் "காந்திமகான் கதை' வில்லுப்பாட்டு தேசபக்தி உணர்வை நாட்டில் சிலமணி நேரங்களில் ஊட்டின'' என்று பிரபல தலைவர்களே ஒப்புக்கொள்வர்.ஔவையார் கதை தமிழ்நாட்டு மக்களைக் கவர்ந்ததுபோல் வேறு எந்தக் கதையும் கவரவில்லை. எஸ்.எஸ்.வாசன், ஔவையாராக நடிக்க கே.பி.சுந்தராம்பாளை ஒப்பந்தம் செய்து கொண்டார். டைரக்ஷன் பொறுப்பை எஸ்.எஸ்.வாசன் ஏற்றிருந்தாலும் கொத்தமங்கலம் சுப்புவின் வசனங்களும், யோசனைகளும்தான் படம் மகத்தான வெற்றிபெறக் காரணமாக அமைந்தன. படம் நூறு நாள்களுக்கு மேல் தமிழ் நாடெங்கும் வெற்றி நடைபோட்டது. படத்தின் வெற்றிக்குக் காரணம் சுப்புவாக இருந்தாலும், தன்னை முன்னிலைப்படுத்தாமல் பத்திரிகையாளருக்கு அவர் அளித்த மிக அடக்கமான பேட்டி இன்றும் நினைவிருக்கிறது.ஔவையார் திரைப்படக் கைவண்ணத்துக்குப் பிறகு சுப்புவின் எழுத்தாற்றல் "தில்லானா மோகனாம்பாள்' புதினத்தால் வெளிப்பட்டது. பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வாரந்தோறும் அந்தத் தொடரைப் படித்து மகிழ்ந்தனர். கதைக்கு "கோபுலு'வின் சித்திரங்கள் மேலும் பெருமை சேர்ந்தன. தில்லானா மோகனாம்பாள் திரைக் காப்பியமாகவும் புகழ்பெற்றது.தில்லானா மோகனாம்பாளுக்குப் பிறகு அவர் பல புதினங்களை எழுதினார். சமூகக் கதை எழுதுவதில் புகழ்பெற்ற சுப்பு, சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி எழுதியும் புகழ்பெற்றார். சுதந்திரப் போராட்ட காலத்தில் வெள்ளையரை மிகத் துணிவுடன் எதிர்த்த வீரர்களின் கதை தமிழ் நாடெங்கும் நிறைந்திருந்தது. ஆங்காங்கே கிராமங்களில் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டவர்கள் வரலாறு மக்களிடையே பரவக்காரணம், மக்களுக்குப் புரியும் மொழியில் "கும்மி' மெட்டில் வீரர்கள் வரலாறு அமைத்ததுதான். அவற்றை எழுதிய கவிஞர் பெயர் தெரியவில்லை. தமிழகத்தில் அப்பாடல்கள் பாடப்பட்டன. அவற்றுள் ஒன்று "கட்டபொம்முவின் கதை'.கடந்த ஐம்பதாண்டுகளுக்கு முன்பே அத்தகைய வீரனான கட்டபொம்மன் கதையை ஓலைச்சுவடியிலிருந்து எடுத்துத் தன் கை வண்ணத்துடன் வாரப் பதிப்பில் பாடல்களாக எழுதினார் கொத்தமங்கலம் சுப்பு. கொத்தமங்கலம் சுப்புவின் கைவண்ணத்துடன் கூடிய கட்டபொம்மன் கதையை சிலம்புச் செல்வர் ம.பொ.சி. மிகவும் பாராட்டினார். "வீரபாண்டிய கட்டபொம்மன்' என்று புத்தகம் எழுதி, கட்டபொம்மனை நாடறியச் செய்தார்.சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்து, சிறு கிராமத்திலிருந்து பெரிய நகரமான சென்னைக்கு வந்த சுப்புவின் வளர்ச்சி, அவருடைய உழைப்பு, திறமை, அணுகுமுறை, மனித நேயம், எழுத்தாற்றல் என்றும் தமிழ்மக்களால் மறக்க முடியாதவை. கொத்தமங்கலம் சுப்பு இளங் கவிஞர்களை உற்சாகமூட்டுவதுடன், அவர்கள் அழைக்கும் கவியரங்கங்களில் கலந்துகொண்டு பாராட்டுவார். கவிஞர்களை அழைத்து விருந்துபசாரம் செய்து ஊக்கமூட்டுவார்.காந்திமகான் கதையை வில்லுப்பாட்டில் தயாரித்த சுப்பு, ராமாயணக் கதையையும் பாடி மகிழ்வித்தார். பாரதியார் கதையை "பாட்டிலே பாரதி' என்ற பெயரில் அரங்கேற்றினார்.பல ஆண்டுகளுக்கு முன்பு இப்போது வழங்கப்படும் "கலைமாமணி' விருதுபோல், "கலாசிகாமணி' என்ற விருது பெற்றவர் சுப்பு.சுப்பு எட்டாம் வகுப்புவரைதான் படித்தார். ஆனால், தன் குழந்தைகளைப் பட்டப்படிப்பு படிக்க வைத்தார். எட்டமுடியாத புகழை கலைத்துறையில் அடைந்தார். ரசிகமணி டி.கே.சி., சுப்புவின் கிராமிய மொழிப் பாடல்களை மிகவும் ரசித்தவர். "மண்ணாங்கட்டி கவிஞர்' என்ற பட்டமளித்து மகிழ்ந்தவர். பொறியியல், வேளாண்துறை மேதை ஜி.டி. நாயுடு, சுப்புவின் சிறந்த நண்பர். ஜி.டி.நாயுடுவின் புதிய புதிய கண்டுபிடிப்புகளை சுப்பு புகழ்வார்.பன்னிரண்டு புத்திரச் செல்வங்களுக்கு (இருவர் மறைந்தனர்) தந்தையாக இருந்து அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை எல்லாம் பொறுப்புடன் செய்து அவர்கள் ஒவ்வொருவரையும் கலை உணர்வுடன் வளர்த்து ஆளாக்கினார் சுப்பு.தனக்கு வாழ்வளித்த எஸ்.எஸ்.வாசனின் புகைப்படத்தை தன் வீட்டின் முகப்பில் பெரிய அளவில் அலங்கரிக்கச் செய்து நாள்தோறும் மரியாதை செலுத்துவாராம். கொத்தமங்கலம் சுப்புவின் பல்கலைத் திறமையை நாடறியச் செய்த மேதை எஸ்.எஸ்.வாசனின் "ஜெமினி மாளிகை' இன்று இல்லாவிட்டாலும், "கொத்தமங்கலம் ஹவுஸ்' என்ற பெயருடன் புதுப்பித்துக் கட்டிய சுப்புவின் இல்லம், வாசன் பெயரையும் பல்கலைச் செல்வர் சுப்புவின் திறமையையும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.பத்மஸ்ரீ முதலிய உயர் விருதுகளைப் பெற்ற கொத்தமங்கலம் சுப்பு, 1974-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி அமரரானார். அவரின் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதன் மூலம் அவ்வறிஞருக்கு நாம் மரியாதை செலுத்துவோம்.
Comments
Post a Comment