அண்ணாதுரையைப் பின்பற்றியவர்கள் அவரைப் பின்பற்றியது மட்டுமன்றி அவரை நேசித்தனர். மக்களின் அன்பைக் கவருகிற இத்திறனே தலைவர்களை உண்டாக்குகிறது'' என்பது அறிஞர் அண்ணாவைப் பற்றிய மூதறிஞர் ராஜாஜியின் பதிவு.அறிஞர் அண்ணாவுக்கும் நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகனுக்குமான நெருக்கம் என்பது தலைமுறைகளைக் கடந்த ஒன்று. பேராசிரியர் அன்பழகனின் தந்தையார் கலியாணசுந்தரம் நீதிக்கட்சி முன்னோடிகளில் ஒருவர். சிதம்பரம் பகுதியில் சுயமரியாதை இயக்க வளர்ச்சிக்கு அவர் ஒரு முக்கியக் காரணகர்த்தா. அண்ணாவின் திராவிட நாடு பத்திரிகையின் வளர்ச்சிக்காக சிதம்பரம் பகுதியில் "சந்திரோதயம்' நாடகத்தை நடத்தி நிதி சேகரித்துக் கொடுத்தவர்.1940களிலிருந்தே அண்ணாவுடன் நெருங்கிய தொடர்புடைய பேராசிரியர் அன்பழகன், தனக்கும் தனது தலைவனுக்கும் இடையே ஏற்பட்ட சுவாரஸ்யமான சந்திப்புகளை, அனுபவங்களை, நிகழ்வுகளைப் பல்வேறு கட்டுரைகள் மூலம் பதிவு செய்திருக்கிறார். அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரைகள், பேட்டிகள் என்று பேராசிரியர் அன்பழகனின் பதிவுகளைத் தொகுத்து "மாமனிதர் அண்ணா' என்ற பெயரில் புத்தக வடிவமாக்கி இருக்கிறார்கள்.1937-ஆம் ஆண்டு மயிலாடுதுறை நகரப் பூங்காவில் இந்தி எதிர்ப்புக் கூட்டத்துக்கு வந்திருந்த அண்ணாவின் பேச்சை 9-ஆம் வகுப்பு மாணவனாக அன்பழகன் கேட்டது -1942-ஆம் ஆண்டு சிதம்பரத்துக்கு அருகிலுள்ள வெள்ளியக்குடியில் நடந்த இயக்கத் தோழர் முருகேசன் என்பவரின் திருமணத்துக்கு ரயிலில் வந்த அண்ணா, பயணக் களைப்பில் தூங்கி மயிலாடுதுறையில்போய் இறங்கி, தாமதமாகத் திருமணத்துக்கு வந்ததும், அண்ணாவுக்காக மணமகன் இரண்டாவது முறை தாலி கட்டித் திருமணம் செய்துகொண்டது பற்றிய பதிவு -1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்குவதற்கு முன்பு, தனிக்கட்சி தொடங்குவதில் அண்ணாவுக்கு இருந்த தயக்கம், ""அண்ணா, தங்களை அல்லவா இந்த நாட்டில் உள்ள இளைஞர்கள் எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்? இலட்சக்கணக்கான இளைஞர்கள் தந்தை பெரியார் அவர்களை மதித்துப் போற்றினாலும், வாழ்த்தி முழங்கினாலும், அவர்கள் எல்லோரும் இயக்கத்தின் இலட்சிய வெற்றிக்கு வழிகாட்டத் தங்களையல்லவா நம்பிக் கொண்டிருக்கிறார்கள்? அந்த இளைஞர்கள் செயல்படுவதற்கு, வழிகாட்ட ஓர் அமைப்பு, அரசியல் இயக்கம் தேவையில்லையா?'' என்று அண்ணாவின் அன்புத் தம்பி அன்பழகன் எழுப்பிய வினாவும், அதற்கு அண்ணா அளித்த பதிலும் -இப்படி வரிக்கு வரி, பக்கத்துக்குப் பக்கம், கட்டுரைக்குக் கட்டுரை சுவாரஸ்யமாகவும் பல புதிய செய்திகளைத் தாங்கியதாகவும் அமைந்திருக்கிறது இந்தத் தொகுப்பு.