மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!
First Published : 11 Jul 2010 01:28:00 AM IST


ஐம்பெரும் காப்பியங்களுள் "கம்பராமாயணம்'  ஏன் இடம்பெறவில்லை?இதிகாசமானதால், காப்பியமாகவில்லைகாப்பியங்களை வடமொழிச் செல்வாக்கு வந்த பிறகே ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம் என்று தமிழ்ச் சான்றோர் பகுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. பஞ்சமா காவியங்களுக்கு இணையாக, ஐம்பெருங்காப்பியங்களுள் சமணக் காப்பியங்கள் மூன்றும், புத்தக் காப்பியங்கள் இரண்டும் இடம்பெற்றன. ஐஞ்சிறு காப்பியங்கள் ஐந்தும் சமணம் சார்ந்தனவே. சமயச் சார்பு இல்லாத பேரிலக்கியமாகவே கம்பர் இராம காதையை உருவாக்கியுள்ளார். வைணவ சமயத்தை வளர்ப்பதோ, திருமால் பக்தியைப் பெருக்குவதோ கம்பருடைய நோக்கம் அன்று. ""யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் போரொடுங்கும் புகழ் ஒடுங்காது'' என்னும் விழுமிய செய்தியை வழங்குவதே கம்பரது குறிக்கோள். ""அணி செய் காவியம் ஆயிரம் கற்போர் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண வேண்டும்'' என்பார் பாரதியார். தமிழ் மாந்தர் போர்களால் பேரழிவுக்கு இனி மேலும் ஆளாகக் கூடாது எனவும், ஒன்றுபட்டால் தமிழர்க்கு வாழ்வு உண்டு எனவும் நிலைநாட்ட விரும்பியவர் கம்பர்.மேலும், இராமன் மனிதனாக இறங்கி வருவதை இதிகாசம் என்றே குறித்தனர். திருமால் இராமனாகத் தோன்றியதை இராமகாதையும், கண்ணனாக விளங்கியதை மகாபாரதமும் விரித்துரைக்கின்றன. இதிகாச நூலாகக் கம்பராமாயணம் போற்றப்பட்டதால், காப்பியமாக அமையவில்லை.""மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்'' என்ற பழந்தமிழ்ச் சான்றோர் மரபை மீறி, ""உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்'' என்று கருத்துப் புரட்சி செய்தவர் கம்பர். மக்கள் உயிர் எனவும், மன்னன் உடல் எனவும் மாபெரும் புத்தெழுச்சியை உருவாக்கியவர் கம்பர்.ஆழ்வார் பாசுரங்களின் பிழிவாக இராமகாதை அமைந்ததாலும், உபநிடதக் கருத்துகளை முதலில் மொழிவதாலும் கம்பர் இலக்கிய உலகில் தனிச்சிறப்பு வாய்ந்தவராக விளங்குகிறார்.வால்மீகி, வசிட்டர், போதாயனர் ஆகிய மூவரும் வடமொழியில் வழங்கிய இராமாயணங்கள் உள்ளன. வால்மீகியிடம் கதை அமைப்பைப் பெற்றுக் கொண்ட÷கம்பர், தமிழ் மரபுக்கு ஏற்றவாறு மாற்றியும், போற்றியும், நீக்கியும் இராமகாதையைத் தீட்டியுள்ளார். எனவே, தனிச்சிறப்பு வாய்ந்ததாகத் திகழும் கம்பராமாயணம், ஐம்பெருங்காப்பியங்களுள் இடம்பெறவில்லை எனலாம்.

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்