பேராசிரியர் அன்பழகன் தனது சுயசரிதையையோ அல்லது தனது நினைவுக் குறிப்பையோ ஒரு தொடராக எழுதாமல் இருப்பது என்ன நியாயம்? சுயமரியாதை இயக்கம், திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்த இயக்கங்களின் முன்னோடிகள், சுதந்திர இந்தியாவின் தலைவர்கள், நிகழ்வுகள் என்று கடந்த முக்கால் நூற்றாண்டு கால இந்திய சரித்திரத்துக்கே நேர்சாட்சியாக, ஆட்சி மையத்தின் பார்வையாளராக இருந்தவர் என்கிற முறையில், தனக்குத் தெரிந்த உண்மைகளைப் பதிவு செய்ய வேண்டிய கடமை நிதியமைச்சர் அன்பழகனுக்கு உண்டுதானே? அவர் ஏன் அந்தக் கடமையைத் தவிர்க்கிறார் என்கிற தார்மிகக் கோபம் இந்தத் தொகுப்பைப் படித்தவுடன் அவர்மீது எழுகிறது.சட்டப் பேரவை உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் இருந்த அனுபவமும், பல ஆண்டுகள் அமைச்சராகவும், திமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்த அனுபவமும், எல்லோருக்கும் வாய்த்துவிடுமா என்ன? "மாமனிதர் அண்ணா'வைத் தொடர்ந்து பேராசிரியர் அன்பழகன் தனது அனுபவங்களை ஓர் ஆவணப் பதிவு செய்தே தீர வேண்டும். தமிழ்ச் சமுதாயத்தின் சார்பில் அடியேன் முன்வைக்கும் வேண்டுகோள் இது!
*******
போர் வெறியும் பயங்கரவாதமும்' என்கிற சிறிய புத்தகம் ஒன்றை கோவை சென்றிருந்தபோது ஒருவர் தந்தார். "அமைதிப் பூங்கா' அறக்கட்டளை சார்பாக இரா. கோபாலன் என்பவரால் வெளியிடப்பட்டிருப்பதாகக் குறிப்பு காணப்பட்டது. யார் இந்த இரா.கோபாலன் என்று என்னை அறியாமலே கேட்கத் தோன்றியது.காந்தியவாதியான இரா.கோபாலன், தமிழ் மாநில சமாதானக் குழுவின் சார்பில் வெளிவந்த "சமாதான வெண்புறா' இதழின் பொறுப்பாசிரியராகவும் இருந்தவர். கோவை மாநகர மக்கள் நல இயக்கம், மாநகர ஊழல் எதிர்ப்பு இயக்கம், மத்திபாளையத்திலுள்ள அன்பாலயா எனும் உடல் ஊனமுற்றோர் இல்லம் என்று பலதரப்பட்ட ஆக்கப்பூர்வமான சமுதாயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் இவர் என்று பின் அட்டையிலுள்ள குறிப்பு தெரிவிக்கிறது.இந்தச் சிறு தொகுப்பில் இரா.கோபாலனின் கட்டுரைகள், அவருக்கு வந்த கடிதங்கள், அவரது வானொலி உரைகள் என்று நல்லபல கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, "பழங்குடி மக்களுக்கு எதிரான போர்' என்கிற கட்டுரை மத்திய இந்தியாவில் நடக்கும் மாவோயிஸ்ட் பிரச்னையின் அடிப்படைக் காரணங்களை அற்புதமாக அலசி ஆராய்ந்திருக்கிறது.புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் ஒரு கார்ட்டூன். "தினமணி'யில் வெளிவந்த அந்தக் கார்ட்டூனை வெளியிட உரிமை கேட்கவில்லை. பரவாயில்லை. குறைந்தபட்சம் "நன்றி: தினமணி' என்றாவது போட்டிருக்கலாம். போகட்டும். ஆனால், கார்ட்டூன் வரைந்த மதியின் பெயரையும் அழித்திருக்கிறார்கள். இது ஒரு காந்தியவாதி செய்யக்கூடிய காரியமா?*******
கடந்த வாரம் விமர்சனத்துக்கு வந்து பிரிக்கப்படாமல் கிடந்த புத்தகக் குவியலை ஒரு கை பார்த்து விடுவது என்று அமர்ந்தபோது, முதலில் பிரிக்கப்பட்ட புத்தகம் ஒரு கவிதைத் தொகுப்பு. வி.சாந்தா என்கிற ஸ்வாதி சத்யமூர்த்தி எழுதிய "அவனுக்கும் அவளுக்கும்' என்கிற தொகுப்பு பல படாடோப சென்னைப் பிரசுரங்களைப் போல இல்லாமல் எளிமையாகக் காட்சியளித்தது.பார்வைக்கு எளிமையாக இருந்த கவிதைத் தொகுப்பைப் பிரித்துப் படித்தால், பல கவிதைகள் பலே...சபாஷ் என்று வாயாரப் புகழும்படி அமைந்திருந்ததுதான் சிறப்பு.பிறந்தது 1952-இல். 19 வயதில் பட்டப்படிப்பு முடித்து இந்தியன் வங்கியில் 27 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். வாசிப்பதும் இசையும் இவரது உயிர்மூச்சு என்று கவிஞர் ஸ்வாதி சத்யமூர்த்தி பற்றி தன்குறிப்பு கூறுகிறது.""இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் கைப் பையைத் திறந்து பெண் காவலரிடம் காட்ட வேண்டிய நிர்பந்தம் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஏற்பட்டபோது, பளிச்சென்று தோன்றிய வரிகள்தான் விளையாட்டாய் முதல் கவிதையாக உருவாகி, பிறகு அது அறுபத்து நான்காகிவிட்டது'' என்கிறது கவிஞரின் என்னுரை.மதுரை மீனாட்சியில் தொடங்கி, மத்தியதரத் திருமணம், "சகுனம்' என்று தாண்டி எனது பார்வை "தமிழ் இனி' என்ற கவிதையில் லயித்தது.தமிழ் எங்கள் மூச்சு என்றவர்களின்பிள்ளைகள் ஆங்கில இலக்கியம் பயிலஅக்ரஹாரத்துப் பிள்ளைகளும்ஆச்சிமார்பிள்ளைகளும்அமெரிக்கா போய்விடமெல்லத் தமிழ் டொரொன்டோவுக்கும்நார்வே நோக்கியும்புலம் பெயர்ந்துவிட்டதுபத்திரமாக வைத்துக் கொள்வார்கள்,அவர்கள் பத்திரமாக இருந்தால்.விளைநிலம், அலைகள், அப்பா, சுட்டிக்குழந்தை என்று பல கவிதைகள் கவிஞரின் வித்தியாசமான பார்வையையும், யதார்த்தமான எழுத்து ஆளுமையையும், போலித்தனமில்லாத கவிதை வரிகளையும் வெளிப்படுத்தினாலும், என்னை மிகவும் நெகிழ வைத்தது என்னவோ "இரட்டைக் குழந்தைகள்' என்கிற கவிதைதான்.எழுதுங்கள், நிறைய எழுதுங்கள். விரசமே இல்லாமல், யதார்த்தத்தைப் படம் பிடித்துக் காட்டும் உங்களைப் போன்ற பெண் கவிஞர்களால்தான் பெண்ணியம் காப்பாற்றப்படுமே தவிர, பெண்ணியம் பற்றிப் பேசிப் பிழைப்பு நடத்துபவர்களால் அல்ல!இறைவன் படைப்பின்ஈடு இணையற்ற அதிசயம்ஒன்று அழும்போது, மற்றது பார்க்கும்இது நிறுத்தியதும் அது தொடங்கும்காய்ச்சல் வந்தால் ஒன்றாக வரும்சண்டையும் போடும், சமயத்தில்-சேம்சைட் கோல் போட்டுக் குழப்பவும் செய்யும்,நமக்குப் புரிந்து கொள்ள முடியாதஉடற்கூறு ரசாயனம்.லேசர்பிரின்ட் போலக் காது நுனி கூடஒத்திருக்கும் குழந்தைகளைமுகர்ந்து பார்த்தே பேர் சொல்லும் தாய்பேரதிசயம். கருத்துக்கள்
பேராசிரியர் அன்பழகனார் தமிழ் உணர்வு மிக்கக் கவிஞரும் நாவன்மை மிக்கப் பொழிவாளரும் ஆவார். வாழ்க்கை வரலாற்றை மனச் சான்றின்படி எழுதினால் சில குழப்பங்கள் நேரலாம் அல்லது மறைத்து எழுத விரும்பாமை போன்றவற்றால் எழுதாமல் இருக்கலாம். ஆனால். தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த இடம் கொண்ட பேராசிரியர் அவர்கள் பின்னர் வெளியிடும் நோகிகலாவது தன் வரலாற்றுத் தொகுப்பை எழுத வேண்டும். கலாரசிகன் வேண்டுகோளைத் தனிப்பட்ட வேண்டுகோளாக் கருதாமல் தமிழ் உலக வேண்டுகோளாகக் கருதி நிறைவேற்ற வேண்டும்.
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/25/2010 3:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *7/25/2010 3:26:00 AM